புதன், ஜனவரி 28, 2015

அரசுகள் + அரசு ஊழியர்கள் = மதச்சார்பின்மைஅரசுகள் + அரசு ஊழியர்கள் = மதச்சார்பின்மை
                                                         - முசிவகுருநாதன் 
                   
    தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் செ. உமாசங்கர் கிருஸ்தவ மதப் பரப்புரை செய்ததும் இது தொடர்ந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளதும் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

    நமது அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்தை மதச்சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக வரையறுத்துள்ளது. இதை நமது ஆட்சியாளர்களுக்கே அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இங்கு முடிந்த அளவிற்கு இந்து அடிப்படைவாதத்தை அனைத்து நிலைகளிலும் பரப்பிவிட்டு இந்துத்துவம் ஓர் வாழ்க்கைமுறை என்று கதைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். 

    அரசின் செயல்பாடுகளிலும் அனைத்து மட்டங்களில் உள்ள ஊழியர்களின் செயல்பாடுகளிலும் உறுதியான மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படவேண்டும் என்பதே சட்டதோடு சேர்ந்து பலரும் வலியுறுத்துவது. ஆனால் இங்கு நடப்பதென்ன?

   மத்திய பா.ஜ.க. அரசாகட்டும் தமிழகம் போன்ற பல மாநில அரசுகளாகட்டும் இந்துத்துவ அரசுகளாகவே செயல்படுகின்றன. அரசு ஊழியர்கள் பெரும்பான்மை மத நடவடிக்கை ஈடுபடுதலோ அல்லது அவற்றிற்கு சேவை செய்தலோ இங்கு பிரச்சினைக்குள்ளாக்கப் படுவதில்லை. சிறுபான்மை மதத்தினர் சார்ந்து இங்கு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு உமாசங்கரின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது என்று பொருளல்ல. 

   பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் இந்து மதம் சார்ந்த நடைமுறைகள் இங்கு மரபாக கட்டமைக்கப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டுதல், பூமி பூசை செய்தல், திறப்பு விழா என்ற பெயரில் கணபதி ஹோமம் நடத்துதல் என ஒவ்வொரு நிலைகளிலும் இந்து மத நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு பெருமளவு எதிர்ப்பின்றி அரங்கேற்றப்படுகிறது.

  அரசு அலுவலகத்திற்குள் மற்றும் அலுவலக வளாகத்திற்குள் நிறைய இடங்களில் கோயில்கள் கூட கட்டப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இந்துக் கடவுளர்களின் படங்கள் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் மாட்டப்படுகின்றன. சரஸ்வதி பூசை கொண்டாடாத பள்ளிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசு அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

  முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சரஸ்வதி வந்தனம் பாடியதை எதிர்த்து வெளிநடப்பு செய்த தமிழகத்து போலி திராவிடக் கட்சி சரஸ்வதி பூசையைப் பள்ளிகளில் கொண்டாடக்கூடாது என அரசாணை வெளியிட்டதோடு தமது கடமை முடிந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை அரசும் கல்வித்துறையும் தட்டிக்கழிக்கின்றன. 

   இருக்கின்ற மதவாதம் போதாதென்று முந்தைய தி.மு.க. அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாட வேண்டுமென ஆணையிட்டது. பொங்கல் கூட இங்கு இந்துமத நடைமுறைகளைப் பின்பற்றி அரங்கேற்றப்படுதலை நாம் வேடிக்கைப் பார்த்து கொண்டுள்ளோம். மதநீக்கம் செய்யப்பட்ட பண்டிகை இங்கு சாத்தியமா என்பது ஆராயத்தக்கது. 

  நமது அரசியல் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு அளித்திருக்கக் கூடிய மத சுதந்திர உரிமை அரசு ஊழியர்களுக்கு அப்படியே பொருத்திப் பார்க்கமுடியாது. உமாசங்கரின் வாதம் சரியானதல்ல. அவர் மதப்பரப்புரை செய்ய விரும்பினால் அரசுப் பதவியைவிட்டு விலகிச் செய்வதுதான் நல்லது. ஆனால் பல்வேறு மத நடவடிக்கைகளைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் நமது அரசுகள் இதில் மட்டும் முனைப்பு காட்டுவது கண்டிக்கபடவேண்டியதாகும். உமாசங்கரை எதிர்த்துப் பிரச்சினை செய்பவர்கள் பெருமாள்முருகனுக்கு எதிராக நின்ற அதே இந்துத்துவ பாசிச சக்திகள் என்பதை மறுக்கமுடியாது. 

    இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் தமிழக அரசும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு எந்திரம் முழுமையும் ஜெ.ஜெயலலிதாவின் விடுதலைக்காக அனைத்து கோயில்களிலும் யாகங்கள் நடத்தி வருவதை சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் உள்ளது. உமாசங்கர் மீது எடுக்கவேண்டிய ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எடுக்கவேண்டியிருக்கும். இதைச் செய்வது யார்?
   நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஊழியர்களே. இவர்களது பணிக்காலம் ஐந்தாண்டுகள் அவ்வளவே. இவர்களில் பலர் சட்டங்களை விதிமுறைகளைப் பின்பற்றியதுண்டா? அண்மைய உதாரணங்கள் கூட இல்லை என்பதை நிருபிக்கும். .
 

   ‘காதல் ஜிகாத்’ செய்கிறார்கள் என்று இஸ்லாமியர்களை இழிவுபடுத்திய யோகி ஆதித்ய நாத், பா.ஜ.க. விற்கு வாக்களிக்கதவர்களின் பிறப்பை இழிவுபடுத்திய சாத்வி ஜோதி நிரஞ்சனா, மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதத்தில் சேரவேண்டிய சதீஷ் கவுதம், இந்துப் பெண்கள் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றதோடு நில்லாது கோட்சே தேசபக்தர் என்றும் பேசிய சாக்‌ஷி மகராஜ் ஆகியோர் இங்கு தங்குதடையின்றி பேசவும், உலவவும் அதிகப்படியான உரிமைகள் வழங்கப்படுவது ஏன் கேள்விக்குள்ளாக்கப் படவில்லை?   பெரும்பான்மையினர் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு வாழ்க்கைமுறை என்று தப்பித்துக் கொள்ளமுடிகிறது. ஆனால் சிறுபான்மையினர் எதையும் சொல்லாமல்கூட தப்பிக்கமுடியாது என்கிற நிலை இருப்பது இந்திய ஜனநாயக்கத்தை கேலிக்கூத்தாக்குவதாகும்.

  பணி நிமித்தமாக அயோத்தி வந்த மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்பால் பாலராமர் விக்கிரகத்தை வணங்க மறுத்த செய்தியைப் படிக்கும்போது (இது மோடியின் காலம் – அ.மார்க்ஸ்)  இவரைப்போல பலர் இந்தியாவில் இருப்பதால் இன்னும்கூட மதச்சார்பின்மை மிச்சமிருப்பதை உணர முடிகிறது.

   இறுதியாக, அடித்தட்டு தலித் மக்களிடமிருந்து வரும் தலைவர்கள் மத சேவகம் செய்யப்போய்விட்டால் இம்மக்களுக்களுக்கான விடுதலை என்னாவது? உமாசங்கரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைவிட தலித் மக்களின் விடுதலை முதன்மையானது.
      
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக