சனி, ஜூலை 17, 2021

இவர்களைத் திருத்தவே முடியாது!

 இவர்களைத் திருத்தவே முடியாது!

மு.சிவகுருநாதன்

 


     கொரோனாப் பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்க இயலாமல் மூடிக்கிடக்கின்றன. பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்களுக்கே இணைய வகுப்புகள் சாத்தியமாகாதபோது, அரசுப்பள்ளிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

     இந்நிலையில் அவர்களது ஒரே வழிமுறையாகவும் அரசால் வலியுறுத்தப்படுவதுமாக இருப்பது 'கல்வித் தொலைக்காட்சி' மட்டுமே. ஆனால் அதில் இடம்பெறும் பாடங்கள் குழந்தைகளைக் கவரும் வண்ணம் இல்லை. இவற்றைப் பார்ப்பது 'பொதிகை'த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போன்று மிகக் கடினமான ஒன்றாகும்.

        இதில் பாடமெடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் எவ்வித முகபாவங்களுமின்றி எந்திரத்தனமாகப் பாடங்களை ஒப்பிக்கின்றனர்.

     பாடநூலில் சரியாக இருந்தால்கூட அவற்றை இவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள் போலும்! தாங்கள் நினைக்கும் பிழையானக் கருத்துகளை இவர்கள் அப்படியே வெளியிடுகின்றனர். இதைப்போன்றே விரைவுத் துலங்கல் குறியீட்டுக் (QR Code) காணொளிகளிலும் அபத்தங்கள் இடம்பெறுவதைப் பலமுறைச் சுட்டியுள்ளேன்.

     பாடநூல்களையே பொதுச்சமூகம் கண்டுகொள்ளாதபோது இத்தகையக் காணொளிகளைக் கண்டு அவற்றை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. குழந்தைகள் இவற்றைக் கண்டும் கேட்டும் அப்படியே மனத்திலிருத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இத்தகைய காணொளிகள் ஏன் சரிபார்க்கப்படாமல் அரசின் சார்பில் வெளியிடப்படுகின்றன என்பதும் கேள்விக்குரியது.

    புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் பாடப்பகுதியில் 'மக்கள் தொகையும் குடியிருப்புகளும்' என்ற பாடத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்தி இந்தியாவின் தேசிய மொழி, ஆட்சி மொழி என்றுத் தவறாகக் குறிப்பிட்டதை எனது கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டியது. இக்கட்டுரை எனது 'கல்வி அபத்தங்கள்' (பன்மை வெளியீடு) நூலிலும் உள்ளது.

 அக்கட்டுரையின் இணைப்பு கீழே:

 http://musivagurunathan.blogspot.com/.../blog-post_87...

     பின்னாளில் அத்தவறு சுற்றறிக்கை மூலமும் அடுத்தப் பதிப்பிலும் திருத்தம் செய்யப்பட்டது.

     இன்றைய (16/07/2021) கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் - குடிமையியல் பகுதியின் முதல்பாடமான 'பன்மைத் தன்மையினை அறிவோம்' என்ற பாடத்தை ஆசிரியர் ஒருவர் நடத்தினார்.

     அதில் அவர், "இந்தி இந்தியாவின் தேசியமொழி." என்று பலமுறைக் குறிப்பிட்டார். இந்திய அரசு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் (8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள்) ஒன்றிய அரசு (இந்திய அரசு) மாநிலங்களுடன் தொடர்பு கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

      அண்மைக்காலங்களில் ஒன்றிய அரசு இந்தியில் கடிதங்கள் அனுப்பியது பலமுறை சர்ச்சைக்குள்ளானது. அதையும் இவர் அறியவில்லை போலும்! 'கோவின்' இணையம் உள்ளிட்ட, ஒன்றிய அரசின் எதிலும் தமிழின் இடம் போராடிப் பெறுவதாகவே உள்ளது. ஆனால் நாம் இந்தியைத் தொடர்ந்து இவ்வாறு சொல்லித்தருவது அபத்தமல்லவா!

     இப்பாடப்பகுதியில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது", (பக்.196) என்றே இடம் பெறுகிறது. ஆனால் ஆசிரியர் இங்குத் தேவையற்றத் தவறான கருத்தைத் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார்.

        ஒன்றிய அரசிற்கு தேசிய மொழி, ஆட்சி மொழி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. அதுவும் இந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும் இந்தியும் இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக உள்ளன. இதைப்போல மாநில அரசுகளுக்கும் பெரும்பாலும் அந்தந்த மாநில மொழியும் ஆங்கிலமும் மாநில அலுவல் மொழிகளாக இருக்கின்றன.

          அந்தந்த மாநில மொழிகளில் ஒன்றிய அரசு தொடர்பு கொள்வதில்லை. இந்தி இல்லாத மாநிலங்களில் ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதுதான் நீண்டகால நடைமுறை. இந்தியைத் திணிக்க ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள மறுக்கின்றனர். இன்றுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளில் அனைத்து மொழிகளிலும் தருவது சிரமமான காரியமல்ல.

      எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளுகளுக்கும் உரிய முதன்மை (ஆட்சி மொழி - தொடர்பு மொழி) வழங்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக நீடிக்கிறது. எவ்விதப் புரிதல்களும் இல்லாமல் ஒன்றிய அரசின் திணிப்புகளுக்கு ஏற்ப இவ்வாறு குழம்புவதும், குழப்புவதும் அவர்களது ஆதிக்க மனநிலைக்கு மிகவும் வசதியாக உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

1 கருத்து:

Nanjil Siva சொன்னது…

அருமை ... இன்றுதான் உங்கள் வலைப்பதிவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நண்பரே வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக