புதன், ஜூலை 06, 2011

தரம் குறைந்தவை சமச்சீர் பாட நூல்கள்: உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்


தரம் குறைந்தவை சமச்சீர் பாட நூல்கள்: உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்




சென்னை, ஜூலை 5: 
 
   சமச்சீர் கல்வி முறையிலான பாடத் திட்டமும், பாடப் புத்தகங்களும் தரம் குறைந்தவைகளாக உள்ளன. எனவே, இந்தக் கல்வியாண்டில் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
 
           தமிழ்நாட்டில் கடந்த 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளுக்கு 2011 - 2012-ம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக சுமார் ரூ.200 கோடி செலவில், 9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் இருந்தன.  இந்நிலையில், சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டு நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்த புதிய அரசு, அதற்காக சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டது.  
 
        தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மனோன்மணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.  இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  
 
         இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. பிற வகுப்புகளைப் பொருத்தவரை, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் மற்றும் பாட நூல்களை நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நிபுணர் குழுவின் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பின் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜூன் 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  
 
          இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்விடம் பதிவாளர் அளித்தார்.  அதன் பின், இந்த விவகாரம் தொடர்பாக வரும் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  
 
 நிபுணர் குழுவின் அறிக்கை விவரம்: 
 
    சமச்சீர் கல்வி பாடத் திட்டம் மாணவர்களின் வயதுக்கு ஏற்றார்போல் தயாரிக்கப்படவில்லை. 2005-ம் ஆண்டின் தேசிய கல்வித் திட்ட பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை. சில பாடங்கள் மாணவர்களுக்கு சுமையைத் தருவதாகவும், வேறு சில பாடங்கள் மாணவர்களின் கற்றல் திறனைவிட தாழ்ந்த நிலையிலும் உள்ளன. மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தப் பாடத் திட்டம் இல்லை.  
 
      இன்று உலகம் முழுவதும் மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களை பயிற்றுவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் இல்லை.  அதேபோல் வாழ்வின் எதார்த்தத்தை மாணவர்களுக்கு உணர்த்தக் கூடியதும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிகமாக வலியுறுத்தப்படுவதுமான பகுப்பாயும் திறனை வளர்க்கக் கூடியதாக இந்தப் பாடத் திட்டம் இல்லை.  
 
         மெட்ரிகுலேஷன் போன்ற கல்வி வாரியங்களின் பாடத் திட்டத்தை மாதிரியாகக் கொண்டு சமச்சீர் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த பாடத் திட்டத்துக்கு மாற போதுமான கால அவகாசம் தரப்பட வேண்டும். 
 
      மாறாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை உடனடியாக மெட்ரிகுலேஷன் தரத்துக்கு மாற்றுவதால், மாணவர்களின் சுமை அதிகரிப்பதோடு, மாணவர்களிடம் குழப்பமும் அதிகமாகும்.  சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களில், ஒரு பாடத்துக்கும் அடுத்த பாடத்துக்கும் தொடர்பு இல்லாத நிலை காணப்படுகிறது. 
 
       மேலும், இந்தப் பாடத்திட்டம் மாணவர்களிடம் மனப்பாடத் திறனை மட்டும் வளர்ப்பதாக உள்ளது.  மொத்தத்தில், சமச்சீர் கல்விப் பாடத் திட்டம் மிகவும் குறுகிய காலத்துக்குள், அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கவும், பாட நூல்களுக்கு வெளியே மாணவர்களின் அறிவை விரிவுபடுத்தும் நோக்கிலும் எதுவும் இல்லை.  
 
       1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு மொழி மற்றும் கணிதப் பாடம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் கல்விப் பாடத்தை வைக்கலாம் என்றும் தேசிய கல்வித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தில் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு நான்கு பாடங்களும், 3 முதல் 5-ம் வகுப்பு வரை ஐந்து பாடங்களும் வைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு கடும் சுமையைத் தரக் கூடியவை.  
 
       பாட நூல்களில் ஏராளமான தகவல் பிழைகள் உள்ளன. இவை மாணவர்களுக்கு புரிதலில் பிரச்னையை ஏற்படுத்தும்.  புரிய வைக்கக் கூடிய உதாரணங்களுடன் ஆசிரியர்கள் பயிற்றுவித்தால் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் ஏராளமான வாக்கியங்கள் பாட நூல்களில் உள்ளன.  
 
      சிந்தனைத் திறன், தீர்வு கண்டறியும் திறன், தகவல் பரிமாற்று திறன், உத்திகள் வகுக்கும் திறன் போன்றவற்றை மாணவர்களிடம் வளர்க்க பாட நூல்களில் எதுவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட பாடத்தின் கருப்பொருளை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனரா என்பதை சோதித்துப் பார்க்க போதுமான பயிற்சிப் பகுதிகள் இல்லை.  
 
        மாணவர்கள் பயிலக் கூடிய பாட நூல்களில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபகரமான பகுதிகள் எதுவும் இருக்கக் கூடாது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாட நூல்களில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபகரமான பல பகுதிகள் உள்ளன.  
 
         சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களை கற்பிப்பதற்கான பயிற்சிகள் எதுவும் ஆசிரியர்களுக்கு இல்லை. பாட நூல்களிலும் ஆசிரியர்களுக்குரிய குறிப்பு பகுதிகள் எதுவும் இல்லை.  சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் அளித்த ஆட்சேபனைகள் குறித்து குழு பரிசீலித்தது. கடந்த கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்ட 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வித் திட்ட பாடங்கள் மிகவும் தரம் குறைந்தவைகளாக உள்ளன என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குழுவிடம் முறையிட்டன. 
 
        பொதுவாக, தரம் குறைந்த பாடத் திட்டத்தையும், பாட நூல்களையும் கொண்ட சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு எதிராகவே பலரும் நிபுணர் குழுவிடம் மனு அளித்தனர்.  ஆகவே, தரமான கல்வியை அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் மற்றும் பாட நூல்களில் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. எனவே, 2011 - 2012-ம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி பாட நூல்களைப் பயன்படுத்த முடியாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
நன்றி:- தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக