வியாழன், ஜனவரி 29, 2015

சிற்றிதழ் அறிமுகம்: திணை காலாண்டிதழ்



சிற்றிதழ் அறிமுகம்: திணை காலாண்டிதழ்
                      
                       - மு.சிவகுருநாதன்



      கலை இலக்கியப் பெருமன்ற இதழாக குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த திணை காலாண்டிதழ் பல ஆண்டுகளுக்கு முன்பு நின்றுபோனது. சிறுபத்தரிக்கைகளுக்கு இது இயல்பான ஒன்றுதான். தற்போது திணை காலாண்டிதழ் மீண்டும் வெளிவருவது மகிழ்வான செய்தி. சி.சொக்கலிங்கம் (நிர்வாக ஆசிரியர்), வி.சிவராமன் (ஆசிரியர்), நட.சிவகுமார் (பொறுப்பாசிரியர்) ஆகியோரது பொறுப்பில் திணை 6-வது இதழ் (டிசம்பர் 2014 – மார்ச் 2015) தற்போது வெளியாகியுள்ளது.

   இந்துத்துவ ஆட்சியாளர்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டிணைவை வலியுறுத்துவதோடு கலாச்சார அரசியல் மற்றும் நாட்டார் மரபிலுள்ள பிற்போக்குத்தனங்கள் குறித்தும் எச்சரிக்கை செய்திருப்பது வரவேற்கவேண்டிய அம்சமாகும்.

   “இந்திய-தமிழகச் சமூக அமைப்பின் அடிப்படை அலகுகள் சாதிகள் என்பதை இடதுசாரிகள் கோட்பாட்டு ரீதியாக ஒப்புக்கொள்ளவில்லை. மூன்றாம் உலக நாடுகளுக்க்கான தேசியக் கோட்பாடு இங்கு உருவாக்கப்படவில்லை. உள்ளூர் எதார்த்த நிலையிலிருந்து நமக்கான மார்க்சியத்தை உருவாக்கத் தவறிவிட்டோம். மூன்றாம் உலக நாடுகளின் புதிய இடதுசாரிகள் தமது நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளைச் சொந்த மொழியில் பேசுபவர்களாகப் பரிணமிப்பது ஒன்றே சரியான தீர்வு”, என ந.முத்துமோகன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். 

     “சிலப்பதிகாரத்தை புனைவு அல்லது வரலாறு என்ற வரையறைக்குள் பொருத்துவதற்கு சிரமப்படுவதைக் காட்டிலும் புனைவு அல்லது அறிவியல் என்று பிரித்தறியப்பட்டிராத தமிழ்ச்சூழலில் புனைவின் சாத்தியங்களோடு பண்பாட்டைப் பதிவு செய்யும் முயற்சியாக ஏற்றுக்கொண்டு அணுகுவது”, குறித்து டி.தர்மராஜ் விளக்குகிறார் (இளங்கோ என்னும் இனவரைவியலாளர்).

  நோபல் பரிசு குறித்து கெளதம சித்தார்த்தனின் உரையாடலை முன்னுறுத்தி பேட்ரிக் மோடியானா, ஹாருகி முரகாமி போன்றோர்களின் நாவல்கள் பற்றி ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ளார்.

 எம்.எஸ்.எஸ்.பாண்டியனுக்கு ஜே.ஆர்.வி.எட்வர்ட் – ம், ராஜம்கிருஷ்ணனுக்கு பொன்னீலனும் எஸ்.பொ. விற்கு இரா.காமராசும் அஞ்சலிக் குறிப்புகள் வரைந்துள்ளனர். இவர்களது தமிழில் பங்களிப்புக்கள் முக்கியத்துவம் மிக்கது.

    நரேந்திர மோடி, தினநாத் பத்ரா ஆகியோரின் மோசடி அறிவியலை விமர்சிக்கும் செய்தியாளர் கரன் தாப்பரின் ‘இந்து’ கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

   இடாலோ கால்வினோவின் ‘நகரத்தில் காளான்கள்’ சிறுகதையும் கன்னடச் சிறுகதை மொழிபெயர்ப்பும் இடம் பெறுகிறது. நட.சிவகுமாரின் அதிகதை ஒன்று இருக்கிறது. நிறைய கவிதைகள் ஓர் நூல் விமர்சனமும் இருக்கிறது 

இதழ் – 06 (டிசம்பர் 2014 – மார்ச் 2015) ISSN 2347 3533
தனி இதழ் ரூ 50
ஆண்டுக்கு ரூ 200

தொடர்புக்கு:

நட.சிவகுமார், பொறுப்பாசிரியர்,
திணை,
22/56/68 பட்டாணி விளை,
தக்கலை – 629175,
கன்னியகுமரி – மாவட்டம்.
மின்னஞ்சல்: thinai13@gmail.com
செல்: 9442079252

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக