புதன், ஜூலை 06, 2011

சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி?

சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி?

    
      சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார். 

       ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர். இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். 

     நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம். பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள்.

      இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக்கிறது. இதை பலரும் ஆதரிக்கின்றனர். கல்வியில் இருக்கும் வித்தியாசம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை மத்திய தர வர்க்க மனநிலையும், பூணூல் பூச்சாண்டிகளும் விரும்புகின்றனர். அதை வெவ்வேறு வாதங்களின் மூலம் நியாயப்படுத்துகின்றனர்.

       சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதை விமர்சிக்கும் ஊடகங்கள் பலவும், ஜெயலலிதாவை நோக்கி கோபமான ஒரு கேள்வியைதன்னும் முன்வைக்கவில்லை. மாறாக அ.தி.மு.க. தொண்டனைப் போல ‘அம்மா, நாங்கள் உங்களிடம் இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும்’ என்று அமுங்கிய குரலில் பேசுகின்றன. (குரல் ஓங்கினால் குரல்வலையிலேயே குத்துவிழும் என்பது அவர்களுக்குத் தெரியும்). 

      அதேநேரம், சமச்சீர் கல்வியை அமுல்படுத்திய கருணாநிதியை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் இருப்பது போகட்டும்… மாறாக, ‘அவர் தப்பு, தப்பா புத்தகத்தை அச்சடிச்சதுனாலதான் இந்தம்மா வந்து சமச்சீர் கல்வியை நிறுத்திடுச்சு. இல்லேன்னா சர்ச்பார்க் கான்வெண்டுல கூட சமச்சீர் கல்வி வந்துடும்’ என்பது போல இதற்கான பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்துவதில் கவனமாக இருக்கின்றனர்.

    சமச்சீர் கல்வி ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. சமமான கல்வியை முன்மொழியும் இந்த திட்டத்திலும் கூட கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் ‘சமம்’ என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த இடத்தில் எனக்கொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ’நல்லி குப்புசாமி செட்டி’ எனப் பெயரிலேயே செட்டியார் என வருகிறது. ஆனால் அவர் கூட்டங்களில் பேசும்போது கவனித்தால் வலிந்து பார்ப்பன பாஷையைப் பேசுவார். வேறு சில பார்ப்பனர் அல்லாத முதலாளிகள் கூட இப்படி பார்ப்பன பாஷையில் பேச முயற்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். 

      இதன் உளவியல் என்னவெனில், தனக்குக் கீழ் பணிபுரிபவனின் பேச்சுமொழியும், தனது பேச்சுமொழியும் ஒரேவிதமாக இருப்பதை இத்தகைய முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இயல்பாகவே அவர்களின் மனம் மேம்பட்ட பேச்சுமொழியாக பொதுவெளியில் பதிவாகியிருக்கும் பார்ப்பன பாஷையைத் தேர்ந்துகொள்கிறது.

     பேசும் மொழியில் சமமாக இருப்பதை விரும்பாத இந்த மனநிலைதான் கல்வி சமமாக இருக்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறது. கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக மட்டுமே ஜெயலலிதா இந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை. மாறாக அவரது அடிமனதில் படிந்திருக்கும் இந்துத்துவ அஜண்டாவில் இருந்தே இத்தகைய செயல்கள் பிறக்கின்றன. அதனால் எல்லா பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்திவிட்டு சவுகர்யமாக நகர்ந்துகொள்வது சரியல்ல.

நன்றி:- பாரதி தம்பி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக