சனி, ஜனவரி 31, 2015

சுழலியல் இதழ் அறிமுகம்: காடு – உயிரினங்களின் தடங்களைத்தேடி… - சுழலியல் இருமாத இதழ்



சுழலியல் இதழ் அறிமுகம்: காடு – உயிரினங்களின் தடங்களைத்தேடி…
- சுழலியல் இருமாத இதழ்
          -    மு.சிவகுருநாதன்



 

 தமிழில் குழந்தை இலக்கியத்தைப் போலவே சுழலியலுக்கும் களங்கள் நிறைய இருந்தும் வரவுகள் மிகக் குறைவான அளவே உள்ளன. அண்மையில் வெளியாகும் ஒன்றிரண்டு முயற்சிகள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன.

   அந்தவகையில் காடு சுழலியல் இதழாக முழுவதும் வண்ணத்தில் மிக அழகான வடிவமைப்பில் நம் கைகளில் தவழ்வது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. ‘தடாகம்’ வெளியீடாக வந்திருக்கும் ‘காடு’ தமிழ் சூழலியலாளர்கள் பலரது பங்களிப்பில் உருவாகியுள்ளது. 

   எறும்புகள் – ஆறுகால் மனிதர்கள் என்ற நக்கீரனின் தொடர் கட்டுறை எறும்பினம் அழிந்த வரலாற்றைப் பேசுகிறது. எறும்புகளைக் கொல்வதற்கு நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் இறுதியில் நம்மையும் பாதிக்கிறது என்பதையும் கட்டுரை விளக்குகிறது.

  சூழலியல் கலைச்சொற்கள் ஒவ்வொரு இதழிலிலும் பட்டியலிடப் படுகின்றன. ‘தமிழகப் பழங்குடி மக்கள்’ பற்றி ‘வாழும் மூதாதையர்கள்’ என்கிற கட்டுரைத் தொடரை அ. பகத்சிங் எழுதியுள்ளார். முதல் இதழில் அறிமுகமும் அடுத்த இதழில் நீலகிரி தோடர்கள் பற்றியும் விவரிக்கிறது.

   முதல் இதழில் புதுச்சேரியில் காண்டல் திட்டுக்களை (சதுப்பு நில / அலையாத்திக் காடுகள்) உருவாக்கி அவற்றைப் பாதுகாத்துப் பராமரித்து வரும் புதுவை செல்வமணிகண்டனுடனான நேர்காணல் வந்திருக்கிறது. இரண்டாம் இதழில் காட்டுயிர் ஆவணப்பட இயக்குனர், இயற்கையிலாளர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட டேவிட் அட்டன்பரோவின் நேர்காணல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அறிவியல் மனித நாகரீகத்திற்கு அடிப்படையாக உள்ளதை இவர் தெளிவுபடுத்துகிறார்.

  முதல் இதழில் மரக்காணம் முதல் செஞ்சி வரையுள்ள 700 ச.கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் கழிவெளி – காக்கப்படவேண்டிய பூமி என்னும் ப. அருண்குமார் கட்டுரையில் அங்குள்ள உள்ளான், உப்புக்கொத்தி, கூழைக்கிடா, வக்கா, போன்ற பறவையினங்கள் மற்றும் அதன் சூழலைப் படபிடித்துக் காட்டுகிறது. அடுத்த தழில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் நசிந்துவரும் மீன்பிடித் தொழில் பற்றி ‘காணமல் போகும் கடல் வளம்’ கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

  சுறா, கானமயில், யானை, கொம்பன், பாறுக்கழுகுகள், ரயில் பூச்சிகள், ஓங்குமால் வரையாடுகள், பச்சோந்து, பிளாடிபஸ், காட்டுக் கீச்சான் போன்ற பல்வேறு உயிரினங்கள் குறித்த தகவல்களால் காடு நிரம்பி வழிகிறது. 

   இதழ் முழுவதும் அழகிய வண்ணத்தில் நல்ல தாளில் அச்சிட்டு வெளியிடுவது சிறப்பு. மஞ்சள் பத்தரிக்கைகளை வாங்கி அவர்களைக் கொழிக்கச் செய்யும் தமிழ்நாட்டு நூலகங்களும் பள்ளிகளும் இம்மாதிரியான இதழ்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினால் இதழ் நின்று போகாமல் தொடர்ந்து வெளிவர உதவும். அரசு நூலகங்கள் தனிச்சுற்றுக்கான இதழை வாங்கும் எனச் சொல்லமுடியவில்லை. பள்ளிகளும் ஆசிரியர்களும் இம்மாதிரியான இதழ்களை வாங்கி ஊக்கப்படுத்துவது நலமாக இருக்கும்.

பதிப்பாசிரியர்: பா. அமுதரசன்
ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம்
தனி இதழ் : ரூ 60  ஆண்டுக்கு: ரூ 300
இணையம்/மின்னஞ்சல்:
 thadagam.com/kaadu
 kaadu@thadagam.com
வெளியீடு:
தடாகம் / பனுவல் புத்தக விற்பனை நிலையம்,
112, திருவள்ளுவர் சாலை.
திருவான்மியூர்,
சென்னை – 600041.
044-43100442
8939967179

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக