திங்கள், ஜூலை 12, 2021

வெறுப்பரசியலுக்கு எதிரான குரல்

 

வெறுப்பரசியலுக்கு எதிரான குரல்

ஆர்.பரிமளாதேவி

 


 

 

      ஜம்முவின் நாடோடி இனமான பகர்வால் மக்கள் அந்தப் பகுதியில் பெரும்பான்மை பெற்றுவிடுவார்கள், அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும், அல்லது அவர்களது பரவலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற அரசியல் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட ஆசிஃபா என்கிற 7 வயது சிறுமியின் வல்லுறவிலிருந்து தொடங்கி தில்லி ஜவர்கர்லால் நேரு பல்கலையின் மாணவத் தலைவர் கண்ணையாகுமார் வரை கடந்த சில ஆண்டுகள் இந்தியாவின் ஊடகங்களில் செய்திகளாகவும் சரித்திரத்தின் அடையாளங்களாகவும் பேசப்பட்டவர்களைப் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள் இவை.

   கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழி எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலை அரசியல், சமூக அவலமாகும். எழுத்துச் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இப்படுகொலை வலியுறுத்துகிறது. இப்படுகொலை மத அரசியல் அதிகாரத்தின் வெளிப்பாடு என்று சொல்ல வேண்டும். இந்துத்துவ எதிர்ப்பு, பெண்ணடிமைத்தனம், சாதியொழிப்பு, மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவற்றை அடையாளம் காட்டுதல் என்று சதா இயங்கிக்கொண்டிருந்தக் கவுரிக்குப் படுகொலை நிகழ்ந்தது இன்று வியப்பன்று. மதச்சார்பு அரசியலுக்கு எதிரானவர்களை நகர்ப்புற நக்சல் என்று முத்திரை குத்தி அவர்களைப் படுகொலை செய்வது ஒருவகையில் அன்றாடச் செய்திகளாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியாவில்.

    இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசியல் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் இன்றைய உலகமயச் சூழலில் அதன் அரசியலில் தேர்வு செய்வது பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே. தங்களது சந்தை வீழ்ச்சியடைந்து விடக்கூடாது என்பதற்காக இந்தியாவை மாபெரும் சந்தைக் கூடாரமாக மாற்றி வைத்திருக்கும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் இன்னொரு முகம் மத அரசியல். பன்னாட்டு நிறுவனத்தில் சந்தை வியாபாரத்திற்கு மத அரசியல் ஒரு காரணமாகவும் தேவையாகவுமிருக்கிறது என்பதை மாநில சுயாட்சி தேசவிரோதமாக முடியுமா? என்கிற கட்டுரையில் விரிவாகக் காணமுடியும். மாநிலத்தின் அதிகாரத்தை மத்தில்யில் ஆளும் தலைவர்களும் கட்சிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பறித்துக் கொள்வதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.

    மத அரசியல் ஒருபுறமெனில் தமிழகத்தில் நடந்த சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையின் அரசியலை ஜார்ஜ் ப்ஃளோய்ட்டும் பென்னிக்சும் என்ற கட்டுரை தீவிரமாக ஆராய்கிறது. நீதிமன்றம், அரசியல், பொதுமக்கள், ஊடகங்கள், இவற்றையெல்லாம் மீறி காவல்துறை நடத்தியிருக்கும் இச்செயலின் அரசியலை இக்கட்டுரை வெளிப்படுத்தியிருக்கிறது.

    மத அரசியலின் வரலாற்றையும் அதன் பின்புலத்தையும் கட்டுரையாளர் ஒவ்வொரு கட்டுரையின் மூலமாக ஆதாரங்களுடன் நன்கு விவரித்துள்ளார். இது அரசியல் கட்டுரை என்பதை மீறி வரலாற்று ஆய்வுக் கட்டுரையாக மாறி அடுத்த தலைமுறையினருக்கான ஆவணமாக நம் முன் நிற்கிறது. இந்தியா முழுக்கத் தற்போது நிலவிவரும் வெறுப்பரசியலால் மாநிலப் பாரம்பரியக் கட்சிகள் வீழ்ச்சிக்கும் தடுமாற்றத்திற்கும் ஆளாகி வருகின்றன. மக்கள் தங்களது நம்பிக்கை அவநம்பிக்கை என்பதற்கு மாறாக பதற்றத்தாலும் சூழநிலைக் காரணங்களுக்காகவும் போராட்டங்களிலும் ஈடுபடாமல் முடங்கிக் கிடக்கின்றனர்; பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை இக்கட்டுரைத் தொகுப்பின் இடம் பெற்றுள்ள பத்துக் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

     எழுதுகோலைக் கொல்லும் அரசியல் / கட்டுரை / இரா.மோகன்ராஜன் / வெளியீடு: பன்மை, நிலா வீடு, 2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், தியானபுரம் - விளமல், மாவட்ட ஆட்சியரகம் - அஞ்சல், திருவாரூர் - 610004. அலைபேசி: 9842402010 – விலை ரூ.170

நன்றி: ஆர்.பரிமளாதேவி & பேசும் புதிய சக்தி ஜூலை 2021      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக