ஞாயிறு, ஜூலை 10, 2011

கலாநிதி சிவத்தம்பி என்கிற ஆளுமை -அ.மார்க்ஸ்


கலாநிதி சிவத்தம்பி என்கிற ஆளுமை                      -அ.மார்க்ஸ்




(சென்ற புதன்கிழமை இரவு (06.07.2011)  இலங்கையின் மூத்த பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி  தனது  79ஆவது வயதில் காலமானார். அவருடைய இழப்பு மிகுந்த வருத்தமளிக்கக்கூடியது.அவருக்கு அஞ்சலியாக அ.மார்க்ஸ் -இன் தினக்குரல் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.)


    பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மரணம் உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்திலும் இலங்கையிலும் அவர் எந்த அளவு அறியப்பட்டிருந்தாரோ அதற்குச் சற்றும் குறையாத அளவிற்குத் தமிழகத்திலும் அறியப்பட்டிருந்தார், மதிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தின் உயராய்வு நிறுவனங்களோடும் பல்கலைக் கழகங்களோடும் இறுதிவரை அவருக்குத் தொடர்பு இருந்து வந்தது . வருகைப் பேராசிரியராக அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார். அவரது உரைகளையும், ஆலோசனைகளையும் கேட்கும் வாய்ப்பு மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்ந்து இருந்து வந்தது.

       எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் எழுத வந்த என்னையொத்த அன்றைய இளைஞர்களுக்கு ஈழத்து அறிஞர்கள் மிகப் பெரிய ஆதர்சங்களாகவும் உந்து சக்திகளாகவும் விளங்கினர். குறிப்பாகக் கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரையும் சொல்ல வேண்டும். அன்று பெரிய அளவில் இடதுசாரிச் சிந்தனையுடையவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஜார்ஜ் தாம்சனின் நேரடி மாணவர்களாகிய இவ்விருவரும் மார்க்சியர்களால் மட்டுமின்றிப் பல்கலைக் கழக மட்டங்களிலும் பெரிதும் மதிக்கப்பட்டனர். முன்னதாக இங்கிருந்த மர்க்சியத் திறனாய்வாளர்கள் மத்தியில் ஆய்வு சார்ந்த கறார்த்தன்மை கூடியிருக்கவில்லை. பல்கலக் கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் மத்தியில் மார்க்சியம் உள்ளிட்ட நவீன சிந்தனைகளின் பயன்கள் உள்வாங்கப் பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இலக்கியங்களின் சமூக வேர்களைத் துழாவி அடையாளங் காட்டக் கூடிய வல்லமை வாய்ந்த கருவியாகிய மார்க்சிய அணுகல்முறையைக் கைக்கொண்டிருந்த இவர்கள் இறுக்கமான ஆய்வு நெறிமுறைகளுடன் பண்டைய இலக்கியங்களை மட்டுமின்றி நவீன இலக்கியங்களையும் அணுகி வெளிக் கொணர்ந்த பல்வேறு முடிவுகளும், பாய்ச்சிய வெளிச்சங்களும் எல்லோரையும் பிரமிக்க வைத்தன. இவர்களோடு அன்று தமிழகத்திலிருந்த மார்க்சிய ஆய்வாளர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்களையும் சொல்ல வேண்டும். இம்மூவரின் பங்களிப்புகளுடனும், இவர்களால் உந்தப்பட்டவர்களின் கொடைகளுடனும் ஒரு பத்தாண்டுகாலம் மார்க்சிய ஆய்வுமுறை தமிழ் ஆய்வுலகில் கோலோச்சியிருந்தது என்றால் மிகையாகாது.

       வெகு விரைவில் பேராசிரியர்கள் கைலாசபதியும் வனமாமலையும் அகால மரணமுற்றதைத் தொடர்ந்து சிவத்தம்பி அவர்களின் முக்கியத்துவம் ஈடு இணையற்றதாயிற்று. சிவத்தம்பி அவர்களுடன் நெருங்கிப் பழகும் பெருவாய்ப்புப் பெற்றவர்களில் நானும் ஒருவன். எண்பதுகளின் மத்தியில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக ஆறு மாத காலம் அவர் வந்து தங்கியிருந்தபோது கிட்டத்தட்ட ஒரு குருகுல வாசம்போல அவருடன் இருந்து பலவற்றையும் கற்றுக் கொள்ளும் பேறு எனக்கும் பொ. வேல்சாமிக்கும் கிட்டியது.  ”பாரதி மறைவு முதல் மகாகவி வரை” எனும் முழு நூலையும் அவருடன் இணைந்து எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. அனேகமாக அப்படியான ஒரு இணை ஆசிரிய வாய்ப்புக் கிட்டியது எனக்கு மட்டுந்தான் என்றே நினைக்கிறேன்.

      பேராசிரியரிடம் நாங்கள் மார்க்சியத்தையும், ஆய்வு நுணுக்கங்களையும், நூலெழுதும் திறனையும் மட்டுமல்லாது பல நல்ல மனிதப் பண்புகளையும் கற்றுக்கொண்டோம். எந்நேரமும் எந்த ஐயத்தையும் யார் வந்து கேட்டாலும், எத்தனை வேலையிருந்த போதிலும் அவற்றை ஒத்தி வைத்துவிட்டு அவர்களுடன் பேசித் தீர்த்து வைப்பார். இலங்கையிலிருந்து ஒரு பேராசிரியர், மார்க்சியச் சிந்தனையாளர் வந்துள்ளார் என அறிந்து கிராமப் புறங்களிலிருந்து கட்சி ஊழியர்களெல்லாம் கூட அவரைச் சந்திக்க வருவார்கள். எல்லோரிடமும் அலுத்துக் கொள்ளாமல் பேசுவார். எல்லோரிடமிருந்தும் அறிந்துகொள்ள அவருக்கும் செய்திகள் இருக்கும். முகந்தெரியாத ஒருவர் வந்து தன் நூலுக்கு முன்னுரை கேட்டால் முகங் கோணாமல் எழுதித் தருவார். நூலின் தரம் பற்றிக் கவலைப் படமாட்டார்.

          கரவெட்டியில் பிறந்து, வல்வெட்டித்துறையில் மணமுடித்து வாழ்ந்து, கொழும்பில் மடிய நேர்ந்த பேராசிரியர் மரபுகளோடு இறுக்கமான தொடர்பைப் பேணியவர். சைவ மரபு சார்ந்த குடும்பமொன்றில் பிறந்தவராகிய அவர் எந்த அளவுக்கு அவர் மார்க்சியராக இருந்தாரோ, அந்த அளவிற்கு இந்த மரபை நேசிப்பவராகவும் இருந்தார். தஞ்சையிலிருந்து புறப்படும் முன்னர் இங்குள்ள சைவத் திருத்தலங்களுக்கெல்லாம் சென்றுவர விரும்பினார். அழைத்துச் சென்றோம். அது வெறுமனே பழங் கோயில்களை ஆர்வம் கருதிப் பார்த்து வரும் பயணமாக மட்டும் அமையவில்லை. மரபின் மீதிருந்த இந்தப் பற்றும், பண்டைய இலக்கியங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமையும், மரபு வழிப்பட்ட தமிழறிஞர்கள் மத்தியிலும் அவருக்குச் செல்வாக்கையும் மரியாதையையும் ஈட்டித் தந்தது. ஒரே நேரத்தில் மார்க்சியர்கள் மத்தியிலும் மரபிறுக்கம் மிகுந்தவர்கள் மத்தியிலும் திருஉருவாக ஏற்றுக் கொள்ளக்கூடியவராக அவர் இருந்தது அவரை அறிந்தவர்களுக்கு வியப்பான செய்தியல்ல.

       தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியை ஒட்டி  அறியப்பட்ட மார்க்சியத்திற்கு ஏற்பட்ட சரிவு எல்லோரையும்போல அவரையும் நிலைகுலைய வைத்தது. இந்தப் பிரச்சினையின் ஆழ அகலங்களுக்குள் அவர் செல்லவில்லையாயினும், சோஷலிச எதார்த்தவாதம், பிரதிபலிப்புக் கொள்கை, அடித்தள- மேற்கட்டுமான உருவகம் அகியவை குறித்த வரட்டுத்தனமான அணுகல்முறைகளை மார்க்சியத்தின் பெயரல் தூக்கிப் பிடித்து வந்தது குறித்துச் சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. பக்தி இயக்கத்தின் எழுச்சியையும் சமண- பவுத்த மதங்களின் வீழ்ச்சியையும் வணிக வர்க்கத்தை வீழ்த்தி நிலவுடைமை வர்க்கம் வெற்றி பெற்ற  வரலாறாகக் கட்டமைத்து வந்த கோட்பாட்டையும் கைவிடுவதாக அவர் அறிவிக்க வேண்டியநிலையும் ஏற்பட்டது. இப்படியாகக் கைலாசபதியும் சிவத்தம்பியும் அடித்தள- மேற்கட்டுமான அணுகல்முறையினூடாகக் கட்டமைத்த இந்தக் கோட்பாடும் இன்று ஆய்வுலகில் கைவிடப்பட்ட ஒன்றாயிற்று. இவர்கள் கட்டமைத்த அளவிற்கு சங்கம் மற்றும் சங்கமருவிய காலங்களில் வலுவான வணிகவர்க்கமொன்று உருப்பெற்றிருக்கவில்லை.

        தொண்ணூறுகளுக்குப்பின் இங்கே அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனநிலைச் சிந்தனைகள், போஸ்ட் மார்க்சியம் முதலான சிந்தனைகள் மேலுக்கு வந்து ஆய்வுலகை நிரப்பியபோது சிவத்தம்பி அவர்கள் திகைத்து நிற்க வேண்டியதாயிற்று. மார்க்சியர்கள் சிலரது தூண்டுதலின் விளைவாக இந்தப் புதிய சிந்தனைகளுக்குப் பதிலிருக்கும் முகமாக அவர் அளித்த சில பேட்டிகளும். எழுதிய சில கட்டுரைகளும் அவரது மரியாதையை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறைக்கவே செய்தன.

      கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அவர் பெரும் உள மற்றும் உடல் நலிவுகளுக்கு ஆளாகியிருந்ததை நாம் அறிவோம். எனினும் சக்கர நாற்காலியின் துணையின்றி வாழ இயலாதபோதுங்கூட அவர் தனது கல்விப் பயணங்களை நிறுத்திக் கொண்டதில்லை. பிறர் உதவியின்றிப் படிக்க இயலாத நிலையிலுங்கூட அவர் கருத்தரங்கங்களில் உரையாற்றுவதை நிறுத்தவில்லை. ஆனாலும் அவரது இந்த உடல் நலிவுகள் அவரது சிந்தனை வெளிப்பாடுகளையும் பாதிக்கவே செய்தன. கடந்த பத்தாண்டுகளில் அவரிடமிருந்து காத்திரமான வெளிப்பாடுகள் ஏதுமில்லை.

     ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவாளராக அவர் இருந்தபோதிலும் என்னாளும் அரசைப் பகைத்துக்கொள்ளும் அளவிற்கு நிலைபாடுகளை எடுத்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்ற ஆண்டு கருணாநிதி தன் முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்திய செம்மொழி மாநாட்டில் அவர் பங்கு பெற்றது பலரது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் காரணமாகியது.

       சிவத்தம்பி என்கிற அறிஞர், சிந்தனையாளர், பேராசிரியர் வாழ நேர்ந்த காலமும் களமும் மிகுந்த சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த ஒன்று. ஆனால் இதுபோன்ற அவலச் சூழல்களில் வாழ நேர்ந்த கொடுமை உலகில் எண்ணற்ற பல அறிவுஜீவிகளுக்கும் வாய்த்திருக்கிறது. இத்தகைய நிலையை அவர்களெல்லாம் எப்படி எதிர்கொண்டார்கள்? சிவத்தம்பி எப்படி எதிர்கொண்டார்? சிவத்தம்பி குறித்த மதிப்பீடுகளைச் செய்யும்போது இந்தக் கேள்வி நம்முன் எழுவது தவிர்க்க இயலாது.

      திருமணமான என் மகளை வாழ்த்த சக்கர நாற்காலியில் வந்திருந்து, மாடிமீது ஏற இயலாது மணமக்களைக் கீழே இறக்கி வாழ்த்திச் சென்ற்தையும், சென்ற ஆண்டு நான் கொழும்பு வந்திருந்தபோது என்னை அருகழைத்துத் தொட்டுத் தடவி விசாரித்து வாழ்த்தியதையும் நினைக்கும்போது கண்கள் பனிக்கின்றன. 

( தினக்குரல், ஜூலை 10, 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக