வெள்ளி, ஜூலை 01, 2011

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமானவை : அறிவியல் இயக்கம் ஆய்வுத் தகவல்

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமானவை : அறிவியல் இயக்கம் ஆய்வுத் தகவல்

 
 
 
 சென்னை : 
 
       சமச்சீர் கல்வி பாடநூல்கள், பழைய பாடப் புத்தகங்களை விட தரமானவை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பால கிருஷ்ணன், கல்வியாளர் ராஜகோபாலன், பேராசிரியர் கருணானந்தம் உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமற்றவை என்று தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்தப் புத்தகங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 3 இடங்களில் வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

           மதுரையில் ஜுன் 15ஆம் தேதியும், ஜுன் 17,18 தேதிகளில் கரூரிலும், ஜுன் 21-ம் தேதி புதுக்கோட்டையிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சென்னையில் கல்வியாளர்கள், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூன் 18-ல் ஒன்று கூடி முதல்நிலை ஆய்வைப் பரிசீலனை செய்தனர். இந்த முடிவை சமச்சீர் கல்வி நிபுணர் குழுவின் தலைவரும் தலைமைச் செயலாளருமான தேவேந்திரநாத் சாரங்கியிடம் அளித்துள்ளோம். பழையப் பாடப்புத்தகங்களை விட சமச்சீர் பாடப்புத்தகங்கள் மிகவும் தரமானவை என்ற முடிவுக்கு கல்வியாளர்கள் வந்துள்ளனர்.

         தரம் இல்லை என்ற விவாதம் மாணவர் நலனை மையப்படுத்தி எழுப்பப் பட்ட விவாதம் அல்ல என்ற முடிவுக்கு கல்வியாளர்கள் குழு வந்துள்ளது. பழைய பாடப்புத்தகங்களையே மீண்டும் நடைமுறைப்படுத்த நினைப்பது சமூக வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதாகவே கருத வேண்டும்.

          சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், குறிப்பாக, பத்தாம் வகுப்பு கணித நூல்கள், மெட்ரிக்குலேஷன் புத்தகங்களை விட மேம்பட்டது என்று தெரியவந்துள்ளது. இந்த நூல்கள் பல வண்ணங்களிலும் மாணவர்கள் பங்கேற்று கற்கும்படியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல்களின் மதிப்பீட்டு முறைகள் அறிவியல் அணுகுமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கேள்விகள் சிந்தித்து விடையளிப்பதாகக் கேட்கப்பட்டுள்ளது.

           மெட்ரிக் பாடங்களில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை பாடங்கள் திணிக்கப் பட்டுள்ளன. வயதுக்கு மீறிய இந்தப் பாடத் திணிப்பு தரம் ஆகாது. அதேபோல், பாடங்களில் உள்ள வேறுபாடுகள் தர வேறுபாடுகள் ஆகாது. அதேபோல், பாடநூல் வடிவமைப்பு மேம்பட்டுள்ளது. மொழிநடை எளிமைப்படுத்தப்பட்டு, மாணவர்கள் வாசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களில் இலக்கணம் உள்பட உரையாடல் வடிவில் தொகுக்கப்பட்டு கற்றல் மேம்படுத்துவதாக உள்ளது.
               இந்தப் புத்தகங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்தைக் கேட்டு எதிர்காலத்தில் செழுமைப் படுத்தலாம். பாடநூல்களை உருவாக்கத் தொடர்ந்து செழுமைப்படுத்தி வருவதே அறிவியல் பூர்வமானது. எனவே, சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழக அரசு இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
நன்றி:-   MUTHUPET POPULAR FRONT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக