திங்கள், ஜூலை 18, 2011

சமச்சீர் கல்வி :- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு




சமச்சீர் கல்வி :- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு
                                                                                           -மு. சிவகுருநாதன்






        நாம் எதிர்பார்த்ததுபோல   சமச்சீர் கல்வி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இன்று (18.07.2011) வழங்கியுள்ளது. இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு  தனது சிறப்பு மிகுந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதன்மூலம் சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்க நினைத்த ஜெயலலிதாவின் அரசுக்கு பெருத்த அடி கிடைத்துள்ளது.
  
      தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குடிமக்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க உதவி செய்வதாக இருக்கிறது. இந்நிலை அனைத்து வழக்குகளிலும் தொடரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

       1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும்   சமச்சீர் கல்வித் திட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் நடப்புக்கல்வி ஆண்டிலும்  சமச்சீர் கல்வி பாடத்திட்டந்தான்  தொடர வேண்டும்.தரம் என்ற போலியான காரணத்தைக் காட்டி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தம் ரத்தாகிறது. 

      நீதிமன்ற ஆணையை மீறி தமிழகத்தில் அவசரமாக  அச்சாகிக்கொண்டிருக்கும்   பழையப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத்  தடை விதிக்கப்படுகிறது.தமிழக அரசு சமச்சீர்க்கல்வித் திட்டத்தில் குறைகள் இருப்பதாக  கருதினால் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் அதைக் களைய நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு செய்யப்படும் திருத்தம்,சேர்க்கை  மற்றும் நீக்கங்களை துணை நூலாக அச்சிட்டு வழங்கவும் அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


      உச்சநீதிமன்றத்தால்  வழங்கப்பட்ட சலுகையை தவறாக பயன்படுத்திய தமிழக அரசு  மாமிகளும்,கல்வி வியாபாரிகளும் அடங்கிய நிபுணர் குழு என்ற பெயரில் செய்யப்பட்ட 700 பக்க அயோக்கியத்தனங்கள் தற்போது முடிவை எட்டியிருக்கிறது .

    ஜெ.ஜெயலலிதா போன்ற ஒரு நபரிடம் பெருந்தன்மையை எதிர்பார்த்து பலன் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் தன் கடந்த காலத்தில் கற்ற, பெற்ற படிப்பினைகள் எதுவும் இருப்பதாகவும் 
அதன்மூலம் நல்லது நடக்கும் என்றும் இனி நம்பவேண்டியதில்லை.


     இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக   தமிழக அரசு அறிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். உச்சநீதிமன்றம் இந்த முறையாவது சென்ற தடவை நிகழ்த்திய அநீதியைச் செய்யாமல் உருப்படியாக விசாரித்து எதிர்மனுதாரர்களின் கருத்துகளை செவிமேடுக்கவேண்டும்.

          சமச்சீர் கல்வியை அமல் செய்யக் காரணமாக இருந்த உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புகளில்  இருந்து ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கவேண்டும்.

      தவணை முறையில் வழங்க சமச்சீர்கல்வி ஒன்றும் கடைச்சரக்கல்ல. சமூகநீதியை தவணை முறையில்  வழங்க எத்தனிப்பது சமூக அமைதியைக் குலைக்கும் செயலாகவே இருக்கமுடியும்.

     இந்தக் கல்வியாண்டின்   50 நாட்கள்  முடிந்துவிட்ட நிலையிலும் கல்வியில் தொடரும் குளறுபடிகளை சமூகம் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது வேதனையளிக்ககூடியது. தெருவில் இறங்கிப் போராடாமல் இதற்குத்  தீர்வு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை.

     எகிப்து போன்ற நாடுகளில் மக்கள் கிளர்ந்தெழுந்து வீதியில் இறங்கிப் போராடும்போது நமது பெரும்பான்மையான சமூகம்  தனக்கு பாதிப்பு வந்தால் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னசொல்ல?

       இந்தத் தீர்ப்பைப் பாராட்டும் அதே நேரத்தில்    நீதிமன்றங்கள் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும்  சர்வரோக நிவாரணியாக இருக்கமுடியாது என்ற எச்சரிக்கையுணர்வு மிகவும் அவசியமானது. இந்திய    நீதிமன்றங்கள் சமூக நீதியின் பக்கமும் பெரும் எண்ணிக்கையிலான அடித்தட்டு மக்கள் பக்கமும் பலமுறை நின்றதில்லை என்பதே கடந்த காலவரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக