விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கு: திணறும் க்யூ
பிரிவு போலீஸார்: சி.பி.ஐ. விசாரணைக்கு
மாற்றப்படுமா?
விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலை சேலம் விரைவு ரயில் கடந்த சில நிமிடங்களில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது.
இதில் சுமார் 1 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இது குறித்து சேலம் விரைவு ரயிலின் கார்டு அளித்த தகவலின் அடிப்படையில் அருகில் இருந்த ரயில் நிலைய அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை விரைவு ரயிலை தண்டவாளம் தகர்க்கப்பட்ட இடத்துக்கு சில மீட்டர்கள் தொலைவில் நிறுத்தினர்.
ஆயிரக்கணக்கான பயணிகளை பலி வாங்கியிருக்கக் கூடிய வாய்ப்புள்ள இந்தச் சம்பவம் குறித்து முதலில் உள்ளூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
நக்ஸல்கள் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பில்லை என்று கூறிய டிஜிபி லத்திகா சரண், சம்பவத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை க்யூ பிரிவு போலீஸôரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இலங்கை அதிபரின் இந்திய வருகையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் இருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு இயங்கங்கள் காரணமாக இருக்கலாம் என உளவுத் துறை ஐஜி ஜாபர்சேட் தெரிவித்தார்.
இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே க்யூ பிரிவு போலீஸôரும் தங்களது முதல்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை விசாரணைக்கு என்று கூறி அழைத்துச் சென்றனர் போலீஸôர். இவ்வாறு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் யாரையும் போலீஸôர் கைது செய்யவில்லை.
எனினும், இவர்களைத் தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். 2,3 நாள்களுக்கு மேல் நீடித்த இந்த விசாரணையில் தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் குறித்த எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதன் மீதான விசாரணைக்கு முன்னதாக போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் தொடர்பாக க்யூ பிரிவு போலீஸôர் இதுவரை 75-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால், இதுவரை சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்கள் குறித்த எந்த விவரமும் போலீஸôருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆன பிறகும், அதில் தொடர்புள்ளவர்கள் யார் என்பது குறித்த உறுதியான தகவல் தெரியாமல் உள்ளது.
தண்டவாள தகர்ப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என க்யூ பிரிவு போலீஸôர் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகளே இதனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடப்பதே குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம் என்றும், போலீஸôர் தங்களது யூகத்தை விடுத்து அனைத்து சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலும் புலனாய்வு மேற்கொண்டால் மட்டுமே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் எனவும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே க்யூ பிரிவு போலீஸôர் தங்களது விசாரணையை தொடர்வதால் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
எனவே, முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நன்றி : தினமணி - 21.06.2010