வெள்ளி, ஏப்ரல் 05, 2024

கொலைச் சதியின் பாதை

 

கொலைச் சதியின் பாதை

 (மகாத்மாவின் கதை தொடரின் பதினாறாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்


 

           காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை அகில இந்திய வானொலி அறிவித்தது. இதன் பொருட்டு மதக்கலவரங்கள் தொடங்கி விடும் என்கிற அச்சம் உண்டானது. மக்களை அமைதிப்படுத்தும் பணியில் தலைவர்கள் இறங்கினர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே தான் கொலைகாரன் என பிரிட்டிஷ் வானொலி முதலில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியும் இச்செய்தியை ஒலிபரப்பி மதமோதல்கள் நடக்காமல் தடுத்தன. இந்தியர்களின் வாழ்வின் ஒளி போய்விட்டது. எங்கு பார்த்தாலும் இருள்தான். நம் அன்புக்குரிய தலைவர், பாபு என்று நாம் நேசத்துடன் அழைத்து வந்த தேசத்தந்தை மறைந்துவிட்டார், என்று வானொலியில் பிரதமர் நேரு அஞ்சலி உரையாற்றினார்.

        நாடே துக்கத்தில் மூழ்கியது. மகாத்மாவைக் காண மக்கள் பிர்லா மாளிகையில் குவிந்தனர். காந்தி சுடப்பட்டு வீழ்ந்த இடத்தின் மண்ணை அள்ளிச் சென்றனர். மறுநாள் 1948 ஜனவரி 31 அவரது இறுதிப் பயணத்தில் பத்து லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மகாத்மாவில் சாம்பல் அவரது விருப்பப்படி இந்திய நதிகளில் கரைப்பதற்காக இருபது கலன்களில் சேகரிக்கப்பட்டு இந்தியாவெங்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு யுகத்தின் முடிவு வரலாற்றில் பதிவாகியது.

          பம்பாய் புலனாய்வுக் கிளையின் பொறுப்பாளராக இருந்த துணை ஆணையர் ஜாம்ஷெட் தோரவ் நகர்வாலா  என்பவர் புலன் விசாரணை அதிகாரியாக இருந்தனர். காந்தியைக் கொலை செய்யும் சதி ஏதும் இல்லை என்ற கோணத்திலேயே தொடக்கத்தில் தவறான பாதையில் விசாரணை மேற்கொண்டவர். ஜனவரி 20இல் நடந்த தோல்வியுற்ற கொலைமுயற்சியை காந்தியை கடத்தும் முயற்சி என்றும் தவறாக முடிவு செய்தார். இருப்பினும் காந்தியின் கொலைக்குப் பிறகு விசாரணைகள் தீவிரமடைந்து சதிவலைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன.

           காந்தியைக் கொலை செய்த நாதுராம் விநாயக் கோட்சே கைது செய்யப்பட்டு துக்ளக் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அடுத்து கைதான திகம்பர் பாட்கே அரசுத் தரப்புச் சாட்சியாக மாறுகிறான்.  தொடர் விசாரணையில் பூனாவில் கோபால் கோட்சே, பம்பாயில் நாராயண தத்தாத்ரேய ஆப்தே, விஷ்ணு கர்க்கடே, தத்தரய்யா பார்ச்சூர், சங்கர் கிஷ்டய்யா ஆகியோர் கைதாயினர்.

       மதன்லால் பெஹ்வா ஜனவரி 20இல் வெடிகுண்டு வீசிக் கைதாகியிருந்தான். அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று போலீசிடம் சொல்லியிருந்தான். சங்கர் கிஷ்டய்யா திகம்பர் பாட்கேயின் பணியாள். இன்னும் சொல்லப்போனால் கொத்தடிமைபோல் நடத்தப்பட்டவன். காந்தி யாரென்றே தெரியாது கொலைச் சதியில் ஈடுபட்ட ஒருவன். பாட்கே அப்ரூவராக மாறியதால் கிடைத்த சலுகை சங்கருக்குக் கிடைக்கவில்லை. ஜனவரி 20 கொலை முயற்சி தோல்வியில் முடிவடைந்ததும் மதன்லால் பிடிபட்டான். சதிக்கும்பல் சப்தமின்றி அங்கிருந்து வெளியேறியது. ஆனால் காந்தி பிப்ரவரி 2 அன்று தில்லியைவிட்டு கிளம்பும் முன்பு காரியத்தை முடிக்க விரைவாகச் செயல்பட்டனர்.

        கோட்சேவும் ஆப்தேவும் ஜனவரி 27 குவாலியர் தத்தரய்யா பார்ச்சூரே வீட்டிற்குச் சென்றனர். கோட்சேவும் அவரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். காந்தியைக் கொல்ல ஒரு நல்ல கைத்துப்பாக்கியை வாங்கவே அவர்கள் வந்திருந்தனர். அதற்கு உறுதியளித்து அவர்களை வீட்டில் தங்கவைத்தார். மறுநாள் தன் மகன் நீல்கண்ட், பணியாளர் ரூபா மெஹ்ரம் ஆகியோரை அனுப்பி நெருக்கமான, நம்பிக்கைக்குரிய ஆயுத வியாபாரி காங்காதர் தண்டவதே என்பவரை வரவழைத்தார். அவன் கொண்டுவந்த கைத்துப்பாக்கியும் சோதனையில் தகுதி பெறவில்லை. அன்று மாலைக்கு வேறு நல்ல துப்பாக்கி ஏற்பாடு செய்வதாக தண்டவதே கூறினான். பல்வேறு துப்பாக்கிகளைச் சோதித்தபிறகு இறுதியாக ஜகதீஷ் பிரசாத் கோயல் என்ற இந்து ராஷ்டிர சேனைப் பொறுப்பாளரிடமிருந்து தண்டவதே கொண்டுவந்த 1934 இத்தாலித் தயாரிப்பான பெரெட்டா CAL 99 எண்: 719791   கோட்சேவும் ஆப்தேயும் சரிபார்த்துப் பெற்றுக் கொண்டு ரூ. 300 அளித்து மீதிப்பணத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினர். 

      மருத்துவரான பார்ச்சூரே வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை குவாலியரின் கல்வி அமைச்சராக இருந்தவர். போலி மருத்துவச் சான்றிதழ் தயாரித்த குற்றத்திற்காக பணிநீக்கத்திற்கு ஆளானவர். வி.டி. சாவர்க்கர் இந்து மகா சபையில் தலைவராகப் பதவியேற்றபிறகு குவாலியரில் அதன் கிளையைத் தொடங்கினார். 1940இல் இந்து ராஷ்டிர சேனை என்கிற அமைப்பை நிறுவினார்.  சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் இளைஞர்களைத் திரட்டினார். கோட்சேவை சந்தித்து அவர்களது அமைப்புகளை இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  ஒரு கட்டத்தில் இந்து மகா சபையின் குவாலியர் தலைவரானார். 1947 ஆகஸ்ட் 8இல் தில்லியில் நடந்த இந்து மகா சபை செயற்குழுக் கூட்டத்தில் வி.டி.சவார்க்கர், கோட்சே, ஆப்தே, பார்ச்சூரே ஆகியோர் சந்தித்தனர். அமையப்போகும் குவாலியர் அரசில் உயர்பதவிக்காகக் காத்திருந்தார். ஆனால் அங்கும் காங்கிரஸ் அரசு அமைத்ததால் வெகுண்டு கடுஞ்சினத்தில் இருந்தார்.

       ஆப்தே தனது காதலி மனோரமா மூலம் பரபரப்பான செய்தி வெளியானவுடன் இந்து மகாசபைக்கு பொய்த்தந்தி அளிக்கச் சொல்கிறான். நாதுராம் கோட்சே ஆப்தே பூனா வீடு, பூனா அலுவலகம், கர்க்கரே அகமதுநகர் வீட்டு முகவரிகளுக்கு மூன்று கடிதங்கள் எழுதினான். அவற்றில் தனது புகைப்படத்தையும் இணைத்திருந்தான். காந்தி கொலையில் தான் மட்டுமே ஈடுபட்டதாகவும் ஆப்தே, கர்க்கரே போன்றோருக்கு தொடர்பில்லை என்ற போலியான தடயங்களை உருவாக்க நினைத்து இவ்வாறு செய்கிறான். நீதிமன்ற வாக்குமூலங்களிலும் சாவர்க்கரின் பங்கை மறுத்து தான் மட்டுமே இந்த கொலைச்சதியில் ஈடுபட்டதாக சாதித்தான்.

         ஆப்தே, கர்க்கரே இருவரும் தப்பியோடினர். ஆப்தேவின் காதலி மனோரமா மூலம் அவர்களை காவல்துறை சுற்றிவளைத்தது. பம்பாய், பூனா, தானே என்று அலைந்துகொண்டிருந்தவர்களை மனோரமாவுக்கு ஆப்தே பேசிய தகவலைக் கொண்டு தங்குமிடத்தை அறிந்து இருவரையும் கைது செய்தது. 15 நாட்களுக்குள் கொலைச்சதியில் ஈடுபட்டோர் காவல் வளையத்திற்குள் வந்துவிட்டனர். இறுதியாக கைது செய்யப்பட்ட ஒருவர் பலரால் திட்டமிட்டுத் தப்பிக்க வைக்கப்பட்டார்; அவர்தான் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.

         சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த நாதுராம் கோட்சே சாவர்க்கரை குருவாக ஏற்றுக் கொண்டவன். அவரது நெருங்கிய சகாவாகவும் உதவியாளராகவும் இருந்தான். குருவின் கரிசனத்தால் இந்து மகா சபையின் உறுப்பினனாகி விரைவாக உயர் பொறுப்புகளைப் பெற்றான். ‘டைனிக் அக்ரானி’ (1944) என்னும் இதழை ஆசிரியராக இருந்து நடத்தினான். இதற்கு சாவர்க்கர் பெருமளவில் நிதிஉதவிகள் ஏற்பாடு செய்தார். இதன் பெயர் இந்து ராஷ்டிராஎனப் பெயர் மாற்றம் பெற்றது.  ஆப்தே இதன் மேலாளராக இருந்தான். வன்முறையையும் வெறுப்பைத் தூண்டும் வகையில் இதன் கட்டுரைகள் இருந்ததால் அரசின் தண்டனைக்குள்ளான இதழாகும்.

       சாவர்க்கர், கோட்சே, ஆப்தே மூவரும் 1947 ஆகஸ்ட் 8இல் பம்பாயிலிருந்து தில்லி பயணித்தனர். இந்து மகா சபை செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தப் பயணம். இந்து மகா சபை நிறுவனரான சாவர்க்கர் அவரது இரு நம்பிக்கைக்குரிய தளபதிகளான கோட்சே, ஆப்தே ஆகிய இருவருக்கும் உள்ள நெருக்கத்தை இது எடுத்துக் காட்டும். அடுத்த சில மாதங்களில் நடந்த காந்தியின் படுகொலையில் தொடர்பில்லை என்றால் யார் நம்புவது? இவர்களுடைய கொள்கை, அரசியல், கருத்தியல், செயல்பாடுகள் அனைத்தும் பொய்மையால் கட்டப்பட்டவை. காந்தியின் வாய்மை இந்தப் பொய்மைகளுக்கு எதிரியாக அமைந்ததில் வியப்பில்லை. எனவே தேசத்தந்தை மகாத்மா கொலையுண்டார்.

          நாதுராம் விநாயக் கோட்சே, நாராயண தத்தாத்ரேய ஆப்தே, விஷ்ணு கர்க்கடே, மதன்லால் பஹ்வா, கோபால் கோட்சே, திகம்பர் பாட்கே, சங்கர் கிஷ்டய்யா, விநாயக் தாமோதர் சவார்க்கர், தத்தரய்யா பார்ச்சூர், சவார்க்கர், கங்காதர் தந்தவதே, கங்காதர் யாதவ், சூரியதேவ் சர்மா ஆகியோர் குற்றப்பத்தரிக்கையில் இடம்பெற்றனர்.

          இன்றுள்ள நவீன வசதிகள் ஏதுமற்ற நிலையில் ஒப்பீட்டளவில் காவல்துறை சிறப்பாகவே புலனாய்வை மேற்கொண்டது. திகம்பர் பாட்கே அரசுத் தரப்புச் சாட்சியாக மாறினான். நாதுராம் கோட்சே இந்த கொலைச்சதியில் யாருக்கும் பங்கில்லை; நான் மட்டுமே இதில் ஈடுபட்டேன் என்று ஒரே கதையை கீறல் விழுந்த ரெக்கார்டு போல் ஒப்பித்தான். அவனால் போலியாக ஏமாற்றுவதற்காக எழுதப்பட்ட மடல்களையும் தந்திகளையும் புலனாய்வுக் குழுவினரும் நீதிமன்றமும்  நம்பத் தயாராக இல்லை. 

       தில்லி மகாசபை பவனில் சங்கர் கிஷ்டய்யா பயன்படுத்தாத குண்டுகளையும் வெடிப்பொருள்களையும் புதைத்த இடம் அடையாளம் காணப்பட்டது. கோட்சே துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்த மரம், பெரெட்டா துப்பாக்கியைச் சுட்டுப் பார்த்த கதவு எல்லாம் நீதிமன்றத்தின் காட்சிப்பொருளாயின. புலன் விசாரணை அதிகாரி நகர்வாலாவுக்கு கொலைச்சதியின் மூளை வி.டி.சவார்க்கார் தான் என்பதை உறுதியாக நம்பினார். அதை நிருபிக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டார். அன்றிருந்த அரசியல் சூழல் அவை தோல்வியில் முடிய காரணமாயிற்று.  

        சிறப்பு நீதிமன்றம் தில்லி செங்கோட்டையில் இயங்கியது. அங்கு படைவீரர்கள் தங்குமிடத்தில் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டனர். கொலை, சதி செய்தல், வெடிபொருள் சட்டங்களை மீறுதல் போன்ற குற்றங்களுக்காக எட்டு பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கர்க்கடே, மதன்லால் பஹ்வா, கோபால் கோட்சே, திகம்பர் பாட்கே, தத்தரய்யா பார்ச்சூர், சங்கர் கிஷ்டய்யா, விநாயக் தாமோதர் சவார்க்கர் ஆகியோர்.    நீதிபதி ஆத்ம சரண் முன்னிலையில் 1948 ஜூன் 22இல் விசாரணை தொடங்கியது. விசாரணைகள் பத்தரிக்கையாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாதுராம் கோட்சே நாடக பாணியில் இந்து தர்மம், பகவத்கீதை, தேசபக்தி என்று அனைவரின் காதிலும் பூசுற்றி காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தினான். கூடவே வி.டி.சவார்க்கர் உள்ளிட்ட தனது நண்பர்கள் குழாமை பாதுகாக்கவும் விடுதலையடையவும் பெருமுயற்சி செய்தான். அதில் அவனுக்கு சிறிய அளவிலான வெற்றியே கிடைத்தது.

      1949 பிப்ரவரி 10 அன்று நீதிபதி ஆத்ம சரண் தீர்ப்பளித்தார்.   நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவார்க்கர் மட்டும் விடுவிக்கப்பட்டார். பிறருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் கைதிகள் அம்பாலா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் சார்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிறர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நாதுராம் கோட்சே தன்னோடு பிறரை கொலைச்சதியில் சேர்த்ததற்கு எதிராக தனது முறையீட்டைச் செய்தான்.

       மேல்முறையீட்டை பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.டி.கோஸ்லா, .என்.பண்டாரி,  விசாரித்தார். தான் ஏழையென்பதால் தனக்கு வழக்கறிஞர் வேண்டாம் என்று மறுத்த நாதுராம் கோட்சே தானே வாதாட அனுமதிக்க வேண்டினான். அவனது மனு ஏற்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. வாதிடல் என்ற போர்வையில் கோட்சே ஒரு நீண்ட சொற்பொழிவாற்றினான்.  பகவத் கீதை, இந்து தர்மங்கள், வேதங்கள், தாய்நாட்டிற்காக உயிர்நீத்தல் என்று உணர்வுகளைத் தூண்டியும் மதவெறியூட்டுவதாகவும் அவனது உரை அமைந்தது. மேல்முறையீட்டு வழக்கில் இத்தகைய வாதங்கள் பொருத்தமற்றவை என்று நீதிபதி கண்டித்தார். எனினும் பார்வையாளர்கள் இந்த மிகையுணர்ச்சி கொண்ட நாடகத்தை நெகிழ்ந்தும் கண்ணீர் விட்டும் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வசியம் செய்யப்பட்டதுபோல் கோட்சேவின் பேச்சால் கட்டுண்டுருந்தனர். அவர்களை நடுவர்களாக நியமித்து மேல்முறையீட்டைத் தீர்மானிக்கச் சொன்னால் அவனைக் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்திருப்பார்கள் என்று நீதிபதி கோஸ்லா தனது நூலில் குறிப்பிடுகிறார். கோட்சே தானே தயாரித்ததாக சொல்லப்பட்ட இந்த நீண்ட உரைகள் வேறு ஒருவர் தயாரித்து அளித்திருக்கக்கூடிய  வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

       பார்வையாளர்கள் போல் சட்டமும் நீதிபதியும் நெகிழ்ந்து போகவில்லை. பார்ச்சூர், சங்கர் கிஷ்டய்யா ஆகிய இருவருக்கும் சந்தேகத்தின் பலன் அளிக்கப்பட்டு விடுதலையாயினர். பிறரது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. 1948 நவம்பர் 15 தூக்கிற்கு நாள் குறிக்கப்பட்டது. கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. தண்டனைக்கு முதல்நாள் நெருங்கிய உறவினர்கள் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மறுநாள் அவர்கள் இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. காந்தி கொலைச் சதிவழக்கு இவ்வாறாக முடிவுக்கு வந்தது.

          ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 14 ஆண்டுகள் கழித்து 1964 அக்டோபர் 12இல் விடுதலை அடைந்தனர். நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே, விஷ்ணு கர்க்கரே விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட ஜி.வி.கேட்கர் கொலைச் சதித் திட்டம் பலவாரங்களுக்கு முன்பே தனக்குத் தெரியும் என்று பேசி மீண்டும் தீயைப் பற்றவைத்தார். 1964 நவம்பர் 14 இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்காணலிலும் இச்செய்தி வெளியானது. ‘சதிஎன்பதை அவர்களது நோக்கம்என்று பிறகு மாற்றிக் கொண்டார். இவ்வாறு மாற்றிமாற்றிப் பேசுவதே இவர்களின் வேலையாக உள்ளது. ஜி.வி.கேட்கர் வேறு யாருமல்ல; காங்கிரஸ் தலைவர் பாலகங்காதர திலகரின் பேரன். இவர் கேசரியின் முன்னாள் ஆசிரியர்; தருண் பாரத் இதழின் ஆசிரியர். இந்து மகா சபையின் பின்னணியிலிருந்த ஜி.வி.கேட்கரும் கோபால் கோட்சேவும் கைது செய்யப்பட்டனர். மறுபுறம் சாவர்க்கரை தப்பவைத்த அரசியல் காரணங்கள் குறித்த எதிர்ப்பும் கிளம்பியது.

        இத்தகைய சர்ச்சை காரணமாக 1965 மார்ச்22 இல் கோபால் ஸ்வரூப் பதக் தலைமையில் விசாரணை ஆணையம் பெயருக்கு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை அரசியல் காரணங்களால் முழுமையடையவில்லை. மத்தியில் ஆதிக்கம் பெற்றிருந்த இந்துத்துவச் சக்திகள் இதனை விரும்பவில்லை. 1966இல் பதக் மத்திய அமைச்சரானதால் விசாரணையும் நின்றுபோனது. இதனால் நாடெங்கும் எதிர்ப்புக்குரல் எழுந்ததையொட்டி 1966இல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் தொடர்ந்தன.

       காந்தி கொலைச்சதி முன்பே தெரியும் என்று ஜி.வி.கேட்கர் சொன்னது உண்மை. ஆனால் அதை அவர் அரசுக்குத் தெரிவிக்கவில்லை. பம்பாய் காங்கிரசாருக்கு வேறு வழிகளில் காந்தியின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் அரசுக்குக் கிடைத்த தகவல்கள் முழுமையற்றதாகவோ குழப்பமானதாகவோ இருந்ததால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பம்பாய் அரசு அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலையும்  மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலில் அரசுடன் விவாதித்துள்ளார். வெடிகுண்டு வீசிய மதன்லால் கைது செய்யப்பட்டபிறகு அவர்  சொன்ன தகவல்கள் சரியானபடி கையாளப்படவில்லை. காந்தி போன்ற பெரிய தலைவரின் உயிரைக் காப்பாற்றும் பொறுப்புடன் தில்லி போலிஸ் செயல்படவில்லை. மதன்லால் விசாரணை குறித்த தகவல்களை புனே சி..டி. அதிகாரிகளும் சரிவரக் கவனிக்கவில்லை. கோட்சே, ஆப்தே இருவரும் ஓட்டல்களில் போலிப்பெயர்களில் தங்கியுள்ளனர். இதற்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும், என்றெல்லாம் கபூர் ஆணையம் பதிவு செய்தது. இச்சதியில் சாவர்க்கரின் தொடர்பை சரியாக விசாரணை செய்யவில்லை, அவரை விடுவித்தது தவறு என்றது. ஆனால் இவை காலம் கடந்தவை மட்டுமல்ல; அரசுகள் இவற்றிலிருந்து உரிய பாடம் கற்கத் தவறிவிட்டன என்றே சொல்ல வேண்டும்.

         இந்தியாவில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் வாயிலாக இந்து கலாச்சாரப் பெருமைகளும் கீழைத்தேயமும் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து பிரம்ம ஞான சபையும் இந்துப் புனித நூல்கள் மற்றும் சமஸ்கிருத மேன்மையும் விதந்தோதப்பட்டன.  சமஸ்கிருத நூற்தொகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் வாயிலாக இந்து மதப் பெருமைகள் உச்சத்தைத் தொட்டன. ஹென்றி ஆல்காட், அன்னிபெசன்ட் போன்றோரின் பங்களிப்புகள் இவற்றிற்கு உதவின.

           இந்து மதத்தை ஆதரிக்கும் நேசிக்கும் பல தலைவர்கள் காந்திக்கு முன்பும் பின்பும் காங்கிரசில் இடம் பெற்றிருந்தனர். 1906இல் முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தங்களது நலனுக்காக இக்கட்சியை தனியே தொடங்கினர். ஆனால் காங்கிரசில் இருந்த இந்து ஆதரவாளர்கள் 1915இல் பண்டிட் மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய் தலைமையில் இந்து மகா சபை தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக 1920இல் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பொறுப்பேற்றார். இவர்களை காங்கிரசிலிருந்தே 1937 வரை செயல்பட அனுமதித்ததுக் கொடுமையானது.

        பாலகங்காதர திலகர் காங்கிரசில் இருந்த தீவிர இந்துத்துவ ஆதரவாளர் ஆவார். விடுதலைப் போராட்டங்களின் விநாயகரை நுழைத்து அடையாள அரசியலுக்குப் பெரிய அடித்தளத்தை  உருவாக்கியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் நுழைவும் அவரது அணுகுமுறையும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் உத்திகளும் இந்து மதம் குறித்த பார்வைகளும் வலதுசாரி இந்துத்துவக் கருத்தியலிடமிருந்து விலகி அமைந்தது. எனவே இந்துத்துவம் காந்தியை எதிரியாகக் கட்டமைத்து அதில் வெற்றியும் பெற்றது.

                 வி.டி. சாவர்க்கர் எனப்பட்ட விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1883இல் மகாராஷ்டிராவில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர்.  வீரசிவாஜி என்பதைப்போல வீர் என்று பெயருடன் இணைத்துக் கொண்டனர். திலகரை தமது அரசியல் குருவாக ஏற்றார். குழந்தைப் பருவத்திலேயே வானர சேனையை உருவாக்கி முஸ்லீம்களுக்கு எதிராக நின்றார். தனது சகோதருடன் சேர்ந்து அபிநவ் பாரத் சங்கத்தைத் தொடங்கினார்.

      சியாம்ஜி கிருஷ்ண வர்மா உதவித்தொகையில் லண்டன் பாரிஸ்டர் படிக்கச் சென்ற சாவர்க்கர் இந்திய விடுதலைக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார். வெடிகுண்டு, ஆயுதத் தயாரிப்பு போன்ற பணிகளில் இந்த சட்ட விரோத அமைப்பு ஈடுபட்டது. பிரிட்டிஷ் அதிகாரி கர்சன் லில்லியை சாவர்க்கரின் சீடன் மதன்லால் திங்க்ரா கொன்றான். நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சனும் கொலையானர். இக்கொலையில் சாவர்க்கர் கைதானார். கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்குக் கொண்டுசெல்லும் வழியில் கப்பலிருந்து கடலில் குதித்துத் தப்பி மீண்டும் பிடிபட்டார். இரண்டு கொலைக்காக தலா 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் சிறையிலிருந்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருப்பதாகத் தொடர்ந்து மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவண்ணமிருந்தார்.

      1925இல் இந்து மகா சபையிலிருந்த கேசவ பலிராம் ஹெட்கோவர், வி.டி.சாவர்க்கர், பி.எஸ்.மூஞ்சே, கணேஷ் சாவர்க்கர், பரஞ்பே ஆகிய ஐவர் இணைந்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் பின்னர் பலம் பொருந்திய ஆர்.எஸ்.எஸ்.இன் பின்னணியில் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு இந்துத்துவக் கருத்தியல் விதைகள் இந்தியாவெங்கும் ஆழமாக விதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

     1951இல் இந்து மகா சபையைவிட்டு வெளியேறிய சியாமா பிரசாத் முகர்ஜி பாரதீய ஜனசங்கம் என்ற கட்சியை நிறுவினார். இந்த வெளியேறல்கள் எல்லாம் வெளிப்படையான நாடகங்களே. இவர்கள் அனைவருக்கும் இடையே மறைமுகக் கூட்டணியும் உள்ளார்ந்த கருத்தியல் உறவுகளும் என்றும் மறைந்துபோனதில்லை என்பதே உண்மை. 

       1948 பிப்ரவரி 4இல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வேண்டுகோளை அடுத்து இந்தியத் தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாக செயல்படுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்போம் என்பது போன்ற நிபந்தனைகளுக்குட்பட்டு 1949 ஜூலை 11இல் தடை விலக்கப்பட்டது. இதன் பின்னணியில் சர்தார் பட்டேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியத் தேசியக்கொடி நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் இன்றும் ஏற்றப்படுவதில்லை.

         இவர்களுடைய முதன்மை நோக்கம் இந்துக்களை ராணுவமயமாக்குவது. எனவே உலகளவில் முசோலினியை இவர்கள் குருவாக ஏற்றனர். 1930-32 காலகட்டத்தில் நடந்த மூன்று வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொள்ளச் சென்ற பி.எஸ்.மூஞ்சே ராணுவப் பள்ளிகளைப் பார்வையிட்டார். உடற்பயிற்சிக்கான பாசிசக் கல்விக் கழகம், பலில்லா, அவான் கார்டிஸ்ட் போன்ற அமைப்புகளைக் கண்டு அதே பாணியில் இந்தியாவில் அமைப்புகளை உருவாக்க முடிவு செய்தார். மேலும் முசோலினியுடனான சந்திப்பில் இவற்றைப் பாராட்டினார். ராணுவப்பள்ளி தொடங்க மன்னர்கள், சமஸ்தானங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரைச்  சந்தித்து நிதி திரட்டினார். 1934இல் நாசிக்கில் ராணுவப்பள்ளி தொடங்கப்பட்டு, கற்பனை எதிரிகளான இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பரசியல் விதைக்கப்பட்டது.

        இந்தியா திரும்பியதும் ஹெட்கோவர் தலைமையில்பாசிசமும் முசோலினியும்என்று மாநாடு கூட்டினார். அதில், இந்து தர்ம சாஸ்திரங்களின் அடைப்படையில் இந்து மதத்தைச் சீராக்கி ஒன்றுபடுத்த வேண்டும். நமது பழைய சிவாஜி அல்லது இன்றைய முசோலினி, ஹிட்லர் போன்ற ஓர் இந்துச் சர்வாதிகாரியின் கீழ் நமக்கு சுயராஜ்யம் கிடைக்காத வரையில் சாத்தியமில்லை. இதற்கு அறிவியல்பூர்வமான திட்டத்தை உருவாக்கிப் பரப்புரை செய்ய வேண்டும், என்று முழங்கினார்.  முசோலினி, ஹிட்லர் ஆகியோரை ஆரிய இந்துவாக அடையாளம் கண்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.

       இந்து இளைஞர்களை ராணுவமயமாக்குவது, சனாதன தர்மத்தைக் கற்பிப்பது, தனி நபர்களையும் தேசத்தையும் காப்பதற்கான விஞ்ஞானத்தையும் கலைகளையும் சொல்லித் தருவது ஆகியன மத்திய இந்து ராணுவக் கல்விக் கழகத்தின் பணிகளாக வரையறுக்கப்பட்டன. வெற்றியை நோக்கிய பெரும் குறிக்கோளுடன் மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் விளையாட்டிற்குத் தகுதியுடையவர்களாக நமது சிறுவர்களை தயாரிப்பதே பயிற்சியின் நோக்கம். எதிரிக்கு உச்சபட்ச இழப்புகளையும் மரணங்களையும் ஏற்படுத்துவதாகவும் நமது தரப்பில் ஆகக்குறைந்த மரணங்களும் இழப்புகளும் ஏற்படும் வகையில் இந்த வெற்றி அமையவேண்டும், என ராணுவப் பள்ளிக்கானத் திட்ட வரைவில் குறிப்பிட்டனர். இதிலிருந்து பாசிச அரசியல் வழியும் காந்திப் படுகொலையின்  பாதையும் நமக்கு எளிதில் புலப்படும்.

(தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் ஏப்ரல் 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக