சனி, நவம்பர் 26, 2011

அணுசக்தி ஆண்குறிகள் நமக்கு வேண்டாம்!

அணுசக்தி ஆண்குறிகள் நமக்கு வேண்டாம்!
 
 - மு. சிவகுருநாதன்
(21.11.2011 தினமணியில் நெல்லை சு.முத்து எழுதிய   "அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்!"   என்ற கட்டுரைக்கான எதிர்வினை.)
 
ஒரு முன் குறிப்பு:-
 
அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட Twin Towers  முன்பு வல்லாதிக்கத்தின் ஆண்குறிகளாக வருணிக்கப்பட்டது உண்டு. கலாம் பயந்தால் வரலாறு படைக்கமுடியாது என்கிறார்.முத்து ஆண்மை பற்றியெல்லாம் எழுதி பீதியைக் கிளப்புகிறார். அணு உலை ஆதரவுக்கும்பல்களின் இந்த பேச்சுக்களைப்பார்க்கும்போது கூடங்குளம் அணு உலைகள் இரண்டும் உயரம் குறைவாக இருந்தாலும் அணு ஆதிக்க ஆண்குறிகளாகவே எனக்குத் தோன்றுகிறது.

 



 
 
 
தன்னெழுச்சியாக வீறு கொண்டெழுந்துள்ள அணு உலைக்கான எதிரான கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்திற்கு எதிராக அணு உலையை ஆதரிக்கும் அதிகார வர்க்கம் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.  

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லி பிரச்சினையை சற்று ஆறப்போடுவது, மறுபக்கம் அயல்நாட்டு சதி, தேசத் துரோகம், நிதி எங்கிருந்து வருகிறது என்றெல்லாம் சொல்லி விசாரணை என்ற பெயரில் மிரட்டுவது, வழக்குகள் போடுவது.

ஆய்வுக் குழுக்களில் அணுசக்தி விஞ்ஞானிகளையும் அணுசக்தி ஆதரவு விஞ்ஞானிகளை சுற்றுச்சூழல், நிலவியல், பொறியியல் என வேறு துறைகளின் சார்பில் களம் இறக்கி அணு உலைக்கு ஆதரவான ஆய்வறிக்கைகளை உருவாக்குவது ஒரு புறம் நடக்கிறது.  இதற்கிணையாக அப்துல்கலாம் போன்ற அணு உலை ஆதரவாளர்கள் மூலம் ஆய்வு (?!) 
என்ற பெயரில் போலியான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு மக்களின் மனத்தை திசை திருப்பி போராட்டக்காரர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குவது  என்ற நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது.   இதற்கு மாநில அரசு மறைமுகமாக ஒத்துழைக்கிறது.

போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட பலர் மீது தமிழக அரசின் காவல்துறை பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.  ஊடகங்களின் பெரும் ஒத்தழைப்புடன் அப்துல்கலாம் போன்றவர்களின் ஆய்வு (?!) புரட்டுப் பரப்புரைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.  அந்த வகையில் நெல்லை சு. முத்துவின் தினமணி கட்டுரை வெளிவந்துள்ளது.  இவர்களுக்கு அடுத்தபடியாக விரைவில் சினிமா நட்சத்திரங்கள் அணு உலையை ஆதரித்துப் பேசப் போவதையும் நாம் கண்டு களிக்கலாம்.

      அப்துல்கலாமின் கருத்துகளுக்கு தெளிவுரை எழுதும் நெல்லை சு. முத்துவின் கட்டுரை இந்துத்துவா எஸ். குருமூர்த்தியின் கட்டுரையை பிரதிபளிக்கிறது.  அணு விஞ்ஞானிகளின் உள்ளிருக்கும் இந்துத்துவா வெறி நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கிறது.  தேசப்பற்று என்ற சொல்லாடல்களுக்குள்ளும் இந்து, ஆண், விஞ்ஞானி என்ற தன்னிலைகள் துருத்திக் கொண்டிருப்பதை கண்டு மனம் பதைக்கிறது. 


அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டாம்! ஏன் பல முகங்களைக் காண முடிகிறதே! மன்மோகன்சிங், அப்துல்கலாம், சுப்பிரமணியன் சுவாமி, டாக்டர் கிருஷ்ணசாமி, புதுச்சேரி நாராயணசாமி, எஸ். குருமூர்த்தி, பொன். ராதாகிருஷ்ணன், மு. கருணாநிதி,கனிமொழி, ஜெ. ஜெயலலிதா, முத்துநாயகம், ஸ்ரீ குமார் பானர்ஜி, எஸ்.கே. ஜெயின், காசிநாத் பாலாஜி, நெல்லை சு. முத்து  போன்ற வீர வரலாறு படைக்கும் அணுசக்தி ஆண்மை முகங்களுக்கிடையேயும் சுப. உதயகுமாரன், புஷ்பராயன், மை.பா. ஜேசுராஜன், பி­ஷப் இவான் அம்புரோஸ், பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் தளராத கூடங்குளம் பகுதி பொதுமக்கள் போன்ற எளிய, கோழையான பெண்மை முகங்களும் காணக் கிடைக்கின்றனவே.   இந்த ஆதிக்க, ஆண்மை, அணு வெறி பிடித்த முகங்கள் எதிர்கால சந்ததியை ஒட்டு மொத்தமாக பாழாக்கும் வேலையை மிகவும் சுறுசுறுப்பாக செய்கின்றன.  இவற்றை விட இன்றைய மக்களுக்காகவும் எதிர்கால சந்ததிக்காகவும் குரல் கொடுக்கும் வீர வரலாறு படைக்க முடியாத, கோழைத்தனம் மிகுந்த  பெண்மை முகங்கள்தான் இன்றையத் தேவை.

இந்தியாவில் ராக்கெட்டும், அணு குண்டும் இருந்தால் போதும் மக்களுக்கு சோறு கூட தேவையில்லையென ஆதிக்கக்கும்பல் கங்கணம் கட்டி செயல்படுகிறது.  ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய், ராஜா ராமண்ணா, அப்துல்கலாம் போன்ற அணு விஞ்ஞானிகளும் அவர்கள் சொல்லி வருவதை கேட்டுத் தலையாட்டும் தேச விரோத இந்துத்துவா கும்பல்களின் கூட்டணைவு இன்று பெரியளவில் உருவாகியுள்ளது.  இவர்கள் அனைவரும் இன்று பெருகி வரும் கார்ப்பொரேட்களின் கைப்பாவையாக மாறிப் போயியுள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம், பன்னாட்டு திராவிட மொழியியல் நிறுவனம், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் என எல்லாவற்றையும் அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்து விட்டதாக முத்து ரொம்பவும் வருத்தப்படுகிறார்.  இதே போல் கூடங்குளம் அணு உலை போய்விடும் என்று கதறும் இந்த அணு உலைக்காரர்கள் ஏன் கேரளாவில் அணு உலை அமைக்க திட்டமிடவில்லை என்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் செயற்கைக் கோள்களைச் செலுத்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவை வரிசையில் நிற்பதாகச் சொல்லும் முத்துவுக்கு `அவுட் சோர்சிங்` பற்றி தெரியாதா?  இதில் சில அறிவியல் காரணங்களும் உண்டு.  அணு உலைக்கான காரணங்கள் இதற்கு பொருந்தாது.  அணு ஆதரவாளர்கள் இப்படித்தான் தொடர்பில்லா விஷயங்களை ஒப்பிட்டுப் பேசுவதே  வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

அணைக்கட்டுகள் அல்ல, அணு உலை மட்டுமே அபாயம் என இவரிடம் யார் சொன்னது?  அணைக்கட்டுகள் தொடர்பாக அண்டை அயலார் நம்மைக் கேட்டால் என்னாகும் என்று கேள்வி  கேட்கும் இவருக்கு முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளா இருப்பதை யார் சொல்லிக் கொடுப்பது? நர்மதை அணை, முல்லைப் பெரியாறு அணை என எந்த அணையாகட்டும் அவற்றின் உயரத்தை அதிகரிப்பதோ, பெரிய புதிய அணைகள் கட்டுவதோ பேரிடர்களை நாமே வரவழைத்துக் கொள்வதுதான்.  அணு உலை கதிரியக்க ஆபத்தைப் போலவே இந்த ஆபத்தையும் வீரமுள்ள ஆண்மைகள் மட்டுமே தாங்க முடியும்.  பிறர் சிறிய, உயரம் குறைவான அணைக்கட்டுகளை பல இடங்களில் அமைப்பது பற்றித் தான் யோசிக்க முடியும்.  அது பெண்மைத்தனமாகவோ அல்லது பேடித்தனமாகவோ இருந்து விட்டு போகட்டும். 
அறிவியலின் பணி மனித குலத்திற்கு மட்டுமல்லாது பூமிப்பந்தின் அனைத்துத் தரப்பிற்கும் சேவை புரிவது.  விஞ்ஞானிகள் என்ற போர்வையில் மதம், மொழி, இனம், சாதி, ஆண் என்று பல்வேறு பாகுபாடுகளை விதைக்கும் உங்களுக்கு, மாற்று மின்சாரம் பற்றி பேசுபவர்களை நோட்டுப் புத்தக ஆசிரியர்கள் என கேவலப்படும் திமிர் எங்கிருந்து வந்தது?  மாற்று ஆற்றல் மூலங்களை உங்களைப் போன்ற போலி விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.   மாற்று வழிகளைக் கண்டவர்கள் மனித நேயம் மிக்கவர்கள்.

சூரிய ஒளி, காற்று, கடலலை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைவிட அணு மின்சாரம் சிக்கனம் என்று சொல்லியே  கடந்த 20 ஆண்டுகளுக்க மேலாக ரூ. 15000 கோடிகளை விழுங்கியிருக்கும் கூடங்குளம் அணு உலையிலிருந்து தயாரிக்கப் போகும் மின்சாரம் மட்டும் எப்படி மலிவானதாக  இருக்கும் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆண்மை அதிகமாக இருக்கின்ற விஞ்ஞானிகள் காட்டு மிராண்டி, காட்டுவாசி என்றெல்லாம் கிண்டலடிப்பது மிகவும் மோசமானதாகும்.  நெருப்பைக் கையாளும் திறமை காட்டு வாசிக்கு வாய்த்தது.  அவன் அதை அழிவுக்குப் பயன்படுத்தியதில்லை.  ஆனால் உங்களுடைய அணுகுண்டுகள் எத்தகைய அமைதியை இங்கு ஏற்படுத்தியிருக்கின்றது?

அணு ஆதரவுக் கும்பல்களை 'அறிவியல் கோமாளிகள்' என்று சொல்வது கூட இவர்களின் அவதூறுப் பேச்சுக்களைவிட நாகரிகமானதுதான்.  நியாயமாகப் பார்த்தால் இவர்களை 'அறிவியல் தரகர்கள்' என்றுதான் அழைக்க வேண்டும்.

நிலநடுக்கத்தால் அதிராத பூமி அண்ட வெளியில் இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் இவர் அப்துல்கலாமின் திடீர் ஆய்வுக் கட்டுரையைப் படித்திருக்க வாய்ப்பில்லை போலும்! கூடங்குளம் பகுதியில் நில அதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6 அளவிற்குதான் வரும், அதற்கு மேல் வராது என்று அப்துல்கலாம் போன்றவர்கள் எப்படி சத்திய வாக்குமூலம் தருகிறார்கள்?

அணுசக்திக்கு எதிரானவர்கள் அமைத்த குழுவில் பிரிட்டனைச் சேர்ந்தவர் இருப்பது துப்பறிய வேண்டிய அம்சம் என்று சொல்லும் இவர் நமது நாட்டு அணுகுண்டு, அணு உலை, ராக்கெட், கிரையோஜெனிக் தொழில் நுட்பம் உள்ளிட்ட பலவும் வெளிநாட்டிலிருந்து இரவல் பெறாமல் இந்துத்துவா சுதேசி தயாரிப்புக்களா என்பதை முதலில் விளக்க வேண்டும்.  ஐரோப்பாவிலிருந்து வந்த தடுப்பு மருந்துகள், தொழில் நுட்பங்கள் போன்றவற்றை இந்தியா பயன்படுத்துவதில்லை என்று இவரால் கூற முடியுமா?

அணு உலை பிரச்சினை ஒன்று உள்நாட்டு பிரச்சினை இல்லை.  இந்த அணு உலைகளை வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்கிறீர்கள்?   ஃபுகுஷிமா   அணு உலை கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது ஜப்பான் மட்டுமா?  அணு உலைக்கு எதிரான அறிஞர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.   அவர்கள் அந்தந்த நாட்டிலும் அணு உலைக்கு எதிராக பேரராடி வருகிறார்கள்.  உங்களைப் போலல்லாமல் நடுநிலையான கருத்துக்கள் அவர்களிடம் உண்டு.  அணு உலைக்கு எதிரானவர்கள் இது ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் அணு உலைகள் என்று நாடுகளைப் பிரித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  இது ஒட்டு மொத்த அணு உலைகளுக்கான எதிர்ப்பு.  தேசப்பற்று, மதம், ஆண் போன்ற சொல்லாடல்களை எழுப்பும் எஸ். குருமூர்த்தி, சுப்பிரமணியன் சுவாமி, பொன். ராதாகிருஷ்ணன் போன்ற இந்துத்துவாவாதிகளும் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்ளும் அப்துல்கலாம், முத்து, முத்துநாயகம் போன்றவர்களும் மன்மோகன்,  ப. சிதம்பரம்,  நாராயணசாமி போன்ற ஆதிக்க-அதிகாரவர்க்கத்துடன் இணையும் புள்ளி இது.  இதிலிருந்தே இவர்களின் பின்னாலுள்ள அரசியலை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சராசரி அரசியல்வாதிகளைப் போலவே  5 ஆண்டுகள் பதவியில் இருந்து விட்டு மீண்டும் அந்தப் பதவிக்கு ஆசைப்பட்ட அப்துல்கலாம் தனது பதவிக்காலத்தில்  நவீன பஞ்சசீலக் கொள்கைகளுக்காக சிறு துரும்பையாவது அசைத்ததுண்டா?  கே. ஆர். நாராயணன் போன்ற நேர்மையாளர்கள் மறுத்த சவார்க்கரின் உருவப் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்து வைத்த சாதனையைத் தவிர வேறு என்ன நடந்தது?

மாணவர்களை, இளைஞர்களை சந்திக்கிறேன் என்று போலியான சந்திப்புகளை நடத்தி பன்னாட்டு மூலதனத்திற்கும் வல்லரசுக் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க அவர்களை மூளைச் சலவை செய்ததுதான் இவரின் சாதனை.  வல்லரசு என்று வாய் கிழிய பேசிவிட்டு தற்போது உலகில் வல்லரசு என்ற கருத்தாக்கம் ஒழிந்து விட்டது என்று பேசும் கலாம் அணு உலையால் பாதிப்பு உண்டு என்று சொல்லும் நேரம் ஒன்று வரும்.  அப்போது எல்லாம் முடிந்து போயிருக்கும்.  

பிரம்மாண்டமான கற்கோயில்கள், கல்லணை போன்ற அணைகள் போன்றவற்றை அணு மின் உலைகள் மற்றும் அணுகுண்டுகளுடன்  ஒப்பீடு செய்யும் மடமையை என்னவென்பது?  அதைப் போல ராக்கெட்டுக்குத் தேவைப்படும் எரிபொருளையும், அணு குண்டு மற்றும் கதிரியக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசும் இவர்களிடம் பகுத்தறிவோ, பகுப்பாய்வோ இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது.  பிறகேன் நோட்டுப் புத்தகம் இல்லாத இந்த ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்?  அதனால் இவர்கள் அடையும் ஆதாயங்கள், பலன்கள் என்ன? இதற்கு தேசப்பற்று, தேச வளர்ச்சி என்றெல்லாம் சொல்லி எளிதில் தப்பிக்க முடியாது.

அணு உலை ஒன்றும் தீபாவளி வெடி அல்ல.  கொளுத்திப் போட்டுவிட்டு விஞ்ஞானிகள் ஓட முடியாது.  அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.  மிக்க சரி.  அதனால்தான் கூடங்குளம் அணு உலையைச் சுற்றி 5 கி.மீ.க்குள் அப்பாவி மீனவ, தலித், ஏழை மக்கள் குடியிருக்க, அவர்களுக்கு கதிரியக்கத்தால் எந்தப் பாதிப்பும் வராது என்று சொல்லும் விஞ்ஞானிகள் (?!) தங்கள் குடியிருப்புகளை 12 கி.மீ. தள்ளி அமைத்திருக்கிறார்கள்.  இவர்களது உண்மை முகம் இங்குதான் வெளிப்படத் தொடங்குகிறது.

5 கருத்துகள்:

Sundararajan P சொன்னது…

காலத்தின் தேவை அறிந்த நல்ல பதிவு. நன்றி.

மு.சிவகுருநாதன் சொன்னது…

நன்றி! வழக்கறிஞர் சுந்தரராஜன்,
தங்களுடைய கருத்துரைக்கு மிக்க நன்றி.

தோழமையுடன்...
மு.சிவகுருநாதன்

தமிழ்மலர் சொன்னது…

//மாணவர்களை, இளைஞர்களை சந்திக்கிறேன் என்று போலியான சந்திப்புகளை நடத்தி பன்னாட்டு மூலதனத்திற்கும் வல்லரசுக் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க அவர்களை மூளைச் சலவை செய்ததுதான் இவரின் சாதனை. வல்லரசு என்று வாய் கிழிய பேசிவிட்டு தற்போது உலகில் வல்லரசு என்ற கருத்தாக்கம் ஒழிந்து விட்டது என்று பேசும் கலாம் அணு உலையால் பாதிப்பு உண்டு என்று சொல்லும் நேரம் ஒன்று வரும். அப்போது எல்லாம் முடிந்து போயிருக்கும்//

நல்ல பதிவு. நன்றி.

மு.சிவகுருநாதன் சொன்னது…

அன்புள்ள தமிழ் மலர்!
வணக்கம்.
எனது பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.

தோழமையுடன்...
மு.சிவகுருநாதன்

indianist சொன்னது…

anusakthi vendam endra katturai migaum nandru, koodankulam nilavarathai Puthiya Thalaimurai TV vaiyelaga therinthu konden nandri

anuulaiyai etirppom nandri

கருத்துரையிடுக