வெள்ளி, ஜனவரி 16, 2015

தமிழுலகம் மறந்த ஆய்வறிஞர் : மயிலை சீனி. வேங்கடசாமி



தமிழுலகம் மறந்த ஆய்வறிஞர் : மயிலை சீனி. வேங்கடசாமி
                    -    மு.சிவகுருநாதன்
      பள்ளி இறுதி வகுப்பைத் (பத்தாம் வகுப்பு) தாண்டாதவர்; அதனால் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிசெய்யும் வாய்ப்பின்றி இடைநிலை ஆசிரியராக பணிக்காலம் முழுதும் இருந்தவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இருப்பினும் பல்கலைக்கழகங்கள் எதுவும் செய்யத்துணியாத ஓர் காரியத்தை செய்து அவர் செய்து முடித்தார். தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக இருந்த களப்பிரர் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து, அவரே சொல்கிறபடி விடியற்காலமாக ஆக்கியவர்.

     கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார் போன்ற எந்த வரலாற்று அறிஞராகட்டும், தமிழறிஞராகட்டும் களப்பிரர் போல் இவ்வளவு வெறுப்பு உமிழப்பட்ட அரச வம்சம் இருக்க வாய்ப்பில்லை. இவர்களது மிதமிஞ்சிய சைவப்பற்று மற்றும் சோழப்பெருமை ஆய்வுக் கண்ணோட்டத்தையே சாகடித்தது வரலாற்றெழுதியலின் மாபெரும் அவலம். இவர்களும் இவர்களைப் பின்பற்றி வரலாறு எழுதிய பலரும் களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் இருண்ட குலம், இருண்ட காலம், இருள் படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள், நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை – மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ் மொழி – பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தனர்.

      எனது மதம், பிறர் மதம் என்று கொள்ளாமல் காய்தல், உவத்தல் இல்லாமல் நடுநிலை நின்று செம்பொருள் காணவேண்டும் என இதற்கென கொள்கை வகுத்து அதன்படி செயலாற்றியவர். இத்தகைய மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டுமென வலியுறுத்தியவர் மயிலையார். அந்த வகையில் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ் நூல்கள் போன்றவை மிகவும் முக்கியமானவை.  இவருடைய எழுத்துப்பணி நீதிக்கட்சியின் திராவிடன் இதழிலிருந்து தொடங்குகிறது. பின்னர் பெரியாரின் குடியரசு இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறார். இலட்சுமி, ஆராய்ச்சி, செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், ஆனந்த போதினி, தமிழ்நாடு, ஈழகேசரி இன்னபிற இதழ்களில் இவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார்.

     சைவப் பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வந்த மயிலையார் பிறரைப் போல சைவ – சோழப் பெருமை மட்டும் பேசவில்லை. மாறாக ஜனநாயகத் தன்மையோடு களப்பிரர்கள் அரச பாரம்பரியமற்றவர்கள்; இவர்களால் மொழிக்கும் பண்பாட்டிற்கும் எவ்வித பங்களிப்பையும் செய்ய இயலாது என்ற பொய்மையை தோலுரித்தார். இவரது ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டியது தமிழ் ஆய்வுலகத்தின் கடமை. விடியல் பதிப்பகம் வெளியிட்ட களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலில் அ.மார்க்ஸ் விரிவான ஆய்வுரை எழுதியுள்ளார். இதில் மயிலையார் வந்தடைந்த முடிவுகளைத் தாண்டி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆய்வுகளையும் இணைத்து களப்பிரர் ஆய்வில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறார். மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்கள் செம்பதிப்பாக வந்தால் மட்டும் போதாது; ஆய்வுப்பதிப்பாக வெளிவருதல் வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இனியும் தமிழ் ஆய்வுலகம் மயிலையாரை புறக்கணிக்கக்கூடாது.

     2001 இல் தமிழக அரசு மயிலையாரின் நூல்களை அரசுடைமையாக்கியது. இருப்பினும் ஆதிக்க, இந்துத்துவ வரலாற்றாய்வாளர்களால் இருண்டகாலம் என இருட்டடிப்பு செய்யப்பட்ட களப்பிரர் காலம், சமணபவுத்தம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் முதலியவற்றை தனியாளாய் வெளி உலகிற்குக் கொண்டுவந்த மயிலையாரின் பல்வேறு நூற்கள் இன்று உரிய பதிப்புகள் பெறாமல் முடங்கிப்போய் உள்ளன. இந்நிலை மாறவேண்டும்.
     களப்பிரர் ஆட்சியில் தமிழகம், புத்தரின் வரலாறு, சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் போன்ற ஒருசில நூல்கள் மட்டுமே விடியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாவை, சந்தியா, எதிர், பூம்புகார், நாம் தமிழர் ஆகிய பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. இவரது 30 நூல்களை புலவர் கோ.தேவராசன் பதிப்பாசிரியராகக் கொண்டு மீனா கோபால், தேன், எம்.வெற்றியரசி, வசந்தா, சாரதா மாணிக்கம், எம்.ஏழுமலை ஆகிய பதிப்பகங்கள் வெளியீட்டு, தற்போது இவை அச்சில் இல்லாத நிலையே நீடிக்கிறது.

     இன்றைய வியாபாரப் பதிப்புலகில் இதை யார் செய்வார்கள் என்பதுதான் சிக்கல். பெரியாருக்கு ஓர் ஆனைமுத்து கிடைத்ததுபோல் மயிலையாருக்கு குறிப்பிடத்தகுந்த யாரும் இல்லாதது பெருத்த ஏமாற்றமளிக்கும் உண்மை.
  
     பல்கலைக் கழகங்களோ, பெருநிறுவனங்களோ, தமிழ்ப் பேராசிரியர்களோ செய்யாத ஆய்வுப்பணிகளை சாதாரண இடைநிலை ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே செய்து அளப்பரிய சாதனையை நிகழ்த்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். எனவேதான் ஆராய்ச்சிப் பேரறிஞர் எனப் போற்றப்பட்டவர். இவர் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு முன்னதாக ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்றவர். எனவே தமது நூல்களுக்குரிய விளக்கப்படங்களை தாமே அழகுற வரைந்து வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். அச்சகத்தில் கிரந்த எழுத்துக்கள் இல்லாததால் ஜைனர் என்பது சமணர் என்று அச்சிடப்பட்டுள்ளது. இதை ஜைனர்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார். இதிலிருந்து இவரது பெருந்தன்மை விளங்குகிறது.

    அன்றிலிருந்து இன்று வரை பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வுகளுக்கும் என்றுமே தீராத பகை போலும். இவைகள் சாதித்தவைகளைவிட தனிநபர் சாதனைகளே மிக அதிகம். தனது ஆய்வுகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதை பல நூல்களின் முன்னுரைகளில் குறிப்பாலும் வெளிப்படையாகவும் இவர் உணர்த்துகிறார். ஆண்டுகள் பல கடந்தாலும் சூழலில் எந்த மாற்றமுமில்லை. இதனால்தான் பாரதிதாசன்
“பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச்சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”.    
                                   என்று சினங்கொள்கிறார்.

     மயிலையாருக்கு சமண, பவுத்த மதங்களின் மீது தீராக்காதல் இருந்து வந்துள்ளது. அதனால்தான் என்னவோ திருமணம் செய்துகொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ்ந்தார் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. தமிழின்பால் அவருக்கிருந்த பற்று தமிழ் மொழிக்குப் பெருமை செய்தோரைத் தேடிச் சென்று பாராட்டத் தோன்றியிருக்கிறது. எனவேதான் சோழர்கள், சைவம் ஆகியவற்றைத் தாண்டி பிறர் செய்த பணிகளைத் தேடித்தேடித் தொகுத்திருக்கிறார். இங்கு சோழப்பெருமை பேசப்படும் பிற்காலச் சோழர்கள் காலத்தில் குறிப்பாக முதலாம் ராஜராஜன் காலம் தொடங்கி 100 ஆண்டுகளில் தமிழுக்கு எந்தவித பங்களிப்புகளும் இல்லை என்பதுதானே உண்மை. இக்காலகட்டத்தில் நிறைய சமஸ்கிருத கல்விநிலையங்கள் தொடங்கப்பட்டதை யாரால் மறுக்கமுடியும்?

    அன்பழகன், தங்கமணி என்ற உறவினர் வீட்டுக் குழந்தைகள் இவரது வீட்டில் தத்துப்பிள்ளைகளாய் வளர்கிறார்கள். அவர்களது திடீர் மரணம் மயிலையாரை கடுமையாக பாதிக்கிறது. நூலைப்படித்து அதன்மூலம் மனத்துயரைப் போக்க எண்ணி யாப்பெருங்கல விருத்தி என்னும் நூலை எடுத்துப் படித்ததாக எழுதுகிறார்.

   மறைந்துபோன குழந்தைகள் போல எண்ணற்ற தமிழ் நூல்கள் மறைந்து போன அவலத்தைத் தேடிக் கண்டு மறைந்து போன நூல்கள் உருவாக்கிய வரலாற்றைக் கூறும்போது துயரம் நம்மையும் பற்றிக்கொள்கிறது. இந்நூலில் 196 மறைந்துபோன நூல்களையும் இன்னும்பிற பெயர் தெரியாத, சிதைவுண்ட நூல்களையும் எடுத்துக்காட்டுகிறார். படையெடுப்பு, கடல்கோள் ஆகியவற்றால் நூல்கள் அழிந்ததைவிட சமயப்பகையாலும் ஆடிப்பெருக்கு, போகி, மாசிமகம், சரஸ்வதி பூசை ஆகிய மூடப்பழக்கத்தாலும் அழிக்கப்பட்டதே ஏராளம்.

    1900 டிசம்பர் 16 இல் பிறந்த மயிலையார் 1980 மே 08 இல் இறக்கும்வரை ஓயாது தமிழ்ப் பணியாற்றுயிருக்கிறார். இவரது தேடல் பல்வேறு தளங்களில் புதிய சிந்தனைகளைக் கொண்டு சேர்த்திருக்கிறது. கோயில்களில் நடைபெறும் திருப்பாவாடை நிகழ்வை ஆய்ந்து அது ஓர் இனிப்புப் பண்டம் என்று விளக்குகிறார். அத்திரி எனும் கோவேறு கழுதை பற்றியும் சொல்லாய்வு நடத்துகிறார். கந்தி, கெளந்தி என்பன அருகக் கடவுளைத் தொழும் சமண சமயப் பெண் துறவிகளைக் குறிப்பதை விளக்குகிறார். அவ்வை என்ற சொல் வயது முதிர்ந்த பெண்ணைக் குறிப்பதாகச் சொல்லும் இவர் அவ்வை ஏன் இளமையில் கிழவியாக்கப்பட்டாள் என்பதை விளக்க முற்படுவதில்லை. அதியமான் நெடுமான் அஞ்சி அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த கதையைச் சொல்லும்போதும் தமிழ் மூதாட்டி ஏன் அப்படியானாள் என காண்பதில்லை. ஆனால் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் துலுக்க நாச்சியாரைத் திருமணம் செய்திருந்தால் சுன்னத்து செய்து, மாட்டுக்கறியும் புலால் உணவும் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று வினா எழுப்பி வடிகட்டின முட்டாள்கள் இதையும் நம்புகிறார்களே என்று ஆதங்கப்படுகிறார்.

    பவுத்த-ஜைன மத சிற்பங்களுக்கும் சைவ-வைணவ மத சிற்பங்களுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை மயிலையார் புலப்படுத்துகிறார். புத்தர், தீர்த்தங்கரர் அருகர் உருவங்களுக்கு மட்டும் இரு கைகளும் ஏனைய சிறு தெய்வங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகள் இருக்கின்றன. இதற்கு நேர்மாறாக சிவன், பெருமாள் சிற்பங்களுக்கு  நான்கு அல்லது எட்டு கைகளும் சிறு தெய்வங்களுக்கு வெறும் இரண்டு கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

    வையாபுரிப்பிள்ளை தொல்காப்பிய காலத்தைப் பின்னுக்குத் தள்ளியதை இவரால் பொறுக்க முடிவதில்லை. எனவே மிகக்கடுமையாக சாடுகிறார். பிராமி எழுத்து தமிழுக்கு வருவதற்கு முன்னமே தமிழ் எழுத்துக்கள் வழக்கில் இருந்ததை ஆதாரங்களுடன் நிறுவினார்.

       பிராமி எழுத்துக்களை வாசித்து இராவ்சாகிப் எச்.கிருஷ்ண சாஸ்திரி, கே.வி.சுப்பிரமணிய அய்யர், சி.நாராயண ராவ், ஐராவதம் மகாதேவன், டி.வி.மகாலிங்கம் போன்றவர்களுடன் பல இடங்களில் முரண்பட்டும் சிலவற்றில் இசைந்தும் விளக்கம் தருகிறார். இவரது ஆய்வுகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வாழும் காலத்திலும் இன்றும் பெரும்பாலோரின் புறக்கணிப்பிற்கு உள்ளானவராகவே இவர் உள்ளார்.

     அன்றைய காலத்தின் தமிழ்ப் பெருமைக்குள் மட்டும் சிக்கிக் கொண்டவராக மயிலையாரைக் கருத முடிவதில்லை. “மறைமலையடிகளைச் சந்தித்துத் திரும்பும்போது புனித யாத்திரையின் உணர்வு தோன்றுகிறது. இதற்குக் காரணம் சமயப்பற்று, சாத்திரப்பற்று ஆகியன அல்ல; அவரது பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படும் கலப்பற்ற நல்ல இனிய தமிழ்” என்கிறார். இருப்பினும் சமகால அறிஞர்களிடமிருந்து மாறுபட்ட பார்வையை தனது ஆய்வுகளின் வழி வந்தடைந்தார் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

   நரசிம்மவர்ம பல்லவனின் சிறப்புப்பெயர் மாமல்லன் என்பது. இதனாலே இந்நகரம் மாமல்லபுரம் என அழைக்கப்பட்டது. பிறகு மகாபலிபுரம் எனத் திரிந்தது. மகாபலி சக்கரவர்த்திக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இங்குள்ள ஓர் கற்பாறைக் குன்றில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மகாபாரதக் கதையிலுள்ள அர்ச்சுணன் தபசு என்றும் ராமாயணக்கதையிலுள்ள பகீரதன் தபசு என்றும் இருவேறு கருத்து நிலவுகிறது. இவையிரண்டையும் மறுத்து   இரண்டாவத் ஜைனத் தீர்த்தங்கரரான அஜிதநாதசுவாமி புராணத்தில் வரும் சகர சக்கரவர்த்தியின் கதையே இச்சிற்பக்காட்சியில் இருப்பதை மயிலையார் தெளிவுபடுத்துகிறார்.

  சமணம் – பவுத்தம் வேறுபாடுகள் படித்தவர்களுக்குக் கூட தெரியவில்லை என்று வருத்தப்படும் மயிலையார் மனுநீதிச்சோழன், தேவரடியார்கள் தானம் (அடிமை வியாபாரம்), பரத நாட்டியம் போன்றவற்றை ஒன்றுமே சொல்லாமல் கடந்துவிடுவது நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.

   மனுச்சோழன் புராணக்கதையை பெரியபுராணம், சிலப்பதிகாரம்-மணிமேகலை வழியாக எடுத்துக்காட்டுகிறார். இதே கதை மகாவம்சத்தில் கூறப்பட்டாலும் இறந்த மகன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதாக அந்நூல் கூறவில்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு முடித்துக்கொள்கிறார். மனுதர்மம், இப்புராணக் கதையின் நம்பகம் குறித்தும் யாதொரு கேள்வியும் எழுப்பவில்லை. 

  முதலாம் குலோத்துங்க சோழனின் 29 – வது ஆண்டு சாசனம் (கி.பி.1098) தேவரடியார்கள் தானமளிக்கப்பட்டதை (விற்கப்பட்டதை) சொல்லும் மயிலையார் பரத நாட்டியத்தை சொல்லிக்கொடுக்கும் நட்டுவர் எனும் தலைக்கோல் ஆசான்கள் தஞ்சாவூரில் அதிகமாக இருக்கிறார்கள் என்பதோடு முடித்துக்கொள்கிறார். இந்திய நாட்டியங்களில் தலைசிறந்தது என அமெரிக்கர் சொன்னது உண்மை; வெறும் தற்புகழ்ச்சியல்ல என்று குறிப்பிடும் மயிலையார் தேவதாசி முறை ஒழிப்பை சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பதையும் அவதானிக்கவேண்டியுள்ளது. இவரது கருத்துகள் வெறுமனே கடந்துபோவதாக மட்டும் இருக்கமுடியாது.

    குத்தூசி குருசாமி-குஞ்சிதம் அம்மாள் இவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அம்மாள் தாழ்ந்த குலம் என கருதப்பட்ட ( ஏன் கருதப்பட்டது?!) இசை வேளாளர் குலத்தில் பிறந்தவர்; இவர்களுடைய திருமணம் சாதி மறுப்பு, சீர்சிருத்தத் திருமணம் என்று கூறுவதோடு நில்லாது குஞ்சிதம் அம்மாள் பூ, நகை, குங்குமம் பயன்படுத்தாது குறித்து அவருடன் வாதிட்டதாகக் கூறுகிறார். மேலும் அவர்கள் குழந்தை வேண்டாம் என பல ஆண்டுகளாக கருத்தடை செய்துவந்த நிலை மாறி இரு குழந்தைகள் பிறந்தபோது தாத்தாவின் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்று சொல்கிறார். குழந்தைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தியதையும் குறிப்பிடுகிறார். 1926 இல் எழுதப்பட்ட ஓர் கட்டுரையில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பால்ய விவாகம் ஒழிப்பு ஆகியவற்றை மட்டுமே ஆசார சீர்திருத்தமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் எவ்விடத்திலும் தேவதாசி முறை குறித்து எதுவும் சொன்னாரில்லை.

   பிணங்களைத் பெட்டிகளில் வைத்து மூடி எடுத்துச் செல்லுதல், எரியூட்டுதல், வாத்தியங்களை விலக்குதல் என சவச்சடங்கில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கிறார். பிணங்களை புதைப்பதால் தீமை உண்டாகிறது; எரியூட்ட வேண்டும் என்கிறார். புகையைவிட புதைப்பதால் தீமை அதிகம் என்றும் கூறுகிறார். கிருஸ்தவர்கள் வாழ்விலும் சாவிலும் வாசிக்கும் வாத்தியங்களில் வேறுபாடு உண்டு; ஆனால் நம்மவர்களின் வாத்தியங்களில் ராக வேறுபாடு இல்லை என்கிறார். தமிழர் பண்பாடு, இசை, பகுத்தறிவு, அறிவியல் பற்றி பல இடங்களில் எழுதிய மயிலையாரின் இக்கருத்து அதிர்ச்சியளிக்கக்கூடியது.

     இம்மாத இலக்கிய இதழொன்றில் பத்தி எழுதும் தமிழவன், சைவச்சார்பு இருப்பினும் மறைமலையடிகள், மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்கள் தத்துவவாதிகளே என்று சொல்கிறார். கல்வியற்புலத்திலிருந்து வந்தவர்களை மட்டும் ஏற்கும் மனச்சாய்வின் வெளிப்பாடு இது. மயிலை சீனி.வேங்கடசாமி போன்றவர்கள் மறக்கக்கடிக்கப்படுவதன் பின்னணியையும் இதனோடு இணைத்துப்பார்க்கலாம்.

    இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் புராணக்கதைகளின் வாயிலாகவும் வரலாறு எழுதுவது முழுமையானதாக இருக்கமுடியாது. அது வெறும் புனைவாகவே இருக்கும். ஒரு நாட்டின் பன்மைத்தன்மைகளைக் கணக்கில்கொண்டு நடுநிலையோடு ஆய்வுநோக்கில் எழுதப்படுவதே வரலாறாக இருக்கமுடியும். அத்தகைய நோக்கில் மயிலையார் ஆய்வுகளை ஆய்வு செய்து அவரது பணிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது தமிழ் அறிவுலகத்தின் கடமையாகும்.
                                     
       (டிசம்பர் 16 மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் 114 –வது பிறந்த நாள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக