வியாழன், ஜூலை 21, 2011

குடிமக்களை கிரிமினல்கள் போல் பாவித்து அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் அரசுகள்

குடிமக்களை கிரிமினல்கள் போல் பாவித்து அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் அரசுகள்

                                                                                                                  - மு. சிவகுருநாதன்

 
(‘ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து’ என்கிற அ. மார்க்ஸ்-இன் குறுநூலின் ஊடாக ஒரு பயணம்.)  
 
 
  
  
        இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை மகாராஷ்டிராவில் ரஜ்னா சோனாவானே என்ற பழங்குடிப் பெண்ணுக்கு வழங்கியிருப்பதை பெருமை பொங்க குறிப்பிடும் தினமணி, இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் (NIDAI) ஏற்கனவே சொன்னது போல் முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010 முதல் பிப்ரவரி 2011க்குள் வழங்கப்பட்டு விடும் என்று சொன்னதைச் செய்தவர்கள் 2014க்குள் இந்தியாவில் 60 கோடி மக்களுக்கும் அளித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் வைக்கிறது.  (தினமணி தலையங்கம் - செப்டம்பர் 30, 2010). 
 
 
        வீடற்றவர்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுப்பது போலவும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு உணவு தானியம், பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்தையும் பொது விநியோகத்திட்டத்தின் (PDS) கீழ் இலவசமாக விநியோகிப்பதைப் போலவும் வெறும் அடையாள அட்டைக்கு ஏனிந்த பில்டப்?

          

            பனிரெண்டு இலக்கங்கள் கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டையைக் கொண்டு (UID) நீங்கள் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க முடியும், இதைக் கொண்டு செல்போன் இணைப்பைப் பெறலாம். 12  இலக்க ஆதார் எண்ணும் செல்போன் எண்ணும்கூட ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு.  அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதாக மக்களைச் சென்றடையும் என்றெல்லாம் நீட்டி முழங்குகிறார்கள்.



            செப்டம்பர் 29, 2010 அன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார், தேம்பிலி கிராமங்களில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முன்னணி கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் 5 பெண்கள், 3 குழந்தைகள் என 10 பழங்குடியினருக்கு ‘ஆதார்’ அடையாள அட்டைகளை (UID) வழங்கியதைத்தான் இந்த ஊடகங்கள் இவ்வாறு பெருமை பொங்க விவரிக்கின்றன.



            சராசரி இந்தியனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர் ஆகியவற்றை இன்னமும் உறுதி செய்ய முடியாத இந்த அரசுகள் ‘ஆதார்’ அடையாள அட்டை மூலம் மட்டும் மாய சக்தியை காட்டப் போவது எப்படியென ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும்.



            இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம் (The Unique Identification Authority of India - UIDAI)ஏப்ரல் 26, 2010 அன்று    UID   என்பது குழப்பமானதாக இருப்பதால் புதிய பெயராக ‘ஆதார்’  என்பதையும்  அதற்கான இலச்சினையையும் இதன் தலைவர் நந்தன் நீய்ல்கெனி வெளியிட்டார். 



            ஒவ்வொரு நபருக்கும் 10 கை விரல் ரேகைகள், விழித்திரைப் பதிவு மற்றும் புகைப்படம் ஆகியன அங்கக அளவீட்டிற்காக (Bio-metric) பெறப்படுமாம்.  ஒவ்வொரு நபரையும் பதிவு செய்ய அரசுக்கு ரூ. 31/- செலவாகிறதாம்.

          

            மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு சேவைகள் இத்துடன் இணைக்கப்பட்டு 100 நாள் வேலைக்கான கூலியையும் ‘ஆதார்’  எண்ணுக்குப் பதிவு செய்ய வருபவர்களுக்கு அளிக்கும் ஊக்கத் தொகையையும் வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறதாகச் சொல்கிறார்கள்.  பணவிடை (Money Order) மூலமாக அனுப்பப்படும் முதியோர் ஓய்வூதியம் (OAP) முழுவதுமாக அவர்களைச் சென்றடைகிறதா என்ன?



            பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை, இடைநிற்றல், வேறு பள்ளிக்குச் செல்லுதல், மதிய உணவுத் திட்டம், உயர்கல்வி படிப்போர் என அனைத்து விவரங்களையும் அடையாள எண் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  மாணவர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்க கைரேகை படிக்கும் சாதனத்தை (Scanner) நிறுவ ரூ. 5000/- செலவாகும்.  எனவே எளிதில் இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்றும் சொல்கிறார்கள்.



            1.5 லட்சம் கோடி செலவாகும் இத்திட்டத்தின் மூலம் உண்மையில் பயனடையப் போவது கணினித் தொழில் கார்ப்பரேட்டுகளும் உளவுத் துறையும் மட்டுமே என்பதை இக் குறுநூல் ஆதாரங்களுடன் அலசி ஆராய்கிறது.  பொது விநியோகத்திட்டத்தை (PDS) படிப்படியாக நிறுத்தி விட்டு அதற்கு மாற்றாக நிபந்தனைக்குரிய பண மாற்றீடுத் திட்டங்கள் மூலம் நியாய விலைக்கடைகள், இலவசங்கள், மானியங்கள் போன்றவற்றை நிறுத்தி, குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரும் அரசியல் சட்ட கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்குவதற்கான முயற்சி இது என்பதை நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.



            குடிமக்களை தீவிரவாதிகளாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் போது தனி மனித அந்தரங்கங்கள் முழுவதும் வெளிப்படையானதாக மாறும்.  இது குடிமக்களின் அடிப்படை அந்தரங்க உரிமையில் தலையீடு செய்வதாகும்.



            பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) யின்  அந்நியர்களையும் குடிமக்கள் அல்லாதவர்களையும் களையெடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ‘பல்நோக்கு தேசிய அடையாள அட்டைத்திட்டத்துடன்’ அங்கக அடையாளங்களை இணைத்து ‘ஆதார்’ அடையாள அட்டைத் திட்டமாக மன்மோகன் சிங்கின் அரசு முந்தைய அரசைப்போல் ‘பாதுகாப்பு’ என்று சொல்லாமல் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் குடிமக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதை அ. மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார்.



            பல்வேறு புலனாய்வு அமைப்புக்களை ஒருங்கிணைத்து ரயில் மற்றும் விமானப்பயணங்கள், வருமான வரி, தொலைபேசி அழைப்புகள், வங்கிப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகள், விசா இமிக்ரே­ஷன், சொத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிமங்கள் போன்ற 21 வகைத் தகவல்களை அனைத்திற்கும் கிடைக்கச் செய்யும் ‘நாட்க்ரிட்’ (National Intelligence Grid - Natgrid) வலையமைப்புடன் ‘ஆதார்’ அடையாள எண்ணும் இணைக்கப்படும் போது அந்தரங்கங்கள் அம்பலமாகும் அபாயம் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.



            பொது விநியோக முறையிலுள்ள மானியங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இந்த அட்டை துணை செய்யப்போகிறது.  ஆனால் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும், உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் அளிக்கப்படும் மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.   கார்ப்பரேட்டுக்களுக்கு மானியத்தில் வெட்டு செய்யாத அரசு பாமர மக்களுக்கு மானியம் இல்லை என்கிறது.  இதிலிருந்து இது யாருக்கான அரசு என்பதை சொல்லவும் வேண்டுமா?


            குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் மூலம் சாதிக்க முடியாத வளர்ச்சியை இந்த ஆதார் அடையாள அட்டை மட்டும் எப்படி செய்யுமெனத் தெரியவில்லை?   அங்கக அடையாளங்கள் மூலம் போலிகளைத் தவிர்க்கலாம் என்று சொல்லி தனிநபர் அந்தரங்க உரிமைகளில் இந்த அரசு தலையிடுகிறது.  கிரடிட் கார்டு, ATM   கார்டுகளில் கூட முறைகேடு செய்யும் போது இது மட்டும் எப்படித் துல்லியமாக இருக்கும் என்பதை அரசாலும் NIDAI-வாலும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை.



            ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், பொது விநியோக முறை ஆகிய எந்தத் திட்டமாகினும் ஆதார் அடையாள அட்டையே முன் நிபந்தனையாக்கி விட்டு இதற்குப் பதிவு செய்து கொள்வது கட்டாயமில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை?



            லோக்பால் மசோதாவில் வரம்பிற்குள் பிரதமர் உள்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதத்தில் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக லோக்பால் அமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது.  ஆனால் குடிமக்களின் அந்தரங்கம், சுயமரியாதை, கல்வி, உணவு போன்ற அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை தேசிய அடையாள அட்டை ஆணையத்திடம் (NIDAI)அளிப்பது பற்றியும் அதன் அதிகாரங்கள் குறித்தும் எந்த அரசியல் கட்சியும் கவலைப்படாதது வேதனைக்குரிய ஒன்றாகும்.



            சமூக, மனித உரிமை ஆர்வலர்களால் மட்டும் எதிர்க்கப்படும் ஆதார் அடையாள அட்டைத் திட்டத்தின் பாதிப்புக்களை உணர்ந்து அனைவரும் இதை எதிர்க்க முன்வருவதற்கு இக்குறுநூல் பேரளவில் உதவி செய்யும் என்பதில் அய்யமில்லை.



ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து - அ. மார்க்ஸ்
பக். 20.  விலை ரூ. 10/-


வெளியீடு:

இந்தியச் சமூகச் செயல்பாட்டுப் பேரவை,
புதுவைக் கிளை, 
15 - அன்னை தெராசா வீதி,
புதுச்சேரி - 605 013.
மின்னஞ்சல்: psdfmohan@yahoo.co.in
பேச:    0413 - 2200396
              94434 33927

நூல் வடிவம், கிடைக்குமிடம்:

புலம்,
332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005,
பேசி: 98406 03499
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக