சனி, மார்ச் 18, 2023

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

 

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

மு.சிவகுருநாதன்

 

(சிவகுமார் முத்தய்யாவின்குரவைநாவல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்கு குறித்த பதிவு.)


 

            திருவாரூர் அருகேயுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட 7 நூல்களின் ஆசிரியர். அவர் எழுதியகுரவைஎன்னும் முதலாவது நாவலை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீடு மற்றும் அறிமுகக் கூட்டம் 11/03/2023 மாலை 5 மணியளவில் திருவாரூர் செல்வீஸ் கோல்டன் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு புலவர் பேரவை பொதுச்செயலாளர் புலவர் எண்கண் மணி அவர்கள் நிகழ்விற்கு தலைமையேற்றார்.

        நாவலாசிரியர் சிவகுமார் முத்தய்யாவின் புதல்வியும் சித்த மருத்துவ மாணவியுமான செல்வி தமிழினி சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். எழுத்தாளரின் மாமனாரும் தாழைக்குடி டி.எம்.எஸ். பர்னிச்சர் உரிமையாளருமான எம்.சௌந்தராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

          பதிப்பாளர் ஜீவகரிகாலன், “எங்களைத் தேடி எழுத்தாளர்கள் வருவதில்லை. நாங்கள் தனித்துவமாக எழுத்தாளர்களைத் தேடிச்சென்று அவர்களது படைப்புகளை வெளியிடுகிறோம். அந்த வகையில் நண்பர் சிவகுமாரின் எழுத்துகளைகணையாழிகுறுநாவல் போட்டியில் தேர்வானது. அதன் வீச்சை அறிந்து அவரது படைப்புகளை வெளியிடுகிறோம். இவரது எழுத்துகள் சிறப்பானவை. அவற்றிற்குரிய அங்கீகாரமோ விருதுகளோ நண்பருக்குக் கிடைக்கவில்லை. விரைவில்குரவைநாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் போகிறோம்”, என்றும் தெரிவித்தார்


 

      அடுத்து நாவலைப் பற்றிய பேசிய மு.சிவகுருநாதன், “குரவை நாவல் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பேசும் நாவல். எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாளின் நண்பர் நாவலாசிரியர் சிவகுமார். இந்த நாவலை அவர் பார்த்திருந்தால் பெரும் மகிழ்ச்சியடைந்திருப்பார். சதிராட்டம் பரதநாட்டியமாகமேனிலையாக்கம் பெற்றதைப்போல வாய்ப்பு இந்தக் கூத்துகளுக்குக் கிடைக்கவில்லை. இக்கலையுடனும் கூடவே தோல் கருவிகளான பறை (தப்பு), தவில் (மேளம்) போன்றவையும் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் அடையாளமாகத் தேங்கிப் போயின. மேளம் கூட நையாண்டி மேளமாக தரமிறங்கியது. தொல் தமிழர் கலைகள் என்று சொல்லப்பட்டாலும் நிலப்பிரபுத்துவம் தனது வசதிக்கேற்ப இவற்றைத் தக்கவைத்துக் கொண்டது. அவர்கள் மீது பல்வேறு சுரண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முதன்மையானது பாலியல் சுரண்டல்என்று சொன்னார்.

            மேலும், “நாவலில் வரும் ஆண்களைவிட பெண்கள் உறுதியானவர்களாகவும் தெளிவான பார்வையுடையவர்களாகவும் உள்ளனர். தஞ்சை மண்ணில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், பரந்து விரிந்துப் பாய்ந்தோடும் காவிரிஅதன் கிளையாறுகள், நெற்களஞ்சியத்தின் ஈரநெல் வாசனை, வெற்றிலைப் பாக்கு தாம்பூல வாசனை, பக்தி மணம் கமழும் சாஸ்திரிய சங்கீதம், பசும்பால் காபி கிளப்கள், பண்ணையார்கள், மைனர்கள் என காவிரிக்கரை கலாச்சாரத்தின் மறைக்கப்பட்ட பகுதியாக இந்த விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் அமைந்துள்ளது. சொல்லப்பட்ட புனிதங்களுடன் நண்டு, நத்தை, சேறு சகதி, கருவாட்டு வாசனையும் சேர்ந்ததுதான்  தஞ்சை மண். மாங்காய் வாசனை மிக்க முத்தங்கள், வியர்வையில் கசிந்துவரும் வெந்தய வாசனை (பக்.11), வெயிலில் சேறு காயும் வாசனை, அவன் மேல் புளித்த வாடை (பக்.45),  தப்படிச்சானே மீன் வாசனையில் மணத்துக் கிடந்தது (பக்.230) என அனைத்து வாசனைகளையும் இந்நாவல் வெளிப்படுத்துகிறது.

        நாட்டார் கலைகள், பண்பாடு என்றெல்லாம் புனிதப்படுத்துவதும் தேவையில்லாதது. இத்தகைய தேவையற்ற சுமைகளை விளிம்புநிலை மக்கள் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. கலை, பண்பாட்டைப் பேணிக்காக்க யாரையும் பலியிட வேண்டாம் என்ற எச்சரிக்கை அவசியம். 40 ஆண்டுகாலக் கொடுமைகளிலிருந்து விடுபடக் கிளம்பும்  அவள் நாவலின் சிறப்பு”, என்பதையும் பதிவு செய்தார்.

        அடுத்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் இரா.காமராசு உரையாற்றினார். அவர் பேசும்போது, “கரகாட்டக்காரன் (1989)  சினிமா, லாட்டரி சீட்டு ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது சுமார் 10 ஆண்டு காலவெளியில்  இந்நாவல் இயங்குகிறது.   தப்படிச்சான் மூலை என்ற கற்பனை இடத்தை மையமாகவும் கொண்டுள்ளது. இது ரெட்டிப்பளையமாக்க் கூட இருக்கலாம்.  இங்கு எல்லாம் சாதியாக இருக்கிறது. சொந்த சாதிக்குத் துரோகம்  செய்வதன் மூலமே சாதிய மனப்பான்மையை வேரறுக்கலாம். இந்த நாவலில் ஏராளமான பெண்கள் முதன்மைப் பாத்திரங்களாக வருகின்றன. ஆட்டக்காரி வசந்தாவிற்கு நேரடியாக உதவி செய்ய மறுக்கும் கலியமூர்த்தி மனைவி பாப்பா, அவளுக்குன்னு யாரு இருக்காநம்மள விட்டாஎன்று நகையை கழற்றி அடகுவைத்து இறுதிக்காரியம் பார்க்கச் சொல்வது அந்த மனிதர்களின் வாழ்வியலுக்கு எடுத்துக்காட்டாகும். அப்துல்காதர் போன்ற அற்புத மனிதர்கள் இந்நாவலில் இருக்கிறார்கள்”, என்றார்


 

      பறையடிப்பது சாதாரணமான பணியல்ல. நெல்  மூட்டைகளைத் தூக்குவதுபோல கடினமான பணி. இதற்குக் கடின உழைப்பு தேவைப்படுகிறது. பறை, தவில் வாசிப்பது அதன் நுட்பங்கள் நாவலில் பதிவாகின்றன. தப்புக் கட்டி விற்கும் பொட்டுவிடம் சந்திரன்குமார் சூரியப்பறை வாங்கும்போது  பெரிய ஈட்டி மாணிக்கத்திற்குச் செய்யப்படும் சேவல் பலியிடும் சடங்குகள் விரிவாகப் பதிவாகின்றன. மாட்டுத்தோலைப் பக்குவப்படுத்தி பறை கட்டுவதும் அதற்கான குச்சிகளைத் தேர்வு செய்வதும் நாவலில் பதிவு செய்யப்படவில்லை”, என்பதையும் சுட்டினார்.

       நாவலில் குடி மிகுதியாக வருகிறது. குடி மட்டுமா அவர்களது வாழ்க்கையாக  இருக்கிறது?  தொலைக்காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் வருவதைப்போல இதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்று பெண்கள் தப்பாட்டக் குழுக்கள் வந்துவிட்டன. அன்று செவத்தகன்னி தந்தை இறந்தது காணியாச்சி வேலை பார்க்க முடிவு செய்வது புரட்சிகரமானது. நிலங்களைப் பார்த்துக்கொள்வது, பிணங்களை எரிப்பது, துக்கம் சொல்வது, பறையடிப்பது என எல்லாம் சேர்ந்ததுதான் இந்த காணிவேலை. பிற்காலத்தில் பெண்கள் தப்பாட்டக்குழுவை அவள் உருவாக்குவதும் நாவலில் சுட்டப்படுகிறது. பின்நவீனத்துவ, -நேர்கோட்டுப் பணியிலான (Non linear) பாணியிலான கதை சொல்லும் முறையில் நாவல் சற்று கலைத்துப் போடப்பட்டுள்ளது”, என்றும் குறிப்பிட்டார்.

     இறுதியாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க.ஜவகர் தனது உரையில், “இந்நாவலில் பல்வேறு  முரண் எதிர்வுகள்  துலக்கம் பெறுகின்றன. பறை X  தவில், நிலம் X  நிலமின்மை, கல்வி X  கல்வியின்மை போன்றவற்றின் வழியே நாம் நாவலை அணுகலாம். பறையும் தவிலும் ஒரே மாட்டின் தோலால் செய்யப்பட்டாலும் இவையிரண்டும் ஒன்றல்ல. இதில் சாதி இருக்கிறது”, என்றார்.

     இவர்கள் கையில் எப்படி தப்பு வந்தது. இவர்கள் எப்படி இந்தத் தொழிலை செய்தார்கள் என்று எவருக்கும் தெரியாது” (பக்.92) என்பதே இந்நாவலில் தொடக்கப் புள்ளியாகக் கருதலாம். இதற்கு நாம் 1000 ஆண்டு வரலாற்றைப் பார்க்க வேண்டும். நிலம் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு பிரம்மதேயங்களாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் மாற்றப்பட்டன. இன்று கார்ப்பரேட் நமது நிலங்களை வளைப்பதைப்போல அன்று மன்னர்கள் செய்தனர். சங்க காலத்திருந்து பாணர்கள் எனும் கலைஞர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.

      இவர்களுக்கான கல்வி பறிக்கப்பட்டது. ரேகா ஒடிப்போனதற்குக் காரணம் அவளைப் பள்ளிக்கு அனுப்பியதுதான் என்கிற பேச்சு நாவலில் வருகிறது. கல்வி மறுப்பின் மூலம் இவர்களை நிலவுடைமைச் சமூகம் அடிமைகளாக்க் கட்டமைத்துள்ளது. இந்த நாவலில் வரும் ரேகா, செவத்தக்கன்னி கதாபாத்திரங்கள் சிறப்பான முறையில் படைக்கப்பட்டுள்ளன. கதாப் பாத்திரங்களில் மொழிநடையில் சற்று கவனம் செலுத்தி, எழுத்துப்பிழைகளையும் களைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

       படைப்பாளி இறந்து விட்டான்; படைப்புதான் முக்கியம் என்றாலும் கூட சில இடங்களில்    கதைசொல்லியின் குரல் நெருடலை ஏற்படுத்துகிறது. இது கதைசொல்லியின் அரசியலை வெளிப்படுத்துவதாக உள்ளது. விளிம்புநிலை மக்களுக்காக நிற்க வேண்டிய நிலையில் பறை சார்ந்த வைதீக தொன்மங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அவற்றை கதைப்பதும் சரியல்ல என்பது என்னுடைய ஆதங்கம்”, என்றும் குறிப்பிட்டார்.

     மத்திய பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தோழர் விக்னேஷ் பார்வையாளர் தரப்பிலிருந்து நாவல் குறித்த கருத்தைப் பதிவு செய்தார்.

      நாவலாசிரியர் சிவகுமார்  முத்தய்யா தனது ஏற்புரையில், “இது எனது எட்டாவது நூல். சரியாகத் திட்டமிடாதலால் நிறைய பேரை அழைக்க முடியவில்லை. பல சிறுகதைகள் போன்று எழுதப்பட்டு அவை ஒன்றாக நாவலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இன்றைய நிகழ்வு மிகவும் மகிழ்வான தருணமாக உள்ளது. இங்கு அனைவரும் குறிப்பிட்ட விமர்சனங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். அவற்றை ஆய்வு செய்து சரிசெய்யவும் முயற்சிப்பேன். செய்தியாளராகப் பணி செய்யும்போது எந்தச் செய்தியையும் சற்றுக் கூடுதல் கவனத்துடன் செயல்படும் தன்மை எனக்கு உண்டு”, என்று அனைவருக்கும் நன்றி சொல்லி நிறைவு செய்தார்.

       அரங்கில் குரவை - நாவல், தூண்டி முள் வளைவுகள்குறுநாவல் தொகுப்பு  ஆகியன கழிவுபோக தலா ரூ.250 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத் தலைவர் தோழர் மாசிலாமணி, பவித்திரமாணிக்கம் வாசகர் வட்டத் துணைத்தலைவர் கோ.இராசவேல், சோழா ரியல் எஸ்டேட் நடராசன், முத்தமிழ்ப் பண்பாட்டுப் பாசறை அ.கந்தன், சிவகுமார் முத்தய்யாவின் இணையர் தோழர் இராஜலெட்சுமி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்வு 7 மணிக்கு நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக