ஞாயிறு, ஜனவரி 30, 2011

கலைமாமணி விருதுகளை கூறுகட்டி வழங்கும் தமிழக அரசு -மு.சிவகுருநாதன்

கலைமாமணி விருதுகளை கூறுகட்டி வழங்கும் தமிழக அரசு  -மு.சிவகுருநாதன்            பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தனக்களிக்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதை ஏற்க மறுத்தார்.   என்ன காரணத்திற்காக விருது வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை என்று அவர் சொன்னார்.  28.01.2011 அன்று 2008, 2009 மற்றும் 2010 ஆகிய மூன்றாண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் 74 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.  24.01.2011 அன்று 2007 மற்றும் 2008 ஆண்டிற்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டன.

                      

            விரைவில் தேர்தல் வரப்போகிறதல்லவா?  எனவேதான் பல ஆண்டுகளுக்கான இவ்விருதுகளை கூறு கட்டி அளித்து சாதனை படைக்கிறது தமிழக அரசு.  தேர்வுக் குழுவில் இருக்கும் அனைவரும் தி.மு.க. உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் நபர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் தேர்வு செய்பவர்களும் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாகவும் கலைஞர் டி.வி., சன் டி.வி. ஆகியவற்றில் பணி செய்பவர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் இருந்தால் போதும் என்பதே தகுதியாகிவிட்டது.            காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள அண்மையில்தான் ஜெயந்தி நடராஜன், டி. யசோதா,  டி. ரவிக்குமார் போன்றோர்க்கு அரசு விருதுகளை அள்ளி வழங்கினர்.            மத்தியில் மட்டும் என்ன வாழ்கிறது?   ஜனவரி 24, 2011 -ல் அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ, பத்மவிபூஷ­ண் விருதுப் பட்டியலைப் பார்த்தால் இது புலனாகும்.   இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருது அவ்வை நடராஜனுக்கு வழங்கப்படுகிறது.   இலக்கியத்தை இப்படி கூட கேவலப்படுத்தலாம் போலிருக்கிறது!  தாரளமயமாக்கலுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அனுவாலியாவிற்கு பத்மவிபூ
ஷ­­ண் விருது அளிக்கப்பட்டுள்ளது.            தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றோர் பட்டியலில் எழுத்தாளர் சா. கந்தசாமி, நாஞ்சில் நாடன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.  இந்தப் பட்டியலில் ராணி மைந்தன், ராஜேஷ்குமார் போன்ற துப்பறியும் எழுத்தாளர்களும் இளசை சுந்தரம், பொன். செல்வகணபதி, பேரா.தே.ஞானசேகரன், திண்டுக்கல் ஐ. லியோனி, பொ. சத்தியசீலன், தேச. மங்கையர்க்கரசி போன்ற ‘பேச்சு வியாபாரிகளும்’,  கவிக்கொண்டல் சு. செங்குட்டுவன், கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் போன்ற ‘வாழ்த்துப்பா கவிஞர்களும்’, தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளும் இடம் பெற்றுள்ளனர்.    இந்த பட்டிமன்றப் பேச்சாளர்கள், கருணாநிதிக்கு வாழ்த்துப்பா பாடும் கவிஞர்கள், துப்பறியும் எழுத்தாளர்கள், நடிக்கவே செய்யாமல் கவர்ச்சிப் பதுமைகளாக வந்து போகும் நடிகைகள் போன்றோருக்கு விருது கொடுப்பதில் நமக்கு எந்த வருத்தமும் இல்லை.  இந்தப் பட்டியலுக்குள் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன் போன்றோரின் பெயர்களை உள்ளே நுழைப்பதன் மூலம் இந்த கூத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்க இவர்களிருவரும் பலிகடாவாக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.   நாஞ்சில் நாடன் எழுத்தாளர் என்பது தமிழக அரசுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது.            2010ஆம் ஆண்டிற்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பல்வேறு பிரச்சினைகளில் அரசை வெகுவாக விமர்சித்து வருபவர்.   டிவிட்டரில் ஒரு நண்பர் எழுதியிருப்பதைப் போல,  இந்த அரசை விமர்சனம் செய்ததற்குத் தண்டனையாக கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.  எனவே இவ்விருவரும் இந்த விருதை மறுப்பதன் மூலம் தமிழ் அறிவுலகிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.             விஜய் டி.வி.யை விட்டு விட்டு கலைஞர் டி.வி.க்கு கட்சி மாறியதற்காக திண்டுக்கல் ஐ.லியோனிக்கு இந்த சன்மானம் தரப்படுகிறது.  தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளுக்கு வழங்கக்கூடாது என்று சொல்லவில்லை.  கற்றது தமிழ், அங்காடித் தெரு, மகிழ்ச்சி போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருக்கும் அஞ்சலி போன்ற நடிகைகளைக் கண்டுகொள்ளாமல் ‘கவர்ச்சிப் பதுமைகளை’ மட்டும் சிறப்பிப்பதன் மூலம் வருங்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்கள் கிடைக்கலாம்.            தமிழகத்தில் மு. கருணாநிதிதான் பெரிய இலக்கியவாதி.  மற்றவர்கள் எல்லாரும் அவரது அடிப்பொடிகள் என்ற நிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது.   இந்த நிலை மாறவேண்டுமானால் நாஞ்சில் நாடன் விருதை மறுத்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.   சாரு நிவேதிதா தனது இணையப்பக்கத்தில் இதையே வலியுறுத்தியுள்ளார்.   தமிழ் அறிவுலகத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை தமிழ் அறிவு ஜீவிகள் கண்டிக்க வேண்டும்.

3 கருத்துகள்:

ஈஸ்வரன் சொன்னது…

உங்கள் கருத்தோடு முழுவதும் உடன்படுகிறேன். நாஞ்சில் நாடன் சாஹித்ய அகாடமி விருதையே ஏற்பதா என்று யோசித்தவர். கலைமாமணி விருதை நிச்சயமாக மறுப்பார் என்றே எதிர்பார்க்கிறோம். ஆனால் அவரிடமிருந்து ஏற்போ அல்லது மறுப்போ இதுவரை வந்ததுபோல் தெரியவில்லை.

Mani osai சொன்னது…

நாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை மறுப்பதின் மூலம்,மறுப்புக்கான நண்பர்கள் சொல்லும் காரணங்களை மாற்றிவிட முடியுமா ?

விருதைப் பொற்றால், கொடுத்தவர்களுக்குத் தாளம் போட வேண்டி வருமா ? மறுத்தாலும் உங்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு மதிப்புக்கொடுக்காதாய் அவர்களுக்குத் தோணாதா ?கொடுப்பவர் எவராயினும், நமது அரசிடமிருந்தல்லவா விருது வருகிறது ?

குளத்தோடு கோபித்துக் கொண்டு ......கழுவாமல் போனால் குளத்துக்கா இழப்பு ?

Muthu சொன்னது…

மணி ஓசை,

அடையாள அட்டை வைத்திருப்பீர்கள் போலிருக்கிறது.

சிறுபிள்ளைத்தனமானவை மட்டுமல்ல உங்கள் கேள்விகள், அபத்தமானவை கூட.

இங்கே வேண்டாம் என்று சொல்வது குளத்தில் அல்ல, கூவத்தில் இறங்குவதையே. கூவம் குளமென உமது கண்களில் பட்டால் ... சொல்வதற்கொன்றுமில்லை.

கருத்துரையிடுக