ஏனிந்த இன - மொழி (கொல) வெறி?
- மு. சிவகுருநாதன்
(கூடங்குளம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை போன்ற பிரச்சினைகளின் ஊடாக இங்கு நடக்கும் இரு வேறு கண்ணோட்டங்கள் மற்றும் வெறித்தனங்கள் பற்றி எனது பார்வை)
"ஈடேற வழி: பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே"
- தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி.
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதோடு நில்லாது, இனவெறி, மொழி வெறி, தேச வெறி, சாதி வெறி உள்ளிட்ட அனைத்து வெறித்தனங்களுக்கு எதிராக நின்றவர் பெரியார். யாருக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடி மறைந்தாரோ, அந்தத்தமிழகத்தில் இன்றைய நிலைமை தலைகீழாகப் போயிருக்கிறது. பெரியாரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் ஆகியன இங்கு முரட்டுத்தனமான தமிழ் மொழி, தமிழின வெறிகளை உற்பத்தி செய்வதோடு அதனூடாக சாதி வெறியையும் வளர்த்தெடுக்கிறது. பரமக்குடி தலித்கள் படுகொலையை இவர்கள் எதிர்கொண்ட முறை சாதிவெறித்தனத்திற்கு தகுந்த சாட்சியாகும்.
பல மாதங்களாக நீளும் கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரப் போராட்டமான அணு உலை எதிர்ப்பை முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை பின்னுக்கு தள்ளிய அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளை நாம் விளங்கிக் கொண்டேயாக வேண்டும் மக்களை ஒன்று திரட்டுவதற்கும் போராடுவதற்கும் இன்று மென்மையான இலக்கு (soft target) ஒன்று தேவைப்படுகிறது. அதற்கு மொழி, இன உணர்வுகள் மிகவும் வசதியாக உள்ளது. உள்ளூர் தமிழன் அடிப்பட்டு சாகும்போது வாய் மூடி மெளனியாய் இருந்து விட்டு அயலகத் தமிழர்களின் பிரச்சினைகளை மட்டும் எதிர் கொள்வதை இந்த உளவியல் அடிப்படையில்தான் அணுக வேண்டியுள்ளது.
இங்கொன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது பற்றியோ உலகளவில் எந்தப் பகுதியில் தமிழர்கள்
பாதிக்கப்படும் போது அவர்கள் சார்பாக பேசுவதையோ நாம் மறுக்கவில்லை.
பரமக்குடிப் படுகொலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்கம், இருளர் இனப் பெண்கள் 4 பேரில் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாக்கப்படுதல் போன்ற எவற்றிற்கும் கிளர்ந்தெழாத மொழி, இன உணர்வு
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மட்டும் பீறிட்டு கிளம்பும்போதுதான்
நமக்கு அய்யம் வருகிறது; கூடவே சில கேள்விகளும். கூடங்குளத்தில் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மற்றும்தலித் மக்கள், பரமக்குடியில் சுடுபட்டு, அடிபட்டு இறந்த காயம்பட்ட தலித் மக்கள், பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட 4 இருளர் இனப்பெண்கள் என நாள்தோறும் வதைபடும் ஆயிரக்கணக்கானோர் தமிழர்களா அல்லது வேற்று மொழியினராஎன கேள்வி எழுவது இயல்பானது.
மொழி - இன வெறியைத் தூண்டி விடுவதில் நமது சினிமாக்காரர்களின் பங்கு கணிசமானது. 'ஆயிரத்தில் ஒருவனி'ல் செல்வராகவன் fantasy-தனமாக செய்த சில பிரதியெடுத்தல்களை விரிவாக்கியவர் 'ஏழாம் அறிவு' ஏ.ஆர். முருகதாஸ். இதற்குப் போட்டியாக செந்தமிழனின் 'பாலை'யும் களத்தில் இறங்கியிருக்கிறது. இவையனைத்தும் பாமரத்தனமான இன - மொழி வெறியை அடிப்படையாகக் கொண்டு காசு பண்ணுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவை. இவர்களின் போலியான இன - மொழிவாதப் போக்கிற்கு தமிழ் தேசிய இயக்கங்களும் தமிழ் ஆர்வலர்கள் என்று
சொல்லிக் கொள்கிற ஒரு கூட்டம் பேராதரவு நல்குகிறது.
இந்தியத் தண்ணீரில் தயாராகும் அமெரிக்க மூத்திரங்களான பெப்ஸி,
கோக்குகளைக் குடித்து உயிர் வாழும் (!?) கணினி நிறுவன, கார்ப்பரேட்
அம்பிகள் சிலர் சீனப் பொருட்களை வாங்க வேண்டாமென வலியுறுத்தி
குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (e-mail) பரப்புரையில்
ஈடுபடுவார்கள். இந்த வேலையைத் தான் ஏ.ஆர். முருகதாஸ், செந்தமிழன்
போன்றோர் 3 மணி நேரம் செய்திருக்கிறார்கள். இதே மாதிரியான ஒரு
கும்பல்தான் அன்னா ஹசாரே பின்னாலுள்ளது.
நம்மவர்கள் சிலரும் இதை ஏகாதிபத்திய எதிர்ப்பாக கற்பனை செய்து
கொள்கிறார்கள். இவர்கள் என்றாவது பெப்ஸி, கோக் குடிக்காமல் இருந்தது
உண்டா? அல்லது குடிக்க வேண்டாம் என்று பரப்புரை செய்ததுண்டா? சீன
ஏகாதிபத்தியத்தைவிட அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வகையில் ஒஸ்தி என்பதை இவர்கள் விளக்க வேண்டும். விடுதலைப் புலிகளை / தமிழர்களை அழிக்க இலங்கைக்கு சீன வல்லாதிக்கம் உதவியது என்பதுதான் இவர்களது வாதம். இந்தியா, பாகிஸ்தான் கூடத்தான் இலங்கைக்கு உதவியது. இந்திய
அரசுக்கெதிராக இவர்கள் ஏன் திரளவில்லை? இத்தகைய கார்ப்பரேட்
ஆதரவாளர்கள்தான் அன்னா ஹசாரே பின்னால் அணி திரள்கிறார்கள். வார இறுதி (week end) கேளிக்கைகளில் திளைக்கும் இவர்களுக்கு ஆண்டு இறுதி (டிசம்பர் 31) கேளிக்கைகளில் கலந்து கொள்ள முடியாமல் செய்து விட்டதற்காக அன்னாஹசாரே மீது ஏற்பட்ட கோபம் டிசம்பர் 27 உண்ணாவிரதம் மும்பைக்கு மாற்றப்பட்டதால் கொஞ்சம் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. விரைவில் இவர்கள் அன்னா ஹசாரே முகாமை காலி செய்து விடுவார்கள்.
முல்லைப் பெரியாற்று அணைப் பிரச்சினையில் தமிழகத்திலுள்ள மலையாளிகளின் வணிக நிறுவனங்களை உடைத்து நொறுக்கும் இந்த தமிழுணர்வாளர்கள் தமிழக பக்த கோடிகள் (!?) சபரிமலைக்குச் செல்ல வேண்டாம் என்று ஏன் பரப்புரையில் ஈடுபடவில்லை? தமிழகத்திலும் கேரளத்திலும் மிகச் சிறிய இனவாத -மொழிவெறிக் கும்பல் தங்களது சுய ஆதாயங்களுக்காக வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறது. இதை இரு மாநில அரசுகளும் கண்டும் காணாமலும் இருப்பதுதான் அநியாயம்.
முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேரள கட்சிகளும் அரசும் தொடர்ந்து இப்பிரச்சினையை எழுப்புகின்றன. மத்திய அரசின் மறைமுக ஒத்துழைப்பும் கேரள அரசுக்கு இருக்கிறது. இப்பிரச்சினையில் கேரளா அரசின் நிலைப்பாடு நியாயமில்லை என்றபோதிலும் அவர்களின் வெற்றுக் கூச்சலுக்கும் ஆரவாரத்திற்கும் பதிலுக்குப் பதில் மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் நமக்கில்லை. டேம் 999 என்ற திரைப்படம், கேரளத்தவர்களின் பரப்புரை போன்றவற்றால் மட்டுமே ஒரு அணைக்குப் பாதிப்பு வந்து விடும் என்று அப்பாவி பொதுமக்களை நம்ப வைத்து வீணான போராட்டத்திற்கு சில இயக்கங்களும் அரசும்
தூண்டியுள்ளது.
அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு சொல்கின்ற காரணத்தால் மட்டுமே உச்சநீதி மன்றம் அணையை உடன் உடைக்கவும், புதிய அணை கட்டவும் அனுமதி அளிக்கப் போவதில்லை. இந்த பிரச்சாரத்தால் கேரள மக்கள் திரண்டு வந்து அணையை உடைத்து விடப் போவதில்லை. பிறகு ஏனிந்த பதட்டம் உருவாக்கப்படுகிறது? முழுக்க முழுக்க அரசியற் காரணங்களுக்காகவே இன்று இப்பிரச்சினை எழுப்பப்படுகிறது.
தமிழகத்தில் திராவிட கட்சிகளும், தமிழ் தேசிய இயக்கங்களும் மொழி - இன வெறியைத் தூண்டி கேரளத்தவர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கேரளாவிற்குச் செல்லும் 13 வழிகளை அடைக்கிறார்கள். காய்கறி, முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை அனுப்பாமல் ஒரு பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று கூவுகிறார்கள். எத்தனை நாட்களுக்கு அனுப்பாமல் இருப்பார்கள்? வியாபாரம் நடக்க வேண்டுமல்லவா? தமிழப்பெருமிதமும் மொழி - இன வெறியும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும்?
இதே போல ஒரு சூழ்நிலை கேரளாவிலும் ஏற்படுத்தப்பட்டு எல்லையோர
கிராமங்களில் தமிழர்கள் மீது தாக்குதல், சபரிமலை செல்வோர் மீது தாக்குதல்
என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கேரள காவல்துறையும் தமிழகக்
காவல்துறையைப் போன்று இச்சம்பவங்களை வேடிக்கை பார்க்கிறது.
ஒப்பீட்டளவில் தமிழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகம்
என்றேபடுகிறது. இந்திரா காந்தி படுகொலையின் போது தில்லியில்
சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய வன்முறைகள், ராஜுவ் காந்தி
படுகொலையின் போது கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் தமிழர்கள் மீது
தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றைச் செய்த சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. மொழி - இனப்பெருமிதங்கள் வன்முறையை நோக்கித்தான் செல்லும் என்பது பாலபாடம்.சிங்கள இனவெறியை குறைசொல்லும் அருகதை இந்த தமிழ் வெறியர்களுக்கு கிடையாது.
கேரளாவில் நூலிழை அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் அரசு அங்கு நடைபெறப்போகும் ஒரு இடைத்தேர்தலை முன்னிட்டு இப்பிரச்சினையை எழுப்பி ஆதாயம் தேட முயற்சிப்பது எவ்வளவு உண்மையோ, தமிழகத்தின் ஜெயலலிதா அரசு பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துக்குவிப்பு வழக்கு,கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை மறக்கடித்து அரசியல் ஆதாயம் தேடுவதும் உண்மையாகும். மத்தியஅரசும் கூடங்குளம் பிரச்சினையை மடை மாற்ற இப்புதிய சிக்கல் வந்தவுடன் மிக மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.
கூடங்குளம் முதலாவது அணு உலை இன்னும் இரு வாரங்களில் செயல்படத் தொடங்கும் என, இந்தியாவில் சொல்வதற்கு திராணியற்ற மன்மோகன் சிங், ரஷ்யாவை திருப்திப்படுத்துவதற்காக அங்கு சொல்லி விட்டு வந்திருக்கிறார்.கூடங்குளத்தில் தற்போது 2 அணு உலைகள் இயங்குவதாகச் சொன்னது ப. சிதம்பரத்தின் லேட்டஸ்ட் உளறல். தமிழகத்தைப் பொருத்தவரையில் உடனடியாகத் தீர்வு காண வேண்டியது கூடங்குளம் அணு உலைப் பிரச்சினைதான்.
நடுவர் நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என்று பல்வேறு ஆணைகள், தீர்ப்புகள் பெற்ற பிறகு காவிரி நீரைத் தமிழகம் பெறுவதற்கு எவ்வளவோ சிக்கல்கள் இன்னும் நீடித்துக் கொண்டுள்ளன. அதைப் போலவே உச்சநீதிமன்றம் , மத்திய அரசு என எந்தத் தரப்புத் தீர்வையும் கேரள அரசு ஏற்கப் போவதில்லை. எனவே காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையைப் போல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகிறது.
இது ஒன்றும் நமது விருப்பம் அல்ல. இங்கு நடக்கும் முன்னுதாரணங்களைக் கொண்டே இவ்வாறு அவதானிக்க முடிகிறது. பொதுவாக அரசுகள் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஒத்திப் போடுவதற்கு இம்மாதிரியான உத்திகளை கையாள்வது வாடிக்கையானது. அன்னா ஹசாரேவின் கார்ப்பரேட் போராட்டங்களுக்கு பெருத்த விளம்பரம் தேடித் தந்தது மத்திய அரசுதான் என்றால் மிகையில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அன்னா ஹசாரேவை கட்டுக்குள் வைக்க யோகா குரு பாபா ராம்தேவை தூண்டி விட்டதும் இதே மத்திய அரசுதான். மீடியாக்களின் கவனம் ஒருபுறம் மட்டுமே குவிய விலைவாசி உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பணவீக்கம், பட்டினிச்சாவு, விவசாயிகள் தற்கொலைகள்,
ஊழல்கள் போன்ற அனைத்தையும் ஒரே குழியில் போட்டு புதைத்த திருப்தி மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இப்போது கூடங்குளம் சிக்கல் பின்னுக்குத்
தள்ளப்பட்ட அதீத கொண்டாட்ட உணர்வினால்தான் ப.சிதம்பரம் போன்ற
அதிமேதாவிகள் (!?) கூட உளறிக் கொட்டி பின்பு தங்கள் நிலைப்பாட்டை
திரும்பப் பெறுகின்றனர்.
நாடெங்கும் லோக்பால் புழுதியைக் கிளப்பி விட்டு சந்தடி சாக்கில் குறைபாடுகளுடன் உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றும் அவலத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இரு வாரங்களில் அணு உலை இயங்கும் என்று சொல்லக் கூடிய துணிச்சலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இத்தகைய பின்புலம்தான் கொடுத்திருக்க வேண்டும். அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்தும் கூடங்குளம் பகுதி மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரும் காங்கிரஸ் கத்துக்குட்டி யுவராஜா முதல் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரையிலான ஆட்கள் வன்முறையில் ஈடுபடும் முல்லைப் பெரியாறு அணை போராட்டக்காரர்களை (இரு தரப்பையும்) ஏன்கைது செய்யக் கூட கோரிக்கை விடுக்கவில்லை என்பதன் பின்னணி இதுதான்.
காந்தியின் உழைப்பை அரை நூற்றாண்டுகளாக அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி காந்தீயக் கொள்கைகளுக்கு எதிராகவே வளர்ந்து நிற்பது இதற்குச் சான்று. உண்மையில் கூடங்குளம் போராட்டம் போன்று முல்லைப் பெரியாறு அணை போராட்டங்கள் மத்திய அரசுக்கு எதிராகவே நடந்திருக்க வேண்டும். இது ஏன் நடக்கவில்லை?
கேரள காங்கிரஸ் அரசின் அனைத்து செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு
அளிக்கும் ஐக்கிய முன்னணி அரசிலிருந்து தி.மு.க. தற்போதாவது விலகியிருக்க வேண்டாமா? 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி பிரதமருக்கு நெருக்கடி அளித்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இப்போது தத்துப்பித்தென உளறிக் கொட்டும் ப. சிதம்பரம் வாழப்பாடி ராமமூர்த்தி போல் பதவி விலகியிருக்கலாமே! ஏன் நடக்கவில்லை?
கூடங்குளம் அணு உலை பிரச்சினைக்கான இவர்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.ஏனெனில் காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள், திராவிட கட்சிகள் அனைத்துமேஅணு உலையை ஆதரிக்கும் கட்சிகள் ஆனால் முல்லைப் பெரியாறு அணைக்காக உரத்துக் குரல் கொடுப்பதாக பம்மாத்து பண்ணும் இவர்கள், அப்பாவி மக்களையும் சில சமூக விரோத சக்திகளையும் தூண்டி வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்து வேறு உருப்படியாக ஏதேனும் ஏன் செய்ய முடியவில்லை?
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தும் ஜெயலலிதா அரசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிற்கு அமைச்சரவைத் தீர்மானம் மட்டும் போதுமானது என்று பாரபட்சம் காட்டுகிறது. கூடங்குளம் அணு உலையை அதனால் பாதிப்படையும் கேரள மக்களும் எதிர்க்கிறார்கள். எனவே இங்கு மொழியுணர்வை தூண்டி விட முடியாமற் போய்விட்டது போலும்!
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வேறு எந்த தென்னிந்திய மாநிலங்களும் நிறுவ மறுக்கும் அணு உலைகளை தமிழக திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்ட தமிழகத்தில் நிர்மாணிக்கின்றன. இதன் பின்னால் இருக்கும் தமிழ் மக்கள் மீதான பாசம், பொங்கும் இன - மொழி உணர்வு பிரதானமானது! இதற்குப் பதிலுதவியாக மத்திய அரசு இவர்களுக்கு பதவியும் ஊழல் புரிய வாய்ப்புக்களையும் நல்குகிறது. ஆனால் தமிழகத்திற்கு என்ன கிடைக்கும்? தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி கல்பாக்கத்தாலும் தெற்குப் பகுதி
கூடங்குளத்தாலும் சுடுகாடாகப் போகும் அரிய பாக்கியம் கிடைக்கிறதே! அது
போதாதா?
பயப்படாமல் அணு உலையை அமைக்க உதவும் தமிழகத்தின் துணிச்சலைப் பாராட்டி இங்கு தயாராகும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் பாதி வழங்கப்படும் என்று பிரதமரே அறிவித்திருக்கிறார். இவர்கள் 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் லட்சணத்தை நாம் பார்க்கத்தானே போகிறோம்.
இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுக்க தங்களுக்கே கிடைக்கப் போகிறது என்ற நப்பாசையில் கோவை 'கொடீஸியா' முதலாளிகள் அணு உலைக்கு ஆதரவாக களம்இறங்கியிருக்கின்றனர். முதலாளிகளில் உள்நாடு, வெளிநாடு என்று பேதம் பார்ப்பது ரொம்பவும் அபத்தம். தமிழ் தேசியர்களுக்கு இது கைவந்த கலை. ஆனால் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அளித்தது போக மிச்சமிருந்தால் மட்டுமே இவர்களுக்குக் கிடைக்கும் என இந்த குட்டி முதலாளிகளுக்கு யாரேனும் சொன்னால் நலம்!.
அரசிடம் எண்ணற்ற சலுகைகள் பெற்றுக் கொண்டு வரி ஏய்ப்பு முதலான பல்வேறு முறைகேடுகளையும் செய்யும் இவர்கள், வீட்டுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை வாரத்தில் ஒரு நாள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கின்றனர். தங்களது வீடுகளில் நவீன ஜெனரேட்டர்கள் அமைத்து மின்னுற்பத்தி செய்யும் இவர்களது பொருளாதார வலிமை இவ்வாறு பேச வைக்கிறது.
ரூ.14000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அணு உலைகளை அப்படியே விட்டு விட முடியாது என மன்மோகன் சிங் ரஷ்யாவில்
பேசியிருக்கிறார். ரூபாய் 5000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்ட சேது
சமுத்திரத் திட்டம் மட்டும் நிறுத்தி வைக்கப்படவில்லையா? அது மட்டும்
யாருடைய பணம்? சேது சமுத்திரத் திட்டத்தால் பவளப் பாறைகள் அழிந்து
இந்தியப் பெருங்கடலில் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிப்படையும்; சேது
கால்வாயில் சிறிய ரக கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும்; தற்போதுள்ள பெரிய கப்பல்கள் இதன் வழியே செல்ல வாய்ப்பில்லை என்ற பல உருப்படியான காரணங்கள் கூறப்பட்ட போது அதையெல்லாம் மீறி இத்திட்டம் தொடங்கப்பட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது. இந்துக்கடவுள் ராமன் கட்டிய பாலம் கடலுக்கடியில் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தவுடன் உச்சநீதி மன்றத்தால் தடை அளிக்கப்பட்டது. இப்படி எவ்வளவோ பணம் இந்தியாவில் விரயமாயிருக்க தமிழகம் அழிந்தாலும் பரவாயில்லை இதை நிறைவேற்றியே தீருவோம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்க்க இங்குள்ளவர்களுக்கு துப்பில்லை.
மாறாக பாமர மக்களை மொழி - இன வெறியூட்டி அதன் மூலம் சுய லாபங்கள் அடையவே இங்குள்ளவர்கள் விரும்புகின்றனர். இவர்களிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெறியூட்டப்பட்ட இந்த முல்லைப் பெரியாறு அணை போராட்டக்காரர்கள் மத்தியில், பல மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கிடையில் நீண்ட போராட்டக் களத்தில் இருக்கும் கூடங்குளம் பகுதி அணு உலை எதிர்ப்பியக்க தலித், பிற்படுத்தப்பட்ட, மீனவ மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களைப் பார்த்தாவது மொழி / மத / இன வெறியர்கள் குற்ற உணர்விற்கு ஆட்பட்டால் நல்லது.
இவர்கள் தங்களுக்காகவும் தங்கள் சந்ததிகளுக்காகவும் மட்டும்
போராடவில்லை. ஒட்டு மொத்த தமிழக மக்களுக்காகவும் ஏன் உலகிற்காகவும் போராடுகிறார்கள். இவர்களது போராட்டம் வென்றால் அது மனிதகுலத்திற்கு கிடைத்த வெற்றி. தோற்றால் அது மனித குலத்திற்கே தோல்வி. இவர்கள் சாதிக்க முடியாமற் போனாலும் இப்போராட்டம் இந்திய அணு உலைகள் எதிர்ப்பில் ஒரு மைல் கல்லாக இருக்கும். போலித்தனமான மத / இன / மொழி வெறிக் கிளர்ச்சியாளர்களால் எதையும் சாதிக்க முடியாதென்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம்.

5 கருத்துகள்:
பெரியாரின் அணுகு முறையே கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை சீரழித்து உள்ளது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக் காட்டு. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான். உங்கள மாதிரி ஆட்கள் குடும்பத்துக்குள் சண்டையை வைத்து வெளியாட்களுக்கு காட்டிக் கொடுத்து குடும்பத்தை மட்டுமில்லாம்ல் ஊரையே அழித்துவிடுவீர்கள். எப்படி ஐயா தலைவன் வழியில் இப்படி கம்பா நிக்கிறீங்க.
vilakkamaana padhivu satru sindhiungal thamizhargale
nandri
எனது பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. ஏன் பெயரில்லாத முகமூடியை அணிந்துகொள்கிறீர்கள்? பெரியார்தான் எல்லாவற்றையும் சீரழித்தார் என்பது இந்துத்துவா-மத வெறியர்களின் வழக்கமான அவதூறு. இதிலிருந்து நீங்கள் யாரென்று புரிகிறது.
எது குடும்பம்? எது குடும்பச்சண்டை? எந்தக் குடும்பத்தில் சாதிவெறி தலைவிரித்தாடுகிறது? உண்மையில் கட்டிக்கொடுப்பது நீங்கள்தான். பெரியாறு அணைப்பிரச்சினையில் நாம் செய்யவேண்டியது என்ன? ஆனால் இங்கு நடப்பதென்ன? ஒரு பிரச்சினையை உண்மையில் பாழாக்குவது இந்த மாதிரியான வெறித்தனமான நடவடிக்கைகள்தான்.
கொஞ்சம் யோசியுங்கள். மூன்று பேர் மரணதண்டனைப் பிரச்சினையிலும் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் அவ்வழக்கின் போக்கை திசை மாற்றியதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீதிமன்றங்கள் மீது நமக்கு விமர்சனங்கள் இருப்பினும் அவற்றை நாடாமல் இருக்க வாய்பில்லைத்தானே!
இறுதியாக ஒன்று:
பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்ளும் இன்றைய தலைவர்களின் செயல்பாட்டிற்கு பெரியாரை குற்றம் சொல்வது அழகல்ல.அவரின் கருத்துகளை வெறும் அவதூறுகளால் கடக்கவேண்டாம்.
அன்புடன்...
மு.சிவகுருநாதன்
வணக்கம்.mundagakkannan
எனது பதிவு குறித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.
தோழமையுடன்...
மு.சிவகுருநாதன்
ஒரு திருத்தம்
காட்டிக்கொடுப்பது -சரி, கட்டிக்கொடுப்பது- தவறு
எனது பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. ஏன் பெயரில்லாத முகமூடியை அணிந்துகொள்கிறீர்கள்? பெரியார்தான் எல்லாவற்றையும் சீரழித்தார் என்பது இந்துத்துவா-மத வெறியர்களின் வழக்கமான அவதூறு. இதிலிருந்து நீங்கள் யாரென்று புரிகிறது.
எது குடும்பம்? எது குடும்பச்சண்டை? எந்தக் குடும்பத்தில் சாதிவெறி தலைவிரித்தாடுகிறது? உண்மையில் காட்டிக்கொடுப்பது நீங்கள்தான். பெரியாறு அணைப்பிரச்சினையில் நாம் செய்யவேண்டியது என்ன? ஆனால் இங்கு நடப்பதென்ன? ஒரு பிரச்சினையை உண்மையில் பாழாக்குவது இந்த மாதிரியான வெறித்தனமான நடவடிக்கைகள்தான்.
கொஞ்சம் யோசியுங்கள். மூன்று பேர் மரணதண்டனைப் பிரச்சினையிலும் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் அவ்வழக்கின் போக்கை திசை மாற்றியதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீதிமன்றங்கள் மீது நமக்கு விமர்சனங்கள் இருப்பினும் அவற்றை நாடாமல் இருக்க வாய்பில்லைத்தானே!
இறுதியாக ஒன்று:-

கருத்துரையிடுக