இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?
மு.சிவகுருநாதன்
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாயிற்று. ஜூன் 4இல் இந்தியாவின் எதிர்காலம் தெரிந்துவிடும். அதில்தான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. சுதந்திர இந்தியாவுடன் உருவான பாகிஸ்தானை விட சிறந்த ஜனநாயக நாடாகத் திகழ்வதற்கு நம்முடைய அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் தூண்கள், மதச்சார்பின்மை கொள்கைகள், அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள், தன்னலமற்ற தலைவர்கள், மக்களின் சகிப்புத்தன்மைமிக்க வாழ்வு போன்றவை அடித்தளமாக அமைந்தவை. அவற்றில் சிற்சில குறைபாடுகள் இருக்கலாம். எனினும் தகர்த்தெறிய வேண்டிய அளவிற்கானவை அல்ல.
1976 இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போது இந்திய ஜனநாயகம் கேள்விக்குள்ளானது. அதற்கான விலையை காங்கிரஸ் கொடுத்தது; மக்கள் தேர்தலில் உரிய பாடம் புகட்டினர். அதன் பின்னர் அமைந்த காங்கிரசுக்கு மாற்றான அரசுகள் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்ய இயலவில்லை. தேசியக் கட்சிகள் பலமிழந்த நிலையில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்தது. அப்போது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இந்துத்துவக் கொள்கைகளை கல்வி, வெளியுறவு போன்ற துறைகளிலும் அரசு நிர்வாக எந்திரத்திலும் நுழைக்கத் தொடங்கினர். இருப்பினும் அவை குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தினடிப்படையில் இயங்கின.
2004இல் “இந்தியா ஒளிர்கிறது” என்ற போலியான முழக்கத்தை வைத்துத் தேர்தலை சந்தித்தனர். தேர்தல் வலதுசாரி பா.ஜ.க. கூட்டணிக்குச் சாதகமாக அமையவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004 மற்றும் 2009இலும் வெற்றிபெற்று டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் கூட்டணி அரசை திறமையாக வழிநடத்தியது. ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய இந்துத்துவ ஆட்கள் மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்த செயல்திட்டம் வகுக்கப்பட்டது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தணிக்கை அறிக்கையில் கூறியதையெடுத்து 2ஜி ஊழல் குறித்த பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. அனைத்து ஊடகங்கள், அன்னா ஹசாரே போன்று திட்டமிட்டுக் களமிறக்கப்பட்ட முகவர்கள் எனப் பெரும்படையணியே காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான பெரும் பரப்புரையில் ஈடுபட்டது. இதற்குப் பலனாக பல பதவிகளும் பொறுப்புகளும் பத்மபூஷன் விருதும் வினோத் ராயைத் தேடி வந்தது.
ராஜூவ்காந்தி ஆட்சியை வீழ்த்த போஃபர்ஸ் ஊழல் முக்கிய அம்சமாக இருந்த வரலாற்றை ஒட்டி இந்த ஊழல் பிரச்சினையைத் திட்டமிட்டுக் கையிலெடுத்து பா.ஜ.க. கூட்டணி 2014இல் வெற்றி கண்டது. அப்போதும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனினும் 2019இல் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்றது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பது அவர்களால் தாங்கமுடியாத உண்மையாக இருந்தது. பல்வேறு மாநில அரசுகளை தகர்த்தும் குதிரைபேரம் நடத்தியும் தங்களது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இதற்கு புலனாய்வு அமைப்புகள் சட்டவிரோதமாக ஒன்றிய அரசுக்கு உதவுகின்றன.
ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் சமத்துவத்திற்கும் முதன்மையளிக்காத ஒருகட்சி எப்படி மக்களைப் பற்றிக் கவலைப்படும்? கொரானா காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சோகங்களும் எழுத்தில் வடிக்க முடியாதவை. பணமதிப்பிழப்பு சாமான்ய பொதுமக்களை நடுத்தெருவில் நிற்கவைத்து நூற்றுக்காணக்கான உயிர்களைப் பறித்தது. கடந்த பத்தாண்டுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, அதிகமான சரக்கு மற்றும் சேவைவரி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்களை அல்லாட வைத்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு பாமர, நடுத்தட்டு மக்களின் பெரும்சுமையான மாறியுள்ளது. தேர்தலுக்காக சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைச் சற்றுக் குறைத்து தங்களது பாசிசக் கருத்துக்கு வலுவூட்டுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமெடுக்க இந்த அரசு விரும்பவில்லை. சிறு, குறு தொழில்களை முற்றாக முடக்கி கார்ப்பரேட்களை வளர்க்கிறது.
மோடி அரசு ராமர் கோயிலை பணிமுடியும் முன்பே அவரமாகத் திறந்து மத உணர்வுகளை வாக்குகளாக மாற்றத் திட்டமிட்டுச் செயலாற்றியது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வெற்றி கிடைக்கவில்லை. வெறுப்பரசியலின் வெவ்வேறு வடிவங்களைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். 400 தொகுதிகள் இன்று பெருமை பேசியவர்கள் 370 தொகுதிகள் என்று மாற்றிப் பேசத் தொடங்கினர். 370வது பிரிவு நீக்கத்தையும் இதனுடன் இணைத்தனர். ராமர் கோயில் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே தாக்கம் செலுத்தும் என்பதால் வேறு உத்திகளைப் பின்பற்ற முனைகின்றனர்.
ஜார்க்கண்ட மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி அளித்து பதவி விலகச் செய்தனர். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த மதுபான முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் பல ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் இணைந்தவுடன் பரிசுத்தர்களாக மாறிவிடும் மாயாஜாலம் நடக்கிறது. ஊழலை, கருப்புப் பணத்தை வெளுக்கும் கருவியாக பா.ஜ.க. மாறிவிட்டது. தேர்தலுக்காகவே இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்னதான் 400 சீட் என்று பேசினாலும் தோல்விபயம் அவர்களை ஆட்கொண்டுள்ளது.
370வது பிரிவு நீக்கபட்டது மட்டுமின்றி காஷ்மீர் மாநிலமே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும் தமிழர்களையும் எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்க இந்த வலதுசாரி அரசு விரும்புகிறது. தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களுக்கு முன்னதாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமலாக்கியுள்ளது. இதன்மூலம் தங்களுக்கு தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது.
தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளில் அரசின் தலையீடு அவற்றையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளனர். விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் என்பவரை தேர்தல் ஆணையராக நியமித்தது. மூன்றாவது ஆணையர் நியமிக்கப்படாத நிலையில் அருண் கோயல் திடீரென்று பதவி விலகினார். மீண்டும் ஒருநபர் ஆணையமாக மாற்றும் சர்வாதிகார முயற்சியாகப் பார்க்கப்பட்டது. வேறு வழியின்றி எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பையும் மீறி இரு ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். இத்தகைய போக்கு இந்தியாவின் சுதந்திரமான தேர்தல் குறித்த அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ஒரே நாடு” என்கிற இவர்களது பாரிசக் கொள்கைகளை கடந்த பத்தாண்டுகளில் அனைத்து களங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நமது ஒற்றுமை, இறையாண்மை, பன்முகத்தன்மை, கலாச்சாரங்கள் அனைத்தும் சிதைக்கப்படுகிறது. நாடு பெரும் பேரழிவை எதிர்கொண்டு வருகிறது. இவர்கள் வளர்க்கும் வெறுப்பரசியல் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு வழிவகுக்கும்ளொரு மாநிலத்திற்கே 7 கட்டங்களில் பொதுத்தேர்தல் நடத்தும் நிலையில் “ஓரே நாடு; ஒரே தேர்தல்” என்று பெயருக்கு ஒரு குழு அமைத்து சாதகமானப் பரிந்துரையைப் பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் குறிவைத்து ஜனநாயக விரோதச் சட்டத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநில ஆளுநர்களையும் தில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களையும் கொண்டு மக்களாட்சிக்கு எதிராக அரசியல் சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றன. இவர்கள் ஒவ்வொருவராக உச்சநீதிமன்ற கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் இன்னும் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்தை உருக்குலைக்கும் செயலாகும்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆளுநர் இருப்பதே செய்திகளில்கூட தெரிவதில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் அவர்களது அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதற்கு மிகச்சரியான பதிலடி ஆளுநர் தமிழிசைக்கு தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவிடம் கிடைத்தது. தற்போது அங்கு காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. எப்போதோ பதவி விலகியிருக்க வேண்டியவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் பதவி விலகியுள்ளார். தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இன்னும் பதவி விலக மறுத்து அரசியலமைப்பிற்கு தொடர்ந்து அவமதிக்கிறார்.
மாநில
கட்சிகளை முடிந்தால் கூட்டணி சேர்ந்து குழிபறிப்பது, கட்சிகளில்
பிளவை ஏற்படுத்துதல், கட்சி மாற குதிரைபேரம் நடத்துதல்,
அரசதிகார அமைப்புகளைக் கொண்டு மிரட்டி வழிக்குக் கொண்டு வருதல்,
பணம் பறித்தல் என்கிற உத்திகளை “மோடி சர்க்கார்”
பயன்படுத்தி வருகிறது.
உத்தவ் தாக்கரே,
சந்திரசேகர ராவ் என பா.ஜ.க.வின் அரசியல் மோசடிகள் தொடர்கின்றன.
இன்னும் எஞ்சியிருப்பது ஒடிசாவின் நவீன் பட்நாயக் மட்டுமே.
அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி பெருமளவிலான அதிகார மீறல்கள் செய்வது தொடர்ந்து அமபலமாகி வருகிறது. ரெய்டு நடத்தி ஆளும்கட்சிக்கு ஆட்கள் பிடிப்பதும் அவர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக நன்கொடைகள் திரட்டுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே திரட்டப்பட்ட சட்டவிரோத ஊழல் பணத்தையும் உச்சநீதிமன்றம் முடக்கி அரசுக்கணக்கில் சேர்த்திருக்க வேண்டும். அவற்றை வெளியிடுமாறு கேட்ட உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்ட இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இன்று மதிப்பிழந்து நிற்கிறது. இதைப்போலவே பா.ஜ.க.வின் ஊதுகுழலாகச் செயல்படும் அனைத்து அமைப்புகளும் இயங்குகின்றன. அரசமைப்பு நிறுவனங்களைச் உருக்குலைக்கும் “புல்டோசர் அரசாக” மோடி அரசு செயல்படுகிறது. இந்த கொள்ளைப் பணத்தை முடக்குவதற்குப் பதிலாக அற்பக் காரணங்களுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
முந்தைய அரசுகளைவிட பலமடங்கு அதிகமான ஊழல்கள் மற்றும் அதிகார முறைகேடுகளில் சிக்கியுள்ள பா.ஜ.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து ஊடகங்கள் உள்ளிட்ட எவரும் வாய்திறக்க மறுக்கின்றனர். தேர்தல் பத்திரங்கள், பி.எம். கேர் பண்ட், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டிய ரூ.7.5 லட்சம் கோடியிலான பல்வேறு முறைகேடுகள் இவர்களது ஆட்சியின் தரத்தையும் ஊழலையும் வெளிப்படுத்துபவை. இவை பெரிய ஊழலில் அதிநவீன வடிவமாகவும் திட்டமிடப்பட்டவை ஆகும். மேலும் இவற்றை சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல் எனலாம். ஊடகங்கள், கார்ப்பரேட், வலதுசாரி அரசு ஆகியன ஒருங்கிணைந்தும் அறமற்ற வகையில் கூட்டணியாகச் செயலாற்றுகின்றன.
ரஃபேல் ஊழல் பெரிதாக கவனிக்கப்படாமல் போயிருக்கிறது. இதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம். காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை ஊடகங்கள் தடுத்து, மடைமாற்றம் செய்கின்றன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்பட்ட ஊடகங்களும் கார்ப்பரேட்கள் வசமாகிப் போனதால் ஜனநாயகம் வலுவிழந்து வருகிறது. மக்களின் வரிப்பணம் கார்ப்பரேட்களுக்கு வாராக்கடன் தள்ளுபடியாக வாரி இறைக்கப்படுகிறது. ஏழைகளின் வயிற்றடித்து சில நூறு பணக்காரர்களின் செல்வம் மேலும் பெருக வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள், சிறுபான்மையினர், தலித்கள், பழங்குடியினர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பாசிசக் கருத்தியல் பெண்களைப் பற்றிய நோய்மையான எண்ணங்களைக் கொண்டது. எனவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளன.
நவதாராளவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் போன்றவர்களால் கூட இவர்களுடன் இணைந்துப் பணியாற்ற இயலவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பைக் காலிசெய்ய சக்தி காந்த தாஸ் ஆளுநராக்கப்பட்டார். நரேந்திர மோடி, நிர்மலா சீத்தாராமன், சக்தி காந்த தாஸ் அடங்கிய கூட்டணி இந்தியப் பொருளாதாரச் சீரழிவைத் துரிதப்படுத்தியுள்ளது. வரிச்சுமையைக் கூட்டிச் சேர்க்கப்பட்ட நாட்டின் செல்வம் கார்ப்பரேட்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீட்டுக்கடன் வட்டி பெருமளவு உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.
வட இந்திய மக்களை முன்னேற்றவிடாமல் தடுத்தது மட்டுமின்றி தமிழக வரிப்பணத்தைத் திருப்பிவிடும் ஒன்றிய அரசின் வரிப்பகிர்வுக் கொள்கைகள் தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ளது. தேசியக் கல்விக் கொள்கை நவீன குருகுலக்கொள்கையாகவும் இந்தித் திணித்து நமது பன்முகத்தன்மையை சிதைப்பதாகவும் உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் காவிகளால் குலைந்துள்ளது. ‘அக்னிபாத்’ போன்ற திட்டங்கள் குடிமக்களை ராணுவமயமாக்கும் பாசிச உள்நோக்கம் கொண்டவை. இதன் மூலம் நாட்டின் அமைதியும் சமாதானச் சகவாழ்வும் கானல் நீராகும்.
மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகள், தலித்கள், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நாடெங்கும் அதிகரித்துள்ளன. அறிஞர்கள் டாக்டர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, பத்தரிக்கையாளர் கௌரி லங்கேஷ் போன்றோர் காவித் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. பழங்குடியினருக்காக குரல் கொடுத்த ஸ்டேன்சாமி சிறையிலேயே மரணமடைந்தார். கருத்துரிமை பறிக்கப்பட்டு கவிஞர் வரவரராவ், அறிஞர் ஆனந்த் தெல்தும்டே, பேரா.சாய்ராம் போன்றோர் ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தியது.
காங்கிரசின் ஆதரவுத் தளம் சில மாநிலங்களில் மட்டும் சுருங்கியுள்ள நிலையில் மாநிலக் கட்சிகளை நம்பியே செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புடன் உருவான இந்தியா கூட்டணி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது போன்ற வலுவான கூட்டணியை பல மாநிலங்களில் அமைக்க முடியவில்லை. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் காங்கிரசும் விட்டுக் கொடுத்து தொகுதிப் பங்கீட்டை செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் போல அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குள்ள கட்சிகள் தலைமையில் வலுவானக் கூட்டணியும் பங்கீடும் இல்லாமற்போய்விட்டது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இன்றுள்ள அரசியல் சூழலில் அதையும் தாண்டி கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைவு அவசியமாக உள்ளது. தேசிய அளவில் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம், ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கை போன்றவை முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். வட்டார மற்றும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த பரப்புரை உத்திகளும் சில இடங்களில் பொது வேட்பாளர்களும் இருப்பது நல்லது. கேரளம் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலுவான நிலையிலிருக்கும் நிலையில் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் மட்டும் உடன்பாடு காணப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நேரடி மோதலில் ஈடுபடும் சூழல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
2002 குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான கலவரம் பற்றிக் கேட்டபோது, காரில் செல்கையில் நாய் அடிபட்டால் வருத்தம் ஏற்படாமல் இருக்குமா? என்று இளக்காரமாகப் பதிலளித்த மோடி தேர்தலுக்காக கோயம்புத்தூர் குண்டுவெடிப்புத் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். குஜராத், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஒடிசா போன்ற பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்களில் பலியான சிறுபன்மையினருக்கு அஞ்சலி செல்லுத்துவாரா? நாடாளுமன்றமே முடங்கியபோதும் மோடி மணிப்பூர் செல்லவில்லை; அது குறித்துப் பேசவும் விரும்பவில்லை.
ஆடிட்டர் ரமேஷூக்காக கண்ணீர் வடிக்கும் மோடி ஜம்மு காஷ்மீரில் கோயிலில் சிதைத்துக் கொல்லப்பட்ட சிறுமி ஆஷிபா, உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொலையுண்ட தலித் பெண், மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான எண்ணற்ற இந்தியப் பெண்களுக்காகவும் கண்ணீர் சிந்தியது உண்டா? குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து கொண்டாடியது யாரென்பதை நாடறியும். மோடியின் இந்தியக் குடும்பத்தில் யாரெல்லாம் உறுப்பினர்கள் என்பது அவரது செயல்களின் வழி தெரியவருகிறது. இவைகளிலிருந்து மோடி யாருக்கான பிரதமர், மோடி மீண்டும் யாருக்கு வேண்டும் என்பதும் விளங்கும். இந்தியாவை மட்டுமல்ல ஜனநாயகத்தையும் ஒருசேரப் பாதுகாக்க வேண்டிய நேரமிது. எனவே மோசியின் பாசிச அரசு வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணி அரசு அமைய வேண்டும். தென்னிந்தியாவைப் போன்று வட இந்தியாவும் விழித்துக் கொண்டால் இந்திய ஜனநாயகம் நூற்றாண்டைக் கடந்து சாதனை புரியும். இல்லாவிட்டால் இந்தியாவும் ஜனநாயகமும் ஒருசேர வீழும் அபாயம் உண்டாகும்.
நன்றி: பேசும் புதியசக்தி – ஏப்ரல் 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக