தொடரும் சோதனை முயற்சிகள்
மு.சிவகுருநாதன்
(மகாத்மாவின் கதை தொடரின் மூன்றாவது அத்தியாயம்)
அசைவஉணவு சாப்பிடாததால் மூளை வளர்ச்சிக் குறைந்துவிடும், ஆங்கிலேய சமூகத்துடன் இயல்பாகப் பழக முடியாமல் போய்விடும் என காந்தியின் நண்பர் மிகவும் வருந்தினார். எனவே நடை, உடை, தோற்றம் மற்றும் பாவனைகளில் ஆங்கிலேயனாக மாறுவது உகந்தது என்ற எண்ணம் காந்திக்குத் தோன்றியது. அங்கு குறைபாடாகக் கருதிய அசைவ உணவு உண்ணாமை என்கிற தனிமனித நடத்தையை ஈடுசெய்ய இது உதவும் என்றும் காந்தி கருதினார். நாகரீகக் குறைவாக நடக்காமல் நாகரீக சமூகத்தின் பண்புகளாக கருதப்பட்ட சிலவற்றை காந்தி கடைப்பிடிக்கத் தீர்மானித்தார்.
பம்பாயில் தைக்கப்பட்ட உடைகளைப் பயன்படுத்தி வந்த காந்தி அவை ஆங்கிலேய சமூகத்திற்கு ஒத்துவராது என்று கருதியதால் ராணுவ கடற்படை அங்காடியில் புதிய உடை வாங்குகிறார். பத்தொன்பது ஷில்லிங்கில் சிம்னி-பாட் தொப்பி (Chimney-pot hat), லண்டன் பாண்ட் தெருவில் மாலை நேரத்தில் அணியும் நாகரீக உடை பத்து பவுனுக்கும் வாங்கினார். அண்ணனுக்குக் கடிதமெழுதி மணிக்கட்டில் அணியும் இரட்டை வடத் தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கி அனுப்பச் செய்கிறார்.
கடைகளில் கட்டி விற்கப்படும் டை நாகரீகமாக இல்லாத காரணத்தால் தானே டை கட்டிக்கொள்வதற்குக் கற்றுக் கொள்கிறார். இந்தியாவில் காந்திக்கு முகச்சவரம் செய்யும்போது மட்டுமே முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டும். ஆனால் இங்கு பெரிய நிலைக்கண்ணாடி முன்நின்று ஆடையணிந்து அழகு பார்ப்பது, டை கட்டிக்கொள்வது, தலைவாருவது என அழகூட்டும் செயல்கள் தொடர்ந்தன. இதில் 10 நிமிடங்கள் செலவாகும். காந்தியின் தலைமுடி மிருதுவானதல்ல; அந்தக் கோரை முடிகளை சீவிப் படியவைப்பதும், அமர்ந்திருக்கும்போது அடிக்கடிக் கைகளால் முடிகளைக் கோதி விடுவதும் நாகரீகமாகவும் ஸ்டைலாகவும் இருந்தது.
வெளித்தோற்றத்தில் மட்டும் ஆங்கில நாகரீகம் பொதுமானதாக இருக்கவில்லை. எனவே இன்னும் அதற்குக் கூடுதலாக சில வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இன்று ஆங்கிலம் உலகப் பொதுமொழியாக இருப்பதுபோல அன்று ஐரோப்பியக் கண்டத்தின் பொதுமொழியாக பிரஞ்சு மொழி இருந்தது. அதைக் கற்றுக்கொள்வதும் பேசிப்பழகுவதும் அவசியமாகக் கருதப்பட்டது. மேலும் காந்திக்கு ஐரோப்பா கண்டம் முழுவதும் சுற்றிப்பார்க்கும் ஆவல் மிகுந்திருந்தது.
விருந்துகளில் கலந்துகொள்ளும்போது நடனம் ஆடுவது அவர்களின் இயல்பாக அமைந்த ஒன்று. எனவே அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். மூன்று பவுன் கட்டணம் செலுத்தி ஒரு நடனப் பயிற்சி வகுப்பில் சேர்கிறார். மூன்று வாரங்களில் ஆறு பாடங்களைக் கற்றாலும் பியானோ தாளகதிக்கேற்ப நடனமாட இயலவில்லை. மேலை இசையை ரசிக்கக் கற்றுக்கொள்ள பிடில் வாசிக்கக் கற்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. ஆகவே மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்குகிறார். அதைச் சொல்லிக்கொடுக்க ஆள் வேண்டுமல்லவா! அதைவிட அதிகத் தொகையளித்து ஆசிரியர் ஒருவரை அமர்த்துகிறார்.
ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்க்க மூன்றாவதாக ஆசிரியர் ஒருவரைத்தேடி அவருக்கு ஒரு கினி (21 ஷில்லிங்) கட்டணம் செலுத்துகிறார். அந்த ஆசிரியர் பெல் (Bell) எழுதிய ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட் (Standard Elocutionist) என்ற நூலைப் பரிந்துரை செய்கிறார். அதையும் வாங்கி மேலும் பிட் என்பவரின் நூல் ஒன்றையும் வாங்கி வாசிக்கத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் சுய விழிப்புணர்வடைந்து நான் வாழ்நாளெல்லாம் இங்கிலாந்தில் இருக்கப்போவதில்லை. ஆகவே பேச்சுத்திறனைக் கற்று என்ன பயன்? நடனமாடுவது என்னை எப்படி ஆங்கிலேயனாக்கும்? பிடில் வாசிக்க இந்தியாவிலேயே கற்றுக்கொள்ளலாமே! நான் இங்கிலாந்தில் சட்டம் படிக்க வந்த ஒரு மாணவன். ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்தி பாரிஸ்டர் ஆக வேண்டிய தகுதிகளை வளர்த்துகொள்ள வேண்டுமே தவிர இம்மாதிரியான ஆசைகள் தேவையில்லை என அவரது உள்ளுணர்வு வலியுறுத்தியது.
இத்தகைய எண்ணங்கள் தொடர்ந்த காரணத்தால் பேச்சுப்பயிற்சி ஆசிரியருக்கு கடிதம் மூலம் தெரிவித்து, வகுப்பைக் கைவிடுவதற்கும் மன்னிக்க வேண்டினார். அங்கு அவர் கற்றது சில பாடங்கள் மட்டுமே. இதைப்போல நடன ஆசிரியருக்கு கடிதம் மூலம் தனது எண்ணத்தைத் தெரிவித்தார். பிடில் ஆசிரியரிடம் நேரில் சென்று பிடிலை விலைக்கு விற்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆங்கிலேய ஈர்ப்பு சுமார் மூன்று மாதங்கள் நீடித்தது. அதன்பிறகு படிப்பில் தீவிரக் கவனம் செலுத்தினார். உடைகள் அணிவதிலுள்ள கவனம் பிற்காலத்தில் தமிழ்நாட்டுப் பயணம் ஒன்றில் தனது உடையைக் குறைத்துக் கொள்ளும் வரை தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இத்தகைய மாறுதல்கள், சோதனைகளால் காந்தி மதிமயங்கி, நெறி தவறிச் சென்று விடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவரது உள்ளுணர்வு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டது. வணிகக் குடும்பத்தில் பிறந்த காந்தி சிக்கனமாகச் செலவு செய்வதிலும் அவற்றிற்கு உரிய கணக்குகளை எழுதி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். தான் செலவு செய்த ஒவ்வொரு காலணாவிற்கு கணக்கு எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது. காந்திக் கணக்கு என்பது அவரது நேர்மை மற்றும் அறத்தின் வெளிப்பாடுதானே தவிர தற்போதைய கிண்டலாக அது உண்மையில் இல்லை.
கணக்கு வழக்குகளை பராமரிப்பதிலும் காசை எண்ணிச் செலவளிப்பதிலும் பொதுப்பணத்தை மிகப் பக்குவமாக கையாளும் பண்பைப் பெற்றவர்கள் என்ற பெருமை எதிரெதிர் கருத்துநிலை கொண்ட காந்தி, பெரியார் இருவருக்கும் பொருந்தும். காந்தி பிற்காலத்தில் நடத்திய இயக்கங்களின் வரவு செலவுக் கணக்குகளில் அவரது சிக்கன மற்றும் சரியான கணக்குகள் என்ற தன்மைகளையும் தொடர்ந்து கடைபிடித்தார். இதை அனைவரும் வாழ்வின் கடமையாகக் கொள்ள வலியுறுத்தினார்.
தனது வாழ்க்கைமுறையைத் தானே கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்ததால் சிக்கனத்தின் அவசியத்தை அறிய முடிந்தது என்கிறார். நடை, உடை, பாவனைகளின் சோதனை முயற்சிகளின் செலவுகள் ஒருவழியாக நிறுத்தப்பட்டபிறகு வேறு என்ன வழிகளில் சிக்கனத்தை மேற்கொள்ளலாம் என்று ஆராயத் தொடங்கிவிட்டார். தன்னுடைய செலவீனத்தைப் பாதியாகக் குறைக்க திட்டமிடலானார். அவர் தங்கியிருந்த குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய வாடகை, உணவுத் தொகைகள், அவர்களுடன் உணவகங்களுக்கு சென்று சாப்பிடும் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றைக் குறைக்கத் தனியே அறையெடுத்து தங்கவும் முடிவு செய்தார்.
ஓர் அறை உட்கார்ந்து பணியாற்றுவதற்கும் படிப்பதற்கும் மற்றோர் அறை தூங்குவதற்கு என தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகே இரு அறைகள் கொண்ட ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். வண்டி இல்லாமல் கூடிய அவகாசத்துடன் முன்கூட்டியே கிளம்பி நடந்து செல்லும் முறையைக் கையாண்டார். நாள்தோறும் 12லிருந்து 15 கி.மீ. நடக்கும் பயிற்சி கிடைத்தது. இதனால் தனக்கு உடல் உறுதி பெற்றதோடு இங்கிலாந்தில் நோயின்றி நலமுடன் இருந்ததாகத் தெரிவிக்கிறார். அவரது கணக்குப்படி செலவுகள் பாதியாகக் குறைந்தன.
வழக்குரைஞர் (பாரிஸ்டர்) தேர்வுக்கு அதிகம் படிக்க வேண்டியதில்லை. எனவே, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆவல் உண்டானாது. முதலில் பி.ஏ. பட்டம் பெற்று, பிறகு என்னிடம் வா என்று ஶ்ரீலேலி (சர் பிரடரிக்) சொன்ன சொற்கள் காந்தியின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஆங்கில இலக்கியத்தில் ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற விரும்பினார். ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் படிப்புகள் குறித்து விசாரித்துப் பார்க்கிறார். அவைகளுக்கு கூடுதலாக செலவு ஆகும் என்பதும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட இன்னும் கூடுதலாக இங்கிலாந்தில் தங்க வேண்டியிருக்கும் என்பதால் அந்த முடிவைக் கைவிட வேண்டியதாயிற்று.
அதற்குப் பதிலாக லண்டன் பதின்ம வகுப்புத் தேர்வை (Matriculations Examination) எழுதலாம் என்று நண்பர் ஒருவர் பரிந்துரை செய்கிறார். இதில் செலவு அதிகமிருக்காது. கடினமாக உழைத்தால் வென்றுவிடலாம்; பொது அறிவும் கூடும் என்ற நம்பிக்கை இருந்த்தால் இந்த யோசனை காந்திக்குப் பிடித்திருந்தது. ஆனால் அதற்குரிய பாடங்கள் காந்தியை பயமுறுத்திவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்கிலம், லத்தீன், தற்கால ஐரோப்பிய மொழி ஒன்றையும் படிக்க வேண்டும். ஏற்கனவே பிரஞ்சு மொழியைக் கற்கத் தொடங்கியிருந்தார் காந்தி. லத்தீனைக் கற்பதுதான் கடினம். வழக்குரைஞர்களுக்கு லத்தீன் மிகவும் பயனுள்ள மொழி; சட்ட நூல்களைப் புரிந்துகொள்ள இம்மொழி மிக அவசியம்; ரோமானிய சட்டம் குறித்த ஒரு தேர்வை லத்தீன் மொழியில்தான் எழுத வேண்டும்; லத்தீன் படித்துவிட்டால் ஆங்கில மொழித்திறனும் கூடும் என்றெல்லாம் நண்பர் பட்டியலிட்டார்.
எவ்வளவுக் கடினமாக இருப்பினும் நண்பர் கூறியபடி லத்தீன் படித்துவிடுவது என காந்தி தீர்மானம் செய்தார். அதற்கென தனிப்பயிற்சி இன்றிலும் இணைந்துகொண்டார். ஆங்கிலேயன் ஆகும் கனவைவிட்டு தற்போது கருத்தூன்றிப் படிக்கும் மாணவனாக மாறினார் காந்தி. படிப்பதற்கான கால அட்டவணையைத் துல்லியமாகத் தயாரித்தார். ஆனால் பிற பாடங்களைப்போல லத்தீன், பிரஞ்சு மொழிகளைப் படிக்க அவரது அறிவோ, திறமையோ துணைபுரிவதாக இல்லை. எனவே லத்தீன் தேர்வில் அவருக்கு தோல்வி கிட்டியது.
லத்தீன் மொழியில் வேறு ஒரு தேர்வை எழுதினால் பலனளிக்கும் என்று நம்பினார். அறிவியலை லத்தீன் மொழியில் படிக்கலாம் என்று கருதி இந்தியாவில் கட்டாயப் பாடமாக இருந்த வேதியியலைத் தேர்வு செய்தார். மிகவும் கவர்ச்சிகரமான இருக்க வேண்டிய வேதியியல் ஆய்வகச் சோதனைகளுக்கு வாய்ப்பில்லாத காரணத்தால் ஈர்ப்பின்றிப் போனது. எனவே வேதியியலுக்குப் பதிலாக இயற்பியலில் வெப்பம், ஒளி போன்றவற்றை படிக்கத் தேர்வு செய்தார். இது காந்திக்கு எளிமையாக அமைந்தது.
ஏற்கனவே காந்தி தமது செலவீனங்களைப் பாதியாக சுருக்கிக் கொண்டதை நாமறிவோம். இருப்பினும் இதைவிட எளிமையான வாழ்வை விரும்பினார். தான் கேட்கும்போதெல்லாம் பணம் அனுப்பும் சகோதரர் படும் துயரங்கள் காந்தியின் மனக்கண் முன் நின்றன. மாதத்திற்கு எட்டு முதல் பதினைந்து பவுன் வரையில் செலவு செய்துகொண்டிருந்த மாணவர்களில் பலருக்கு கல்வி உதவித்தொகை வசதி கிடைத்தது. தன்னைவிட மிக எளிய வாழ்க்கை நடத்திய சில மாணவர்களையும் காந்தி கண்டார். குடிசைப்பகுதிகளில் இரண்டு ஷில்லிங்க்கு ஓர் அறை எடுத்துக் கொண்டு, லோகார்டிலிருக்கும் மிக மலிவான கோக்கோ கடையில் இரண்டு பென்ஸ் செலவில் கோக்கோவும் ரொட்டியும் சாப்பிட்டு வாழும் மாணவர்களும் உண்டு. அம்மாணவரைப் பின்பற்றுவது காந்திக்கு இயலாது என்றாலும் இரண்டு அறைகள் தனக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
எளிய வாழ்க்கை வாழ்வது தொடர்பான சில நூல்களையும் வாசித்தார். அதன்படி இரண்டு அறை குடியிருப்பைக் கைவிட்டு ஒரு அறைக்கு மாறினார். இதனால் மாதம் 5 பவுன் மிச்சமாகும். ஒரு அடுப்பு (stove) வாங்கி காலை உணவை அறையிலேயே தயாரிக்கலானார். காலை சமையல் ஓட்ஸ் கஞ்சி வைப்பதும் கோக்கோவிற்கு நீர் கொதிக்க வைப்பதும் என்பதால் சுமார் 20 நிமிடங்களில் வேலை முடிந்துவிடும். மதிய உணவை மட்டும் வெளியில் உண்டார். இரவில் ரொட்டி, கோக்கோ போதுமானது. இவ்வாறு நாள்தோறும் ஒரு ஷில்லிங், மூன்று பென்ஸ் செலவில் வாழ காந்தியால் முடிந்தது.
இந்த எளிய வாழ்வு படிப்பதற்கு அதிக நேரத்தை வழங்கியது. மேலும் அக மற்றும் புற வாழ்க்கைகளை ஒருநிலைப்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இது அவரது குடும்பச்சூழலுக்கும் உண்மைக்கும் நெருக்கமானதாக இருந்ததோடு அவரது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றும் பெருமிதம் பொங்கச் சொல்கிறார்.
மேன்மேலும் ஆன்ம சோதனைகளில் ஈடுபட அக வாழ்விலும் புற வாழ்விலும் நிறைய மாறுதல்களை செய்ய வேண்டிய அவசியமேற்பட்டது. செலவுகளிலும் வாழ்விலும் செய்த மாற்றத்தைப் போலவே உணவுமுறையிலும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டி வந்தது. அசைவ உணவை மறுத்து சைவ உணவையே உட்கொண்டாலும் அசைவ உணவு குறித்தும் மிக நுட்பமாக எழுதப்பட்ட நூல்களின் வழியே புதிய திறப்புகள் உண்டாயின. உணவுமுறையில் தர்மத்தையும் அறத்தையும் பேண உரிய வழிவகை ஏற்பட்டது.
மனிதன் உணவு உட்கொள்வது உயிர் வாழ்வதற்கு மட்டுமேயின்றி சுகத்திற்கு அல்ல. முட்டை, பால் சாப்பிடுவதும் தவறு என்கிற வாதமும் முன்வைக்கப்பட்டது. உணவைச் சமைத்துத் தின்னக்கூடாது; பச்சையாகவே உண்ண வேண்டும். மருத்துவ விதிப்படி மசாலா, ஊறுகாய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. எனவே குஜராத்திலிருந்து வந்த மிட்டாய், ஊறுகாய் வகைகளை முற்றாகத் தவிர்த்தார். தீவிர மனமாற்றத்தால் மசாலா மீது இருந்த ஈர்ப்பும் மறைந்தது. முன்பு சப்பென்று இருந்த மசாலா இல்லாத கீரை தற்போது ருசியாக மாறியது வியப்பாக இருந்தது. ருசி நாவில் இல்லை; எண்ணத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த தருணம் இது.
சிக்கனம் என்று வருகிறபோது தேயிலை, காப்பி போன்ற பானங்கள் உடலுக்குத் தீமை செய்பவை; கோக்கோ குடிப்பது நல்லது என்கிற போக்கு அன்று உண்டு. அதன்படி தேயிலை, காப்பியை அறவே நிறுத்தி கோக்கோ மட்டும் குடித்தார். மாவுப்பொருள்கள்களை விலக்கி பால்கட்டி, பழம், முட்டைகள் போன்றவற்றைச் சாப்பிட்டுப் பார்த்தார். அவரது தாயாரின் கருத்துப்படி முட்டையும் அசைவமே. கேக்குகளில் முட்டை சேர்க்கப்படுவது இயல்பானது. இதைக் கேட்டு அறிவது இடையூறாக இருந்தது. எனவே அவற்றையும் கைவிட்டார். இந்த சைவ உணவு ஆராய்ச்சிகளினால் காந்தி சைவ உணவுச் சங்கம் தொடங்கவும் எழுத்தாளராகி vegetarian என்ற சைவ உணவு இதழில் எழுதவும் முடிந்தது.
(தொடரும்…)
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மார்ச் 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக