வெள்ளி, ஜனவரி 07, 2011

சாரு நிவேதிதா - நண்பர்கள் - விமர்சனங்கள் -மு. சிவகுருநாதன்

சாரு நிவேதிதா - நண்பர்கள் - விமர்சனங்கள்

                                                                -மு. சிவகுருநாதன்

        
முன்பொரு சமயம் அ. மார்க்ஸ் சாருவைப் பற்றி எழுதும்போது "கடைசி பியர் வாங்கிக் கொடுப்பவன்தான் சாருவுக்கு  மிகச் சிறந்த எழுத்தாளன்" என்று குறிப்பிட்டிருந்தார்.  அதை சாரு நிவேதிதா மிகுந்த அறச்சீற்றத்துடன் எதிர்கொண்டார்.  இருப்பினும் சாரு இக்கூற்றை நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்.   இப்பொழுது மிஷ்கின் படமான ‘நந்தலாலா’ விமர்சனம் வரையிலும் அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.



          பொதுவாக சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் வாசகர்களிடம்  கிளர்ச்சியையும் வாசிப்பனுபவத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.   சாருவின் எழுத்துக்களை விரும்பி படிப்பவன் என்ற வகையில் ‘உயிர்மை’யில் அவர் எழுதும் நீண்ட சினிமா விமர்சனங்கள் அத்திரைப்படம் பற்றிய முழு வரைபடத்தையும் அப்படத்தின் இசை, ஒளிப்பதிவு பற்றிய நுண்ணிய கூறுகளையும் ரசனையின்பால் பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் அமையும்.  ஆனாலும் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என தர அளவுகோல்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்பதுதான் விசித்திரம். 



          ஓம் சாந்தி ஓம், தேவ் டி போன்ற இந்திப் படங்களையும்  போன்ற  Inception ஆங்கில படங்களையும்  Love Sex Aur Dhokha போன்ற இந்திய ஆங்கிலப் படங்களையும் சிலாகித்து எழுதும் சாருவின் ரசனை பாராட்டுக்குரியது.  இருப்பினும் சாருவினுடைய விமர்சன அறம் பலமுறை கேலிக்குரியதாகி விடுகிறது.  இது ‘நந்தலாலா’ பட விமர்சனத்தைத் தாண்டியும் தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது.



          நவம்பர் 2010 உயிர்மை இதழில் ­ஷங்கரின் ‘எந்திரன்’Bicentennial Man -ன்  அப்பட்டமான காப்பி என்று நிறுவி  Terminator-1,Terminator-2  போன்ற படங்களின் பாதிப்பு இருந்ததை சாரு விலாவாரியாக அலசியிருந்தார்.  ஆனால் அடுத்த மாதமே (டிசம்பர் 2010) ‘உயிர்மை’ இதழில் மிஷ்கினின் ‘நந்தலாலா’ விமர்சனம் எழுதும் போது ஜப்பானியப்படமான ‘கிக்கு ஜீரோ’வின் காப்பி என்பதை ஒத்துக்கொள்ளாமல் கலா சிருஷ்டி அது, இது எனப் புகழ்ந்து தமிழ் சினிமாவின் ‘காப்பி’ கலாச்சாரத்திற்கு வக்கலாத்து வாங்குவதுடன் சாருவின் வேலை முடிந்து விடுகிறது.



          ‘யுத்தம் செய்’ என்ற மிஷ்கின் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் இனி கிடைக்கப் போகும் திரைக்கதை, வசன வாய்ப்பிற்காக சாரு இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை.  கள்ளக்காதல், நல்லக் காதல் என்பது போல கள்ள காப்பி, நல்ல காப்பி என்று ‘நந்தலாலா’வைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அவசியத்திற்கு சாருவிடம் பதில் கிடைக்கப் போவதில்லை.



          யோகி, எந்திரன் போன்ற காப்பிகளை கண்டித்த, ராவணன், வம்சம் போன்ற குப்பைகளைத் தூற்றிய சாருவின் அறச்சீற்றம் ‘நந்தலாலா’வில் செயல்படாமல் போனது ஏனோ?.  சாரு முன்பு இதே மாதிரியான பல்வேறு தலைகீழ் விமர்சனங்களை தமிழிலக்கிய உலகிற்கு வழங்கி பெருமை சேர்த்திருக்கிறார்!



          செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’ படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய சாரு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ஐ காப்பி என்று கிண்டல் செய்து கடாசினார்.  புதுப்பேட்டை அளவுக்கதிகமாக உயர்த்திப்பிடித்த சாரு, நந்தலாலாவில் தற்போது கண்டடைந்திருக்கின்ற அபூர்வமான உண்மைகளை ‘ஆயிரத்தில் ஒருவன்’-ல் கண்டுபிடிக்க அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.  இதைப் பற்றி நான் இங்கு எழுதியிருக்கிறேன்.   
(பார்க்க:- 21ஆம் நூற்றாண்டில் செத்த மூளை).
www.musivagurunathan.blogspot.com



          மேலும் ‘தசாவதாரம்’ படத்தை விமர்சிக்கும் நோக்கில் கமல்ஹாசனைச் செல்லமாக திட்டிய விதத்தில் சாருவின் வைணவச் சார்பை முன்பொரு முறை கண்டித்திருக்கிறேன்.  
(பார்க்க:- உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமா)
www.musivagurunathan.blogspot.com

          கதைத் திருட்டு, காப்பி என்பன தமிழ் சினிமா கலாச்சாரத்தில் ஊறிப்போன வழக்கமாகி விட்டது.  சுப்ரபாரதிமணியன் போன்ற எழுத்தாளர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி வந்ததும் இத்தகைய திருட்டின் காரணமாகத் தான்.  வெண்மணி நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ‘நெல்லு’ என்ற படம் வெளிவரப் போவதாக இதழ்களில் செய்திகள்  வெளிவருகின்றன.  இப்படுகொலை குறித்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்ற நாவலையும் சோலை சுந்தரபெருமாள் ‘செந்நெல்’ என்ற நாவலையும் எழுதியுள்ளனர்.  இது எவற்றின் காப்பி அல்லது இரண்டின் கலவையா என்பது படம் வெளியான பிறகே தெரியும்.



          தமிழ் சினிமாவின் இத்தகைய சீரழிவுகளை ஆள் பார்த்து மட்டும் விமர்சனம் செய்வது சாரு போன்ற இலக்கியவாதிகள் விமர்சகர்களுக்கு அழகல்ல.  கோவையில் பள்ளி மாணவி கடத்தல்-பாலியல் வன்முறை-கொலை - குற்றவாளி என்கவுண்டர் ஆகிய செய்திகளைப் படிக்காமல் அதே போலுள்ள சம்பவங்கள் நிறைந்த நாவலை எழுதி முடித்திருப்பதாக ஆச்சரியப்படும் சாருவை விட (ஆனந்த விகடன், டிசம்பர்-01, 2010) மிஷ்கின் கூட கொஞ்சம் தேவலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.



                    கிக்கு ஜிரோவின் Inspiration -ஐ ஒத்துக்கொள்ளும் மிஷ்கின் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரனின் கதையைப் படமாக எடுத்திருப்பதாக கதையளக்கிறார்.  (இந்தியா டுடே, டிசம்பர் 15, 2010).  ஒரு படத்தை முழுவதையும் காப்பியடித்துவிட்டு பாதிப்பு என்று மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்வதற்கு துணிச்சல் வேண்டும். அந்த  துணிச்சலை  சாரு போன்ற ‘ஜால்ரா’ இலக்கியவாதிகளால் மிஷ்கின் பெறுகிறார்.



          சினிமா நண்பர்கள் காப்பியடிப்பதை நல்ல காப்பி என்று சாரு நற்சான்று வழங்குவதைப் போலவே இலக்கிய நண்பர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தளிக்கும் வேலையையும்  சிறப்பாகவே செய்து வருகிறார்.   இவரது பார்வையில் தமிழின் மிகச் சிறந்த கவிஞன் மனுஷ்யபுத்திரன்தான்.  ஏனெனில் இவரது புத்தகங்களை வெளியிடுவது மனுஷ்யபுத்திரனின் ‘உயிர்மை’ பதிப்பகந்தான் என்பதை அறியாதவரா நீங்கள்?.   க.நா.சு. பாணியில் இவர் வெளியிடும் பட்டியல்கள் (ஆனந்த விகடன், டிசம்பர்-22, 2010) நம்மையயல்லாம் அசர வைக்கின்றன.  சுஜாதாவுடன் நகுலன், ப. சிங்காரம், பிரபஞ்சன், ஷோபா சக்தி போன்றோரையும் இணைத்து ‘நண்பர்கள் சேவை’ செய்கிறார்.  சுஜாதாவின் எழுத்துக்களுக்கு இலக்கிய அந்தஸ்து பெறவும் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பக விற்பனை அதிகரிக்கவுந்தான் பயன்படுமே தவிர தீவிர வாசிப்பனுபவத்தை உண்டாக்காது.



          சாருவின் கவிஞர்கள் பட்டியலும் கேலிக்குரியது.  ஆங்கிலத்தில் எழுதும் நிலாஞ்சனா ராய் பற்றி விலாவாரியாக எழுதும் (ஆனந்தவிகடன், டிசம்பர்-08, 2010) சாருவின் கவிஞர்கள் பட்டியலில் இடம் பெறத் தகுதியான பெண் கவிஞர்கள் தமிழச்சி, கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே.



          கனிமொழியின் ‘கருவறை வாசனை’ கவிதைத் தொகுப்பு வந்த போது சாரு அதை தலையில் தூக்கி வைத்து ஆடினார்.  அப்போது முதல் சாருக்கு நண்பராக இருந்தவர் இப்போதும் இருக்கிறாராம்.  தி.மு.க.வை இவர் விமர்சித்தாலும் அதையும் தாண்டி நட்பு பாராட்டுவராம் கனிமொழி.  டிசம்பர் 13, 2010 சென்னை, காமராஜர் அரங்கில் நடக்கும் தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததும் உடன் ஒப்புக் கொண்டதை சாரு பெருமையுடன் விவரிக்கிறார்.  (ஆனந்தவிகடன், டிசம்பர்-08, 2010) நன்றாக இருக்கிறது!.



          இவரது பதிப்பக நண்பர் மனுஷ்யபுத்திரன் கூட தனது தலையங்கத்தில் (உயிர்மை, டிசம்பர் 2010) கனிமொழி பற்றி போகிற போக்கில் சொல்கிறார்.  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து‘ஆவ்’ ராசா என கட்டுரை எழுதும் சாரு (ஆனந்தவிகடன், டிசம்பர்-01, 2010)  மருந்துக்குக் கூட கனிமொழியின்  பெயரைப் பயன்படுத்தாமல் ஆ. ராசாவின் ஊழலைத் தண்டிக்க வேண்டும் என்கிறார்.  நீரா ராடியா டேப்பில் கருணாநிதியின் குடும்பமே சந்தி சிரிக்கிறது.  சாருவுக்கு கனிமொழியின் நட்பைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குப் புலப்படுவதில்லை.  இலக்கிய வேலைகளில் மூழ்கிவிட்ட எனக்கு செய்தித்தாள் படிக்க, தொலைக்காட்சி பார்க்க நேரமில்லை என்று சாரு வாதிடலாம்.  அப்படியானால் அரசியல் கட்டுரை எழுதுவதை நிறுத்திவிட்டு, நிலாஞ்சனாவின் அழகை வருணிப்பதில் மட்டும் நேரத்தை செலவிட வேண்டியதுதானே!



          குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையாம்; நட்பிலும் கூட.   எனவே கனிமொழிக்கும்   சாருவின் நட்பு தற்சமயம் தேவையாயிருக்கிறது.  எனவே சாரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இலக்கியவாதிகள் உண்மையாக நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.  தமிழச்சியும் தம் பங்கிற்கு சாருவுக்கேத்த மாதிரி இலக்கிய விசாரம் செய்திருக்கிறார்.  நாடே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்தினரின் குறிப்பாக கனிமொழியின் பங்கு பற்றி விலா வாரியாக கேள்விப்பட்டுக் கொண்டிருக்க, கனிமொழியை அழைத்து நூல் வெளியிடும் சாருவின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும்.  ­ஷ­ங்கர் அடித்தால் ‘கள்ளக்காப்பி’, மிஷ்கின் அடித்தால் ‘நல்ல காப்பி’ என்கிற துணிச்சலுக்கு நிகரானதுதான் இதுவும்.
நித்தியானந்தவிடம் பணம் கொடுத்து ஏமாந்த கதையை  குமுதம்  ரிப்போர்ட்டரில்   தொடராக எழுதி பணம் பண்ணியதொடல்லாது ஏமாந்த பணத்தையும் வசூல் செய்த துணிச்சல் சாருவைவிட வேறு யாருக்குத்தான் வரும்.


          சிறந்த இலக்கிய இதழ்கள், பதிப்பகங்கள் என்று சொல்லிக் கொண்டு இங்கு நடத்தப்படுபவைகள் அதிகாரத்தின் துணையை நாடி, அதன் மூலம்  தங்களது சரக்கை கடைவிரிக்க இம்மாதிரியான வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.  இதைத் தொடங்கி வைத்த பெருமை காலச்சுவடைச் சாரும்.  கனிமொழி, சல்மா போன்றவர்கள் மூலமாக அதிகாரத்தை ருசித்த காலச்சுவடு கனிமொழியுடன் ஏற்பட்ட ஊடலால் இன்று அதை இழந்து நிற்கிறது.  இத்தகைய வசதி, வாய்ப்புகளை பெற்று விடத் துடிக்கின்ற பதிப்பகங்கள், இதழ்கள் கனிமொழி, தமிழச்சி போன்றவர்களை உயர்த்திப் பிடிக்கும் வேலையைச் செவ்வனே செய்து வருகின்றன.  இத்தகைய அரசியல் பேரங்களில் பெரும் போட்டியே நிலவுகிறது.விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமாரின்
கனிமொழி  நட்பு ஊரறிந்தது.


             கனிமொழி, தமிழச்சிஆகியோரைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கத் துடிக்கும் உயிர்மை, உயிர் எழுத்து போன்ற பதிப்பகங்களுக்குள் நடைபெறும் போட்டியில் பலரும் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.  இவர்களை அழைத்து அடிக்கடி கூட்டம் நடத்தி விருது வழங்கும் விருத்தாசலம் ‘களம் புதிது’ கரிகாலன், தமிழச்சியை அழைத்து சி.எம். முத்துவின் நாவலை வெளியிடும் தஞ்சை ‘பவளக் கொடி’ வியாகுலன் என்று பெரும் பட்டியலே இருக்கிறது.



          காலச்சுவடு பதிப்பக நூற்களுக்கு உயிர்மையில் மதிப்புரை வெளிவராது; உயிர்மை பதிப்பக நூற்களுக்கு உயிர் எழுத்தில் மதிப்பு வராது என்பதெல்லாம் எழுதப்படாத விதி.  ஆனால் தமிழச்சியின் நூல்கள் என்றால் விதிவிலக்காகி விடுகிறது.  இவர்களிருவரும் தமிழ்க் கவிஞர்களாக இருக்கலாம்.  ஆனால் தமிழின் சிறந்த கவிஞர்களாக இவர்களை மட்டும் முன்னிறுத்துவதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.  சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி குழுமங்கள் தாங்கள் தயாரிக்கும் அல்லது விநியோகிக்கும் படங்கள் டாப் டென்னில் எப்போதும் முதலிடத்தில் வைத்துக் கொள்வதைப் போல சில பதிப்பக நிறுவனங்கள் இவர்களை முன்னிறுத்தியே காரியமாற்றுகின்றன.



          தெஹல்கா, அவுட் லுக், ஹிந்து (பெங்களுரூ பதிப்பு) ஆகியவை தன்னுடைய எழுத்துகளைப் பொருட்படுத்துகிறபோது சென்னைப் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவில்லை என சாரு அங்கலாய்க்கிறார் (அம்ருதா, டிசம்பர் 2010).  இப்பத்திரிக்கைள் கருணாநிதி என்று எழுதினால் கலைஞர் என்று மாற்றுவதாகவும் சாரு நிவேதிதா கிறுக்கு என்று எழுதினால் அப்படியே பிரசுரிப்பதாகவும் வருத்தப்படுகிறார்.  இவ்வாறெல்லாம் குண்டக்க மண்டக்க விமர்சனம் எழுதினால் வேறு என்னதான்  செய்வது?



          லத்தீன் அமெரிக்கா மேஜிக்கல் ரியலிசத்தை உலகிற்கு வழங்கியதைப் போல் தாம் ஆட்டோஃபி­­க் ஷனை (Auto-fiction) உலக இலக்கியத்திற்கு வழங்கியிருப்பதாக சாரு பெருமை பொங்க எழுதுகிறார். (ஆனந்தவிகடன், டிசம்பர்-08, 2010).   முன்பொரு சமயம் மகாபாரதத்தை விட மேஜிக்கல் ரியலிசம் உலகில் இல்லை என்றார்.  இப்போது அதை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் அலெஹோ கார்பெந்தியருக்கு விட்டு விடுகிறார்.  இங்கு சுயசரிதை கூட வடிகட்டி தணிக்கை செய்யப்பட்ட ஆட்டோபிக்­ ஷன்தான்.  கதைகளில் நிறைய ‘நான்’ களை உலவவிட்டால் புதிதாகப் படிப்பவர்களுக்கு எல்லாவற்றையும் படைப்பாளி மீது ஏற்றி வைக்கத் தோன்றும்.  எனவே சாரு போன்றவர்கள் Auto-fiction -ஐ என்ற புது மோஸ்தரைக் கூட கண்டுபிடித்து விடலாம்.



          இறுதியாக எனக்கொரு சந்தேகம்  சாரு.   சென்ற ஆண்டின் ஒரு சர்வே படி பெண்கள் விரும்பிப் படிக்கும் நாவல்கள் வரிசையில் சல்மான ருஷ்டியின் Midnight`s Children , ஜும்ப்பாலஹரியின் Unaccustomed Earth, உம்பர்த்தோ எக்கோவின் ‘The Name of the Rose ஆகிய வரிசையில் சாரு நிவேதிதாவின் ‘Zero Degree’ நாவலும் இடம் பெற்றிருக்கிறதாம்.  தமிழகத்தில் ஒரு காலத்தில் பாலகுமாரன் நாவல்களைத் தான் பெண்கள் மிகவும் விரும்பி படித்தார்களாம்.  அந்த வரிசையில் சாரு இந்திய அளவில் பாலகுமாரனின்  வாரிசாக மாறி விட்டாரா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.  உங்கள் எழுத்து அவ்வளவு நீர்த்துப் போய் விட்டது.  உங்கள் பார்வையில் சொல்வதனால் அதிகம் பேர் படித்தால் அது சிறந்த புத்தகமா? அதிகம் பேர் பார்த்தால் அது சிறந்த சினிமாவா?  இதன் படி பார்த்தால் கல்கியின் நாவல்கள் முதலிடத்தைப் பிடிக்கக் கூடும்.   தமிழில் சிறந்த படமாக ‘எந்திரன்’ தேர்வு செய்யப்படும்.   புத்தகச் சந்தையில் ஆன்மீக, ஜோதிட, சுய முன்னேற்ற, சமையற்கலை நூற்கள் அதிகம் விற்பனையாகின்றனவே!  இவற்றையும் நமது பட்டியலில் சேர்க்க வேண்டும்.  செய்ய முடியுமா சாரு?



          ஹிந்து சென்னைப் பதிப்பு தங்களைப் புறக்கணித்ததற்கு காரணம் அவர்களுக்கு தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எதுவும் தெரியாது என்கிறீர்கள். (ஆனந்தவிகடன், டிசம்பர்-22, 2010).  உங்களுக்குக் கூட கனிமொழி, தமிழச்சி, சுஜாதா, மனுஷ்யபுத்திரன் தாண்டி பிற தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எதுவும் தெரியாமலிருக்கிறதே!  என்ன செய்வது  சாரு!



        



        

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நன்று.

கருத்துரையிடுக