ஞாயிறு, ஜனவரி 23, 2011

மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா -மு.சிவகுருநாதன்

மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா  -மு.சிவகுருநாதன் 

          ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை, வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல், ராமேஸ்வரம் மீனவர்களின் 400 விசைப்படகுகளை 4 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்கள் மற்றும் வலைகளைப் பிடுங்கிக் கொண்டு விரட்டியடித்தனர் - என்பதெல்லாம் அண்மையில் வந்த தினசரிச் செய்திகள்.  ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் பாதிக்காத குடும்பங்களே இல்லை.  அதிகபட்சமாக என்ன நடக்கும்?  முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவார்.  அத்துடன் முடிந்து போன 

விஷயத்தை நாம் மறந்து வேறு வேலைக்குப் போயிருப்போம்.            கவிஞர் லீனா மணிமேகலையின் இயக்கத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தியின் வசனத்துடன் மீனவர்கள் மற்றும் அகதிகள் பிரச்சினைகளைப் பேசும் ‘செங்கடல்’ (The Dead Sea ) என்ற திரைப்படம் சென்சார் போர்டால் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   இலங்கை அரசை இப்படம் விமர்சிக்கிறது என்ற காரணத்தைக் காட்டி தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்பட்ட செங்கடல் திரைப்படம் தனுஷ்கோடி அருகிலுள்ள கப்பிப்பாடு கிராமத்தைக் கதைக் களனாகக் கொண்டு தனுஷ்கோடி, ராமேஸ்வரம் வாழ் ஏன் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள், இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.            தமிழில் அரசியல் படங்களுக்கான இடம் வெறுமனே உள்ளது.  அதுவும் சமகால அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கும் படங்கள் வருவதே இல்லை.   அப்படி வந்தாலும் அதில் செய்யப்படுகிற சுய தணிக்கை மிகவும் மோசமானதாக இருக்கும்.  பெரியார் படமெடுக்கக் கிளம்பியவர்கள் சென்சார் போர்டுக்கு முன்னதாக மு. கருணாநிதியின் ஒப்புதலைப் பெற்றதை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.  ஈரானியப் படங்களைப் போல சமகால அரசியலை வெளிப்படுத்தும் படங்களுக்கு செங்கடல் முன்னோடியாக அமையக்கூடும்.            இப்படத்தை லீனா மணிமேகலை இயக்கியுள்ளார்.  தயாரிப்பு - ஜானகி சிவக்குமார்; திரைக்கதை - சி. ஜெரால்ட், ஷோபாசக்தி, லீனா மணிமேகலை; வசனம் - ஷோபாசக்தி; ஒளிப்பதிவு -  எம்.ஜெ. இராதாகிருஷ்ணன்.  நடிகர்கள் :-  லீனா மணிமேகலை, ஷோபா சக்தியுடன் கப்பிப்பாடு மீனவக் குடும்பங்கள் மற்றும் மண்டபம் அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள்.            கடலோரப் பாதுகாப்பு, கடற்கரை மேலாண்மைத் திட்டங்கள், சுனாமி மேம்பாட்டுப் பணிகள் என்ற பல்வேறு காரணங்களால் மீனவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்கள் அனைத்தும் ஒரு புறம் பறிக்கப்பட்ட நிலையில் இந்திய கடற்படை, இலங்கை கடற்படை, தமிழ்நாடு காவல்துறை என பல அதிகாரங்களுக்கிடையில் சிக்கி சீரழியும் மீனவர்களின் வாழ்க்கையை இதுவரை யாரும் இவ்வளவு நேர்த்தியாகவும் உண்மையாகவும் காட்டியதில்லை.          இதைப் போலவே இலங்கை, இந்திய ராணுவங்கள், கப்பற்படைகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்கள்,  தமிழ்நாடு போலீஸ் போன்ற பல தரப்பின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை சொல்லி மாளாது.  வசதியுள்ள இலங்கைத் தமிழர்கள் போருக்குப் பயந்து அய்ரோப்பா, கனடா என்று பயணமாக, ஏழைத் தமிழர்கள் வேறு வழியின்றி கள்ளத் தோணி மூலம் பூர்வீகத் தாயகமான தமிழ்நாட்டை வந்தடைய வேண்டிய அவலம், இது அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையிலும் உயிர் வாழ்க்கைக்கான போராட்டத்தின் ஒரு கண்ணியாகிறது.             தமிழக மீனவர்களும், இலங்கைத் தமிழ் அகதிகளும் தம் உயிர்வாழ்க்கைப் போராட்டத்தில் ஒன்றிணையும் புள்ளியாக தனுஷ்கோடி உள்ளது.  அப்பகுதியில் மையம் கொண்ட கதையானது வேறு ஒருவர் எடுத்திருந்தால் ஒரு காதற்கதையாக சுருங்கிப் போயிருக்க வாய்ப்பு உண்டு.  ஆவணப்பட இயக்குநராக வரும் லீனா மணிமேகலை எடுக்கும் ஆவணப் படக்காட்சிகள், அவர் படம் எடுப்பதைத் தடை செய்யும் காவல்துறையின் செயல்பாடு வழியே அகதிகள், மீனவர்கள் இன்னல்கள் பேசப்படுகின்றன.  இதன் காரணமாக இப்படம் சினிமா என்பதையும் மீறி டாக்குமெண்டரி தன்மையைப் பெற்று விடுகிறது.  முன்பே சொன்னது போல் தமிழ் சினிமாக்களின் வழக்கமான பார்முலாவைக் கையாண்டிருந்தால் மூன்றாம்தர காதல் கதையிடம் சரணடைய வேண்டியிருக்கும்.

 

              ஆனாலும் கதாநாயகன் இல்லாத தமிழ்ப்படம் பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது.இப்படத்தில் பல குரல்கள் பேசப்பட்டாலும் லீனாவே கதாநாயகன் இடத்தைப் பிடித்துக்கொள்கிறார்.ஆவணப்பட இயக்குநராக படத்தில் வரும் லீனா திரையைமுழுதும்ஆக்கிரமிக்கிறார். ஈழப்படுகொலையை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற போராட்டம்,ஆவணப்பட இயக்கம்,போலீஸ் விசாரணை,மீனவர்களிடம் காட்டும் பரிவு என எல்லாவற்றிலும்  லீனாவே ஆக்கிரமித்து தமிழ்ப்பட  கதாநாயக நிலையை அடைந்துவிடுகிறார்.இது இப்படத்தின் குறையாகப்படுகிறது.

            எழுத்தாளர் ஷோபா சக்தியின் இலங்கை வட்டார வழக்கு தமிழ் வசனங்கள் அசலாக ஒலிக்கின்றன. தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற போலியான இலங்கைத் தமிழுக்கு ஆட்படாமல் போனதற்கு லீனாவை ஷோபா சக்தியையும் பாராட்டலாம்.            இடையிடையே வரும் கவிதைகளும் கதை சொல்லலும் நம்மை நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்கின்றன.  இந்த உத்தி படம் முழுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  லீனாவின் வளர்ப்பு பிராணியாக ஆமை கூட கவிதையாக வந்து போகிறது.  “ஒரு மொழி என்றால் ஒரு நாடு; இரு மொழி என்றால் இரு நாடு” என்று சொல்வதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   தமிழை ஒரு மொழி என்று மட்டும் சொல்லிவிட முடியுமா என்ன?  முஸ்லீம்கள், தலித்கள், வெள்ளாளர்கள், மலையகத் தமிழர்கள் போன்றவர்களை தமிழால் ஒன்றிணைக்க முடியவில்லையே!.மொழி மட்டுமல்ல மதம் கூட நாட்டை ஒன்றிணைக்க முடியாது என்பதற்கு நமக்கு பங்களாதேஷ் உதாரணம் ஒன்று போதும்.            இலங்கை அரசை விமர்சிக்கும் படம் என்று சொல்லும் தணிக்கைக் குழு இப்படத்தை சரியாகப் பார்க்கவில்லை என்றே படுகிறது.  இப்படம் யாரைத் தான் விமர்சிக்கவில்லை?  இந்திய, தமிழக, இலங்கை அரசுகள், ராணுவம், போலீஸ், கடற்படை, இந்திய - தமிழக அரசியல் கட்சிகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளி இயக்கங்கள், அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டம், பத்திரிக்கையாளர்கள் போன்ற யாரும்,எதுவும் விட்டுவைக்கப்படாமல் கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உண்டாக்கப்படுகின்றனர்.          பள்ளிக்கூடத்திற்கு அழைக்கும் தொண்டு நிறுவன மற்றும் ஆசிரியர்களை நோக்கி மீனவச் சிறுவர்கள் செய்யும் பகடி மிகவும் ரசிக்கதக்கதாக உள்ளது.   அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் துயரங்களை அவர்கள் கடந்து செல்வதற்கு இந்த மாதிரியான பகடிகள் பேருதவி புரிகின்றன.            இப்படத்தில் ஷோபா சக்தியும் அகதியாக வந்து போயியுள்ளார்.  ஷோபா சக்தி குடும்பத்தாரிடம் நடைபெறும் விசாரணையில் தேசிய கீதம் பாடச் சொல்லி கேட்டு சிறுமி
ஜன கன மன... என எழுந்து நின்று பாடத் தொடங்குவதிலிருந்து உண்மையை அறிந்து கொள்ள போலீஸ் செய்யும் புத்திசாலித்தனத்தை விட அவர்களது குயுக்தி விசாரணை உத்திகளே நம் கண்முன் விரிகின்றன.            ‘செங்கடலில்’ நடிப்பதற்கு நடிகர்களைத் தேடி அலையாமல் மீனவர்களையும் அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களைத் தேடிப் பிடித்து மிகுந்த சிரமத்திற்கிடையில் நடிக்க வைத்துள்ளனர்.  சிற்சில குறைபாடுகள் இருப்பினும் இத்தகைய முயற்சிகளை மக்கள் சினிமா என்று அழைப்பதில் தவறில்லை.            மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொனி படத்தில் உள்ளது.   ஆயுதம் வழங்கினால் மட்டும் மீனவர்கள் உயிரைக் காக்க முடியாது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.என்னதான்
ஆயுதம் வழங்கினாலும் அரசுகளின் ஆயுதங்களுடன் சாமானியர்கள் போராடமுடியாது. நமது போராட்டங்கள் ஆயுதமற்ற வழியில் மட்டுமே இருக்கமுடியும்.


        ஜனநாயகம், கருத்துரிமை, சுதந்திரம் என்றெல்லாம் கூறிக் கொண்டுள்ள ஒரு நாட்டில் அற்பமான காரணங்களைக் காட்டி ‘செங்கடல்’ போன்ற சினிமாவைத் தடை செய்வதன் மூலம் அடித்தட்டு விளிம்பு நிலைக் குரல்களைத் தடுத்து விட முடியாது.            லீனாவின் கவிதைகள் ஆபாசமானவை என்று கூறி இந்து மக்கள் கட்சி, ம.க.இ.க. போன்றவை ஓரணியில் திரண்டதை நாம் மறந்திருக்க முடியாது.  அப்பிரச்சினையில் லீனா என்ற தனிநபரை முன்னிலைப்படுத்தி பலர் கருத்துரிமை ஒடுக்கப்படுவதைக் கண்டும் காணாமல் மவுனம் காத்தனர்.  ‘செங்கடல்’ பிரச்சினையிலும் லீனா என்ற ஒரு தனி நபரை மையப்படுத்தாமல் மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையைப் பேசும் மக்கள் சினிமாவை பொதுவெளிக்கு அனுமதிக்க மறுப்பது கருத்துரிமைக்கு எதிரானது என்பதால் அனைவரும் சென்சார் போர்டின் செயலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.


(11.01.2011 அன்று சென்னையில் ‘செங்கடல்’ Preview  பார்த்த பிறகு எழுதப்பட்டது)

 

1 கருத்து:

sakthi சொன்னது…

/ “ஒரு மொழி என்றால் ஒரு நாடு; இரு மொழி என்றால் இரு நாடு” / அது அவ்வாறல்ல தோழர்.
1.”இரு மொழி என்றால் ஒரு நாடு, ஒரு மொழி என்றால் இரு நாடு” என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற சொல்லாடலேயே செங்கடல் படம் முன்வைத்துள்ளது.
1958 ல் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள் இனவாத அரசால், கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பைத் தொடர்ந்து, அன்றைய பாராளுமன்றத்தில்,
லங்கா சம சமாஜக் கட்சியின் முக்கியத் தலைவரான கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்க்க தரிசனமே இது.
2.செங்கடல் திரைப்படத்தை பார்த்த தமிழ் அறிவு சமூகத்தினரில் பலர் செங்கடல் குறித்து கள்ள மவுனம் சாதிக்கும் அதே வேளையில், தமிழின் மசாலா படங்களைப் பங்கெடுத்துக் கொண்டும் அவை குறித்து விமர்சனங்களை முழு மூச்சாகத் தீட்டிக் கொண்டிருக்கும் போதும், உங்களின் இந்தப் பதிவு
திரைப்படக் குழுவை உற்சாகம் கொள்ள வைத்தது.

ஷோபா சக்தி

கருத்துரையிடுக