தேசிய
கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி - கார்ப்பரேட்களின் கொடுங்கனவு
மு.சிவகுருநாதன்
பகுதி:
ஒன்று
(இது தேசிய
கல்விக் கொள்கை வரைவு – 2019 பற்றிய எனது மூன்றாவது பதிவு. ஆகஸ்டு 2019 'காக்கைச் சிறகினிலே' - இலக்கிய மாத இதழில் வெளியானது. இதழாசிரியர் தோழர் வி. முத்தையா அவர்களுக்கும் இதழ் குழுவினருக்கும் நன்றிகள்.)
இந்தியாவின் தற்போதைய கல்வி வரலாறு 1813 பட்டயச்சட்டம் வழி
தொடங்குவதாகக் கருதலாம். இதன்மூலம் ஆங்கிலவழிக் கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கு முந்தைய கல்வி முயற்சிகள் முற்றிலும் தனிப்பட்டதாக இருந்ததே தவிர, அரசின்
செயல்பாடாக இல்லை. 1854 சர் சார்லஸ் உட் அறிக்கை இந்தியக் கல்வி வளர்ச்சிக்கு
ஆட்சியாளர்களை பொறுப்பாக்கியது. மேலும் தாய்மொழிக் கல்வியும் வலியுறுத்தப்பட்டது.
இது இந்தியக் கல்வியின் ‘மகா சாசனம்’ எனப் புகழப்படுகிறது. வில்லியம் பெண்டிங்
பிரபுவின் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த மெக்காலே பிரபுவின் கல்வித்திட்டம்
1836 முதல் அமல்படுத்தப்பட்டது.
உயர்த்தப்பட்ட சாதியினருக்கு கல்வி அளித்தால் அவர்கள் தங்களுக்கு கீழுள்ள அடித்தட்டு மக்களுக்கு கல்வி தருவார்கள்
என்ற வடிகட்டும் கொள்கை (Filtration Theory) பின்பற்றப்பட்டது. இந்தியச் சாதிய, நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இது
சாத்தியமற்றுப் போனது.
1882 ஹண்டர் குழுவிடம் அளித்த விண்ணப்பத்தில் மகாத்மா ஜோதிபா
புலே, 12 வயது வரை தொடக்கக் கல்வியை கட்டாயமாக்குதல், பெண்கல்வி போன்றவற்றைக்
வலியுறுத்தினார். இதேபோல் 1892 இல் பஞ்சமர்களுக்கு தனிப் பள்ளிகளையும்
விடுதிகளையும் அமைக்கக் கோரினார் பண்டித அயோத்திதாசர்.
1911 இல் காங்கிரஸ் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலேவால் முன்மொழியப்பபட்ட கல்வி உரிமை
தொடர்பான தொடக்கக் கல்வி மசோதா மத்திய சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அப்போது
உறுப்பினர்களாக இருந்த நிலப்பிரபுக்களும் சீர்திருத்தவாதிகளும் அடித்தட்டு
மக்களின் கல்விக்குத் தடையாக இருந்தனர். அப்போதும் பின்னாளில் அரசியமைப்பு அவையிலும்
(1948) முற்றாக நிராகரிக்கப்பட்டது. நாடு விடுதலைக்குப் பிறகும் டாக்டர்
ராதாகிருஷ்ணன் போன்றோர் கல்வி உரிமைக்கு எதிராக இருந்தனர். கல்வி உரிமையை
நிலைநாட்ட 100 ஆண்டுகளானது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல்
நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் 1, 2010 இல் செயல்பாட்டுக்கு வந்தது. 2018 இல் எட்டாம்
வகுப்பு
முடிய அனைவரும் தேர்ச்சியளிப்பதை நிறுத்த மோடி அரசு திருத்தம் கொண்டு வந்தது.
1927 இல் காந்தி வார்தாவில் கல்வி மாநாடு ஒன்றைக் கூட்டி,
அதில் ஆதாரக்கல்வியை வலியுறுத்தினார். 1935 இந்திய அரசியல் சட்டப்படி கல்வி மாகாண
அரசின் பொறுப்பில் வந்தது. சர் ஜான் சர்ஜெண்ட் அறிக்கை 6 -14 வயதுக்
குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வியை வரையறுத்தது. 1937 இல் 9 மாகாண அரசுகளில்
காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, ஆதாரக்கல்வியை நிறைவேற்றவும், அதற்குரிய நிதி
ஒதுக்கவும் மாகாண அரசுகளிடம் மகாத்மா காந்தி கோரிக்கை வைத்தார். நிதி நிலைமையைக்
காரணம் காட்டிய காங்கிரசார் இதற்கு உடன்படவில்லை.
இந்திய அரசியல் சாசன விவாதங்களில் 6-14
வயது வரை இலவச கட்டாயக் கல்வி என்பதற்கு கடும் எதிர்ப்பிருந்த காரணத்தால்
அம்பேத்கரின் முயற்சி தோல்வியடைந்து, அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளில்
சேர்க்காமல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் (Directive Principles)
சேர்க்கப்பட்டது.
விடுதலைக்குப் பின் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்
கழக கல்விக்குழு (1948-49), சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் லட்சுமணசாமி
முதலியார் தலைமையில் இடைநிலைக் கல்விக்குழு(1952-53), டாக்டர் கோத்தாரி
கல்விக்குழு (1964-66) ஆகியன அமைக்கப்பட்டன. இடைநிலைக் கல்விக்குழு தொடக்கக் கல்வி
அழுத்தம் கொடுத்தது. கோத்தாரி கல்விக்குழு அருகாமைப் பள்ளிகள், நாட்டு
வருமானத்தில் 6% கல்விக்குச் செலவிடுதல் போன்ற உருப்படியாக பரிந்துரைகளை
செய்திருந்தது.
கோத்தாரி
கல்விக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1968
இல் இந்தியாவின் முதல் தேசிய கல்விக்கொள்கை (NPE – National Policy on Education)
அறிவிக்கப்பட்டது (188 பக்கங்கள்). நாட்டின் பொருளாதார நிலையை கணக்கில் காட்டி கோத்தாரியின் பரிந்துரைகளில் பல
கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில் 1976 நெருக்கடி நிலை காலத்தில் இந்திராகாந்தி
அரசு கொண்டுவந்த 42 வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலிருந்த
கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
1986 இல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது கல்விக்கொள்கை (47
பக்கங்கள்) ஒன்றை வெளியிட்டார். நவோதா பள்ளிகள் போன்ற மேட்டிமைப் பள்ளிகள் (Elite
schools) உருவாக இது காரணமானது. இவ்வறிக்கை 1992 இல் பி.வி. நரசிம்மராவ்
ஆட்சிக்காலத்தில் உலகமயக் கொள்கைக்கேற்ப (PoA – Programme of Action)
மாற்றியமைப்பட்டது (144 பக்கங்கள்).
கல்விக்கொள்கை வகுப்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில்
கலைத்திட்ட வடிவமைப்பில் கவனம் செலுத்தப்பட்டது. 1975, 1988, 2000, 2005 ஆகிய
ஆண்டுகளில் கல்வியாளர்களால் கலைத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. 1993 இல் ‘சுமையற்ற கற்றல்’ (learning without
burden) அணுகுமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றையும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு
முதன்மையளித்தும்,
2005 இல் பேரா. யஷ்பால் தலைமையிலான குழு தேசிய கலைத்திட்டத்தை (NCF 2005)
வடிவமைத்தது.
பகுதி:
இரண்டு
2016 இல் நரேந்திர மோடியின் ஆட்சியில் முன்னாள் மத்திய
அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை
பெற்றது. ஆனால் அரசு அவ்வறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. தேசிய
கல்விக்கொள்கை வரைவிற்கான சில உள்ளீடுகள் எனும் தலைப்பில் சுருக்கம் (43
பக்கங்கள்) வெளியானது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பைக் காட்டின.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரோ
முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவின் அறிக்கை (484 பக்கங்கள்)
தற்போது வெளியாகியுள்ளது.
கல்விக் கொள்கையை வகுப்பதும் நாவல் எழுதுவதும் ஒன்றல்ல.
இதுவரையிலான கல்விக்கொள்கைகள் மிகச்சுருக்கமான அளவில் இருந்தன. தலையணை அளவு
நாவலைப் போல இவ்வளவு நீட்டி முழக்கி ஒரு கல்விக்கொள்கையை வடிவமைக்கத் தேவையில்லை.
குழுவினரின் மொழிப்புலமையை காட்டும் இடமும் இதுவல்ல. இக்குழுவில் இருப்போரது
கல்வி, அரசியல் சாய்வுகள் ஆகியன அரசின் கொள்கைப் பரப்புரை ஏடாக கல்விக்கொள்கையை
உருமாற்றியுள்ளன.
முந்தைய கல்விக்கொள்கைகளின் அனைத்து கூறுகளும் சிறந்தவை என
கூறுவதற்கில்லை. இருப்பினும் அவற்றில் ஒரு நேர்மை இருந்தது. கல்வியை வணிகமயத்தை
நோக்கித் திருப்பும் வேலைகளை இவை செய்தது உண்மைதான். ஆனால் அவை இந்திய அரசியல்
சட்டத்தின் கூறுகளாக சமத்துவம், சமூக நீதி, மக்களாட்சி ஆகியவற்றிலிருந்து விலகாமல்
பார்த்துக்கொண்டன. இந்துத்துவ மோடி அரசின் கல்விக்கொள்கைகள் முற்றிலும் வேறு
திசையில் பயணப்படுகின்றன. இவை அரசியல் சட்டத்தை மீறுகின்றன; மதிக்கவில்லை.
மக்களாட்சியின் மாண்புகளைக் காற்றில் பறக்கவிடுவது இருக்கின்ற சிறந்த அமைப்புகளைப்
பலியிடுவதும் இவர்களது வேலையாக உள்ளது. அதனால்தான் குழந்தைகளின், பொதுப்பள்ளிகளின்
மரண சாசனம் என்று கடுமையாக விமர்சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு கல்விக்கொள்கை
எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு தகுந்த உதாரணமாகவும் இது உள்ளது.
கோணங்கி எனும் படைப்பாளி ‘நத்தைக் கூடென்னும் கேலக்ஸி’ என்று
உருவகப்படுத்துவார். நத்தைக்கூட்டின் சுருள்களுக்குள்ளாக விண்மீண் திரள்கள்
விரியும். இந்த ‘இஸ்ரோ’ தயாரிப்பாளர்கள் இப்புதிய கல்விக்கொள்கையை ‘மோபியஸ்’ பட்டை
அல்லது நாடாவாக உருவகப் படுத்துகின்றனர். அதன் பயன்பாடு பல்வேறு துறைகளில் இருந்த
போதிலும், இவர்களது கல்விக்கொள்கை விரிவடையும் ஒன்றாக இல்லாமல் மீண்டும் வேதகால
கலாச்சாரப் பாழும் கிணற்றுக்குள் தள்ளுவதாக இருப்பது இங்கு குறிப்பிட வேண்டியது.
மாநில மொழிகளில் அறிக்கை வேண்டும் என்கிற கோரிக்கைகள் வந்த பிறகு, வெளியான 51 பக்க
தமிழ்ச் சுருக்கத்தின் 12 பக்கங்களில் ‘மோபியஸ்’ பட்டைதான் உள்ளது. 484 பக்க
அறிக்கையின் உள்ளடக்கத்தை 39 பக்கமாக சுருக்குவது எவராலும் இயலாத காரியம்.
“அந்தக்காலத்துல கல்வி எப்படி இருந்துச்சு தெரியுமா? மெக்காலே
வந்து நம்ம கல்வியை சீரழிச்சுட்டான்”, என்று புலம்பும் சிலர், இதற்கு மாற்றாக வேத, சமஸ்கிருத, குருகுலக் கல்வியை
முன்வைப்பார்கள். அதைத்தான் மோடியின் கல்விக்குழுக்கள் செய்கின்றன. இந்தப்
பின்னணியே ‘இஸ்ரோ’ ஆட்களும் கார்ப்பரேட் அடிப்பொடிகளும் கல்வியாளர்களாக உருமாறிய
கதை.
பிரபலமான ஆட்கள் அதுவும் இஸ்ரோ பேர்வழிகள் என்றால் ‘சர்வரோக
அறிஞர்கள்’
என்ற நிலை உண்டாகிறது. எந்தத்துறை குறித்தும் இவர்களால் கருத்துரைக்க முடியும்
என்பதான மாயை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம், கஸ்தூரிரங்கன் போன்றவர்கள் இவ்வாறு திட்டமிட்டு
அரசுகளால் பயன்படுத்தப்படுகிறார்கள்.
இக்கல்விக்கொள்கையைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால்,
“எங்கும் எதிலும் வடிகட்டும் தேர்வுகளுக்கான கொள்கை” என்று குறிப்பிடலாம். 3,5,8
ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வுகள், 9-12 வகுப்புகளில் 8 பருவத்தேர்வுகள்,
கல்லூரிப்படிப்பிற்கு நுழைவுத்தேர்வுகள், பட்டம் பெற்றவுடன் இறுதித்தேர்வுகள்,
வேலைக்கான தகுதித்தேர்வுகள், ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றுக்குத்
தேர்வுகள். ஓய்வு பெறுவதற்கும் சாவதற்கும் மட்டுமே தேர்வுகள் இல்லை. எனவே
நிம்மதியாக செத்துத் தொலையுங்கள் என்கிறது இக்கல்விக்கொள்கை! ஆசிரியர்களுக்கு
ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றுக்கும் தேர்வு வைப்பதன் மூலம் சமூக
நீதியைப் புறந்தள்ளுகிறது. தங்களது விசுவாசிகளை உயர்த்தும் நோக்கமிருக்கிறது.
எங்கு நோக்கினும் ‘தகுதி’க்குரல் மிகையாக ஒலிக்கிறது.
ஒற்றைக்
கலாச்சாரச் சொல்லாடல்கள்
சரகர், சுஸ்ருதர், ஆர்யபட்டர், பிரம்மகுப்தா,
பாஸ்கராச்சாரியர்,
மாதவா, சாணக்கியர், பதஞ்சலி, பாணினி போன்றோர் மட்டுமே இக்கல்விக் கொள்கையால்
அறிஞர்களாக உரைக்கப்படுகின்றனர். சாணக்கியர், பதஞ்சலி ஆகியோரையும் இதில் இணைப்பது
ஒரு குயுக்தியே. இந்தியாவில் எப்போதும் ஒரே கலாச்சாரம் இருந்ததில்லை. வட இந்திய
ஆரியக் கலாச்சாரத்தைவிட பலமடங்கு சிறப்பான தென்னிந்திய, திராவிடக் கலாச்சாரம்
உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாத பாசிசக் கல்விக்கொள்கை இது. திருவள்ளுவர்,
தொல்காப்பியர் போன்ற சிந்தனையாளர்களையும் செம்மொழியான தமிழையும்
புறக்கணிக்கின்றனர். செம்மொழி எனும் பொதுச்சுட்டு தமிழை மட்டும் குறிப்பதில்லை.
எங்கும் சமஸ்கிருதப் புகழ் பாடப்படுகிறது. எல்லாம் வடமொழி அதுவும் சமஸ்கிருதமயம்;
பெருமிதம். அர்த்த சாஸ்திரம் பஞ்ச தந்திரக் கதைகள், பகவத் கீதை ஆகியன கல்வியில்
புரட்சியை உண்டுபண்ணப் போகிறதாம்!
வடமொழி,
வேத, சமஸ்கிருத பெருமைகள்
வடமொழியிலிருந்தும் பிற செம்மொழியிலிருந்து இந்திய மொழிகள்
உருவானது, அறிவுக் களஞ்சியமாகத் திகழும் வடமொழி, இந்திய மொழிகள் வளர்ச்சிக்கு
வடமொழி ஆற்றிய பங்கு, வரலாற்றைப் புரட்டிப்போடும் வகையில் எழுதப்பட்ட வடமொழி
படைப்புகளை பள்ளிப்பாடத்தில் எங்கு நுழைக்க முடியுமோ அங்கு நுழைத்தல், 6-8 வகுப்புகளில் செம்மொழியை இரு
ஆண்டுகள் கற்றல், பஞ்ச தந்திரம், புத்த ஜாதககதைகள், கீதா உபதேசம் மூல இந்தியக்
கலாச்சாரம், கர்நாடக, இந்துஸ்தானி இசைப் பயிற்சிகள், கணக்கு, வானவியல், உளவியல்,
யோகா, தொல்லியல், மருத்துவம், அரசியல், சமூகம், அரசாட்சி, மேலாண்மை ஆகிய துறைகளில்
உள்ள இந்திய அறிவியல் அறிவைப் பாடத்திட்டத்தில் சேர்த்தல், பாஸ்கரர் கணிதப்
பாடல்கள், நன்னெறி வகுப்பில் பஞ்ச தந்திரக் கதைகள் என்றெல்லாம் தொடர்ந்து
வலியுறுத்தும் இக்கொள்கையின் பாதை தெளிவாக உணர்த்தப்படுகிறது.
முரண்பாடுகளின்
மொத்த உருவம்
இடைநிற்றலைத் தடுத்தல் வலியுறுத்திவிட்டு, 3 ஆம் வகுப்பிலேயே
பொதுத்தேர்வு என வடிகட்டும் கொள்கையை பரிந்துரைக்கிறது. பள்ளியைவிட்டு குழந்தைகளை
வெளியேற்றிவிட்டு, மூன்று நிலைகளில் முறைசாராக் கல்வி திறந்த வெளிக்கல்வி
அளிக்கப்படும் என்று சொல்கிறது. 2030 க்குள் 3-18 குழந்தைகளுக்கு கட்டாயக்
கல்வியளிப்பது என்ற முழக்கத்திற்கு மட்டும் குறைவில்லை.
“1960 க்குப் பிறகு ஆங்கிலம் உலக மொழியாகவில்லை” என்று
ஓரிடத்தில் சொல்லிவிட்டு, “அறிவியல், தொழில் நுட்ப உயர்மட்ட ஆய்வுகள் வருவதால்
ஆங்கிலம் உலகமொழியாக நிற்கிறது”, என்றும் சொல்கிறது.
ஆதாரம்,
ஆய்வுத்தரவுகளின்றி செய்திகளை அள்ளி வீசும் போக்கு
இளம் குழந்தைகள் தாய்மொழியிலேயே எளிமையாகக் கற்பதாகச்
சொல்லிவிட்டு, 85% க்கு மேற்பட்ட மூளை வளர்ச்சி குழந்தையின் 6 வயதிற்குள்ளாக
எற்பட்டுவிடுகிறது, 3-8, 8-11, 11-14, 14-18 வயதெல்லைகளுக்கு முறையே 5, 3, 3, 4
ஆண்டுகள் என 2-8 குழந்தைகள் மிக வேகமாகக் கற்றுக் கொள்வதால் மூன்று மொழிகளைக்
கற்கவேண்டும், பல்மொழி பேசும் குழந்தைகள் வாழ்வில் சிறந்த நிலையை அடைந்துள்ளனர்,
நோபல் பரிசு பெற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் அறிவியல் கற்றவர்கள், இசையை
பயின்றவர்கள் என்று தொடர்ந்து அடுக்குகின்றனர். அறிவு பல மொழிகளைக் கற்பதால்
உண்டாவதாக கற்பிதம் செய்யப்படுகிறது.
அறிவியல், கலைப் பாடங்கள் வேறுபாடுகள் இருக்காது, பாடச்சுமைக்
குறைப்பு என ஒருபக்கமும், பொதுத்தேர்வுகளில் ஆழமான கருத்துகள் கொண்ட கணிதம், புள்ளியியல்,
அறிவியல், கணினி அறிவியல், வரலாறு, கலை, தொழில்முறைப் பாடங்கள் 24 பாடங்கள் 8
பருவங்கள் எனவும் 9-12 வகுப்புகளுக்கு அறிமுகம் செய்கிறது. மேலும், 6-8
வகுப்புகளில் மரவேலை, தோட்டவேலை, மின் வேலை, மட்பாண்ட வேலை 9-12 லும்
இக்குலக்கல்விமுறை
புகுத்தப்படுமாம். ஒன்பதாம் வகுப்பிலேயே சுதந்திரமான விருப்பத்தேர்வு என்பதன்
மூலம் மாணவர்களை மேனிலை அடையவிடாமல் வடிகட்டும் போக்கு இதனுள் உள்ளது.
மையப்படுத்தும்
அதிகார வெறி
பிரதமர்
தலைமையிலான உச்ச அதிகார அமைப்பாக ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக் (RSA), மாநிலங்களில்
பெயரளவிலான ராஜ்ய சிக்ஷ ஆயோக் (RjSA), NCERT ஆல் உருவாக்கப்படும்
மையப்படுத்தப்பட்ட பொதுப் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்கள், அவற்றை
நகலெடுக்கும் சுய அதிகாரமற்ற மாநில அமைப்புகள் (SCERT) போன்றவை பொதுப்பட்டியலில்
உள்ள கல்வியை மத்தியப் பட்டியலுக்கு நகர்த்துபவை. இந்த ஒற்றையாதிக்க, கலாச்சாரச்
சொல்லாடல் இந்தியாவின் பன்முகத்தைச் சீர்குலைக்கும். இதுவரையிலான தேசிய ஆணையங்கள்
தனியார்மயத்தை விரைவுபடுத்தத்தான் உதவின என்பது அனுபவப்பாடம்.
முற்றாக
வணிகமயம்
தனியார் பள்ளிகளும் உயர்கல்வி நிறுவனங்களும் தானே கட்டணத்தை
நிர்ணயம் செய்தல், தனியார் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி வழங்குதல், கல்லூரிகளை
பல்கலைக் கழகத்தின் பிடியிலிருந்து விடுவித்தல், நிதிச் செலவுகளில் அரசு
தலையிடாது, கல்லூரிகள் தங்கள் பெயரில் பட்டங்களை வழங்கிக் கொள்ளலாம், பல்கலைக் கழக
மானியக் குழுவைக் கலைத்து உயர்கல்விக்கான ஆணையம் (HEGC) அமைத்தல் போன்றவை மூலம்
தனியார் மயத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது இக்கொள்கை.
யார் வேண்டுமானாலும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி தேர்வு நடத்தி
சான்றிதழ் வழங்கலாம். இங்கு
நடத்தப்படும் தேர்வுகள் இறுதியானவை அல்ல. தேசிய தேர்வு முகமை (NAT) நடத்தும்
தேர்வுகள் மூலமே அடுத்தக் கட்டத்திற்குச் செல்லமுடியும். ‘நீட்’ போன்ற தேர்வுகள்
இளநிலை உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் அறிமுகம் செய்யப்படுவது, ‘கோச்சிங்
சென்டர்கள்’ பல்கிப் பெருகுவதை உறுதிப்படுத்தும். சில ஆண்டுகளில் கல்வியில் அரசின் பங்கு முற்றாக விலகும் அபாயம் இருக்கிறது.
சீர்குலைத்தல்
இருக்கின்ற நல்ல முறைகள் மற்றும் நிறுவனங்களை ஒழித்துக்
கட்டுவது காவிகளின் முதன்மைப்பணி. கல்விக்கொள்கை அதை செவ்வனே செய்கிறது. 10+2 முறை
சிறப்பானது என்று சொல்லி, தாங்கள் அறிமுகம் செய்யும் 5+3+3+4 புரட்சிகரமானது
என்கின்றனர். தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005 ஆய்வு செய்து, மேம்படுத்தி
மாற்றப்படும். கல்வி உரிமைச்சட்டத்தை ஆய்வுக்குட்படுத்தி, பாடத்திட்டம், மதிப்பீடு, மாணவர்
சேர்க்கை, கற்பித்தல்
முறைகள், குருகுலம், மதரஸா, பாடசாலை போன்ற மாற்று வீட்டுப்பள்ளிகளை அனுமதித்தல்
ஆகியவற்றில் திருத்தம்
கொணர்தல் என்பன இந்துத்துவ கொள்கைக்காக வளைக்கும் சதியாகவே உள்ளது. உள்ளூர் சமூகத்
தன்னார்வலர்கள், போதகர்கள் நியமனம், என்கிற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களை
கல்விப்புலத்தில் நுழைக்க வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
வரலாற்றையும் புனைவையும் இணைக்கும் குயுக்தி வேலைகள்
செய்யப்படுகின்றன. மநுதர்மத்தையும் பிரபலமான சோழன் என்ற அரச வம்சப் பெயரோடு
இணைத்து ‘மநுநீதிச் சோழன்’ புனைவு உருவாக்கப்பட்டதைப்போல, வரலாற்று ஆதாரங்கள் உள்ள
நாளந்தாவையும் இலக்கியத்தில் மட்டும் குறிப்பிடப்படும் தட்சசீலாவையும் மிஷன்
நாளந்தா, மிஷன் தட்சசீலா என்று ஒன்றாக்குகிறது இக்கொள்கை.
மெக்காலேவிற்கு இருந்த கரிசனம் கஸ்தூரிரங்கன்களுக்கும்
சுப்பிரமணியன்களுக்கும் இல்லை. அதனால்தான் சமத்துவம், சமூகநீதி, இடஒதுக்கீடு, அரசு
உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் குறித்து கள்ள மவுனம் காக்கின்றனர். மொத்தத்தில் இவர்கள் கல்வியாளர்களே
கிடையாது. இவர்களுக்குத் தெரிந்த ஒரே மாணவர் அமைப்பு ‘அகில பாரதீய வித்யார்த்தி
பரிஷத் (ABVP) மட்டுமே. இதுவே இவர்களது அரசியலை வெளிக்காட்டப் போதுமானது. எனவே இது
கல்விக்கொள்கையுமல்ல; கார்ப்பரேட்களும் காவிகளும் சேர்ந்து உருவாக்கிய கொடுங்கனவு.
நன்றி: காக்கைச் சிறகினிலே - இலக்கிய மாத இதழ் ஆகஸ்டு 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக