நமது கல்வி செல்லும் பாதை
மு.சிவகுருநாதன்
கல்வி, பொருளாதாரம் போன்றவை இலக்கியம், அறிவியல் போன்று வாசிக்க இனிமையானதல்ல; மாறாக இவை வாசகர்களுக்கு மிகவும் சலிப்பூட்டக்கூடியவை. இவற்றை எழுதுவோரும் படிப்போரும் பிற துறைகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. ஆனால் மனித வாழ்வைக் கட்டமைப்பதில் இவை குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன என்பதை மறுக்க இயலாது.
உலகமயம் பூமிப்பந்தைப் புரட்டிப் போட்டுள்ளது. இதன் அபாயங்களை இடதுசாரிகள் அன்றே பட்டியலிட்டார்கள். எந்த நாட்டு அதிகாரத் தலைமைகளும் அதை கேட்கும் நிலையில் இல்லை. அனைவரும் அவர்களது நாட்டுக் குடிமக்களை உலக வர்த்தக அமைப்பிடம் அடகு வைத்தனர். இதில் நமக்கு சில நன்மைகளும் இருந்தன. அவை நம் கண்களை மறைக்கச் செய்தன. கோவிட்-19 சூழல் உலகமயத்தை அம்மணப்படுத்தியது. இருப்பினும் உலகம் அதிலிருந்து மீள வழியில்லை என்பதை உணர்ந்து திக்கின்றி நிற்கிறது.
1991க்கு பிறகான இந்தியா அனைத்து துறைகளிலும் இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அதிலிருந்து மீண்டுவர முயற்சிக்கும் வழியில் வலதுசாரிகளின் பாசிச ஆட்சிமுறைகளால் மீண்டும் படுகுழிக்குள் வீழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கல்வி, பொருளாதாரம் போன்றவை அடைந்த பாதிப்புகள் அளவிட முடியாதவை. இதன் துயரங்கள் பல தலைமுறைகள் தொடரக்கூடியவை.
வலதுசாரி பாசிசத்தின் கொடுங்கரங்கள் கல்விமுறை, உயர்கல்வி அமைப்புகள், மக்களாட்சியின் அடிப்படைகள் என அனைத்தையும் வீழ்த்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்புரிகின்றன. குறிப்பாக கல்வியில் நிகழும் மாற்றங்கள் நமது முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக இருக்கின்றன. நெருக்கடி நிலை காலத்திலேயே கல்வி பொதுப்பட்டியலுக்குச் சென்றுவிட்டாலும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை கல்வி தற்போதுதான் சந்திக்கிறது.
ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை தொலைநோக்கின்றி தயாரிக்கப்பட்ட ஒர் இந்துத்துவ ஆவணமாக இருக்கிறது. இந்திய மொழிகள் என்று சொல்லி குறிப்பாக இந்தியை மட்டுமல்லாது சமஸ்கிருதத்தையும் திணிப்பதை நேரடி நோக்கமாகக் கொண்ட கொள்கையாக உள்ளது. ஜி20 மாநாட்டுத் தலைமை போன்ற பெருமிதங்கள் ஒருபுறமும் ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை வைக்கும் அடிப்படைவாத நோக்கத்துடன் மறுபுறமும் செயலாற்றுகின்றனர்.
இதுவரையிலான நமது வளர்ச்சிக்கு ஆங்கில மொழியின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. அந்த இடத்தில் இந்தி என்பது நமது வளர்ச்சியை பின்னுக்கு இழுப்பதாகும். தாய்மொழி வழிக்கல்வி என்பது நமது நெடுநாளைய கோரிக்கை. அதைச் செயல்படுத்துவதாகக் கூறி மூன்றாவது மொழியை அதாவது இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசால் உருவாக்கப்படும் குயுக்தி திட்டமே இது. இந்த ஏமாற்று வித்தைகளுக்கு நாம் பலியாகக்கூடாது. நாம் தமிழையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாகவே பார்க்க வேண்டும். அப்போதுதான் உலகத்தோடு ஒன்ற இயலும். இந்தியால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆளுநர்கள் மூலம் உயர்கல்வியை வளைத்துவிட்டனர்; பள்ளிக்கல்வியிலும் அவர்களது கொள்கைக்கேற்ப பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இனி எவ்வளவு காலம் திமிர முடியும் என்று தெரியவில்லை. இந்நிலையில் மாநில அரசு கல்விக்கொள்கையை உருவாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவின் அறிக்கை வெளிவர இன்னும் ஓராண்டாகலாம்.
மாநில அரசு ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதாகக் கூறினாலும் அதன் கூறுகளை வேறு பெயர்களில் அமல்படுத்துகிறது அல்லது அமலாவதை வேடிக்கை பார்க்கிறது. நமது கல்விக்கு வழிகாட்டும் ஓர் உயர் அமைப்பை நாம் இதுவரை உருவாக்கத் தவறிவிட்டோம். இனியாவது அவற்றை உருவாக்கி நமது கல்வி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை, மாநில அரசுகளின் அவை சார்ந்த செயல்பாடுகள், திட்டங்கள் போன்றவற்றை வாசகப்பார்வையில் அணுகி பல்வேறு இதழ்களிலும் (காக்கைச் சிறகினிலே…, பேசும் புதியசக்தி, புதிய விடியல், குங்குமச் சிமிழ் – கல்வி வேலை வழிகாட்டி) இணையப் பக்கத்திலும் (www.panmai.in) எழுதப்பட்ட 15 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. இவை கல்விப்புல ஆய்வு நோக்கில் அல்லாமல் வாசக எதிர்வினையாக எழுதப்பட்டவை ஆகும். சில கருத்துகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய சூழலும் உள்ளதை கவனிக்க வேண்டும். கல்வி எனும்போது ஒன்றிய, மாநில அரசுகள் இரண்டின் செயல்பாடுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகக்கூடிய அவசியமிருக்கிறது. அதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
இக்கட்டுரைகளை வெளியிட்ட ‘காக்கைச் சிறகினிலே…’ தோழர் வி.முத்தையா, ‘பேசும் புதியசக்தி’ தோழர் ஜெ.ஜெயகாந்தன், ‘குங்குமச் சிமிழ்’ தோழர் திருவரசு, எழுத்தாளர் எஸ். செந்தில்குமார், ‘புதிய விடியல்’ தோழர் ரியாஸ் அகமது ஆகியோருக்கு நன்றி.
இந்நூலை அழகுற வடிவமைத்த நண்பர்களுக்கும் வெளியிடும் ‘நன்னூல்’ பதிப்பக நண்பர் மணலி அப்துல்காதர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(நன்னூல் பதிப்பகம் வெளியிட்ட எனது 'கல்விக் கொள்கையா? காவிக் கொள்கையா?' நூலின் முன்னுரை.)
நூல் விவரங்கள்:
கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா? (கட்டுரைகள்)
மு.சிவகுருநாதன்
முதல்பதிப்பு: ஜனவரி 2023
பக்கங்கள்: 136 விலை: ரூ. 150
ISBN: 978-93-94414-25-9
நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:
நன்னூல் பதிப்பகம்,
மணலி – 610203,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் – மாவட்டம்.
அலைபேசி: 9943624956
மின்னஞ்சல்: nannoolpathippagam@gmail.com
G Pay: 8610492679
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக