செயற்கைப்பேரிடருக்கு வழிவகுக்கும் மத்திய-மாநில அரசுகள்.
- மு. சிவகுருநாதன்
டிசம்பர் 26, 2004 உலகை உலுக்கிய சுனாமியால் அதிகளவு உயிர்ப்பலி கொடுத்தது நாகப்பட்டினம் பகுதி. மும்பை தாஜ் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு விரைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததைப்போல சுனாமி மறுவாழ்வுப்பணிகளில் மத்திய-மாநில அரசுகள் வேகம் காட்டவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வெளியூர் நிதியுதவியாக வந்த போதும் சுனாமியால் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுகுடியமர்த்தல் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வுப்பணிகள் பல ஆண்டுகளாகியும் இன்னும் முடிந்தபாடில்லை. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் வெகுமக்கள் என்பதால் ஆளும்வர்க்கம் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.
சுனாமிக்குப்பிறகு இப்பகுதிகளை மேம்படுத்துவதற்கு ஏதேனும் நலத்திட்டங்கள் வருமென்று எதிர்பார்த்த அப்பகுதி மக்களுக்கு வந்திறங்கியது காரைக்கால் தனியார் துறைமுகம். இங்கு நிலக்கரி மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதன் கரித்துகள்கள் காற்றில் எங்கும் பரவுகின்றன. அண்டை மாவட்டமான திருவாரூரைத் தாண்டியும் இதன் பாதிப்புகள் தொடரும் அபாயம் இருக்கிறது.
அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு காரைக்கால் துறைமுகத்தில் மலைபோல் கொட்டிவைக்கப்பட்டிருக்கும் இந்த நிலக்கரிச் சாம்பல் திறந்த கண்டெய்னர்களில் எடுத்துச்செல்லப்படுகிறது. அப்போதும் இதன் துகள்கள் காற்றில் வேகமாக பரவுகின்றன. இவை முற்றிலும் திறந்த நிலையிலுள்ள சரக்கு ரயில்பெட்டிகளில் எடுத்துச் செல்லப்படுவதால் அவை கொண்டு செல்லப்படும் வழி எங்கும் பரவி அப்பகுதி மக்களை கடும் நோய்களுக்கு உள்ளாக்குகிறது. பொதுவாக சாலைகளில் மணல் ஏற்றிச்செல்லும் போது மூடிச்செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் நிலக்கரிச்சாம்பல் எடுத்துச்செல்லுவதற்கு இவ்விதி பின்பற்றப்படுவதில்லை.
இந்த கரித்துகள்களால் நுரையீரல் தொடர்புடைய பல்வேறு நோய் களுக்கும், ஆஸ்த்துமா, சளி, புற்றுநோய் ஆகியவற்றுக்கும் இன்னும் இனம் புரியாத பல்வேறு நோய்களுக்கும் மக்கள் ஆட்படுகின்றனர். துறைமுகம் காரைக்காலுக்குட்பட்ட வாஞ்சூர் பகுதியில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடுமையாக பாதிப்படைவது தமிழகப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டமே. மாநிலஅரசு பல ஆண்டுகளாக இதுபற்றி எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் பேருந்து நிலையத்தில் வெள்ளைச் சட்டையுடன் பேருந்துக்குக் காத்திருக்கமுடியாது. தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்குச் சொந்தமான நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியாகும் கரித்துகள்கள் நம் ஆடைகளை ஆக்கிரமித்திருக்கும். தற்போது இந்த ஆலை இயற்கை எரிவாயுக்கு மாறிவிட்டபடியால் திருவாரூர் தப்பியது. ஆனால் காரைக்கால் துறைமுகத்திலிருந்து திறந்த ரயில் பெட்டிகளில் நிலக்கரிச்சாம்பல் எடுத்துச்செல்லப்படுவதால் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்ல; அவை கொண்டு செல்லப்படும் அனைத்துப்பகுதிகளிலும் பெருத்த பாதிப்புக் குள்ளாகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வடக்கு எல்லையாக அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் தொழிற் சாலைகளினால் நிலம், நீர், காற்று ஆகியன முழுவதும் மாசுபட்டு கிடக்கிறது. திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினை அளவுக்குக்கூட இவைகள் போதிய கவனம் பெறாமலிருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது. கிழக்குக் கடற்கரையோரத்திலுள்ள புதுச்சேரி-காரைக்கால் யூனியன் பிரதேசமாக இருப்பதால் கணக்கின்றி நிறைய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கக் காரணமாக இருக்கின்றன. இதனால் இவற்றிற்கு அருகேயுள்ள தமிழகப்பகுதிகள் பெரிதும் பாதிப்படைகின்றன. இவற்றின் கழிவுநீரால் வங்கக்கடல் பகுதி மாசடைகிறது.
சிதம்பரத்திற்கு அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்திலிருந்து துளசியாப்பட்டினம் வளவனாற்றுப்பாலம் வரை சுமார் 200 கி.மீ. நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டது நாகப்பட்டினம் மாவட்டம். தமிழகத்தில் மிக நீளமான கடற்கரை மாவட்டம் இதுதான். நிர்வாக வசதிக்காக மாவட்டத்தைப் பிரிப்பதாக சொல்வார்கள். ஆனால் உண்மையான காரணம் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளே. தஞ்சாவூரை தஞ்சாவூர், நாகப்பட்டினம் என இரண்டாக பிரித்தபிறகு திருவாரூர் தனி மாவட்டமாக இருக்க வேண்டும் என்ற மு.கருணாநிதி அடம் பிடித்ததால் உருவானது திருவாரூர் மாவட்டம். திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் 24 கி.மீ.தான் என்ற போதிலும் நாகை மாவட்ட மக்கள் தங்கள் தலைநகருக்கு 100 கி.மீ.க்கும் மேல் பயணித்துதான் செல்ல வேண்டியுள்ளது.
இந்த மாவட்டத்தின் நீண்ட கடற்கரைபகுதி வழியாகத்தான் கிழக்குக் கடற்கரை சாலை (ECR-East Coast Road) சென்றிருக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இச்சாலை நாகப்பட்டினம்-வேளாங்கண்ணியைக் கடந்தவுடன் வேதாரண்யம் செல்லாமல் திருப்பூண்டி, திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டைக்குச் செல்கிறது. இந்த சாலை அமைப்பதால் கோடியக்கரை பறவைகள் புகலிடம் பாதிப்படையும் என்பதற்காக பாதை மாற்றப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது. கிழக்குக்கடற்கரை சாலை தனது மாவட்டமான திருவாரூர் வழியே செல்லவேண்டுமென மு.கருணாநிதி விரும்பியதுதான் உண்மையான காரணம்.
இந்த மாதிரியான ‘வளர்ச்சி’த் திட்டங்களினால் மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பாதிப்புகளை கூட கண்டு கொள்ளாதவர்கள் பறவை களிடம் கரிசனம் காட்டியது ஆச்சரியமாக இருக்கும். கோடியக்கரை பறவைகள் புகலிடம் கிழக்குக் கடற்கரை சாலை அமைக்கப்படும் வேதாரண்யத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாகச் செல்லும் தற்போதைய கிழக்குக்கடற்கரை சாலையிலேயே உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் புகலிடம் உள்ளது. இது பாதிக்காதா என்று கேட்கும்போது இவர்களது உண்மையான கரிசனம் விளங்கும்.
உள்நாட்டுச்சாலையாக மாற்றப்பட்ட கிழக்குக்கடற்கரை சாலை (ECR-East Coast Road) உலக வங்கியின் நிதியுதவியால் அமைக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டியிலிருந்து கடலுக்குச் செல்ல 35 கி.மீ. தூரம் போக வேண்டும். உலக வங்கி அதிகாரிகள் என்ன மாதிரியான ஆய்வு செய்து இதற்கு அனுமதி வழங்கினார்கள் என்று தெரியவில்லை. நல்ல வேளை அப்போது டி.ஆர்.பாலு சாலைப்போக்குவரத்து அமைச்சராக இல்லை. இருந்தால் இச்சாலை மன்னார்குடி-வடசேரி வழியாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கும்.
இந்த வடசேரியைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலுவுக்கும் அவரது மகனும் மன்னார்குடி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜாவுக்கும் சொந்தமான ‘கிங் கெமிக்கல்ஸ்’ இங்குதான் உள்ளது. இங்கு அவருடைய சாராய வடிப்பாலைக்கு விவசாய நிலங்களை அபகரிப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம் தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தால் அடித்து ஒடுக்கப்பட்டது. இன்று உத்திரப்பிரதேச நொய்டா விவசாயிகளுக்காக துடிதுடிக்கும் ஊடகங்களும், ராகுல்காந்திகளும் அன்று எங்கேயிருந்தனர் என்பது புரியவில்லை. இன்று மாயாவதியை வடஇந்திய ஊடகங்கள் நன்கு விமர்சிக்கின்றன. அன்று மு.கருணாநிதியின் கண்காணிப்பில் செயல்பட்ட காவல்துறையின் நடவடிக்கை பற்றி தமிழகஊடகங்கள் மூச்சு கூட விடவில்லை.
நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்குக் காரணம் டி.ஆர். பாலுவா அவரது முதல் மனைவி பூங்கொடியா என்று விவாதம் நடத்தப்படுகிறது. இவர்களில் யார் வேண்டுமானாலும் காரணமாக இருந்துவிட்டு போகட்டும். அடுத்தகட்டமாக இந்தப்பாதை வடசேரி வழியாக பட்டுக்கோட்டைக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் அகல ரயில்பாதை எதற்கென்று?
இதைப்போல முன்னாள் முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க வேளாங்கண்ணியிலிருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய அகலரயில்பாதை அமைக்க நிலம் கையப்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் வேலை தொடங்கப்படலாம். இவை மக்களுக்கு பயனளிக்கும் திட்டந்தானே என்று நீங்கள் கேட்கலாம்.
இருக்கின்ற மீட்டர் ரயில் பாதைகளை அகலப் பாதைகளாக்கும் பணி நிறைய பாக்கியிருக்கிறது. அதற்கு நிதி ஒதுக்குவதைத் தவிர்த்துவிட்டு தனிப்பட்ட லாப நோக்கங்களுக்கான புதிய திட்டங்களை அறிவிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை அகலப்பாதை அமைத்தவர்கள் திருவாரூரை இணைக்காமல் விட்டு நீண்டகாலம் கடத்தியபிறகு தற்போதுதான் வேலை நடைபெற்று வருகிறது. அதனால் நாகூர் எக்ஸ்பிரஸ் தஞ்சையை சுற்றிக் கொண்டுதான் சென்னை செல்கிறது.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரை இன்னும் மீட்டர் பாதையில் ஒரு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதை அகல ரயில் பாதையாக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம்-கோடியக்கரை மீட்டர் பாதையில் பல ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இடையில் ஒரு ரயில்பஸ் இயக்கப்பட்டு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. உப்பு ஏற்றுமதிக்கும் சுற்றுலாப்பயணிகளுக்குமான இப்பாதையை அகலரயில் பாதையாக மாற்றுவது குறித்து யாரும் யோசிக்கவில்லை. ஆனால் நிலக்கரி இறக்குமதிக்கும் தங்களது தொழிற்சாலைக்கு துறைமுகம், அகல ரயில் பாதை என திட்டங்கள் தீட்டப்படும் போது எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?
நீடாமங்கலம்-மன்னார்குடி பாதை ஏற்கனவே இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டதுதான். மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரயில் விடலாந்தான். ஆனால் அந்தப் பாதையை வடசேரி வழியாகக் கொண்டு செல்லாமல் மதுக்கூர் வழியாகக்கொண்டு சென்றால் என்ன? தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை மார்க்கத்தில் ரயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எத்தனை ஆண்டுகள்தான் கிடப்பில் போடுவது? இதை எல்லாம் செய்யாமல் டி.ஆர். பாலுவின் கிங் கெமிக்கல்ஸ் மற்றும் சாராய வடிப்பாலைக்காக ரயில் பாதை அமைக்கப்படுவதை எதிர்க்காமல் என்ன செய்வது?
இத்தகைய பின்னணியில்தான் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்படும் தனியார், அரசுத் துறைமுகங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் பற்றி விளங்கிக்கொள்ள வேண்டும். பொதுவாக வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கானது என்று சொல்லியே மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வேலையை மத்திய-மாநில அரசுகள் செய்து வருவதுதான் வாடிக்கை. ஆனால் இங்கு வளர்ச்சித்திட்டம் முற்றிலும் மக்களுக்கு துளிகூட பலனின்றி அரசியல்வாதிகள், தனியார் முதலாளிகள் கூட்டணிக்காக இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது.
புதுச்சேரி துறைமுக விரிவாக்கப்பணிகளில் மேதா பட்கர் போன்ற சுற்றுச்சூழலியர்களின் தொடர் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் காரைக்கால் தனியார் துறைமுகம் எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டு விட்டது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது நாகப்பட்டினம் மாவட்டப்பகுதிகள்தான். இந்தத் துறைமுகம் செயல்படத் தொடங்கிய பிறகுதான் சுற்றுச்சூழல்சீர்கேடு மக்களின் பார்வைக்கு வந்துள்ளது. இந்தத் துறைமுகம், திருக்குவளையில் அமைக்கப்படும் துறைமுகம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டே இப்பகுதிகளில் அதிகப்படியான அனல்மின்நிலையங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.
மு.கருணாநிதி பிறந்த நாகை மாவட்டம் திருக்குவளையில் துறைமுகம் அமைக்கப்படுவதாக அறிவிப்பு செய்து அதற்கான நிலங் களையும் கையகப்படுத்தியுள்ளனர். திருக்குவளை கடலோரக்கிராமம் அல்ல என்பது வியப்பிற்குரியது. இங்கு எப்படி துறைமுகம் என்று நீங்கள் கேள்வி எல்லாம் எழுப்பக் கூடாது. இப்போது திருக்குவளை ஒரு தாலுக்கா. இதிலுள்ள கீழையூர் ஒன்றிய எல்லைக்குட்பட்ட வேட்டைக்காரனிருப்பு கடலோரப்பகுதிதான் திருக்குவளை துறைமுகம் அமைக்கப்பட தெரிவு செய்யப்பட்ட இடமாகும். இங்கு துறைமுகம் அமைக்க கடல் தோண்டப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிக அதிகம். இப்பகுதிகளில் இதனால் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். துறைமுகம் செயல்படத்தொடங்கினால் காரைக்கால் துறைமுகத்தைப்போல இதுவும் பெரும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளாக்கக்கூடிய திட்டம் என்பதில் எவ்வித அய்யமுமில்லை. எனவே இதுவும் உடன் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
இப்பகுதிகளில் சுனாமிக்கு முன்னதாக விளைநிலங்கள் இறால் பண்ணைகளால் பெரும்பாதிப்புக்கு உள்ளானது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் இந்த இறால்பண்ணைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். ஆனாலும் போராடுவதைத்தவிர வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேறு வழியில்லை.
கூவம் நதியைச்சுத்திகரிக்கும் திட்டங்களைச்செயல்படுத்துவதற்காக ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு பல சுற்றுப் பயணங்களை நடத்திக்கொண்டிருந்த முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் ஒன்றை அறிவித்தார். திருப்பூர் பகுதியிலுள்ள சாயப்பட்டறைக் கழிவுநீரை குழாய்கள் மூலம் கொண்டுசென்று கடலில் விடுவதுதான் அந்தத்திட்டம். எவ்வளவு அறிவுப் பூர்வமான திட்டம் பாருங்கள்!
இந்தக்கழிவு நீரை கேரளா வழியாக அரபிக்கடலுக்குக் கொண்டு செல்ல அம்மாநில அரசும், நிலவியல் அமைப்பும் கைகொடுக்காது. எனவே கிழக்கு நோக்கு ஓடிவரும் காவிரியுடன் கொண்டு வந்து நாகப்பட்டினம் பகுதியில்தான் கடலில் விடமுடியும். இப்போது அவர்கள் ஆட்சியில் இல்லாதது குறித்து இம்மக்கள் கொஞ்சம் நிம்மதியடையலாம். மீண்டும் மு.க.ஸ்டாலின் மாதிரியான புத்திசாலிகள் யாராவது இத்திட்டத்தை மீண்டும் வலியுறுத்தாமல் இருக்க வேண்டும்.
அணுக்கதிரியக்கக்கழிவுகளை கான்கீரிட் பெட்டிகளில் வைத்து கடலில் வீசி எறிவது நமக்கு பாதுகாப்பானது என்று மாணவர்களை மூளைச் சலவை செய்து வருகிறோம் (ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல்). அடிக்கடி விபத்துக்குள்ளாகும் எண்ணெய் கப்பல்கள், பாதியில் நிறுத்தப்பட்ட சேதுசமுத்திரத்திட்டம், கடலில் கொட்டப்படும் அணுக்கதிரியக்கக்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள், பழைய கப்பல்களை வாங்கி உடைப்பதால் ஏற்படும் சீர்கேடுகள் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளால் கடலோர மக்கள் அதிலும் குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதார உரிமை மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் துறைமுக விரிவாக்கம், புதிய துறைமுகங்கள் அமைத்தல், அதன் தொடர்ச்சியாக அமைக்கப்படும் பல அனல் மின்நிலையங்கள் ஆகியவற்றால் கடலோர மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பாரதூரமானவை.
இன்று நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரையோரப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட அனல் மின்நிலையங்கள் அமைக்க வனம், சுற்றுச்சூழல், வருவாய், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என அனைத்துத்துறைகளும் தடையில்லாச்சான்று வழங்கியுள்ளன. இவற்றில் தரங்கம்பாடியில் செட்டிநாடு அனல்மின்நிலையம் அமைக்க தரங்கம்பாடி, மாணிக்கபங்கு, காழியப்பநல்லூர் பகுதிகளில் பெரிய சுற்றுச்சுவர் எழுப்பத்தொடங்கி யுள்ளனர். இவர்கள அபகரிக்கும் நிலங்களில் தரமான விவசாய நிலங்களும் அடக்கம். மேலும் இவர்கள் அரசுக்குச்சொந்தமான புறம்போக்கு நிலங்கள், நத்தம் மனைகள், கோயில் நிலங்கள் ஆகியவற்றையும் ஆக்கிரமித்துள்ளனர். மீனவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குடியிருப்புப்பகுதிகள், பாசன, வடிகால் வாய்க்கால்கள், ஊருக்குப் பொதுப்பயன்பாட்டிலுள்ள குளங்களையும் இந்தத் தனியார் கம்பெனிகள் வளைத்துக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
விவசாயிகளிடம் பொய்யான காரணம், பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு நிலங்கள் வாங்கப்படுகின்றன. இப்போதிருக்கும் மின்வெட்டைச்சமாளிக்க அனல்மின்நிலையங்கள் தேவை என்ற கருத்து பரப்பப்படுகிறது. இப்பகுதி மக்களும் தங்களுக்கு இனி மின்வெட்டு இருக்காது என நம்பிக்கொண்டுள்ளனர். நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுக்க இங்கேயே பயன்படுத்துவதாக இருந்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது. அரசு தனியார் கம்பெனிகளிடம் மட்டுந்தான் தடையில்லா மின்சாரம் தருவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்து கொள்ளும். வீட்டிற்கு குறைவழுத்த மின்னிணைப்பு பெறும் சாமானியர் எவரும் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட முடியுமா என்ன?
கேரளாவில் கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிராக பிளாச்சிமடா பஞ்சாயத்து நிறைவேற்றி தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அப்பகுதியில் அந்நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்தப் பட்டிருக்கிறது. ஆனால் தரங்கம்பாடி, மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர் ஆகிய பஞ்சாயத்துகள் அனல் மின்நிலையங்களுக்கெதிராக கொண்டு வந்த தீர்மானங்களை மதிக்காமல் அனல் மின்நிலையங்கள் அமைக்க அரசு மும்முரமாக உள்ளது.
அனல்மின்நிலைய எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறை அடக்க முறைகளை ஏவியுள்ளது. அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு அடித்து சித்ரவதை செய்வதாக அப்பகுதி மக்கள் கொதிக்கின்றனர். 10.06.2011இல் தரங்கம்பாடியில் நடையற்ற பட்டினிப்போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி மக்கள் தற்போது திறந்தவெளிப்பாதைகளாகப் பயன்பாட்டிலுள்ள இடங்களை வளைத்து அனல்மின்நிலையச் சுற்றுச்சுவர் அமைக்கப் படுவதால் சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்கள் வரும்போது தப்பித்து ஓடுவதற்குக்கூட வாய்ப்பில்லாமற்போகும் அவலத்தைச் சுட்டிக்காட்டினர்.
சுனாமி மறுவாழ்வுப்பணிகள் ஒரு புறம் சரிவர நிறைவேற்றப் படாமலிருக்க பாதுகாப்புக்காக கருங்கல் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இது நிரந்தரத் தீர்வல்ல என்பதோடு காசைக் கரியாக்கும் வேலையும் கூட. இந்த பாறாங்கற்களை ஏற்றி வரும் லாரி ஒன்று சரிவர மூடாமல் சென்றதால் பெரியகல் ஒன்று கீழே விழுந்து சாலையில் சென்று கொண்டிருந்த பெண்மணி நசுங்கி இறந்தார். அலையாத்திக் காடுகள் எனப்படும் சதுப்பு நிலக்காடுகளை (Mangrove Forest) அதிகளவில் வளர்த்தல், சவுக்கு போன்ற மரக்காடுகளை அமைத்தல், சேது சமுத்திரத் திட்டம் போன்ற திட்டங்களினால் பவளப்பாறைகள் அழிக்கப்படாமல் பாதுகாத்தல் போன்ற பணிகளே சுனாமியிலிருந்து நம்மைக்காத்துக் கொள்ளும் இயற்கை வழிமுறைகளாகும். அதை விடுத்து தடுப்புச்சுவர் அமைத்தால் சுனாமி எப்படி வராமற்போகும்?
சுனாமி அபாயத்தைக் காரணம் காட்டி மீனவர்களை கடற்கரை யோரங்களிலிருந்து தூரப்படுத்தும் வேலையை அரசு செய்தது. சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கான குடியிருப்புகளை கடற்கரையை விட்டு தள்ளி அமைத்தது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும். ஆனால் இந்த கடற்கரையோரங்களில் தீம் பார்க்குகள், சொகுசு விடுதிகள், உல்லாச வீடுகள் போன்றவற்றை அமைக்க அரசு எந்தத் தடையும் விதிப்பதில்லை. காரைக்காலுக்கு அருகிலுள்ள திருமலைராயன்பட்டினம் திருமலைராஜனாற்றங்கரையில் ‘தீம் பார்க்’ அமைக்கும் திட்டமிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இக்கடற்கரையோரப்பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் அனல் மின்நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். தற்போது காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் செயல்படும் தனியார் துறைமுகம், திருக்குவளை வட்டத்தில் வேட்டைக்காரனிருப்பு துறைமுகம் ஆகியவற்றின் மூலம் நிலக்கரி போன்ற கச்சாப்பொருட்களை இறக்குமதி செய்து சில கி.மீ. தொலைவில் அனல் மின்நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல போக்குவரத்துச்செலவுகள் குறையும் என்பதே முதன்மையான காரணமாகும். சாலை வழியாகவும் ரயில் மூலமும் எடுத்து வரக்கூடிய வாய்ப்புள்ள பகுதியாக மாற்றுவதற் காகத்தான் மக்களுக்கு பலனிருக்கிறதோ இல்லையோ இந்தப்பகுதிகள் (திருக்குவளை போன்றவை) புதிய ரயில் பாதைகளால் இணைக்கத் திட்டமிடப்படுகின்றன.
திருப்பூர் சாயப்பட்டறைக்கழிவுகளை ஆற்றில் விடுவதால் அங்கு பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்பட்டு நீதி மன்றங்கள் மூலம் சாயப்பட்டறைகள் சீலிடப்பட்டுள்ளன. இந்த கடற்கரையோர அனல் மின் நிலைய நச்சுத்தன்மைமிக்க கழிவுநீரை கடலில் கலக்கச்செய்வதன் மூலம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று இந்த தனியார் கம்பெனிகள் நினைக்கின்றன. இந்த கழிவுநீர் மூலம் கடலில் பல்லுயிர்ப்பெருக்கம் முற்றிலுமாக அழியும்; மீன்பிடித்தொழில் நசிந்து போகும். நிலக்கரிச் சாம்பல் காரணமாக நுரையீரல் தொடர்புடைய சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல், புற்றுநோய், இதயநோய்கள், தோல்நோய்கள் போன்றவை உண்டாகும். இந்த கழிவுக்கடலிலிருந்து கிடைக்கும் மீன்கள் மூலமாகவும் பல்வேறு நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
திருக்குவளை என்றதும் வேறொன்றும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இந்த சிறிய ஊரிலிருந்து சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் திருவாரூர் வரைதான் பயணிகள் இருப்பார்கள். திருவாரூரிலிருந்து திருக்குவளை வரை வெறும் பேருந்தோ அல்லது நகரப்பேருந்து போலத்தான் இந்த விரைவுப் பேருந்துகள் செயல்பட வேண்டியிருக்கிறது. பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை குழி தோண்டிப்புதைத்து விட்ட தி.மு.க. தலைமை தனது ஊரையும் அவர்களது ஊர்களையும் பேருந்துகளால் மட்டும் இணைக்கும் அவலத்தை என்ன சொல்ல?
வளர்ச்சித்திட்டங்களின் பெயரால் குடிமக்கள் வீடு, நிலம் ஆகியவற்றை இழந்து இடப்பெயர்வுக்குள்ளாகும் மக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் அரசிடம் இல்லை. அரசுக்கும் தனியார் முதலாளிகளுக்கும் சாதகமான கொள்கைகளைத்தான் முந்தைய தேசிய முன்னணி (NDA) அரசும் இன்றைய ஐக்கிய முன்னணி (UPA) அரசும் கடைபிடித்து வருகின்றன. நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டியதால் பாதிக்கப்பட்டோர், போபால் விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்டோர் என பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உரிய நிவாரணம் என்னும் கிடைத்தபாடில்லை.
நந்திகிராம், சிங்கூர் பிரச்சினைகள் இடதுசாரிகள் ஆளும் மாநிலம் என்பதாலோ என்னவோ தேசியஅளவில் ஊடகங்களால் பெரிது பேசப்பட்டன. அதைப்போல உத்திரப்பிரதேசத்தில் நொய்டாவில் விவசாயிகள் மீது மாயாவதி அரசு மேற்கொண்ட தாக்குதல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு கூடி ‘தேசிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் கொள்கை’யை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கொள்கைகள் முந்தைய உதாரணங்களைப் போல குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்களின் கவலை.
இடப்பெயர்வுக்குள்ளானவர்களின் சுதந்திரமான முழுஒப்புதல், அங்கு செயல்படும் திட்டத்தில் பங்குதாரராக்குதல், வாடகை-ஓய்வூதியம் என்ற வகையில் இழப்பீடு, நில உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி நிலத்தைச் சார்ந்திருக்கும் அனைவருக்கும் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு, மாற்றிடம் - இழப்பீடு - மறுவாழ்வு- மறுகுடியமர்வு- வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் காண்காணிக்க சுயேட்சையான அமைப்பு, ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை, நிலத்திற்கு சமதரத்திலான மாற்று நிலம் வழங்கி அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படுதல், தேசிய மறுவாழ்வு ஆணையம் அமைத்தல் என பல்வேறு அம்சங்களை புதிய சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். (பார்க்க:-சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும் : வளர்ச்சி-இடப் பெயர்வு-மறுவாழ்வு-அ.மார்க்ஸ்)
இன்று தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப்போக்க இத்தகைய மின்திட்டங்கள் தேவைதானே என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இப்போதிருக்கும் மின்வெட்டு செயற்கையானது என்பதை முதலில் சொல்லியாகவேண்டும். முதற்காரணம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தடையில்லாமின்சாரம் வழங்கசெய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். அடுத்ததாக மின்பகிர்மானம், மின்விநியோகம், மின்திருட்டு போன்றவற்றை திறம்படக் கையாளும் திறமையின்மையும் ஒரு காரணமாகும்.
சாதாரண மக்களுக்கு மின்சிக்கனம் குறித்து வகுப்பெடுக்கும் அரசுகள் தேவையற்ற, ஆடம்பர விளக்குகளை அமைத்து அரசும், தனியாரும் பல மெகாவாட் மின்சாரத்தை வீணாக்குவது குறித்து வாய்திறப்பதில்லை. தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான அரசுஅலுவலகங்களில் தமிழ் வாழ்க என்று விளக்குகள் ஒளிர எவ்வளவு மின்சாரம் வீணாகிறது என்று எவரேனும் கவலைப்பட்ட துண்டா? இப்படிச்செய்தல் தமிழ் வளர்ந்து விடுமா என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். பல நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் தெருவிளக்குகள் மாலை சூரியன் மறையும் முன்னர் போடப்பட்டும் காலையில் மிகவும் தாமதமாக அணைக்கப்படுகின்றன. காலநிலைக்கேற்ற இந்தநேரங்கள் மாற்றி யமைக்கப்பட்டால் அதிகமின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
காவரிப்படுகையில் பெட்ரோலியத்துடன் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைக் கொண்டு நரிமணம் அருகே உத்தமசோழபுரம் என்னுமிடத்தில் மின்உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. திருவாரூர் நவீன அரிசி ஆலைக்கு இந்த இயற்கை எரிவாயு பயன் படுத்தப்படுகிறது. இந்த இரண்டைத்தவிர பல இடங்களில் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படாமல் எரிந்து வீணாகிறது. இப்படி எரிந்து வீணாகும் இயற்கை எரிவாயுவால் வளிமண்டலவெப்பநிலை அதிகரித்து இப்பகுதியின் சராசரி மழையளவு குறைவதற்கு காரணமாக உள்ளதாகவும் ஒரு கருத்து உள்ளது. இது குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
சூரிய ஒளி, குப்பைகள், கடல் அலைகள், காற்று ஆகியவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மரபுசாரா எரிசக்திக்கான பல்வேறு ஆதாரங்களைக் கண்டறிந்து அதன் மூலம் நமது மின்உற்பத்தியை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையோரங்களில் எப்போதும் வீசும் காற்றைக்கொண்டு காற்றாலைகள் அமைத்த அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது பற்றி அரசு யோசிக்கலாம். காற்றாலைகளை அமைக்க தனியாருக்கு மானியம் அளிப்பதோடு நின்று விடாமல் அரசு இத்தகைய வேலைகளில் ஈடுபடுவது நல்லது. மேலும் கடல் அலைகளிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும் மின்சாரத் தயாரிப்பை அதிகரிக்க வேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகும்.
சுனாமி, சூறாவளி, புயல், வெள்ளம், கடல் சீற்றம், கடல் நீர் உள் வாங்குதல் ஆகிய பல்வேறு இயற்கைப் பேரிடர்களை ஆண்டு தோறும் எதிர்கொள்ளும் நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதி மக்களை ஏமாற்றி அரசும் தனியார் கம்பெனிகளும் மாபெரும் செயற்கைப் பேரிடரை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
04.07.2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக