திங்கள், நவம்பர் 08, 2021

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்...

 

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்...

 

 

மு.சிவகுருநாதன்

 

 


    நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் 'மரணக்குறிப்புகள்' என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு செய்திருந்தார். அதன் பிறகு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேரா. அ.மார்க்ஸ் இன்றைய இளைஞர்களின் வாழ்வனுபவத்தில் வெளிப்படும் புது வகை எழுத்துமுறைகள் பற்றிக் குறிப்பிட்டு தனது சிறிய உரையை முடித்துக் கொண்டார்.

 

    இரண்டாவது அமர்வு, எழுத்தாளர் ஜி.சரவணனின் 'பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்' எனும் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து, 'காளான்' இதழாசிரியர் இரா.மனோகரன் எழுதப்பட்ட கட்டுரையை வாசித்தார். இது எனது முதல் மேடையேற்றம் என்று சொல்லி, விரிவான தஞ்சைப் பகுதி இலக்கிய வகைமைகளை எடுத்துக்காட்டி அதனூடாக ஜி.சரவணனின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய சித்திரத்தை வரைந்து காட்டினார்.

 

     ஏற்புரையில் ஜி.சரவணன் இக்கதையில் 2000 வாக்கில் எழுதப்பட்டவை. 'தெற்கு பாத்த வீடு' என்ற முந்தைய தொகுப்புடன் சில கதைகள் இணைக்கப்பட்டு இத்தொகுப்பு வெளியாகியுள்ளதைச் சொல்லி, கோட்பாடு ரீதியாக இக்கதைகள் எழுதப்படவில்லை; பயிற்சிக்காக எழுதப்பட்டவை என்றும் இப்படைப்புகள் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை, வாசகர்கள் தான் விமர்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

     இறுதியாக, கவிஞனுக்கு மொழி குறித்த கவனம் சற்றுக் கூடுதலாக இருக்க வேண்டும். லார்க் பாஸ்கரன் கவிதைத் தொகுப்பில் காணப்படும் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

 

    அவைக் கூச்சத்தில் இருக்கையை விட்டு வெளியேற பலமுறை முயன்ற 'காளான்' மனோகரனை நாற்காலி காலியாக இருக்கக்கூடாதென தேவரசிகன் தடுத்தாட்கொண்டார்.

 

   அமர்வுகளில் பங்கேற்ற அனைவருக்கும் நூல்கள் பரிசில்களாக வழங்கப்பட்டன. நான் 'காளான்' மனோகரனுக்கும் மணலி அப்துல்காதர் ஜி.சரவணனுக்கும் நூல்களை வழங்க அழைக்கப்பட்டோம். இந்த நூல்கள் அனைத்தும் பேரறிஞர் அண்ணாவின் நூல்கள். இது 'அண்ணாத்தே' சீசன்; எனவே அண்ணாவின் நூல்களா என்று ஜி.சரவணன் கிண்டலடிக்கத் தவறவில்லை.

 

     எழுத்தாளர் ஜி.பி.இளங்கோவனது நூல் விரைவில் வெளியாகிறது என்ற அறிவிப்பையும் தேவரசிகன் வெளியிட்டார். எழுத்தாளர் புலியூர் முருகேசன் நிகழ்வில் பார்வையாளராகப் பங்கேற்றார்.

 

    இது 'பக்கங்கள்' அமைப்பின் இருபத்தி நாலாம் பக்கம். ஒரு சிலரைக் கொண்டு கூட இதன் நிகழ்வுகள் நடந்துள்ளன. இன்றைய நிகழ்வு 20 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டு நிறைவு பெற்றதை மகிழ்வுடன் தேவரசிகன் தொகுப்புரையில் குறிப்பிட்டார்.

 

      நிகழ்வை கவிஞர் தேவரசிகன் ஒருங்கிணைத்தார். ஒற்றையாளாய் இறுதிவரையிலும் அதன் பின்னர் விருந்தோம்பலிலும் இளைஞரைப் போல வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டேயிருந்தார்.

 

       ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய அமைப்புகள் தோன்றிப் பல்வேறு அமைப்புகளாகப் பிரிந்து போய்விடுகிறது. ஆனால் 'பக்கங்கள்' அமைப்பில் மட்டும் அது நிகழவே இல்லை. ஏனெனில் தேவரசிகன் மட்டுமே இந்த அமைப்பில் இருக்கிறார் என்று நன்றியுரையில் கவிஞர் ஆடலரசன் குறிப்பிட்டார்.

 

     லார்க் பாஸ்கரன் 'காளான்' பதிப்பகம் வெளியிட்ட அவரது முதல் கவிதைத் தொகுப்பான 'கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கிறேன்' என்ற நூலை என்னிடம் தந்தார். அந்நூலைப் பிறிதொரு சமயத்தில் கவனிப்போம்.

 

      மதிய உணவிற்குப் பின் மணலி அப்துல்காதருடன் அ.மா. இல்லம் சென்றோம். வரவிருக்கும் அ.மா. வின் புதிய நூல்கள் பற்றியும் மணலி அப்துல்காதரின் 'நன்னூல்' பதிப்பக வெளியீடுகள் பற்றியும் உரையாடிவிட்டு ஊர் திரும்பினோம்.

 

     (07/11/2021 ஞாயிறு இன்று காலை 10:00 - 01:00 முடிய கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ராஜா ரெஸ்ட்ரண்ட் / ஸ்வீட்ஸ் மாடியில் 'பக்கங்கள்' இலக்கிய அமைப்பு ஒழுங்கு செய்த இரு நூல்களின் விமர்சன அரங்கு குறித்த பதிவு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக