சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன் |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் |
புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும் நீதிமன்றங்களின் போக்கும் என்ற தலைப்பில் அரங்குக்கூட்டம் வணிக அவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன் தொடக்க உரையாற்றினார். புதுச்சேரி
பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் கோ.செ.சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஐ.முகம்மது சலீம், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை தேசிய இணைச் செயலாளர் ஜோசப் விக்டர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. உலகப் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலரும், சட்டிஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காகவும், அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வருபவருமான டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோக வழக்கில் ராய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவாடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
2. பொய்யான ஒரு வழக்கில், விசாரணையின் போது எந்தவொரு சாட்சியும் எதிராக சாட்சியம் அளிக்காத நிலையில் டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருப்பது என்பது நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
3. டாக்டர் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்தி அனைவரும் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
4. சர்வதேச பிரகடனங்களில் மனித உரிமைப் பாதுகாவலர்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக மனித உரிமைப் பாதுகாவலர்களை இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்துப் பாதுகாக்க அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை தொடங்க வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
5. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மனித உரிமைப் பணிகளுக்காக செலவிட்டவரும், ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான திரு. கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது இழப்பு மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பேரிழப்பு என்பதை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், திரு. கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் மறைவுக்கு கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக