வாக்குரிமையை கட்டாயமாக்க முடியுமா? -மு.சிவகுருநாதன்
இந்திய அரசியலமைச் சட்டப் பிரிவு 324-ன் படி ஜனநாயக முறைப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த 1951ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றதா என்பது கேள்விக்குரியது. இந்த ஆண்டிலிருந்து (2011) ஜனவரி 25ஐ தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து நாடெங்கும் வாக்களிக்கும் உரிமை, ஜனநாயகம் பற்றிய பரப்புரைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.
தகவல், கல்வி, உணவு உரிமைச் சட்டங்கள் வரிசையில் வாக்களிக்கும் உரிமைச் சட்டம் இயற்றுவதைத் தவிர்த்து அரசு இம்மாதிரியான பரப்புரைகளில் ஈடுபடுவதை நாம் கவனிக்க வேண்டும். ஏற்கனவே வாக்குரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. கருத்துரிமை, பேச்சுரிமை கூடத் தான் இருக்கிறது. உயர்நீதி மன்ற உத்தரவு பெற்று கடலூரில் நடத்தப்பட்ட கூட்டம் (22.01.2011) ஒன்றில் காவல் துறை அத்துமீறி பிரபா. கல்விமணி உள்ளிட்ட பலரை தமிழக அரசு சிறையிலடைத்திருக்கிறது . சத்தீஸ்கர் அரசின் முயற்சியால் ராய்ப்பூர் நீதிமன்றம் மனித உரிமைப் போராளி பிநாயக் சென்னை ஆயுள் தண்டனை அளித்து மனித உரிமையை சிறைப்படுத்தியுள்ளது.
அண்மைக் காலத்தில் விரக்தியுற்ற படித்தவர்கள் சிலரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்காமல் இருக்கிறார்கள். ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமைப் பயன்படுத்தாமல் இருப்பது வெட்கக் கேடான, கோழைத் தனமான செயலாகும். என வாக்காளர் தினக் கூட்டத்தில் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. பல்வேறு அடிப்படை உரிமைகள் பலகோடி மக்களுக்கு கிடைக்காத நிலையில் வாக்குரிமையை மட்டும் முன்னிலைப் படுத்துவதன் பின்னாலுள்ள அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தியக் குடியரசின் தொடக்கக் கால தேர்தல்கள் அதிக முறைகேடுகளின்றி நடைபெற்றாலும் 1970களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்கள் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்தன. பீகாரில்தான் அதிக வன்முறை என்று சொல்கிற நிலைமை மாறி தற்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களால் அந்த இடத்தைத் தமிழகம் பெற்று விட்டது.
உச்சநீதி மன்றம் 2002இல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவரது கணவன் / மனைவி மற்றும் சார்ந்திருப்போரின் சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி, வங்கி இருப்பு, பெற்ற கடன்கள், கல்வித் தகுதி போன்ற விவரங்களை கட்டாயமாக தெரிவிக்க வலியுறுத்தியது. இந்த விவரங்களைத் தெரிந்து கொள்வது வாக்காளர்களின் அடிப்படை உரிமை என உச்சநீதி மன்றம் வலியுறுத்தியது. ஆனால் அரசியல் கட்சிகள் இதை ஏற்க மறுத்தனர். 2003இல் உச்சநீதி மன்றம் வாக்காளர் உரிமைக்கான புதிய சட்டங்கள் இயற்றப்படும் வரை இத்தீர்ப்பு பொருந்தும் என்று உத்தரவிட்டது.
தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி அரசு அமைத்த வி.எம். தார்க்குண்டே, தினேஷ் கோஸ்வாமி, இந்திரஜித் குப்தா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் நிறைய பரிந்துரைகளைச் செய்திருக்கின்றன. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் / வேட்பாளர்களுக்கு நன்கொடை வழங்குதல் / பெறுதலைத் தடை செய்தல், தேர்தல் செலவை அரசே ஏற்றல் போன்ற பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பினும் ஒன்றுமே நடக்கவில்லை. வாக்காளர் உரிமையை நிலைநாட்ட இதையும் தாண்டி நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.
இதில் முக்கியமானது விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்துவது ஆகும். இதன் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளருக்குப் பதிலாக கட்சியே போட்டியிடும். நாடு / மாநிலத்தில் அக்கட்சி பெறும் மொத்த வாக்கு சதவீதத்திற்கேற்ப நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதாரணமாக 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 45%. பெற்ற இடங்கள் 163. அ.இ.அ.தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 40%; பெற்ற இடங்கள் 69. விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தால் தி.மு.க. கூட்டணி 105 இடங்களையும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 94 இடங்களையும் பெற்றிருக்கும். இதைக் கூட கூட்டணியாக பார்க்காமல் தனித்தனி கட்சியைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். இதைப் போன்று அனைத்து தேர்தல்களிலும் பெற்ற வாக்கு சதவீதத்திற்கும் இடங்களுக்கும் பேரளவு வித்தியாசம் இருப்பதைக் காண முடியும்.
இதன் மூலம் நேர்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்று குறை கூறலாம். ‘Right man in Wrong Party’ என்று சொல்கிறார்களே இதனால் என்ன பயன்? தற்போதைய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் கட்சித் தலைவருக்குத் தான் விசுவாசம் காட்டுவார்களே தவிர வாக்களித்த மக்களுக்கு அல்ல. தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு தனித் தேர்தல் நடத்தும்போது கூட்டணித் தேர்தல் வாக்குகளைக் கொண்டு கட்சிகளை அங்கீகரிப்பது எப்படி சரியாக இருக்கும்?
ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட சட்டமன்ற / நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் போது ஒரு தொகுதிப் பதவியை விட்டு விலகுவதால் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கு ஏற்படும் செலவை பதவி விலகியவரிடமே வசூலிக்க வேண்டும். சோனியா காந்தி, ஜெயலலிதா போன்றோர் தொடர்ந்து இவ்வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது தடை செய்யப்படவேண்டும்.
இப்போதும் வேட்பாளர்கள் சொத்துக் கணக்கு அளிக்கிறார்கள். அதை பத்திரிக்கையும் வெளியிடுகின்றனர். அண்மையில் கூட முதல்வர் மு. கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டு சாதனை படைத்தார்!. இந்தக் கணக்குகளை தேர்தல் ஆணையமோ, நீதி மன்றங்களோ சரிபார்க்கும் அதிகாரம் படைத்ததாக இல்லை. தவறான கணக்கு அளித்து வெற்றிப் பெற்ற ஒருவரது பதவியைப் பறிப்பதற்கு இங்கு வழியில்லை.
ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் பதிவான வாக்குகளில் 50%க்கு குறைவாகப் பெறும்போது அவர்களுக்கிடையே மறு தேர்தல் நடத்தி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதுதான் சரியாக இருக்கும். விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் இந்த சிக்கல் எழ வாய்ப்பில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இடைக்கால அரசாக செயல்படும் அரசுகள் அரசு எந்திரத்தை விளம்பரம் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தவறாகப் பயன்படுத்துவது நடைபெறுகிறது. இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியின் அத்துமீறல்களுக்கு அளவேயில்லை. தமிழகத்தில் நடைபெற்ற பல இடைத்தேர்தல் முறைகேடுகள் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவின் கண்டனத்திற்கு உள்ளானது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை.
வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பது கூட சிலரால் வலியுறுத்தப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு முறை வாக்களிக்காதவர்களுக்கு ரூ. 1000/- அபராதம் விதிக்க வேண்டும் என்று கூட சொன்னார். வாக்களிக்கும் உரிமை என்பதில் வாக்களிக்க மறுக்கும் உரிமையும் சேர்ந்தே இருக்கிறது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்திலேயே மேலே குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை / வாக்களிக்கவே விரும்பவில்லை என்று தனி பட்டன்கள் வைக்கப்படும் போதுதான் வாக்காளர் உரிமைகள் பாதுகாக்கப்படும். 49 ஓ -வை படித்தவர்கள் மட்டுமே பயன் படுத்தமுடியும். அரசும் அரசியல் கட்சிகளும் வாக்குரிமையைப் பற்றி மட்டும் பேசும்போது நீதிமன்றங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வாக்காளர்களின் உரிமை பற்றி பேச வேண்டியுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவின்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது ( 24 .01 .2011 ) வாக்காளர்கள் பணம், பிரியாணி, மது போன்றவற்றிற்கு பலியாகாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்கைகள் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கவனத்திற்கு வந்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.
அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு (Electronic Voting Mechine) எந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதாகவும் அதனால் பழைய வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வலியுறுத்துகின்றன. இந்த குற்றச்சாட்டைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்துடன் ஒரு பிரிண்டரை இணைத்து வாக்களித்த விவரங்களை வாக்காளர்களுக்கு ரசீதாக அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணமளிக்கும் வேட்பாளர்கள் அவர்களது மத நம்பிக்கை சார்ந்து விளக்கேற்றி சத்தியம் வாங்குதல் போன்ற உத்தரவாதங்களைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. இனி இந்த ரசீதை அளித்து வாக்களித்திருப்பதை உறுதி செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படும். வாக்களிப்பின் ரகசியத் தன்மை அம்பலத்துக்கு வரும்.
1986இல் வாக்களிக்கும் வயது 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பெரும்பான்மையானஇன்றைய இளம் தறைமுறை சினிமா நடிகர்களிடமும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களிடமும் சரணாகதி அடைந்திருப்பதை நாம் கவனிக்க மறக்கக் கூடாது. வளரும் இளம் தலைமுறை அரசியல் விழிப்புணர்ச்சி பெறாமல் முடங்கிப் போக நமது பாடத்திட்டங்கள் பேருதவி புரிகின்றன. வேறெந்த மாநிலங்களைவிட தமிழகம் சின்னத்திரை, பெரியதிரைகளால் பெரிதும் சீரழிந்துள்ளது.
தமிழக சினிமா நடிகர்கள் ஒரு படம் நடித்தவுடன் முதல்வர் பதவி மீது குறி வைக்கிறார்கள். அவர்களிடம் ஊடகக்காரர்கள் எப்போதும் முன் வைக்கும் ஒரே கேள்வி, எப்போது அரசியலுக்கு வருவீர்கள்? என்பதாகும். அவர்களும் மக்களுக்கு எதாவது செய்யவேண்டும். கூடிய விரைவில் அறிவிப்பேன் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். இதில்தான் தமிழ் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. தந்தை பெரியார், அன்னை தெரசா, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் போன்றோர் எவ்வித அரசுப் பதவிகள் வகித்து மக்களுக்கு தொண்டாற்றவில்லை என்பதெல்லாம் இவர்களுக்கு புரியவில்லை. இதைக் கேட்கும் ஊடகத்தாரும் அவர்களுக்கு நினைவுப்படுத்துவதில்லை.
விடுதலைப் போராட்டக் காலங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் போன்றோர் அக்கால இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருந்தனர். 1947ல் நாடே விடுதலைக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்க பிரிவினையால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தார் காந்தி. அடித்தட்டு தலித் மக்களின் வாழ்விற்காக தன்னுடைய படிப்பு, பதவி, உயிர் போன்றவற்றை அர்ப்பணித்தார் அம்பேத்கர். இதுபோன்ற காரணங்களால் இளைஞர்கள் இவர்கள்பால் இயற்கையாக ஈர்க்கப்பட்டனர்.
1975இல் நெருக்கடி நிலையின் போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற சோசலிஸ்ட் தலைவர்கள் முன் மாதிரியாக விளங்கி தேசிய அளவில் ஒரு மாற்றத்தை உண்டாக்கினார். 1987 - 88ல் 64 கோடி போபார்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளிப்படுத்தி ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஒரு கூட்டணி அரசு வழி நடத்தினார் வி.பி. சிங். இன்று கூட பல்லாயிரம் கோடி மதிப்பிலான 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் இவற்றிற்கு எதிரான இயக்கம் நடத்த எந்த ஒரு தலைவரையும், இயக்கத்தையும் காண முடியவில்லை.
இளைஞர் சமூகம் கிரிக்கெட், சினிமா ஆகியவற்றில் மூழ்கியுள்ளது. கிரிக்கெட், சினிமாக்காரர்கள் தங்களை ஆண்டால் போதும் என்ற எண்ணமே இளைஞர் சமூகத்திற்கு இருக்கிறது. இவர்கள் இல்லாவிட்டால் தெளிவான அரசியல் புரிதல் இல்லாத அப்துல்கலாம்களிடம் சரணடைகிறார்கள். வயது முதிர்வு காரணமாக செயல்பட முடியாமல் இருக்கும் அடல் பிகார் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நினைக்கும் இளைஞர் கூட்டம் இருப்பதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று கூட தெரியவில்லை. இவர்களுக்கு ராகுல் காந்தி போன்ற இளவரசர்களும் நாட்டை வழி நடத்தப் போதுமானவர்கள்.
நேர்மையான, எளிமையான தலைவர்களுக்கு முன்மாதிரியாக கு. காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி ஆகியோரைத்தான் திரும்பத் திரும்ப கூறி வருகிறோம். ஏன் இந்த மாதிரி தலைவர்கள் பலர் உருவாகவில்லை?. அரசும் சமூக அமைப்பும் சுயநல வர்ககங்கள் உருவாவதைத் தானே ஆதரிக்கின்றன.
அரசு ஊழியர்களின் ஊதியத்தை விட அதிகமாக பெற வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கை. அதற்கென அமைக்கப்பட்ட குழு ரூ. 80000/- அளிக்க பரிந்துரை செய்தது. ஆகஸ்டு 2010இல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.50000/- ஆக உயர்த்தப்பட்டது. இதைத் தவிர தொகுதிப் படி மாதம் ரூ,40000/-, அலுவலகப் படி ரூ. 2000/- இது போக பயணப்படி, தொலைபேசிப்படி, குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு தொடர்வண்டிப் பயணம் என ஏகப்பட்ட வசதிகள், மேலும் ஓய்வூதியம் ரூ. 20000/-. இதைப் போல தமிழகத்திலும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் உயர்த்தப்பட்டது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஊதிய உயர்வை எதிர்த்தவர்கள் இடதுசாரிகள் மட்டுமே. இவற்றிற்கு மேலாக பல கோடி ரூபாய்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என ஓதுக்கப்படுகிறது. இதில் ஏகப்பட்ட ஊழல்கள். இவற்றை மத்திய தணிக்கைத் துறை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறது. பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் மறுமுறை பொறுப்பேற்றதும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்து இதன் அத்துமீறல்களை நாம் உணர முடிகிறது. நாட்டு மக்களனைவரும் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க நாடாளுமன்ற மலிவு விலைக் கேண்டீன் விலை விவரங்கள் சமீபத்தில் நாளேடுகளில் வெளிவந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விலைகளைப் பார்க்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களோ என ஐயுற வேண்டியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்ட போதிலும் சட்ட மன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு அளிக்கும் மகளிர் மசோதா மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் நிறைவேற்றாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறது. அம்மசோதாவில் பெண்களுக்கு சாதிவாரி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை முன் வைக்கப்படுவதால் தாமதமாகிறது என்று போலியான காரணம் சொல்லப்படுகிறது. அரசு இம்மசோதாவை தற்போதைய வடிவிலோ அல்லது திருத்தங்கள் செய்தோ நிறைவேற்றத் தயாரில்லை என்பதே உண்மை. சரிபாதி வாக்காளர்களின் உரிமையையும் சட்டமியற்றுவதில் பெண்களின் பங்கையும் நிராகரிப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
இவ்வளவு குளறுபடியான ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு, வாக்காளர்களின் உரிமைகளை மிதித்து வாக்குரிமையை மட்டும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அது தொடர்பான பரப்புரைகளில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் பலன் தராது. வாக்குரிமையை கட்டாயமாக்கி சட்டமியற்றுவது எந்தப் பலனையும் அளிக்காது என்பதை அரசே உணர்ந்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட முறையான தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக அமல் செய்வதே ஓரளவு பலன் தருவதாக அமையும்.

1 கருத்து:
அத்தனையும் உண்மை. மாற்றம் எப்போதுதான் வருமோ?!
கருத்துரையிடுக