ஞாயிறு, ஜனவரி 23, 2011

பிநாயக் சென்:- துரத்தும் அநீதி -மு.சிவகுருநாதன்

பிநாயக் சென்:- துரத்தும் அநீதி     -மு.சிவகுருநாதன் 

          டிசம்பர் 24, 2010 அன்று சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூர் நீதிமன்றம் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பிநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியது.  தேசத் துரோகம், தேசத் துரோக சதி ஆகிய குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 124(A), 120(B) சத்தீஸ்கர் மாநில மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்படி டாக்டர் பிநாயக் சென், மாவோயிஸ்ட் சித்தாந்தியான நாராயண் சன்யால், கொல்கத்தா வர்த்தகர் பியூஷ் குஹா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக நீதி மன்றம் அறிவித்தது.   “பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டுகளும் துணை ராணுவப் படைகளையும் அப்பாவி பழங்குடி மக்களையும் கொன்று குவிக்கிறார்கள்.   இதனால் சமூகத்தில் அச்சமும் பயங்கரவாதமும் பரவுகிறது; ஒழுங்கின்மையும் அமைதியின்மையும் ஏற்படுகிறது.  எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள முடியாது” என்று நீதிமன்றம் சொல்கிறது.            சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் சித்தாந்தியான நாராயண் சன்யாலை அவரது குடும்பத்தார் கேட்டுக் கொண்டதற்கிணங்க மருத்துவ சிகிச்சைக்காக காவலர்கள் முன்னிலையில் 30 தடவைக்கு மேல் சந்திக்கிறார்.  அப்போது சிறையிலிருந்த சன்யாலிடமிருந்து கடிதங்கள், கட்டளைகளை மாவோயிஸ்ட்களிடம் சேர்த்ததாகவும் இம்மூவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கு நெட்வொர்க் ஏற்படுத்தினர் என்பதே சத்தீஸ்கர் போலீசின் வாதம்.  இவ்வழக்கு தொடர்பாக டாக்டர் பிநாயக் சென் கடந்த 2007 மே 14-ல் கைது செய்யப்பட்டு பிணையில் வருவதற்கு 2 ஆண்டுகள் போராட நேரிட்டது.  அப்போது அவரை விடுதலை செய்ய உலகளவில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.            டாக்டர் பிநாயக் சென் மற்றும் நாராயண் சன்யாலுடன் கொல்கத்தாவில் தான் வைத்திருக்கும் தொழிற்சாலைக்கு பீடி இலைகள் வாங்க அடிக்கடி சத்தீஸ்கர் செல்லும் வர்த்தகர் பியூஷ் குஹாவும் இணைக்கப்பட்டு மாவோயிஸ்ட்டுகளுக்காக ஒரு வலையமைப்பை உருவாக்கி தேசத் துரோக குற்றத்தில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு வாதிட்டது.            இதற்காக முறைப்படி அனுமதி பெற்று அதிகாரிகள் முன்பு நடந்த சிறை சந்திப்புகள், போலியாக தயாரிக்கப்பட்ட கடிதங்கள், Indian Social Institute என்ற அமைப்புக்கு  சென்னின் மனைவி இலினா சென் அனுப்பிய மின்னஞ்சலை பாகிஸ்தான் உளவு அமைப்பான அய்.எஸ்.அய். என்றெல்லாம் இந்த வழக்கை புனைந்தது காவல்துறை.   நீதிமன்றம் ஆதாரங்கள், சாட்சியங்களை ஆய்வுக்குட்படுத்தாமல் சமூகத்தில் அச்சம் நிலவுவதால் பெருந்தன்மை காட்ட முடியாது என்று மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதிலேயே குறியாக இருந்திருந்தது.  நீதி மன்றம் வழங்க வேண்டியது நீதியைத் தானே தவிர பெருந்தன்மையை அல்ல.          டாக்டர் பிநாயக் சென் அப்படி என்னென்ன செய்தார்?  வேலூர் கிருத்தவ மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர் பிநாயக் சென் குழந்தை மருத்துவ நிபுணர்.  இவர் 1980களில் ­ஷங்கர் குஹா நியோகி என்ற இயக்கத்துடன் சேர்ந்து பழங்குடிகளின் உடல்நலத்தைப் பாதுகாக்க குறைந்த செலவில் மருத்துவமனைகள், உடல் நலத்திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்தவர்.  இதுதான் இந்திய அரசின் தேசிய கிராமப்புற உடல் நல இயக்கத்திற்கு முன்னோடியாக அமைந்தது.            மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில் (PUCL) தீவிரமாக செயல்பட்ட இவர் சிறைக்கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொடங்கி அவர்களுக்கெதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்து, அவர்களின் உரிமைகளுக்காக போராடியவர்.  இவர் தனது உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கை மூலமாக அரசின் கூலிப்படையான சல்வா ஜுடும் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தினார்.            நக்சல்களுக்கு எதிராக பழங்குடியினர் ‘தன்னெழுச்சியாக உருவான இயக்கம்’ சல்வா ஜுடும் என்றும் இது முக்கிய திருப்புமுனை என்றும் அரசு கதையளந்தது.  ஆனால் சென்னின் உண்மை அறியும் குழு அறிக்கையோ, பழங்குடி மக்களை அவர்களது கிராமத்திலிருந்து விரட்டியடிக்க அரசு உண்டாக்கிய கலக எதிர்ப்புப் படையே சல்வா ஜுடும் என்பது.  இதன் சட்டத்தை மீறிய வன்முறைக்கு அரசே காரணமாக இருக்கிறது.  சல்வா ஜுடும் தன்னெழுச்சியாக உருவான இயக்கம் அல்ல, என்ற உண்மைகளை வெளியுலகிற்கு அளித்தது.            சல்வா ஜுடும் கூலிப்படையை அரசு உருவாக்கியதோடல்லாமல் அவற்றிற்கு ஆயுதங்கள் வழங்கி பழங்குடி மக்களுக்கெதிரான வன்முறையை முன் நின்று அரசு நடத்துவது இதனால் அம்பலப்பட்டு போனது.  அதே சமயம் டாக்டர் சென் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளையும் கண்டிக்கத் தவறவில்லை.  தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் அர்ப்பணித்த ஒரு மனித உரிமைப் போராளி வேறு எப்படி இருக்க முடியும்?            இந்திய சிவில் உரிமைக் கழகத்தின்(PUCL) அகில இந்திய துணைத் தலைவராகவும் சத்தீஸ்கர் மாநிலப் பொதுச் செயலராகவும் செயல்படும் டாக்டர் பிநாயக் சென் அரசு, காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல.  கடந்த 30 ஆண்டுகளாக பலமுறை சிறை சென்ற அனுபவம் அவருக்கு உண்டு.  இந்த ராய்ப்பூர் நீதிமன்றம் அவர் மீது அடக்குமுறையை தொடுத்திருப்பதுதான் சற்று விநோதம்.            சென்னுக்கு எதிரான இந்த நீதிமன்றத் தண்டனையை சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர்.  உலகமெங்கும் உள்ள அறிவு ஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இத்தீர்ப்பை விமர்சித்து, உடன் பிநாயக் சென் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தியுள்ளனர்.            உயர்நீதி மன்ற மேல் முறையீட்டில் சென்னுக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு மிகுதி.  மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்திருப்போர் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நம்பிக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக