திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு
-மு.சிவகுருநாதன்
வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை கணிசமாக உயர்த்திய மத்திய அரசு உப்பு சப்பில்லாத காரணங்களைச் சொன்னதோடு தனது பொறுப்புகளையும் தட்டிகழித்தது. பெட்ரோலியத்துறை அமைச்சர் உள்நாட்டில் இல்லாத, நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த சமயத்தில் திட்டமிட்ட இவ்விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. விலை நிர்ணயம் எங்கள் கைகளில் இல்லை, எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன, அதில் நாங்கள் தலையிடமுடியாது என்றெல்லாம் சொல்லி தப்பிக்கப் பார்த்த மத்திய அரசு அம்பலப்பட்டுப் போனது.
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயற்கையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கும் அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சொல்லுகிற காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மங்களுர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முடக்கம், பெட்ரோல், டீசல் தேவை அதிகரிப்பு காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் தேவை ஏன் அதிகரித்தது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்குவதில்லை. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டயுடன் பதுக்கல் நடைபெற வழியுண்டு. பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் அவதியுற்ற வாகன உபயோகிப்பாளர்கள் அதிகமாக வாங்கி டேங்கை நிரப்பிக்கொள்ள முயல்வர். அப்போது தட்டுப்பாடு வர வழிவகையுண்டு. ஆனால் இவர்கள் சொல்லும் காரணம் கொஞ்சம் கூட ஏற்கக் கூடியதாக இல்லை.
பெட்ரோல் தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு சமயங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு பலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் இங்குள்ள போக்குவரத்து வசதிகளைப் பார்க்கும்போது அது எவ்வளவு கொடிய யோசனை என்பது விளங்கும். இன்று இவ்வளவு இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கும்போதே பேருந்து, தொடர்வண்டிகளில் கூட்டம் அலைமோதுவதை யாரும் உணராமல் இருக்கமுடியாது.
இவ்வாறு செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டின் உபரி விளைவாக காய்கறி உள்ளிட்ட விலைகள் மேலும் உயரப்போகிறது. இந்தச் சுமையையும் மக்களே சுமந்தாகவேண்டும்.
செயற்கையாக உருவாக்கப்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டின் மூலம் மத்திய அரசும் அதன் பின்னணியிலுள்ள எண்ணெய் நிறுவனங்களும் பொதுமக்கள் மத்தியில் பெட்ரோல் விலை உயர்வை மறக்கடிக்க வைத்துள்ளன. இன்று மத்தியதர வர்க்கம் பெட்ரோல் என்ன விலையிருந்தாலும் பரவாயில்லை, ஒழுங்காகக் கிடைத்தால் போதும் என்கிற மனநிலைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன்மூலம் அற்ப மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் மைய அரசின் இறுதிகாலத்தை இனிமையாக ஓட்டமுடியாது. இதன் விளைவுகளை இவர்கள் அறுவடை செய்தே தீருவார்கள். ஆனால் அது பா.ஜ.க. போன்ற வலதுசாரி சக்திகளுக்குச் சாதகமாக இருக்குமே தவிர பாமர மக்களுக்கு எந்நாளும் சாதகமாக இருக்காது என்று மட்டும் இப்போதே அவதானிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக