கல்வியில் உறைந்து கிடக்கின்ற அரசியலையும் பேசும் நூல்
(‘கலையும் கல்விக் கனவுகள்’ நூல் குறித்த அறிமுகம்)
முனைவர் பே.சக்திவேல்
தனிமனித முன்னேற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது கல்வி மட்டுமே. அதனால்தான் தமிழ்ச்சமூக வரலாற்றில் கல்வி குறித்த சிந்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. அடிப்படையில் கல்வி என்றால் கற்றல் – கற்பித்தல் என்ற அளவில் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது சமூக, அரசியல், மத, பண்பாட்டியல், உலகமயமாக்கல் எனும் பல்வேறு காரணிகளால் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது.
சமகாலச் சூழலில் இந்தப் போக்கை நாம் இயல்பாகக் காணமுடிகின்றது. இந்த நிலையில், கல்விசார் சிந்தனையைத் தொடர்ந்து நுணுக்கமாக அவதானித்து எழுதிவரும் மு.சிவகுருநாதனின் ‘கலையும் கல்விக் கனவுகள்’ எனும் நூல் மிகுந்த அக்கறையுடன் சமகாலச் சூழலில் கல்வியின் நிலை பற்றியும் அதன்மீது தொழிற்படும் சமூக, அரசியல் காரணிகள் பற்றியும் நுணுக்கமான விவாதங்களை முன்வைப்பதாய் அமைந்துள்ளது. இருபத்தேழு கட்டுரைகளையும். நூலாசிரியர், கல்வியாளர் பா.கல்யாணியிடம் நிகழ்த்திய நேர்காணல், பேசும் புதியசக்தியில் வெளியான நூலாசிரியரின் நேர்காணல் என இரு நேர்காணல்களுடன் அடர்த்தியான உள்ளடக்கத்தைக் கொண்டமைந்துள்ளது. கல்வி, பாடத்திட்டம், வினாத்தாள் என பலவற்றையும் இவற்றினுள் உறைந்துகிடக்கின்ற அரசியலையும் பேசும் இந்நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்.
கலை என்பதற்குக் குலைதல் என்பது பொருள். களைதல் என்பதற்கு அகற்றுதல் என்பது பொருள். கலையும் கல்விக் கனவுகள் எனில் குலைந்து போகும் கல்விக் கனவுகள் எனவும், களையும் கல்விக் கனவுகள் எனில் அகலும் கல்விக் கனவுகள் எனவும் பொருள் கொள்ளலாம். இரண்டிலும் பின்னதே நூல் பொருளுக்குப் பொருத்தமாகத் தெரிகின்றது. நூலாசிரியர் இது பற்றிக் குறிபிட்டு நூல் தலைப்பு குறித்துத் தெளிவுபடுத்தியிருக்கலாம்.
நூல் விவரங்கள்:
கலையும் கல்விக் கனவுகள்
2024 / கட்டுரைகள்
மு.சிவகுருநாதன்
வெளியீடு:
பன்மை, நிலா வீடு, 2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், தியானபுரம் – விளமல், மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல், திருவாரூர் – 610004.
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9842402010, 9842802010
நன்றி: பேசும் புதியசக்தி – ஏப்ரல் 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக