திங்கள், ஜூலை 26, 2021

தமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி!

 தமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி!


மு.சிவகுருநாதன்

 


    1980 களின் இறுதி மற்றும் 1990 களின் தொடக்கத்தின் எனது பள்ளியிறுதி வகுப்புகளில் இருந்த காலகட்டம். அப்போது ஐராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பில் இன்றுடன் ஒப்பிடுகையில் 'தினமணி' வெகுசிறப்பாக வந்துகொண்டிருந்தது. அறிவிலுக்குத் 'தினமணிச்சுடர்'; தமிழுக்குத் 'தமிழ்மணி' என இணைப்பிதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. எனது வாசிப்பை விரிவுபடுத்தியதில் இவற்றிற்கு முதன்மைப் பங்குண்டு.

      அன்றைய காலத்தில் சில ஆண்டுகள் தனித்தமிழ் உணர்வுகளால் உந்தப்பட்டு சுறவம், காரிக் கிழமை என்றெல்லாம் தமிழ் மாதம், கிழமைகளை எழுதிக் கொண்டிருந்தேன். இன்று நினைத்தால் நகைச்சுவையாக உள்ளது. பிறருக்கு எழுதும் கடிதங்களில் இவற்றைக் குறிப்பது பெருவழக்கமாக இருந்தது.

      தமிழ்ப்பாவை - மதுரை, தமிழ்ப்பொழில், வெல்லும் தூய தமிழ் - புதுச்சேரி, செந்தமிழ்ச்செல்வி, குறளியம் என்ற பல தனித்தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு சந்தா (கட்டணம்) செலுத்தி வாங்கிப் படித்து வந்தேன். குறளியம் இதழை புலவர் இரா.இளங்குமரன் அவர்கள் நடத்தி வந்தார்.

     எனது ஊருக்கு அருகேயுள்ள வாய்மேடு மேற்கில் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்த திரு இராமு அவர்கள் திருக்குறள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரது வீட்டுவாயிலில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்திருந்தார். அவரும் தமிழாசிரியர் புலவர் வை.பழனிவேலன், தலைமையாசிரியர் வை.மாரிமுத்து, தலைமையாசிரியர் இராம. இளங்கோவன் (இவர்களனைவரும் எனது நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்) ஆகியோரும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழறிஞர் இரா.இளங்குமரன் கலந்துகொண்ட ஒரு நிகழ்வு வாய்மேடு திரு தமிழொளி அவர்களின் நியூட்டன் பயிற்சி மையத்தில் நடந்தது.

      அந்தக் கூட்டத்திற்கு துளசியாப்பட்டினம் நண்பர் தெ.சேகர் அவர்களுடன் சைக்களில் சென்று கலந்துகொண்டு, இரா.இளங்குமரன் அவர்களின் உரையைக் கேட்டும், பின்னர் அவர்களுடன் உரையாடியும் அவரது சில நூல்களை வாங்கிக் கொண்டும் வந்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

      அதன்பிறகு நமது வாசிப்பு பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் என்ற திசையில் பயணிக்கத் தொடங்கியது. நிறப்பிரிகை, நிகழ் என்ற புதிய இதழ்கள் நம்மைக் கொள்ளை கொண்டன.

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னைக் கவர்ந்த அந்தத் தமிழறிஞர் இரா. இளங்குமரன் தனது 92 வது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது தமிழ்ப்பணிகளுக்கு நெஞ்சார்ந்த பாராட்டையும் மறைவிற்கு அஞ்சலியும் செலுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக