வியாழன், ஜூலை 21, 2011

சமச்சீர் கல்வி வழக்கு :- முதல் கட்ட வெற்றி!

சமச்சீர் கல்வி வழக்கு :- முதல் கட்ட வெற்றி!   
 
                                                        -மு.சிவகுருநாதன்


            சமச்சீர் கல்வியை  அமல்செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைகோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று (21.07.2011) விசாரித்த  ஜே.எம். பாஞ்சால் தலைமையிலான  உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு சமச்சீர்கல்விக்கு தடை விதிக்க மறுத்துள்ளது. அத்துடன்  ஆகஸ்டு 02 ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சமச்சீர்கல்வி புத்தகங்களை வழங்கிடுமாறு தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. இவ்வழக்கில் இறுதிகட்ட  விசாரணை ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
         2,3,4,5,7,8,9,10 ஆகிய  வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும்  ஜூலை 22 ஆம் தேதிக்குள் சமச்சீர்கல்விப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தின் காலக்கெடுவை ஆகஸ்டு 02  வரை உச்சநீதிமன்றம் மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்திருப்பது ஒருவகையில் அநியாயமானதுதான்.  இறுதிகட்ட  விசாரணை நடைபெறும் ஜூலை 26 ஆம் தேதி முழுமையான நீதி கிடைக்குமென நம்புவோம்.


      உச்சநீதிமன்றம்  தடை விதிக்க மறுத்திருப்பது மிக முக்கியமான நிகழ்வு. சமச்சீர்கல்வி வழக்கில் ஏற்கனவே தமிழக அரசிற்கு சில சலுகைகளை வழங்கிய உச்சநீதிமன்றம் இந்த முறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இறுதி உத்தரவிலும் இந்த மகிழ்ச்சி  நீடிக்கவேண்டும்.          மூன்று பேர் அடங்கிய அமர்வு என்பதால் முன்பிருந்த சொதப்பல் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதவேண்டியுள்ளது. சமச்சீர்கல்வியின் அமலாக்கம் கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும்போது அதனை அமல் செய்யமட்டும்  ஏன் இவ்வளவு காலத்தை கடத்தவேண்டுமென்பதுதான் நமக்கு விளங்கவில்லை.
      உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு தமிழக அரசுக்கு உறைக்கக்கூடிய அளவிற்கு கடுமையானதாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிபார்ப்பாகும். 95 விழுக்காடு மாணவர்களையும்  அவர்கள் சார்ந்த 
சமூகத்தையும் அவமதித்துள்ள தமிழக அரசு அவர்களை பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்கு உச்சநீதிமன்றம் தமிழக அரசிற்கு என்ன தண்டனை தரப்போகிறது?
 


    உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழக அரசு இனிமேல் இதுபோன்ற அத்துமீறல்கள் செய்யாமலிருக்க ஒரு பாடமாக அமையவேண்டும். அரசுகள் தவறு செய்யும்போது அவற்றை சரிசெய்து உடனடி நிவாரணமளிப்பதுதான் நீதிமன்றங்களின் கடமையாக இருக்கவேண்டும். அந்தவகையில் சமச்சீர்கல்வி வழக்கு ஒரு முன்மாதிரியாக அமைவதுடன்  கடைக்கோடி மக்களுக்கும் நீதிமன்றங்களின்பால்  உள்ள நம்பிக்கை மேலும் வலுப்படுத்தவும்  வரப்போகும் தீர்ப்பு பயன்படட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக