விரிவும் ஆழமும் தேடிய பயணங்கள்
சீனி. சந்திரசேகரன்
(‘தினம் ஒரு புத்தகம்’ என்ற தலைப்பில் எனது ‘கல்விக் குழப்பங்கள்’ – பாரதி புத்தகலாயம் மார்ச் 2017 - நூல் பற்றி வாட்ஸ் அப்பில் வந்த பதிவு.)
இந்தப் புத்தகத்தில் 50 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் சிறிய கட்டுரைகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒவ்வொன்றையும் எழுத நூலாசிரியர் (மு.சிவகுருநாதன்) பல புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும். இதில் நூலாசிரியரின் பல்லாண்டு கால வாசிப்பனுபவம் பளிச்சிடுகிறது.
நூலிலிருந்து…
- உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘குடவோலை முறை’யை சோழர் காலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக வரலாற்றுப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு சபை முழுதும் பிராமணர்களுக்கானது என்பதையும் இந்த குலுக்குச்சீட்டில் பிராமணர்கள் பெயரைத் தவிர வேறு எவரும் இடம்பெற வாய்ப்பு இல்லை மற்றும் சீட்டு எடுப்பவன் கூட பிராமணச் சிறுவன் என்கிற உண்மைகள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு மறைக்கப்படுவதை நூலாசிரியர் “குடவோலை முறை ஜனநாயகமா?”. என்னும் கட்டுரையில் கசடற விளக்குகிறார்.
- “பொற்கால சோழப்பேரரசு தமிழ் மொழிக்குச் செய்தது என்ன?”, மற்றும் இன்ன பிற கட்டுரைகள் சோழப் பேரரசு பற்றி நமது புரிதல்களில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
- “புத்தர் ஏன் துறவறத்தைத் தேர்வு செய்தார்?”, என்ற கட்டுரையில் புத்தர் துறவறம் மேற்கொண்டதற்கான காரணங்கள் எவ்வாறு பசி, பிணி, சாவு என திரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார்.
- “தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் சாதனைகள்”, என்னும் கட்டுரை நமது பாடப் புத்தகங்கள் பட்டியலிட்டுள்ள பார்வையிலிருந்து புதிய பரிமாணத்தைத் தருகிறது.
- குமரி (லெமூரியா) கண்டத்தின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பும் கட்டுரை, சமஸ்கிருதம் மட்டும்தான் வடமொழியா? என்னும் கட்டுரை போன்றவை எல்லாம் சிறிய கட்டுரைகள்தான், ஆனால் விரிவும் ஆழமும் தேடிய பயணங்கள் அவை.
- அறிவியல் புத்தகத்தில் உள்ள குறைகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளது மிகவும் சிறப்புற உள்ளது.
- நிலக்கடலையா? வேர்க்கடலையா? என்று கேள்வி எழுப்பி நிலக்கடலையே என நிறுவியுள்ளது சிறப்பு.
- ‘ஈசலின் வாழ்காலம்’ கட்டுரை, ஈசலின் ஆயுள் ஒரு நாள் என்னும் பொதுவான அறிதலுக்கு முடிவுரை எழுதி உள்ளது.
- “சந்தன மரம் ஒரு வேர் ஒட்டுண்ணித் தாவரம்”, என்னும் கட்டுரை நமது பாடப்புத்தகத்திலுள்ள தகவல்களை விட அதிக செய்திகளை நமக்கு வழங்குகிறது.
- கல்வி சார்ந்த துறைகளில் சிறப்புற பணியாற்ற விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள புத்தகம்.
நன்றி: சீனி. சந்திரசேகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக