சனி, ஜூலை 17, 2021

வரலாற்றெழுதியல் அவலம்!

 வரலாற்றெழுதியல் அவலம்!

மு.சிவகுருநாதன்

 


      இன்றைய (14/07/2021) 'இந்து தமிழ் திசை' நாளிதழில் பேரா. கா.அ.மணிக்குமார் "இந்திய வரலாற்றில் தென்னிந்தியாவுக்கு இடமில்லையா?" என்ற கட்டுரை எழுதியுள்ளார்.

அதன் இணைப்பு:

 https://www.hindutamil.in/news/opinion/columns/693024-south-india-role-in-indian-history.html

      புராணக்கதைகளை வரலாறாக முன்வைப்பது அன்றைய ஏற்றத்தாழ்வான சமூகக் கட்டுமானத்தை நியாயப்படுத்தும் முயற்சி, எனச் சந்தேகப்பட வைக்கிறது என்கிறார். கல்விக்கொள்கை மற்றும் பல்வேறு செயல்பாடுகள் வழியே கடந்த ஏழாண்டிலும் முந்தைய ஏ.பி.வாஜ்பாயி காலத்திலும் நிருபித்த உண்மைகளை இன்னும் எத்தனைக்காலம் வெறுமனே சந்தேகம் என்று கடந்துசெல்வது சரியா?

     வரலாற்றில் செய்யப்படும் மறைப்புகள், திரிபுகள் கவனம் பெறுவது அவசியம். இந்துத்துவம் பாடநூல்களைத் தங்களுக்கு ஏற்றபடி எழுதிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதும் விமர்சிப்பதும் முதன்மையானது. அந்த வகையில் இக்கட்டுரையை வரவேற்கிறேன்.

     இக்கட்டுரையாளரைப் பாடக்குழுத்தலைவர் மற்றும் பாடநூலாசிரியராகக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் 1806 வேலூர்ப் புரட்சி (பக்.74) குறிப்பிடப்படுகிறது. அதே பாடநூலில் 1857 பெருங்கலகம், கலகம், கிளர்ச்சி (பக்.83) என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இது ஏன்?

     மேலும் இப்பாடநூலில் பாளையக்காரர்கள் புரட்சி என்ற பெருந்தலைப்பின் கீழ் வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம், மருது சகோதரர்களின் கலகம் என்றே குறிப்பிடுகிறார்கள். பாடத் தலைப்பில் மட்டும் புரட்சி என்று எழுதினால் போதுமா?

     அவர்களைப் போல நாமும் வீம்புக்கு இவ்வாறு பாடங்கள் எழுதுவது சரியாகுமா? 1806 வேலூர்ப் புரட்சியைப் போன்று 1857 இந்தியப் புரட்சி அல்லது வட இந்தியப் புரட்சி என்று சொல்ல மறுக்கும் மனத்தடைகளுக்கு என்ன காரணம் என்பதை அறிய விரும்புகிறேன்.

 இன்னொரு எடுத்துக்காட்டு:

      தமிழக அரசின் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் 'மக்களின் புரட்சி' (பக்.39-50) என்றுப் பெருமையாகத் தொடங்கி, பாளையக்காரர் புரட்சி, வேலூர் கலகம் (1806), பெரும்புரட்சி (1857), புரட்சிக்கான காரணங்கள், கலகத்தின் தோற்றம், புரட்சியின் போக்கு, கலகம் அடக்கப்படுதல், கலகத்தின் தோல்விக்கான காரணங்கள், கலகத்தின் விளைவுகள் என முடிகிறது. இது என்ன வகையான வரலாற்றெழுதியல்?

     இப்பாடநூலின் (8 ஆம் வகுப்பு) ஆசிரியராக கட்டுரையாளர் இல்லை. இருப்பினும் தமிழக வரலாற்றுப் பாடநூல்களில் இம்மாதிரியான பல்வேறு அபத்தங்களைக் காண முடியும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக