ஞாயிறு, ஜனவரி 23, 2011

மிருக விதூ­ஷகம் - உடல்கள், சடங்குகள், இனப்படுகொலை, உலகமய எதிர்ப்பு, கொஞ்சம் சாதியம்

மிருக விதூஷ­கம் - உடல்கள், சடங்குகள், இனப்படுகொலை, உலகமய எதிர்ப்பு, கொஞ்சம் சாதியம்                         -மு.சிவகுருநாதன் 








          “நாங்கள் இப்புவியின் கோமாளிகள்.  உறவுகளற்ற தாய்மார்கள்.  எங்களுக்கு உடல்கள் இல்லை.  நிலமில்லை.  திசைகளும் இல்லை.  வனப் பறவைகளாக மிதந்தலைகிறோம்.  எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன.  இருந்தும் பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம்.  அது முளைத்தெழுந்து தானியங்களின் கூட்டமாய் வரும்.  நாங்களே உலகின் தொன்மையான இனம்” என்ற பிரகடனத்துடன் ச. முருகபூபதியின் இசை, எழுத்து இயக்கத்தில் மணல்மகுடி குழுவினர் வழங்கிய ‘மிருக விதூஷ­கம்’ நாடகத்தை தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் அக்டோபர் 24, 2010இல் காண வாய்ப்பு கிடைத்தது.



            “ஆயிரம் வருடங்களுக்கு முன் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த இராஜராஜன் தமிழ், இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளைப் பயில்வதற்கு தஞ்சைப் பெரியகோயிலிலேயே தனித்தனியே இசைக் கூடம், நடனக் கூடம், நாடகக் கூடம் உள்ள ஒரு கல்லூரி அமைத்து பயிற்றுவதற்கு நடிகர்கள், நடன மாந்தர்கள், இசை வாணர்களை அமர்த்தி தமிழ் நுண்கலை மரபுகளைக் காத்து வளர்த்த அருங்கலை விநோதனாவான்“ என்று சொல்லி, “அவன் பெரிய கோயிலைக் கட்டி ஆயிரமாண்டு நிறைவுற்ற நினைவுகளுடனிருக்கும் தஞ்சை மண்ணில்” இப்போது நமது மரபான கிராமிய அடையாளங்களை, கலாச்சாரங்களை இழந்து வரும் சோகமும் அவற்றை மீட்க எண்ணும் கோபதாபமும் சடங்கார்த்த உடல் மொழிக் கொண்டு நகர்மயமாதல், உலகமயமாதலுக்கு எதிராக மணல்மகுடி குழுவினர் வழங்கும் ‘மிருக விதூஷ­கம்’ நவீன நாடகம் காண வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



            மிருக விதூ­ஷகம் நாடகம் திறந்த வெளியில் பார்வையாளர்கள் மத்தியில் ஈரமாக்கப்பட்ட நிலத்தில் நிகழ்த்தப்பட்டது.  அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களான பிச்சையயடுப்பவர்கள், பெண்கள், அரவாணிகள், பழங்குடியினர், கோமாளிகள், குப்பை பொறுக்குவோர் போன்றோர்களின் உடல் மொழியும் பழங்குடி மக்களின் தொல்லிசை வழியாகவும் நாடகம் அரங்கேறுகிறது.  நாடகத்தில் பங்கேற்பாளர்களின் உடல்மொழி முக்கியத்துவம் பெறுகிறது.  காலனிய ரேகை படாத உடலாக இருக்க வேண்டும் என முருகபூபதி விரும்புகிறார்.  இது எந்த அளவிற்கு சாத்தியமென்பதை பிறகு பார்ப்போம்.



            நமது அண்டை நாடான இலங்கையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகள், பசுமை வேட்டை என்ற பெயரில் நமது அரசு பழங்குடியினர் தொடுத்துள்ள போர், பன்னாட்டு கம்பெனிகளுடான ஆயிரக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நிலத்தை விட்டு விரட்டப்பட்டோர்கள், அணைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் வீடு மற்றும் மண்ணை இழந்தவர்கள், வீடாகிய காட்டை விட்டு வெளியேற்றப்படும் பழங்குடிகள், கடற்கரையை விட்டு துரத்தியடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் ஆமைகள், அரவாணிகள், கைவிடப்பட்டவர்கள் போன்ற பலவற்றால் பாதிக்கப்பட்டோரின் வேதனைக் குரல்கள் இந்நாடகத்தில் முழுவதுமாக வியாபித்திருந்தது.



            பெயரற்ற, முகமற்ற காலனிய ரேகை படாத உடல்கள், பல்வேறு அடக்குமுறைக்கு உண்டான இவ்வுடல்கள் விதைகள், புழுக்கள், பூச்சிகள் மற்றும் மிருகங்களாக மாறி அதன் வழியே தனது சோகங்களைச் சொல்வதோடு மண்ணோடு அயக்கியமாகி சடங்கு வழி உடல்களாக தோற்றம் கொள்கின்றன.   ஏற்றத்தாழ்வுகள் கடந்த தன்னிலை அழிந்த தன்னலமற்ற உடல்களைச் சடங்குகளின் வழியேதான் பெற முடியும் என்று முருகபூபதி தீவிரமாக நம்புகிறார்.  இனக்குழு சடங்குகளின் வழி உருமாற்றம் பெறும் உடல்களின் மூலம் சமூகத்துடன் ஊடாட்டம் நிகழ்த்தப்படுகிறது.



            பழங்குடி மக்களின் தொல் இசை பழங்குடி மக்களின் இசைக்கருவிகள் மூலம் இசைக்கப்படுகிறது.  எல்லாம் இலவசமாய்ப்போன இன்றைய அரசியல் சூழலில் தூக்கு கயிறும் கூட இலவசம் என்று சொல்லி கிண்டலடிக்கும் போது மட்டும் கோமாளிகளாக இருக்கும் விதூ­ஷ­கர்கள் மற்ற நேரங்களில் மிகவும் ‘சீரியஸ்’ ஆகவே நடித்திருக்கிறார்கள்.



            நாடக மொழி கவித்துவமானதாக இருந்தாலும் பார்வையாளர்களை அதிர்ச்சியூட்டுவதாக அமையவில்லை.  சமகால அரசியல் பிரக்ஞை இருக்கும் பார்வையாளர்களுக்கு புரிதல் எளிதில் கிட்டி விடுகிறது.  நவீன நாடகங்களுக்குண்டான பூடகத் தன்மை இருப்பினும் அவற்றுடன் பார்வையாளன் கொள்ளும் உறவினடிப்படையில் இப்புரிதல் ஏற்படுவதாகக் கொள்ளலாம்.



            ச. முருகபூபதி கூறுவது போல தமிழ் நிகழ்த்து கலை மரபில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் உறவு வழியால் பிணைக்கப்பட்டவர்கள்.  போர்க்களமாகிப் போன இன்றைய சூழலில் அநாதைகளாக விதூ­ஷ­கர்கள் அநாதையான நிலத்தில் மிருக நிலை எடுத்து அதன் வழியே சமகால பிரச்சினைகளைப் பேசி வருகிறார்கள்.



            இன்றுள்ள போர்ச்சூழலில் மிருக நிலை என்பது கூட மனித நிலையை விட மேம்பட்டதாகத்தான் கருத வேண்டியுள்ளது.  எனவே மிருகங்கள், பூச்சிகள், தானியங்கள் வழி விதூஷ­­கர்கள் தங்களது சொல்லாடலை நிகழ்த்துகிறார்கள்.



            பல நேர்மறையான அம்சங்கள் நிறைந்த இந்த நவீன நாடகத்தில் சில இடைஞ்சலாக கூறுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  அது உடல் மொழி மற்றும் நாடக மொழி சம்மந்தப்பட்டது.



                        மீண்டும் புராதன காலத்திற்கு திரும்புதல் என்ற கருத்தாக்கம் எந்த அளவிற்கு சாத்தியப்படும், காலனிய ரேக படாத உடல்கள் வேறு பல சாதீய / மத ரேகைகள் படிந்திருப்பதை நாம் எப்படி கவனிக்காமலிருக்க முடியும் என்று தெரியவில்லை.  இங்கு காலனிய நீக்கம் எவ்வாறு நடைபெறவில்லையோ அதைப் போலவே சாதி / மத நீக்கமும் அறவே நடைபெறவேயில்லை.  காலனிய உடல்களை விட சாதீய / மத உடல்கள் விட மிகவும் மோசமானவை; கோரமானவை.  இந்த உடல்களின் வழி இலங்கை இனப் படுகொலை, பசுமை வேட்டை, உலகமயமாதல் போன்றவற்றை எளிதில் விமர்சிக்கலாம்.  உத்தப்புரம், தனிக்குவளைகள் உள்ளிட்ட பல்வேறு தீண்டாமை ஒடுக்குமுறைகளை அணுகவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.



            கிராமச் சடங்குகளையும் அந்த சடங்கு நிகழ்த்துதல் மற்றும் ஒலிகளை புறக்கணிக்கப்பட்டவர்களின் நாடக மொழியாக ச. முருகபூபதி கணிக்கிறார். (தீராநதி ஆகஸ்ட் 2010 - நேர்காணல்).  கிழக்கு ராமநாதபுரத்தில் மாசி மாதம் நடக்கும் முத்திருளாயி கோயில் நடக்கும் பெருங்கிழவி சடங்கில் பள்ளரும் மறவரும் இணைவதை முருகபூபதி உதாரணமாகக் காட்டுகிறார்.



            இங்கு சடங்குகளனைத்தும் முற்றிலும் சாதீயமானவை.  சாதியை விட்டு விட்டு சடங்கை மட்டும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது.  சடங்குகள் மண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லும்போதே அதனுடன் இணைந்த சாதி துருத்திக் கொண்டிருப்பதை எளிதில் உணர முடியும்.  சடங்குகளில் ஒரு நாள் மட்டும் சாதி வேறுபாடுகள் அழிவதையும் மறுநாள் மேல் - கீழ் சாதிப் படிநிலைகள் பாதுகாக்கப்படுவதை புரட்சிகரமாக எடுத்துக் கொள்வது நன்றாயிருக்காது.



            உள்ளூர்க் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு உலகமயம், பசுமை வேட்டை, இனப்படுகொலை என்றெல்லாம் பேசித் திரிவது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம்; ஒரு படைப்பாளி அரசியல்வாதியாக வேண்டாம் என்று நான் கருதுகிறேன்.



            அழைப்பிதழில் குறிப்பிட்டது போல் ராஜராஜன் பெருமை பேசுவதும் அவன் மூலம் தஞ்சையில் நுண்கலைகள் வளர்ந்ததையும் நேர்மறையாக ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ அணுகுவதைப் போல படைப்பாளியான ச. முருகபூபதியும் பார்ப்பதும், ராஜராஜனின் மறுபக்கத்தையும் சாதிச் சடங்குகளின் மறுபக்கத்தையும் காணத் தவறுவதும் படைப்பு வீரியத்தை முழுங்கடிக்கவே செய்யும்.  மண், மரபு என்றெல்லாம் பேசுபவர்கள் சாதியை மட்டும் மறந்து விடுவதென்பது தமிழ்ச் சூழலில் அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது.  இந்நாடகம் இனப் படுகொலையை பேசாதிருந்தால் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ தஞ்சையில் நிகழ்த்தியிருக்குமா என்பது அய்யமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக