ஞாயிறு, ஜூலை 17, 2011

நாகை மாவட்ட கடலோர மக்களின் வாழ்வை அழிக்கும் தனியார் அனல் மின்நிலையங்களும், துறைமுகங்களும்

நாகை மாவட்ட கடலோர மக்களின் வாழ்வை அழிக்கும்
தனியார் அனல் மின்நிலையங்களும், துறைமுகங்களும்


                    உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                                                  மயிலாடுதுறை
                                                                                                                  ஜுலை 16. 2011

       சமய ஒற்றுமை, மீன்வளம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றிக்குப் பெயர்போன மாவட்டம் நாகப்பட்டினம், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள சுமார் 220 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை ஒட்டி 61 கிராமங்கள் மீன்பிடித்தொழிலை நம்பியுள்ளன. 16 நதிகள் கடலில் கலக்கும் கடைமடை விவசாய நிலங்களை நம்பி  ஏராளமான விவசாயிகளும், தலித் மக்களும் வாழ்கின்றனர்.  வேளாங்கன்னி, நாகூர், திருக்கடையூர் முதலான புகழ்மிக்க சமயத்தலங்களில்   சுற்றுலாத்தொழில்களை  நம்பிப் பல சிறு வணிகர்கள்  வாழ்கின்றனர்.

        வரலாற்று முக்கியத்துவமிக்க இம்மாவட்டத்தில் வாழ்கிற மக்கள் மத்தியில்  இன்று  தம் எதிர்காலம் குறித்த மிகப் பொரிய அச்சம் உருவாகியுள்ளது.  ஏற்கனவே கடந்த  15 ஆண்டுகளாகத் திருக்கடையூரில்  செயல்பட்டுக்கொண்டிருக்கும்  பிள்ளை 'பெருமாள்நல்லூர் பவர் லிமிடெட்'-ன் (PPN)  அனல்மின் நிலையம் தவிர மேலும்  ஒன்பது அனல்மின் நிலையங்கள் இங்கு வரப்போகின்றன. ஏற்கனவே  காரைக்காலில்  செயல்பட்டு கொண்டுள்ள 'மார்க்' தனியார் துறைமுகம் தவிர மேலும் மு்ன்று துறைமுகங்களும் அனல்மின்நிலையங்களுக்கான  நிலக்கரியை ஏற்றிவரும்  கப்பல்களிலிருந்து கரியை இறக்கும் பல ஜெட்டிகளும் கட்டப்பட உள்ளன.  இதை ஒட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும்  இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  விவசாய  மற்றும் கடலோர நிலங்களை வாங்கிக்குவிக்கின்றனர்.  பல கிராமங்களிலிருந்து  மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர். விவசாயமும்  மீன்பிடித் தொழிலும்  பெரிய அளவில்  பாதிக்கப்பட்டுள்ளன.

       வர உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை எதிர்த்து இன்று மீனவர்கள்,தலித்கள்,விவசாயிகள், முஸ்லிம்கள் எனப் பல தரப்பினரும் கிராம மக்களும் சுற்றுசூழல் ஆர்வலர்களும் போராடுகிற செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.   இன்னொரு சிங்கூர், நந்திகிராமம்  அல்லது நவிமும்பை எனச் சொல்லத்தக்க அளவு நாகை மாவட்டமும் தரங்கம்பாடியும் மாறி வருகின்றன. 

       தமிழகத்தில் இன்று  நிலவுகிற மின்சாரப் பபற்றாக்குறையைக் காரணம் காட்டி அரசும் கார்ப்பரேட்டுகளும் தமது செயல்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர். மீன்பிடித் தொழிலும், விவசாயமும் அழிந்தாலும்கூட புதிய மின் நிலையங்களில்  வேலை வாய்ப்பளிக்கப்படும் என மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். 

       இந்நிலையில்  இங்குள்ள உண்மை நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் நோக்குடன் மனித  உரிமைகளிலும் மக்கள் பிரச்சனைகளிலும்  அக்கறையுள்ள ஆர்வலர்கள் நிரம்பிய உண்மை அறிவும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) சென்னை.
பேராசிரியர் அரசமுருகுபாண்டியன், டி.பி.எம்.எல். கல்லூரி, பொறையார்.                     
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டு பேரவை, திருத்துறைப்பூண்டி.
சமூக ஆய்வாளர் எழுத்தாளர் கா.இளம்பரிதி, மதுரை. 
பொறியாளர்   மு.ஹாஸ்முகம்மது,  மனித உரிமை அமைப்புகளின்  கூட்டமைப்பு (NCHRO.
சமூக ஆர்வலர் செ. முகம்மது மரைக்காயர்(NCHRO)  நாகை.

    இக்குழுவினர்  சென்ற 12, 13, 14.07.2011 ஆகிய மூன்று நாட்களாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டம், வாணகிரி, தோசைக்குளம், மருதம்பள்ளம்,திருக்கடையூர், வெள்ளக்கோயில், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, எருக்கட்டா ஞ்சோரி. புதுப்பேட்டை. வாஞ்சியூர், நாகூர் கீழப்பிடாகை, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரன்பட்டி முதலான கிராமங்களுக்கும். கடற்கரைகளுக்கும் சென்று பலதரப்பட்டமக்களையும். பஞ்சாயத்தார்களையும். கிராம நாட்டாண்மை களையும் மீனவர்கள், முஸ்லிம்கள், தலித்கள், பெண்கள் எல்லோரையும் சந்தித்துப் பேசினர். அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும்  ஒளி-ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன.  இவர்கள் தவிர அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் சுந்தர்,  அமைப்பாளர் குணசேகரன், தலித் விடுதலைக்கான மாற்று முன்னணியைச் சேர்ந்த யு.ராஜுஆகியோரையும் சந்தித்துப்பேசினர்.   ஸ்நேகா நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் குமாரவேல், தரங்கம்பாடியைச் சேர்ந்த  சமூக ஊழியர் நட்சத்திரராஜ், இயற்கை விஞ்ஞானி விழுந்தமாவடி ராஜசேகரன், புதுப்பள்ளி மருத்துவர் ராமமு்ர்த்தி நாகை ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச்சேர்ந்த  ரா. தனவேந்திரன். கிழக்கு கடற்கரை மக்கள்  பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் வழக்குரைஞர் ஜெ. சங்கர் ஆகியோருடனும்  உரையாடினர்.

      மாவட்ட ஆட்சியராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு.முனுசாமி அவர்களையும் சந்தித்து அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுறைகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினர். மீன்வளத்தையும், விவசாயத்தையும் பாதிக்கக் கூடிய எந்தத்திட்டத்தையும்  அனுமதிப்பது தவறுதான் என அவர் ஒப்புக் கொண்டார்.  நாகை மாவட்டத்தில் வரவுள்ள அனல்மின் நிலையங்கள் தொடர்பான இணையத்தளத்தகவல்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டங்களின் நிகழ்வுக் குறிப்புகள், தகவல் அறியும் சட்டத்தின் மு்லம் திரட்டப்பட்ட தகவல்கள், நாகையிலிருந்து இயங்கும் 'ஸ்நேகா' நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கைகள,  PEL  நிறுவனம் அமைக்க உள்ள அனல்மின் நிலையம் குறித்து தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல்ஆராய்ச்சி  நிறுவனம் (NEERI) வெளியிட்டுள்ள அறிக்கை முதலான முக்கிய ஆவணங்களையும் பரிசீலித்தனர்.

      'செட்டிநாடு பவர் கார்ப்பரேஷன்' பொறுப்பாளர் திரு.கோபால் என்பவரைத்  தொடர்பு கொண்டு மக்கள் எழுப்பிய ஐயங்கள் குறித்த விளக்கங்களைக் கேட்டனர். திருக்கடையூர் PPN நிறுவனத்தின் மேலாளரிடம் பேசி அவர்கள் தரப்புக் கருத்துக்களைக் கேட்க அனுமதி கோரினோம்.  தகவல் அனுப்புகிறோம்  எனச்சொன்ன அவர்கள் கடைசிவரை எம்மை சந்திக்க மறுத்துவிட்டனர். எனினும் 'செட்டிநாடு பவர் கார்ப்பரேஷன்' கைப்பற்றி உள்ள நிலங்களைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பும்  ஒப்பந்தக்காரர் திரு. எம்.ஆர். கண்ணன் விரிவாக எங்களிடம் பேசினார்.

       நாகை, காரைக்கால் மாவட்ட ங்களில் அமைந்துள்ள, அமைய உள்ள அனல் மின்நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்.

     1.   திருக்கடையூரில் 'பிள்ளைபெருமாள் நல்லூர் பவர் லிமிடெட்' - கடந்த 1998-முதல் செயல்பாட்டில் உள்ளது.  இது 350 மெகாவாட் (மெ.வா.) அனல்மின் நிலையம். நாப்தலினை அடிப்படையாகக் கொண்ட இந்நிலையம் தற்போது பங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 75கி.மீ.  கடல் ஊடாகக் குழாய் மு்லம் கொண்டு வரப்படும் திரவ எரிவாயுவைக் கொண்டு இயங்குகிறது. தற்போது மேலும் 1410 மெ.வா. திறன் உள்ள மின் நிலைய விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

    2.    காரைக்காலில் இன்று அமைக்கப்பட்டு இயங்கி வரும் 'மார்க்(MARG) துறைமுகம்' 980 மீட்டர் கடலை விரிவு படுத்தி 12 மீட்டர் ஆழம் உள்ள  ஒவ்வொன்றும்  பத்துக் கப்பல்கள் நிற்கக்கூடிய மூன்று பெர்த்கள் உள்ள துறைமுகம். மேலும் மு்ன்று பெர்த்துகள் விரிவாக்கப்பட உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். யூரியா முதலான வேதியியல் பொருட்கள், டெக்ஸ்டைல்  பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கான  துறைமுகம் எனக் கூறப்பட்டு தற்பொழுது பெரிய அளவில் இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

    3.    திருக்குவளை ஆழ்கடல் துறைமுகம் மற்றும்  அனல்மின் திட்டம்,  டிரைடெம் போர்ட் அன்ட் பவர் கம்பெனி பிரைவேட் நிறுவனம்.கீழ்வேளு்ர் வட்டத்தை சேர்ந்த கீழப்பிடாகை, காரப்பிடாகை,விழுந்தமாவடி கிராமங் களைச் சேர்ந்த 627 ஏக்கர் நிலத்தில் இந்த 1820 மெ.வா. அனல்மின் நிலையத்தை அமைக்க உள்ளது (ரூ.9100 கோடி). இதற்கென இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய 242 ஹெக்டேர் நிலத்தில் ஆழ்கடல் துறைமுகமும் 64.7 ஹெக்டேர் பரப்பில் எரிசாம்பல் குட்டையும் அமைக்கப்பட உள்ளது.

    4.    கீழப்பெரும்பள்ளம், வாணகிரி, மருதம்பள்ளம் ஆகிய கிராமங்களில் இரண்டு 500 மெகாவாட் அனல் மின் நிலையங்களை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 'படேல் இன்ஜினியரிங் லிட்.' (P.E.L) கட்ட உள்ளது. இதற்கென ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  சுடுநீர் மற்றும் கழிவுகள்  சின்னமேடு கிராமத்தை சேர்ந்த சேவனாறு வழியாக கடலுக்குக் கொண்டு செல்லப்படும்.

    5.   தலைச்சங்காடு, கீழப்பெரும்பள்ளம், வாணகிரி கிராமங்களில் 1300 ஏக்கர் விவசாய நிலத்தில் 660 மெ.கா திறனுள்ள இரு அனல் மின் நிலையங்களை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 'நுசிவீடு சீட்ஸ் லிட்.' (NSL)  அமைக்க உள்ளது (ரூ.5490 கோடி), ஆண்டுக்கு 55 இலட்சம் மெகா டன் நிலக்கரி கடல்  மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 17196 கன மீட்டர் கடல் நீர் உறிஞ்சிப் பயன்படுத்தப்படும்.

    6.    ஓக்கூர்,வெங்கிடங்கால், வேலங்குடி,பெரிய கண்ணமங்கலம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் இரண்டு 750 மெ.வா. அனல்மின் நிலையங்களை ஆந்திராவைச் சேர்ந்த 'கே.வி.கே. எனர்ஜி நிறுவனம்' அமைக்க உள்ளது (ரூ.1440 கோடி).  250 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 3480 டன் நிலக்கரிரிக்கப்படும். ஒரு நாளைக்கு 420 டன் எரிசாம்பல் கழிவு உற்பத்தியாகும். இவை 45 குட்டைகளில் சேகரிக்கப்படும்.

    7.    மாணிக்கப்பங்கு, காளியப்பநல்லூர், எடுக்காட்டாஞ்சேரி, சாத்தங்குடி கிராமங்களைச் சேர்ந்த 850 ஏக்கர் விவசாய மற்றும் கடலோர நிலத்தில் 660 மெ.வா. திறனுள்ள இரு அனல்மின் நிலையங்களை 'செட்டிநாடு பவர் கன்ஸ்ட்ரக்ன்' அமைக்க உள்ளது (ரூ.7216 கோடி). ஒரு மணி நேரத்திற்கு 13.218 கன மீட்டர் கடல்நீர் கடலிலிருந்து உறிஞ்சப்படும். கைப்பற்றப்பட்ட நிலங்களைச் சுற்றி கான்கிரிட் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

     இவற்றைத்தவிர நாகையில் அமைய உள்ள 'யு.டி.ஐ. இன்ப்ராஸ்ட்ரக்சர் சிறப்புப் பொருளாதார மண்டலம்' 2500 ஏக்கரில் 660 மெகாவாட் திறனுள்ள மூன்று அனல்மின் நிலையங்களை 2012 முதல் செயல்படுத்த உள்ளது எனவும் இதற்கென ஆண்டுக்கு 6 மில்லியன் டன் நிலக்கரி   இறக்குமதி செய்யக்கூடிய துறைமுகம் ஒன்றை அமைக்க உள்ளது எனவும் அறிகிறோம். 'மக்னமாரா இன்டர்நேனல் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் நாகை மாவட்டத்தில் 2000 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையம் ஒன்றை அமைக்க உள்ளதாகவும் செய்திகள் உள்ளன.

தற்பொழுது திருக்கடையூரில் செயல்பட்டு வரும் P.P.N.மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்:

    1998 முதல் பிள்ளைப்பெருமாள் நல்லூரிலிருந்து செயல்பட்டு வருகிற இம்மின்நிலையத்தில் 330 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாப்தலின் மற்றும் திரவ எரிவாயுவால் இது இயக்கப்படுகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து கடல் ஊடாகச் சுமார் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ள குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரப்படுகிறது. மின் நிலைய இயக்கத்திற்கென கடலில் இருந்து குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. பயன்படுத்தப்பட்டுச் சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுகிறது.

    கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிற இம்மின்நிலையம் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக வெள்ளக்கோயில் குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை முதலான ஊர்களைச் சேர்ந்த மீனவ மக்கள் எங்களிடம் கூறினர். இந்த ஒவ்வொரு ஊரிலும் பொது இடத்தில் கூடியிருந்த மீனவ மக்களின்  பிரதிநிதிகள் கோ. சரவணன்,  த.குமார், ஆ.பாஸ்கர், நா. தவமணி, ந. தங்கப்பொண்ணு, சு. தங்கவேலு, க.சித்தரவேலு, ர. பரசுராமன், சே.சிவகுமார். கு.விஜயேந்திரன். கி.குணசேகரன் ஆகியோர் கூறியவற்றிலிருந்தது...

1.     கடல் உள்ளே அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் சிக்கி வலைகள் கிழிந்து விடுகின்றன. டிராய்லர் படகுகள் குழாய்களைச் சுற்றித்தான் செல்லவேண்டியுள்ளது. நாப்தா கொண்டு வரும் கப்பல்களில் மாட்டியும் வலைகள் கிழிகின்றன. இதுகுறித்துப் புகார் செய்தால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் சமரசத்தில் ஒரு சிலருக்கு மட்டும் சிறிய இழப்பீடு தரப்படுகிறது. ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை கிழிந்தால் ரூ.10000  என்ற அளவிலேயே அதுவும் கூட ஒருசிலருக்கு மட்டும் இத்தகைய இழப்பீடுகள் தரப்பட்டுள்ளன. 'ஸ்நேகா' என்கிற தொண்டுநிறுவனம் செய்துள்ள ஆய்வு ஒன்றின்படி  இந்த 13 ஆண்டுகளில் தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு 5.14 கோடி ரூபாய் இழப்பு இவ்வகையில் ஏற்பட்டுள்ளது.

2.    சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலில் கலக்கப்பட்டு வருவதால் பெரிய அளவில் மீன் வளம் குறைந்துள்ளது. தண்ணீர் கலக்கின்ற இடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மீன்களே கிடையாது. மீன்களின் கருவளத்தையும் இது பாதிக்கிறது.  இறால் மற்றும் காணாங்கெழுத்தி, கட்லா முதலான  மீன்கள் மிகவும் குறைந்துவிட்டன.

3.    கடல் அரிப்பும் அதிகரித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் 100 வீடுகளாவது இடம்பெயர்ந்து செல்லவேண்டியுள்ளது.

4.     மழை அளவும் கூட இப்பகுதியில் குறைந்துள்ளது. 8அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் தற்போது 20அடி ஆழத்திற்கு இறங்கி உள்ளது. நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் அதிகரித்துள்ளது.

  5.     மின் நிலையத்திலிருந்து வெளிவரும் புகை மற்றும் ஆவியினால் சுற்றி வசிக்கும் மக்களுக்குச்  சுவாசம் தொடர்பான வியாதிகள் வருகின்றன.  கர்ப்ப காலத்தில் சுகாதாரமான காற்று கிடைக்காததால் உடல் மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. இப்படி உடற்குறையுடன் பிறந்த மூன்று குழந்தைகள் பற்றிய விபரங்களையும் மக்கள் கூறினர்.

செயல்பட்டு வரும் 'மார்க்'(MARG) துறைமுகம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள்:

    கடந்த மூன்று ஆண்டுகளாகக்  காரைக்காலில் செயல்பட்டு வருகிற மார்க் துறைமுகம் கட்டப்படும்போது நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.  இன்று இந்தோனேசியாவிலிருந்து பெரிய அளவில்  நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பெல்ட் முதலான கருவிகள் பயன்படுத்தப்படாமல் மனித உழைப்பின் மூலமாகவே கரைக்குக் கொண்டு வந்து வெட்ட வெளியில் கொட்டப்படுகின்றது.  காற்று வீசும் திசையில் நிலக்கரி தூசு பறந்து இயற்கை வளங்களையும், உப்பனாற்று மீன் வளத்தையும் பாதித்து உள்ளது. வாஞ்சூர், நாகூர், பட்டணம், நிரவி, பட்டினஞ்சேரிஆகிய ஊர்மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு குறை வளர்ச்சியுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும், மரம், செடி, கொடிகள் அழிவதாகவும். இப்பகுதியில் விளையும் வாழை இலையில் உணவு உண்ண இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாங்கள் சந்தித்த ஜா.சாதிக்,அ.கப்பாபா ஆகியோர் கூறினர். எதிர்ப்புகளைக் காட்டும்போது உடனடியாக அழைத்துப் பேசி சில சலுகைகளைச் செய்வதை நிர்வாகம் தந்திரமாக மேற்கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாகூர் தர்கா நிலக்கரித்தூளால் பாழ்படுவதைப் பற்றி தர்கா நிர்வாகம் கவலை தெரிவித்தபோது அக்கட்டிடத்திற்கு வெள்ளை அடித்துத் தந்து நிர்வாகம் சமாதானம் செய்தது ஒரு எடுத்துக்காட்டு.
தற்போது அமைக்கப்படவுள்ள அனல்மின்நிலையங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள்:

    மேற்குறித்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பி.பி.என். மின் நிலையம் 330 மெகாவாட்  திறனுடையது. நாப்தா மற்றும் திரவு எரிவாயுவால் இயங்குவது. ஆனால் தற்போது அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியால் இயங்கக்கூடியவை. ஒவ்வொன்றும் சுமார் 1000 மெ.வா. வரை திறனுடையவை.

      நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல்மின்நிலையங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மிக விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவதன் சுருக்கம்:

1.    ஓசோன் படலம் துளையாதல், பூமி வெப்பமாதல் ஆகியவற்றிற்குக்  காரணமான வாயுக்கள் பெரிய அளவில் உருவாகும். ஒவ்வொரு 500 மெ.வா. திறனுள்ள அனல் மின்நிலையமும் நாள் ஒன்றுக்கு 105 டன்கள் சல்ஃபர்-டை-ஆக்சைடு வாயுவை உற்பத்தி செய்யும். இது சுவாச மற்றும் இருதய நோயை  மக்களுக்கு ஏற்படுத்தும். மேகங்களில் கலந்து அமில மழையை உருவாக்கி மரம்,செடி, கொடிகளையும் விவசாயத்தையும் அழிக்கும்.

    2.   ஒவ்வொரு 500 மெ.வா. திறனுள்ள அனல்மின் நிலையமும் தினமும் 24 டன் நைட்ரஜன்-டை-ஆக்சைடு வாயுவை உருவாக்கும். சுவாச நோய்கள் தவிர ஆறு, குளங்கள் அமிலத்தன்மை அடைந்து விவசாயத்தை மட்டுமின்றி துணிகள், உலோகங்கள் ஆகியவற்றையும் பாதிக்கும்.

    3.   ஒவ்வொரு 500 மெ.வா. திறனுள்ள அனல்மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு இரண்டு டன் தூசுகளை உருவாக்கும். உலோகத்தன்மையுடைய இத்தூசுகள் நுரையீரலைப் பாதிக்கும். இருதயத் துடிப்பையும் மாற்றி அமைக்கும். காற்றில் கலந்து நீர்நிலைகளை மாசுபடுத்தும். மண்ணின் சத்துக்களை அழிக்கும்.மரம், செடி, கொடிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    4.   இதுதவிர உடலில் மிகப் பெரிய தீங்குகளை விளைவிக்கக்கூடிய பாதரசம் வெளிப்படும். ஓராண்டில் நீரில் ஒரு கிராம் அளவு பாதரசம் கலந்தால் பத்து ஹெக்டேர் பரப்பில் உள்ள மீன்கள் வித்தன்மை அடையும். ஒவ்வொரு 100 மெகா வாட் அனல் மின் நிலையமும் ஆண்டொன்றுக்கு 11 கிராம் பாதரசத்தை வெளித்தள்ளும் என்றால் பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். மிகக் கொடுமையான உடல் பாதிப்புகளுக்கு இது காரணமாகும்.

    5.    ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையமும் நாளொன்றிற்கு 3000 முதல் 3500 டன் வரை எரிசாம்பலை உற்பத்தி செய்யும். இது சுமார் 16கிலோ மீட்டர் சுற்றளவு வரை காற்றின் மு்லம் பரவி விவசாயத்தை அழிக்கும். மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இச்சாம்பலை குழிகளில் நிரப்பித் தண்ணீர் ஊற்றி பரவுவதைத் தடுப்பதெல்லாம் உரிய பயன்களைத் தராது. மழைக்காலங்களில் இந்த எரிசாம்பல் கரைந்து  மக்கள் வசிக்கும் பகுதிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும். இந்த எரிசாம்பலில் கலந்துள்ள ஆர்சனிக், கேட்மியம், குரோமியம் முதலான கன உலோகங்கள் புற்று நோய் உட்பட பலவகையான நோய்களை உருவாக்கக்கூடியவை.

   6.   ஒரு மணி நேரத்திற்கு 80,000 லிட்டர் அளவு தண்ணீர் செலவழியும்.

    7.    வெப்ப மாசு  எரியும் நிலக்கரியின் 30 முதல் 35 சத வெப்பமே மின் உற்பத்திக்குப் பயன்படும். மீதமுள்ள வெப்பம் குளிர்விக்கும் நீரால் கடத்தப்பட்டது போக காற்றில் கலக்கும். சுமார் 20 முதல் 30 டிகிரி  அதிக வெப்பநிலையுள்ள நீர் மீண்டும் கடலில் கலக்கும் போது மீன் வளத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை ஊகித்துக் கொள்ளலாம். நாகை மாவட்டத்தைச் சுற்றி நரிமணம், குற்றாலம், பரங்கிப்பேட்டை முதலான ஊர்களில்  எரிவாயு எடுக்கப்படுகிறது. தொடர்ந்து இவை எரிந்து கொண்டுள்ளதை யாரும் பார்க்கலாம். இத்துடன் இந்த அனல்மின் நிலையங்கள் காற்றில் வெளிப்படுத்தும் வெப்பமும் சேர்வது பெரும் சுற்றுச்சூழல் தீங்கை விளைவிப்பதோடு   தீ விபத்துக்களுக்கும் காரணமாகலாம்.


புதிய அனல்மின் நிலையங்களுக்காக மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள்:

    உருவாகி வரும் ஒன்பது புதிய அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்காகத் தற்போது மிகப்பெரிய அளவில் நிலப்பறிப்பு மேற்கொள்ளப் படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், கடலோர நிலங்களும், அளங்களும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கடலோரத்தில் சுனாமி அழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்காக நடப்பட்ட சவுக்குத்தோப்புகள் நிறைந்த அரசு நிலங்களும் தற்போது வனத்துறையால் இந்தத் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. பல்வேறு பொய்,ஏமாற்றுதல் மூலம் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றில் சில:

    1.    செட்டி நாடு பி.இ.எல்., என்.எஸ். எல். முதலான கார்ப்பரேட்டுகள் இடைத்தரகர்கள் மு்லமாக   பயோ டீசல்  தயாரிப்பதற்காக காட்டாமணக்கு பயிரிடப்போகிறோம் என்று சொல்லி குறைந்த விலையில் நிலங்களை கைப்பற்றி உள்ளன. அனல்மின் நிலையங்கள் அமைப்பததென்றால் மக்கள் தரமாட்டார்கள் என்பதாலும் கூடுதலான விலை கோருவார்கள் என்பதாலும் இவ்வாறு காட்டாமணக்கு விவசாயத்திற்கு எனப் பொய் சொல்லி  ஏக்கர் 60,000 ரூபாயிலிருந்து 90,000 ரு்பாய் வரையில் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது, சென்னையைச் சேர்ந்த மனோகர் என்கிற இடைத்தரகர் ஒருவர் மு்லமாகவே செட்டிநாடு நிறுவனத்திற்கான நிலத்தின் பெரும்பகுதி காட்டாமணக்கு விவசாயம் என சொல்லி வாங்கப்பட்டதை இந்நிறுவன ஒப்பந்தக்காரர் எம்.ஆர். கண்ணன் ஒத்துக்கொண்டார். சில முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இத்தகைய இடைத்தரகு வேலையைக் கார்ப்பரேட்டுகளுக்காகச் செய்து கொடுத்துப் பெரும்பயன் பெற்றுள்ளனர். கிராம அதிகாரிகள், இதர ரெவினியூ அதிகாரிகள், பஞ்சாயத்துத் தலைவர்கள் முதலியோரும் இதற்கு ஒத்துழைத்துள்ளனர்.

    2.   தற்போது இதே நிலங்கள் ஏக்கர் 6 இலட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய்  வரை விற்கின்றன, வெளியூர்களில் வாழ்ந்து கொண்டு இங்கே நிலம் வைத்திருந்த பண்ணைகள். நிலபிரப்புக்கள் முதலானவர்களிடம் இந்த அளவு விலை கொடுத்து இதே நிறுவனங்கள் வாங்கியுள்ளன. மருதம்பள்ளம், வாணகிரி, பெருந்தோட்டம் முதலான இடங்களில் இவ்வாறு நடந்துள்ளன. குறைவான விலைக்கு விற்றுள்ள விவசாயிகள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்போதைய விலையைத் தருவது அல்லது நிலத்தைத்  திருப்பித் தருவது எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

    3.    மருதம்பள்ளம் கிராமத்தின் பண்ணை ஒன்றில் பலப்பல ஆண்டுகளாகக்  குத்தகை விவசாயம் செய்து வந்த தலித்துகளின் நிலங்களும் பண்ணையாரிடமிருந்து  வாங்கப்பட்டுள்ளது. குறைந்த அளவுத் தொகையைக் கொடுத்து (ஏக்கருக்கு 1.7 லட்ச ரூபாய்) குத்தகைதாரர்களிடமிருந்து நிலத்தைக்  கைப்பற்றிய பி.இ.எல். நிறுவனம். அந்த நிலத்தைச் சுற்றி தற்போது வேலி கட்டியுள்ளது. அம்மக்கள் இப்பொழுது பிற ஊர்களுக்குச் சென்று கூலி வேலை செய்கின்றனர், சுற்றிலும் வேலியால்  சூழப்பட்ட குடியிருப்புப் பகுதியிலிருந்து அவர்களை விரட்ட தற்போது கார்ப்பரேட் நிறுவனம் முயற்சிக்கிறது. அடுத்த கிராமத்தில் வீடுகட்டித் தருவதாகச் சொல்லி அவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறது.

    4.    கீழ் வாணகிரியில் உள்ள தோசைகுளம் கிராமத்தில் தலித்துகள் வசிக்கின்றனர், அரசின் பட்டியல் சாதியினர் மேம்பாட்டு நிதி நிறுவன (N.S.F.D.C.) உதவியுடன் னு DAPSI  அமைப்பு தலித் மக்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ள வழிவகுத்து வருவதை அறிவோம். அந்த வகையில் 119 ஏக்கர் நிலம் இந்தக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, தற்போது DAPSI அமைப்பைச் சேர்ந்தவர்களின் உதவியோடு பி.இ.எல். நிறுவனம் இந்த நிலங்களைக் கையகப்படுத்தி உள்ளது. தலித்துகளுக்கு இவ்வாறு வழங்கப்படும் நிலத்தை வேறு யாரும் வாங்க முடியாது என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கிய நிலத்திற்கு உரிய விலையும் பயனாளிகளுக்குத் தரப்படவில்லை.அவர்கள் இதுவரை கட்டி வந்த பணம் வட்டிக்குக் கழிக்கப்பட்டு விட்டதெனச் சொல்லி வெறும் ரூ.10.000 அல்லது ரூ.20.000 ரூபாய் கொடுத்து DAPSI-ன் மூலம் இந்நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தலித் மக்கள், தங்கள் நிலங்களில் உளுந்து விதைத்தபோது முளைத்து வந்த செடிகளை பி.இ.எல். நிறுவனம் புல்டோசர் வைத்து அழித்துள்ளது. தமது நிலங்களைத் திருப்பித் தர வேண்டும் என இம்மக்கள் இன்று ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

    5.    கீழப்பிடாகை, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, காரப்பிடாகை கிராமங்களை ஒட்டியுள்ள மணற்திட்டு பூமி செழிப்பு மிகுந்த பகுதி. முந்திரி, மா, தென்னை முதலான பலவகை மரங்கள் செழித்து வளரும் வனப்பகுதி இது. இதை ஒட்டியுள்ள கடற்கரையும், உப்பனாறும். வனமும் "கை முதற்படா கவின் பெரு அழகு்" எனத் தமிழிலக்கியங்கள் சொல்லும் இயற்கை அழகுமிக்க வனப்பகுதி. மயில், கவுதாரி முலான பல்வேறு பறவைகள், முயல், நரி முதலான மிருகங்கள் ஏராளமாக  வசிப்பதை நேரில் பார்த்தோம்.  அழிந்து வரும் இனங்களில் ஒன்றான கடல்ஆமைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பகுதியாகவும் இது உள்ளது.  இன்று அங்கு அனல்மின் நிலையம் ஒன்றையும் நிலக்கரி இறக்குமதி செய்யத் துறைமுகம் ஒன்றையும்  'ட்ரைடென்ட்' என்கிற கார்ப்பரேட் நிறுவனம் அமைக்க உள்ளது. கடற்கரை ஓரமாக வளர்க்கப்பட்ட சவுக்குக்காடுகள் அடர்ந்த நிலத்தை வனத்துறை இந்நிறுவனத்திற்கு வாரி வழங்கியுள்ளது. ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தையும் 99 ஆண்டு குத்தகையில் அந்நிறுவனத்திற்கு அளிப்பதற்கு ஒப்புதல் கொடுக்கச் சொல்லி கிராம மக்களை ஆர்.டி.ஓ. முதலான ரெவின்யூ அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். கிராம மக்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். தங்கள் கிராம நிலத்தைத் தரமுடியாது எனத் தீர்மானங்களை இயற்றி அனுப்பியும் உள்ளனர். தற்போது நிலம் கையகப்படுத்தும் முயற்சி நிறுத்தப்பட்டாலும் கடலுக்குள் துளையிடும் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளதை நாங்கள் பார்த்தோம்.

    6.    காரப்பிடாகையை ஒட்டிய அளத்தில் உள்ளக மீனவர்கள் (Inland Fishermen) மீன் பிடித்து வந்தனர். வெளிநாட்டுப் பறவைகள் எல்லாம் வந்து குடியிருக்கும் சரணாலயமாகவும் விளங்கிய அப்பகுதி இப்போது அழிக்கப்படுகிறது. துறைமுகத்திற்கென கடலைத் தோண்டியள்ளும் மணலைப் போட்டு அந்த அளம் தூர்க்கப்படுகிறது.  உள்ளக மீன்பிடிப்பை நம்பி வாழும் 2500 குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இதன் மூலம் இழந்துள்ளன.

தடுப்புப் சுவரெழுப்பும் செட்டிநாடு நிறுவனம்:

      காட்டாமணக்கு விவசாயம் என்றெல்லாம் பொய் சொல்லி இடைத்தரர்கள் மூலம்  ஏராளமான நிலத்தைக் கைப்பற்றியுள்ள 'செட்டிநாடு நிறுவனம்' தான் கைப்பற்றிய நிலங்களைச் சுற்றி கான்கீரிட் சுவர்களைக் கட்டுகிறது. இது மீனவ மக்களின் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் பட்சத்தில் மக்கள் இனி மேற்கு நோக்கி ஓடித் தப்பிக்க இயலாது.சுவர்கள் கட்டுவதன் மு்லம் ஊர்மக்களின் பொது நிலங்களான சுடுகாடு, குளங்கள் முதலியவையும் செட்டிநாடு நிறுவனத்தால் வளைத்துப் போடப்படுகின்றன. எருக்காட்டாஞ்சேரி  கிராமத்தை ஒட்டி குளம், சுடுகாடு முதலியன அவ்வாறு வளைக்கப்பட்டு உள்ளதையும். காத்தான்சாவடி அருகில் ஒருகோயில் வளைக்கப்பட்டுள்ளதையும் கண்டோம். சுடுகாடு போன்றவற்றை தாம் வளைத்துப் போடவில்லை என ஒப்பந்தக்காரர் எம்.ஆர்.கண்ணனும், செட்டிநாடு நிறுவன மேலாளர் கோபாலும் மறுத்தனர். வளைக்கப்பட்ட குளங்கள் பட்டா குளங்கள் எனவும் அந்தக் கோயில் தன்னுடைய சொந்தச்சொத்து எனவும் கண்ணன் கூறினார். எனினும் கிராம மக்கள் இதனை மறுத்தனர். புறம்போக்கு நிலங்களைக் கூட வளைத்துப் போடுவதாகக் கூறினர்.  சுற்றுச்சுவர் கட்டப்படுவதால் நீர்வரத்துத் தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் வற்றுதல், விவசாயம் பாதிக்கப்படுதல் ஆகியன ஏற்படுவதாகவும் கூறினர்.

 எல்லாவற்றுக்கும் மேலாக இச்சுவர்கள் வேறு இரு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. அவை: 

   1.   பிடித்த மீன்களை மீனவப்பெண்கள் கூடையில் சுமந்து அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று விற்று வாழ்ந்து வருகின்றனர்.   செட்டிநாடு நிறுவனம் கட்டியுள்ள சுவர் இந்த மீன் விற்பனைத் தொழிலை அழிக்கிறது.
    2.    கழிப்பிட வசதி இல்லாத மக்கள். குறிப்பாகப் பெண்கள்  ஒதுங்குவதற்கு இருந்த  வாய்ப்புகள்  அழிக்கப்படுகிறது.  கண்ணீர் மல்கப் பெண்கள் தங்கள் இயலாமையை எங்களிடம் விளக்கினர். 

கார்ப்பரேட்களின் எடுபிடிகளாகச்  செயல்படும் காவல்துறை:

     ரெவின்யூ துறை பல்வேறு பிரச்சனைகளிலும் கார்ப்பரேட்டுகளுக்கு இடைத்தரகர்களாகப்  பயன்படுகிறது என்றால்  காவல்துறை எதிர்ப்புகளை மிரட்டி ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 'மார்க் துறைமுகம்' அதை ஒட்டி வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்கு எதிராக அவர்கள் கோரிக்கை வைத்த போது, உளவுத்துறை வந்து அவர்களை மிரட்டி உள்ளதை நாகூரில் வாழ்க்கிற முஸ்லிம் மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். முஸ்லிம்களை உளவுத்துறைவைத்து மிரட்டுவதன் பொருளை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.

     அனல்மின் நிலையத்திற்கு எதிராக மக்கள்  போராடும் சூழல்ஏற்படும் போதெல்லாம் பெரிய அளவில் போலிஸ் படை குவிக்கப்பட்டு, தரங்கம்பாடி முதலான இடங்களில் அணிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.  பேராடும் மக்களை மிரட்டவே இது செய்யப்படுகிறது.   எருக்கட்டாஞ்சேரியை ஒட்டி சுவற்றைக் கட்டியதால் ஆத்திரமுற்ற சில இளைர்கள்  சுவற்றை  உதைத்து ஓரிடத்தில் சிறிய உடைப்பை ஏற்படுத்தியுள்ளனர். சீர்காழிகாவல் நிலைய துணைக்கண்காணிப்பாளர்  சாமிநாதன் இக்கிராமத்தைச் சேர்ந்த  14 இளைர்களைக் கைது செய்து கொண்டு சென்று, ஆடைகளை அவிழ்த்து,  அடித்து, கடுமையாக சித்ரவதை செய்துள்ளார். விசாரிக்கப்போன நாட்டாண்மை செல்வம் என்பவரையும் அடித்துள்ளார்.  இந்த 14 பேர்கள் மீதும்  இந்தியத் தண்டனைச்சட்டப் பிரிவுகள் 147, 284(பி), 341, 506(1) மற்றும் பொதுச் சொத்து சேதம் விளைவிப்பு (PPD Act) தொடர்பான சட்டப்பிரிவு 3(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு (குற்ற எண்:154/2011)  சிறையிலடைக்கப்பட்டனர். அவர்கள்   ரூ. 50.000   பிணைத்தொகை கட்டி  வெளியில் வந்துள்ளனர்.

    ஆதிக்கசாதி ஒன்றைச் சேர்ந்த  துணைக்கண்காணிப்பாளர் சாமிநாதன் கார்பரேட் எடுபிடியாக மாறியது மட்டுமின்றி, சாதி வெறியராகவும் இருந்துள்ளார். கைது செய்யப்பட்ட 14 பேர்களில்  தனது சாதியைச் சேர்ந்த ஒருவரை மட்டும் விட்டுவிட்டு,  பிறரை நிர்வாணப்படுத்தி அடித்துள்ளார். இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் அனைவரும் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வு என்னும் கண்துடைப்பு:

     எந்தவொரு திட்டமும் செயல்படுத்தபடுவதற்கு  முன்னால்  மக்களைக் கூட்டி அதன் அத்தனை அம்சங்களையும்   வெளிப்படையாக மக்கள் முன் வைத்துப்பேசி அவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் கேட்புரை  என அழைக்கப்படும் இந்நிகழ்வை மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்னின்று செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்குத் தலைமை ஏற்க வேண்டும். இன்று உருவாக்கப்பட உள்ள இந்த அனல்மின் நிலையங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட இத்தகைய கேட்புரைகளில் பாதிப்பிற்கு உள்ளாகிற கிராம மக்கள் இந்தத் திட்டங்களைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.  சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஆதரித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாகச் சென்ற மே 21,2010அன்று:

    இது தொடர்பாகத் தற்பொழுது இந்தத் திட்டத்தில் ஒப்பந்தக்காரராகச் செயல்படும் திரு.எம்.ஆர். கண்ணன் எங்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தக் கலந்தாய்வின் போது திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இவர் முன்நிற்கிறார். இங்கே நடத்துகிற கலந்தாய்வு எல்லாம் வெறும் கண்துடைப்பு. 99 சதவீதத்தினர் திட்டம் வேண்டாம் எனச் சொல்கிறhர்கள். ஒருவர் தான் திட்டத்தை ஆதரிக்கிறார். சுற்றுச்சூழல் மற்றும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக மக்கள் பல்வேறு ஐயங்களை இந்தக் கலந்தாய்வு களில்  முன்வைக்கிறார்கள். நிறுவனத்தின் சார்பாகத் திருப்திகரமான பதில்கள் ஏதுமில்லை.  இருந்த போதிலும் அடுத்த சிலவாரம் அல்லது மாதங்களில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து (MOEF) ஒப்புதல் வந்து விடுகிறது. அரசுத் தரப்பிலிருந்து எல்லாவிதமான ஒப்புதல்களையும் பெற்று விடுகின்றனர். இந்தக் கலந்தாய்வு எல்லாம் வெறும் கண்துடைப்பு.  இவர்களை எதிர்த்து எந்தப்  பயனும் இல்லை எனத் தான் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கு விளக்கம் அளித்தார். 

    அவர் கூறுவது முற்றிலும் உண்மையே.  செட்டிநாடு நிறுவனம் சார்பாக எம்மிடம் பேசிய கோபால், தற்போது அனல்மின் நிலையத்திற்கும்  நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக அமைக்க உள்ள ஜெட்டிக்கும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாகக் கூறினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்தும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்றார்.

     வரவுள்ள திட்டங்கள் தொடர்பாக மக்கள் அளித்த எதிர்ப்புகளுக்குப் பதிலாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம் பெறப்பட்டு  இவை முறைப்படி  ஒப்புதல்கள் பெற்றே நடை பெறுவதாக  கண்ணனும் குறிப்பிட்டார்.  சுற்றுச் சூழலுக்குச் பெரிய ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய இத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளிப்பது வியப்பாக உள்ளது. அரசின் பல்வேறு துறைகளும் மக்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளது நாகையில் மிகவும் தெரிவாகத் தெரிகிறது. கலந்தாய்வுக்கூட்டங்களுக்கு மக்களைச்  செல்லவிடாமல்  தடுப்பது. அடியாட்களை அழைத்து வந்துமிரட்டுவது முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும். மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  'செட்டிநாடு நிறுவனம்' தனது கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து வந்து மிரட்டியதாகக் கலந்தாய்வுக் கூட்டத்தின் போது 'ஸ்நேகா' அமைப்பின் தலைவர் திருமதி. ஜேசுரத்தினம் கூறியுள்ளது மினிட்ஸில்  பதிவாகி உள்ளது,  போலிசைக் கொண்டு கலந்தாய்வுக்  கூட்டத்தில் தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.  எதிர்ப்பு அதிகமாக இருந்ததால்  ஒரு கலந்தாய்வுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் மக்கள் கூறினர்.

    மக்களில் ஒருசிலரைப் பிரித்தெடுத்து அவர்களைப் பொதுக்கருத்துக்கு எதிராகவும். திட்டங்களுக்கு ஆதரவாகவும் நிறுத்துகிற செயலையும் கார்ப்பரேட்டுகள் செய்கின்றன. வாணகிரியில் இப்படி ஊர்மக்களையே ஒருவருக்கொருவர் பகையான இரு குழுக்களாக மாற்றி அமைப்பதில் கார்ப்பரேட் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 

வேலைவாய்ப்பு முதலான பொய் வாக்குறுதிகள்:

    வாணகிரியில் திட்டத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிற திருவாளர்கள் ரவி, மாணிக்கவேலு, வேலுக்கண்ணு முதலானோர் எம்மிடம்  வேலை கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.  செட்டிநாடு நிறுவனம்  சார்பாகப் பேசிய கோபாலும் அப்படியான திட்டங்கள் உண்டு எனவும் கார்ப்பரேட் சமு்கப் பொறுப்பு் அடிப்படையில்  30கோடி ரு்பாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை செய்யப்போவதாகவும் கூறினார்.  எத்தகைய வேலைவாய்ப்புகள் என்பதற்கு அவரால் தெளிவாகப் பதிலளிக்க முடியவில்லை.  ஏற்கனவே இங்கு செயல்பட்டு வருகிற PPN நிறுவனம் அப்படியான வேலை வாய்ப்புகள் எதையும் உள்ளு்ர் மக்களுக்கு வழங்கிவிடவில்லை என்பதை நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் குறிப்பிட்டனர். ஊர்மக்கள் எதிர்ப்புகளைக் காட்டும் போது அவர்களைச் சமாதானப்படுத்துவற்காக மூட்டை தூக்குவது, கூட்டுவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது முதலான கீழ்நிலைப் பணிகள் மட்டுமே PPN மற்றும் 'மார்க்' துறைமுக நிர்வாகங்களால் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் எதுவும் தமது திட்ட வரைவுகள், வேலைவாய்ப்புகள் முதலியவற்றை வெளிப்படையாக அறிவிப்பதோ, எழுத்து மு்லம் மக்களிடம் ஒப்பந்தங்கள் செய்வதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.எமது பார்வைகள்:

    1.    நாகை,காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த பலதரப்பு மக்களையும் சந்தித்துப் பேசினோம். மிகப்பெரிய அளவில் தமது எதிர்காலம் குறித்த அச்சமும் பீதியும் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. தமது எதிர்காலம் குறித்த கவலையை அம்மக்கள் கண்ணீர் மல்க எம்மிடம் தெரிவித்தனர்.

    2.   கீழப்பெரும்பள்ளம், மருதம்பள்ளம் முதலான கடைமடைப்பகுதிகளில் நன்கு விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிகள் திட்டமிட்டு தரிசுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மருதம்பள்ளம், தோசைகுளம் முதலான பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அடுத்த ஊர்களுக்குக் கூலிவேலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    3.    செயல்பட்டு வருகிற 'மார்க் நிறுவனம்'. PPN மின் நிலையம் ஆகியவற்றின் தீய விளைவுகளால் ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளம் குறைந்துள்ளது, பெரிய அளவில் மீன்பிடி வலைகள் கிழிவது முதலான வற்றhல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றி வாழும் மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    4.    எருக்கட்டாஞ்சேரியில் துணைக்காணிப்பாளர் சாமிநாதன் தலைமையில்  தலித் மக்கள் மீது போலிஸ் நடத்திய கடும் தாக்குதலும்  போடப்பட்டுள்ள பொய் வழக்குகளும்  அவ்வூர் மக்கள் மத்தியில் மட்டுமின்றி, இப்பகுதி முழுவதிலுமே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    5.    'செட்டிநாடு நிறுவனம்' தரங்கம்பாடியை ஒட்டிய கிராமங்களில் எழுப்பி வரும் காம்பவுண்ட் சுவர்கள் மீனவர்கள். விவசாயிகள், தலித்துகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  சுவர்கட்டி முடிக்கப்படும் போது மக்களின் இயக்கம். மீன் விற்பனை முதலியன வெகுவாகப் பாதிக்கப்படும். விவசாயம் அழியும். ஏற்கனவே இந்தப் பாதிப்புகள் தொடங்கிவிட்டதை நாங்கள் பார்த்தோம். சுனாமி முதலான பேரிடர்கள் உருவாகும்போது கடலோரமக்கள் உயிரோடு சமாதியாவது உறுதி.

    6.    கீழப்பிடாகை, விழுந்தமாவடி, காரப்பிடாகை முதலான பகுதிகளை ஒட்டிய இயற்கை வளமிக்க புவியியல் சூழல்  அழியக்கூடிய ஆபத்து மிகப் பெரிய சுற்றுசூழல் அழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

    7.    மாவட்ட ரெவின்யூ நிர்வாகம்,காவல்துறை,வனத்துறை, மத்திய அரசு சுற்றுசூழல் துறை முதலியன கார்ப்பரேட்டுகளின் ஏஜென்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன.  PEL  நிறுவனத்தின்  கழிவு நீரை குழாய் மூலம் கொண்டு சென்று கடலில் கலக்க அனுமதி அளிக்கும் முகமாக,  தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) அளித்துள்ள அறிக்கையில்  இதனால் பாதிக்கக்கூடிய சிதம்பரம்பாக்கம்  என்கிற கிராமமே மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் இல்லையெனக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.  அரசு வெளியிட்டுள்ள  டோபோ் வரைபடத்தில் இக்கிராமம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,  கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக அரசு நிறுவனங்கள்  எந்த அளவிற்கு மக்களுக்கு எதிராகச் செயல்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    8.    கடல் அரிப்பு பெரிய அளவில் உள்ளது. அரசு தரப்பில் இதைத் தடுப்பதற்கான முயற்சிகள் ஏதுமில்லை. வாணகிரியை ஒட்டியுள்ள பூம்புகார் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் ஏற்கனவே இருந்த ஒரு கோயிலே இன்று காணாமல் போய் உள்ளது.  பெரிய அளவில் கடற்கரையோர  மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர். 

    9.    நிலபறிப்பில் கார்ப்பரேட்டுகள் எல்லாவிதமான பொய்களையும், ஏமாற்றுதல்களையும், மிரட்டுதல்களையும், தகிடுதத்தங்களையும் அரசு உதவியுடன் நிறைவேற்றியுள்ளனர். பல விதிமீறல்களும் நடந்துள்ளன. புறம்போக்குகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு நிலங்கள் வளைக்கப்பட்டுள்ளன.   இழப்பீடுகள் தொடர்பான தற்போது உலக அளவில் உருவாகி வருகிற நிலத்தை இழப்பவர்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குத்தகைதாரர்கள் மற்றும் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த பலர் முழுமையாக இழப்பீடு ஏதுமின்றி ஏமாற்றப்பட்டுள்ளனர்.

    10.    இந்நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை இப்பகுதியில் இயங்கும் ஊடகங்கள் உரிய முறையில் வெளிப்படுத்துவதில்லை எனவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதராகவே இவர்கள் செயல்படுகின்றனர் எனவும் மக்கள் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது.

    11.    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் சில முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இடைத்தரகு வேலை செய்வது  மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.  தொடர்புடைய அரசியல் கட்சிகளின் பெயர்களை நாங்கள் குறிப்பிட விரும்பவில்லை. இக்கட்சித் தலைமைகள் இவர்கள் மீது  நடவடிக்கை எடுப்பது அவசியம்.

பரிந்துரைகள்:

   1.    அறிவிக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுகத்  திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  இத்திட்டங்கள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும்.

    2.    இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பறிப்பு. அவற்றால் ஏற்பட்டுள்ள மக்கள் பாதிப்பு, வரப்போகும் திட்டங்களால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மீன்வளப்பாதிப்பு ஆகியவை குறித்து ஆராய நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும். நிலப்பறிப்பில் விதிகளை மீறி கார்ப்பரேட்டுகளுக்கு ஒத்துழைத்த அதிகாரிகள், ஊராட்சித்தலைவர்கள் ஆகியோர் மீது வழக்குத் தொடர வேண்டும். அதிகாரிகள் மீது துறை சார் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சிதம்பரம்பாக்கம் என்கிற கிராமமே இல்லை எனச் சொன்ன' நீரி'(NEERI)  நிறுவனத்தின் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    3.    செட்டிநாடு நிறுவனத்தின் சுவர் கட்டும் வேலைகளை உடனடியாக நிறுத்தி,கட்டப்பட்டுள்ள சுவர்களை இடிக்க வேண்டும்.

    4.    ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டுள்ள PPN , 'மார்க் துறைமுகம்' ஆகியவை ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழலியர்கள் அடங்கிய குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும். அதுவரை மார்க் துறைமுகம் மற்றும் PPN நிறுவன விரிவாக்கப்பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.  மார்க் துறைமுகத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்து பாதுகாப்பு இல்லாமல் கொட்டி வைத்திருப்பது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நிலக்கரியை இவ்வாறு கொட்டி வைத்து பாதிப்புகளை ஏற்படுத்தியதற்காக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.    கீழப்பிடாகை, விழுந்தமாவடி முதலான கிராமங்களைச்  சுற்றியுள்ள சுற்றுசூழல் இயற்கை வள அமைப்பைச் சீர்குலைக்கும் திருக்குவளை அனல்மின் மற்றும் துறைமுகத்திட்டம் கைவிடப்பட்டதாக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

6.    சாதி வெறியுடன் தலித் மக்களைத் தாக்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்கு தொடரவேண்டும். எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்த 14பேர்கள் மீதும்  போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப்  பெறவேண்டும். அவ்வூர் மக்களுக்கும் ஊர்த் தலைவர் செல்வத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

7.    விவசாயத்திற்கு எனப் பொய்கூறி அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் மற்றும் மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள் நிபந்தனையின்றி, அவற்றின் முந்தைய பயன்பாட்டாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.தொலை நோக்கில்:

    தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதும் தொடர்ந்து மின்தேவை அதிகரித்து வருவதும் எல்லோருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு நிலையே. இதற்கு உடனடிப்பரிகாரம் அவசியம் என்பதும் உண்மையே. நம்முடைய தற்போதைய மின்தேவை சுமார் 11 ஆயிரம் மெகாவாட் எனக்கூறப்படுகிறது. ஆனால் இன்று தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள மின் நிலையங்களின் உற்பத்திதிறன் 15,800 மெகா வாட். இந்த மின் நிலையங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பராமரிப்புப் பணிகளை ஒழுங்காகச் செய்தல், மின் சிக்கனம், விநியோகம் முதலியவற்றின் திறன் சார்ந்த மேலாண்மை முறைகளைக் கையாளுதல் ஆகியவற்றின் மு்லம் உடனடி மின்பற்றாக்குறையைக் களைய முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கும். கார்ப்பரேட்டுகளுக்கும் நமது தற்போதைய மின் பற்றாக்குறையைக் கணக்கில் கொள்ளாமல் ஏராளமாக மின்சாரத்தை அளிக்க ஒப்புதல் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்.

    அதிகரித்து வரும் மின் தேவையைச் சரிகட்ட அரசு அணு உலை தவிர்த்த மாற்று வழிமுறைகளை முயற்சிக்க வேண்டும், இதற்கான ஆய்வுகளுக்கு இன்று அரசு ஒதுக்கும் நிதி மிகக் குறைவு.  இந்நிலை மாற்றி அமைக்கப்படவேண்டும்.

    மக்களுக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அனல் மின் நிலைய விரிவாக்கங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மிகவும் அவசியமான தருணங்களில் மக்கள் அதிகம் வசிக்காத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பகுதிகளில் மட்டுமே அவை அனுமதிக்கப்பட வேண்டும்.

      நிலம் கையகப்படுத்துதல், இடப்பெயர்வு, மறுவாழ்வு் தொடர்பான தேசியக் கொள்கை வகுத்தல், சட்டத் திருத்தம் செய்தல் என்கிற அரசின் அறிவிப்புகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது. நாடெங்கிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள நிலையில் இதற்கு உடனடி முன்னுரிமை அளிக்க வேண்டும். நிலத்தைக் கொடுக்க மறுக்கும் உரிமை ஏற்கப்படுதல்  வேண்டும். இழப்பீடு அளித்தல் தொடர்பாகப் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுதலும், நிலத்தைச் சார்ந்திருந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கும் நிலையும் மேற்கொள்ளப்படவேண்டும். ஒரு திட்டம் நடைமுறைப்படுத்திய பின்னர் நிலத்தின் விலை அதிகரிக்கும்போது அதன் பயன் தொடர்ந்து நிலத்தை இழந்தவர்களுக்குக் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.


தொடர்பு :-     அ. மார்க்ஸ், 
                          315 முதல் குறுக்குத்தெரு, 
                          சாஸ்திரி நகர்,
                          அடையாறு, 
                          சென்னை 600 020.
                          செல் :- 94441 20582

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக