திங்கள், நவம்பர் 08, 2021

வாக்ரிகள் என்று அழைப்போம்!

 

வாக்ரிகள் என்று அழைப்போம்!

 

மு.சிவகுருநாதன்

 


 

 

     இன்றைய (01/11/2021) தலையங்கத்தில் வெளிப்படும் ஒரு விளிம்பு நிலைச் சமூகம் குறித்த கரிசனம் பாராட்டிற்குரியது. ஆனால் அச்சமூகம் 'வாக்ரிபோலி' என்ற மொழியடிப்படையில் வாக்ரிகள் என அழைக்கப்படுவதை ஒரு பாரம்பரிய தமிழ் நாளிதழ் கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகிறது.

 

     உங்களைப் போன்ற நாளிதழ்கள்தான் அடைப்புக்குறிக்குள்ளாவது இப்பெயர்களைக் குறிப்பிட்டு எழுதி, அவற்றைப் பொதுப் பயன்பாட்டிற்கு வர உதவி புரிய வேண்டும். 'கூடா நட்பு' போன்ற சொற்களின் பயன்பாட்டைப் போலவே இவற்றையும் வாசகர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

      தமிழகத்திலுள்ள மூன்று தலித் சமூகங்களில் இரண்டிற்கு அரசாணைகள் மூலம். மாற்றுப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். பழைய பெயர்கள் வருங்காலங்களில் பயன்பாட்டிலிருந்து நீங்குவதுடன் அவை வெறும் வசைச்சொற்களாகவே பார்க்கப்படக் கூடும்.

நாடோடிப் பழங்குடிச் சமூகமான வாக்ரிகள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும் வாக்கு வங்கியாகத் திரட்டப்படாத காரணத்தாலும் ஆளும் வர்க்கங்கள் இவர்களைக் கண்டுகொள்வதில்லை.

 

    ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களில் வாக்ரிகள் பழங்குடியினர் பட்டியலில் (ST) வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இவர்கள் மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் உள்ளனர். இவர்களைப் பழங்குடியினர் பட்டியலை இணைக்கும் மசோதா மகளிர் இட இதுக்கீட்டு மசோதாவைப் போல பல்லாண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் எட்டு லட்சங்கள் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளைக் (EWS) கவனிக்கத்தான் ஒன்றிய அரசிற்கு நேரமிருக்கிறது. மாநில அரசும் இதே பாணியில் செயல்படக்கூடாது.

 

     கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் வாக்ரிகளுக்கு மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் எத்தகைய பங்கு கிடைக்கும் என்பதை உணர பெரிய ஆய்வெல்லாம் தேவையில்லை.

 

    வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீட்டால் பிற மிகவும் பிற்பட்ட சமூகங்கள் பல மிகக்கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் வாக்ரிகளுக்கு கல்வி வாய்ப்புகள் முற்றாக இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

 

     பொதுவாக உள் ஒதுக்கீடுகள் இம்மாதிரியான விளிம்புச் சமூகங்களுக்கே வழங்கப்படுவது தார்மீக அறமாக செயல்பட்ட நிலை மாற்றமடைந்து, வெறும் வாக்கு வங்கி அரசியலை நோக்கி நகர்ந்ததால் அறமும் சமூக நீதியும் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகிறது.

 

   தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் வாக்ரிகளுடன் சேர்ந்து உணவருந்தியது வரவேற்க வேண்டிய ஒன்று. பேருந்து, திரையரங்கம், கோயில் அன்னதானம் போன்றவற்றில் வாக்ரிகள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியமே. இவற்றையும் தாண்டி அவர்களது சமூகநிலை உயரவும் சமூக நீதி நிலை நாட்டப்படுவது குறித்தும் தமிழின் முன்னணி நாளிதழின் தலையங்கம் கூடுதல் அக்கறைகளை வெளிப்படுத்திருக்க வேண்டுமெனக் கருதுகிறோம்.

 

 

    (இன்றைய (நவம்பர் 01, 2021) 'இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்கம் குறித்த எதிர்வினை. இதன் சுருக்கப்பட்ட வடிவம் 'இந்து தமிழ் திசை' ‘இப்படிக்கு இவர்கள்’ பகுதியில் 02/11/2021 அன்று வெளியானது.)

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக