ஞாயிறு, பிப்ரவரி 15, 2015

ராணிப்பேட்டை கழிவு நீர்த் தொட்டி வெடித்து 10 தொழிலாளிகள் மரணம் - உண்மை அறியும் குழு அறிக்கை


ராணிப்பேட்டை கழிவு நீர்த் தொட்டி வெடித்து 10 தொழிலாளிகள் மரணம் - உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை,
                                                                             பிப்ரவரி 11, 2015

       சென்ற ஜனவரி 31, 2015 அன்று வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, SIDCO தொழிற்பேட்டையில் உள்ள தோல் சுத்திகரிப்புக் கழிவு நீர்த் தொட்டி ஒன்று வெடித்து, அதிலிருந்து வெளிவந்த கடும் விஷத் தன்மை மிக்க கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளிகள் அந்த இடத்திலேயே உயிர் நீத்தனர். இவர்கள் அனைவரும் கழிவு நீர்த் தொட்டியை ஒட்டி உள்ள "ஆர்கே லெதர்ஸ்" என்கிற தோல் பதனீட்டுத் தொழிலகத்தில் பணியாற்றியவர்கள். இவர்களில் ஒன்பது பேர் இந்தத் தொழிலகத்தில் உள்ள ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் மேற்கு வங்கத்திலுள்ள பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளிகள். இவர்கள்: 1.அபீப்கான், அவரது புதல்வர்கள் 2.அலி அக்பர், 3.அலி அங்கர், 4.ஷாஜகான், 5.குதுப்கான் 6.அக்ரம், 7.எஷ்யம், 8.ப்யார், 9.ஹபீப். இன்னொருவர் இந்தத் தொழிலகத்தின் 'வாட்ச்மேன்'. இவர் கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சம்பத் என்னும் தமிழர். அமினுல் அலிகான் எனும் மே.வங்கப் புலம் பெயர் தொழிலாளியும் ரவி என்னும் சூபர்வைசரும் மட்டும் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

      தமிழகத்தின் ஆக மோசமான சுற்றுச் சூழல் மாசுபட்ட நகரமான ராணிப்பேட்டையில் தொடர்ந்து இத்தகைய விபத்துகளில் தொழிலாளிகள் மரணமடைவது நிகழ்கிறது. இந்த விபத்தைப் பொருத்தமட்டில் இரு அம்சங்கள் கவனம் பெறுகின்றன 1. விதிகளை மீறி திடக் கழிகளைச் சேமிப்பதற்கான தொட்டியில் (SLF- Secured Land Facility) திரவத் தன்மையுடன் கூடிய  கொடும் விஷக் கழிவைச் சேமித்து வைத்திருந்தது 2. இதை ஒட்டி ஒரு தோல் தொழிலகம் இயங்கியதோடு விதிகளை மீறி இங்கேயே இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் தங்க வைக்கப் பட்டிருந்தது.

இது தொடர்பான உண்மைகளை அறிய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பங்கு பெற்றோர்:

1.அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO)
2. சீனிவாசன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை
3.பேரா. மு. திருமாவளவன், அரசு கல்லூரி முன்னாள் முதல்வர், சென்னை
4.வழக்குரைஞர் கி.நடராசன், உயர்நீதிமன்றம், சென்னை
5. ரமணி, ஜனநாயகத் தொழிலாளர் இயக்கம் சென்னை
6. ஒய்.ஃபையாஸ் அகமது,  மாவட்டத் தலைவர், பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, வேலூர்
7. தமிழ் நாசர், இளந்தமிழர் இயக்கம், சென்னை
8. வழக்குரைஞர் முகம்மது மசூத் , ராணிப்பேட்டை
9. மணிகண்டன், ஜனநாயகத் தொழிலாளர் இயக்கம், சென்னை

      இக்குழு சென்ற பிப் 7 அன்று ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் விபத்து நடந்த கழிவு நீர்ச் சுத்திகரிப்புக்கான பொது நிலையம் (Common Effluent Treatment Plant-CETP), தொழிலாளிகள் கொல்லப்பட்ட ஆர்கே லெதர்ஸ் தொழிலகம், கண்ணமங்கலத்தில் உள்ள இறந்துபோன சம்பத்தின் வீடு ஆகிய இடங்களுக்குச் சென்று தொடர்புடையவர்களை நேரில் சந்தித்தது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் பலருடனும் தொடர்பு கொண்டு பேசியது.

    குழுவினர் சந்தித்தோர்:

1.ஆர்கே லெதர்ஸ் மெக்கானிக் ஆர்.தயாளன், சூபர்வைசர் துர்கா பிரசாத், நிதி அதிகாரி சிரீராம் (சென்னை), 
2. சிபி.சி.ஐ.டி துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், 
3. இறந்து போன சம்பத்தின் மனைவி கீதா மற்றும் அவரது மூன்று குழந்தைகள் 
4. விபத்தை ஒட்டி உடனடி நடவடிக்கை கோரிச் சாலை மறியல் போராட்டம் நடத்திய த.மு.மு.க வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.முகம்மது ஹஸன், 
5. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ஜே.முகம்மது ஆசாத்.

      கீழ்க்கண்ட அரசு அதிகாரிகளைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். 1. வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் ஐ.ஏ.எஸ், 2. தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் காமராஜ் 3. சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி உதயசங்கர் 4.தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் துணை இயக்குநர் சுந்தர பிரபு, 5. வேலூர் பகுதி தொழிலாளர் துறை துணை ஆணையர் ஜெயபாலன் 6. தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் இணை இயக்குநர் சசிகலா 7. வேலூரில் உள்ள தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் இணை இயக்குநர் பூங்கொடி பொறியாளர் காமராஜும் இணை இயக்குநர் பூங்கொடியும் பேச மறுத்துவிட்டனர்.

பின்னணி

   தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் கடும் பிசுபிசுப்பு மிக்க கழிவுப் பொருள் குரோமிக் அமிலம் உட்படபல கொடும் விஷங்களைக் கொண்டது. இதன் 1.விஷத் தன்மையை நீக்கி, 2.அதன் திரவத் தன்மையையும் முற்றிலுமாக நீக்கி (Zero Liquid Discharge), 3.அதிக விஷத் தன்மையற்ற உலர்ந்த திடக்கழிவுகளாக மாற்றி புவி நீர்மட்டத்திலிருந்து சுமார் 10 மீட்டர் உயரத்தில் உள்ள கான்க்ரீட் தொட்டியில் (Secure Land Fill-SLF) சேமித்துப் பின் அதைப் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்ற வேண்டும். ராணிப்பேட்டையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோல் பதனீட்டுத் தொழிலகங்களில் பல தொழிலகங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து "பொது கழிவுத் திருத்த நிலையங்களை" (Common Effluent Treatment Plant - CETP) அமைத்துத் தம் தொழிலகங்களிலிருந்து வரும் கழிவுகளைச் சுத்திகரிக்கின்றன. ராணிப்பேட்டை சிட்கோவில் மட்டும் இது போன்ற 8 பொதுக் கழிவு நீர்த் திருத்த நிலையங்களும், இது தவிர தனியாக ஒவ்வொரு தொழிலகமும் அமைத்துக் கொண்ட 226 சுத்திகரிப்பு நிலையங்களும் (Independant Effluent Treatment Plant - IETP) உள்ளன.

   தற்போது விபத்திற்கு ஆளான இந்தப் பொதுச் சுத்திகரிப்பு நிலையத்தை "சிட்கோ  செம்மைப்படுத்தப்பட்ட தோல் கழிவுத் திருத்த தொழிலக லிமிடெட்" (SIDCO Finished Leather Effluent Treatment Company Limited) எனும் நிறுவனம் அமைத்து நிர்வகிக்கிறது. அருகருகாக உள்ள 89 தோல் பதனீட்டுத் தொழிலகங்கள் சேர்ந்து இதை அமைத்துள்ளன. தற்போது செயலிழந்துள்ள 9 தொழிலகங்கள் தவிர மீதமுள்ள 80 தொழிலகங்கள் தம் கழிவுகளை இதற்கு அனுப்புகின்றன. 1995ல் உருவாக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலைய நிர்வாகப் பொதுக்குழுவில் ஒவ்வொரு தோல் பதனீட்டுத் தொழிலகத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி இருப்பர். இவர்கள் 9 நிர்வாக இயக்குனர்களைத் தேர்வு செய்வர். இந்தப் பதவிகளை அடைவதில் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு தொழிலகமும் அனுப்பும் கழிவுகள் மீட்டர் கருவி ஒன்றால் அளக்ககப்பட்டு லிட்டருக்கு இவ்வளவு என அதற்குக் கூலி பெறப்படுகிறது. இவ்வாறு வந்தடையும் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் அப்படியே காயவிட்டு அகற்றினால் இந்தச் சுத்திகரிப்பிற்கு ஆகும் செலவு அப்படியே நிர்வாகத்தின் கைக்குப் போய்விடும். அதனால்தான் இந்தப் பதவிக்கு இத்தனை போட்டி. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிர்வாக இயக்குனர் அமிர்தகடேசன் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நபர்.

   இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கான வடிவமைப்பு முதலிய தொழில்நுட்பங்களை அமைத்துத் தருவது 'செம்காட்' எனப்படும் "தோல் பதனிடுவோரின் சென்னை சுற்றுச் சூழல் நிர்வாக நிறுவனம்" (Chennai Environmental Management Company of Tannes -CEMCOT). இந்த நிறுவனமும் தோல் பதனிடும் தொழிலகங்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. தற்போது உரிய வலுவுடன் கட்டப்படாமல் உடைந்து "ஒரு சுனாமி போல" உள்ளிருக்கும் பிசுபிசுப்பான விஷக் கழிவுப் பொருட்கள் வெளிவந்து 10 தொழிலாளிகளைத் தழுவிக் கொன்ற இந்த சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைத்ததும் இந்த நிறுவனமே.

   2008ம் ஆண்டில், 6 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இணைந்து இந்த CEMCOT நிறுவனத்தை ‘இலாப நோக்கற்ற நிறுவனம்” என 1956ம் ஆண்டு கபெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து தொடங்கின, சுத்திகரிப்பு தொடர்பான முழு நீர் வடிகட்டி (ZLD) முதலான அமைப்புகளை வடிவமைப்பது, செயல்படுத்துவாது, (maintenance) ஆகியவற்றை இந்நிறுவனமே செய்கிறது. தற்போது விபத்துக்குள்ளாகிய பொது சுத்திகரிப்பு நிலையம் உட்பட 7 நிலையங்களை இது நிர்வகிக்கிறது. 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு (Board of Directors) இதை நிர்வகிக்கிறது, இதன் தலைவர் எம்.எம் ஹாஷிம் ஒரு மிகப்பெரிய தோல் தொழிலதிபர். உறுப்பினர்களில் ஏழு பேர் இந்த ஏழு பொது சுத்திகரிப்பு நிலையங்களின் தலைவர்கள். மீதமுள்ளோர் ஓய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள உயர் அதிகாரிகள்.  

   200 கோடி ரூபாய் திட்டத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தில் 35 சதச் செலவினத்தை மட்டுமே இச் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கின்றன. 15 சதச் செலவை தமிழக அரசு ஏற்கிறது. மீதமுள்ள 50 சதச் செலவு இதற்கென ஒதுக்கப்பட்ட திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போது விபத்திற்குள்ளான பொது சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டிற்கென ஒதுக்கப்படுள்ள தொகை 29 கோடி ரூபாய். இதை  அமைத்து நிர்வகிப்புதற்கு மும்பையிலுள்ள Hydroair TectonicsPCD Ltd எனும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

   ஆக சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைப்பது, செயல்படுத்துபவது எல்லாவற்றிலும் தோல் பதனிடும் தொழிலகங்களின் உரிமையாளர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். திருடன் கையில் சாவியைக் கொடுப்பது என்பார்களே அதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இவர்களின் நோக்கம் "சுத்திகரிப்பின்" பெயரிலும் உச்சபட்சமான லாபம் சம்பாதிப்பதே. பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பது என்பதெல்லாம் இவர்களுக்குப் பொருட்டல்ல.

     இவற்றை மேற்பார்வையிட்டுக் கண்காணிக்க வேண்டிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (TNPCB) உள்ளூர் அதிகாரிகள் யாரை அவர்கள் கண்காணிக்க வேண்டுமோ அவர்களோடு நெருக்கமாக இருந்து அவர்களது விதி மீறல்கள் அனைத்தையும் அனுமதித்து வந்துள்ளனர்.

   தற்போது இடிந்து விழுந்து பத்து தொழிலாளரின் இறப்பிற்குக் காரணமான இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு SLF கான்க்ரீட் தொட்டிகள் உள்ளன. ஒரு தொட்டி நிறந்த பிறகு அதைச் சுற்றி உரிய தரமற்ற கான்க்ரீட் சுவர்களை எழுப்பி இரண்டாவது தொட்டியை உருவாக்கியுள்ளது சுத்திகரிப்பு நிலைய (CEPT) நிர்வாகம், இது அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக இப்போது மாசு கட்டுப்பாட்டு நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது. உரிய வலுவுடன் கட்டப்பட்டிருந்தாலும் கூட இந்த தொட்டிகள் திரவங்கள் நீக்கப்பட்டுத் திட வடிவம் அடைந்த கழிவுகளை மட்டுமே தாங்க வல்லன. அதற்குள் கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக சுத்திகரிக்கப்படாத பிசுபிசுப்பு மிக்க திரவ வடிவிலான கழிவுகளை சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் நிரப்பி வைத்துள்ளது. தற்போது விபத்திற்குப் பின் 800 டன் கழிவுப் பொருள் உள்ளே இருந்ததாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டாலும் இதைக் காட்டிலும் இரண்டு மடங்கு கழிவுகள் உள்ளே தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

   இந்த திரவக் கழிவுகளின் அழுத்தம் தாங்க இயலாததால்தான் இடையிடையே கான்க்ரீட் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்ட அந்த இரண்டாம் தொட்டி ஜனவரி 31 இரவு 1 மணி அளவில் உடைந்து விழுந்து 10 தொழிலாளர்கள் சாவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

விபத்துக்குப் பின்

    பல மணி நேரம் போராடிக் காலையில்தான் உயிருடன் சமாதியான இந்தப் 10 தொழிலாளர்களின் உடலையும் தீயணைப்புப் படையினரும் அரக்கோணத்திலுள்ள Natioanal Disaster Responsive Fprces ம் வெளியே எடுத்துள்ளனர். இப்போது மே.வங்கத்தைச் சேர்ந்த 9 தொழிலாளிகளின் உடல்களும் மே.வங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பத்தின் உடல் அவரது கிராமத்திற்கு அனுப்பபபட்டது. தமிழக அரசு இறந்த ஒவ்வொருவருக்கும் 3 இலட்ச ரூபாயும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் ஏழரை இலட்ச ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இது தவிர இறந்து போன மே.வங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் அம்மாநில அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னகக் கிளையின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச் சூழல் பொறியாளட் என்.சுந்தரபாபு தலைமையில் அவ் வாரியத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் அடங்கிய ஆய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விபத்துக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தக் குழு, உடைந்த இரண்டாவது SLF தொட்டி அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய எஸ். சார்லஸ் ரோட்ரிக்ஸ், பி.காமராஜ், எம்.முரளீதரன் என்கிற மூன்று சுற்றுச் சூழல் பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

     வெளி வந்த கழிவுகள் அந்தப் பகுதியையே மாசுபடுத்தி எங்கும் ஒரே துர்நாற்றம் வீசுகிறது. அவசர அவசரமாக இந்தக் கழிவுகள் நீக்கப்படுகின்றன. நாங்கள் சென்றபோதும் இந்த வேலை முற்றுப் பெறவில்லை. இவை கும்மிடிப் பூண்டியில் உள்ள தீங்கு பயக்கும் கழிவுகளைச் சேமிக்கும் பகுதிக்கு உரிய பாதுகாப்பு இல்லாத லாரிகளில் கொண்டு செல்லப்படுவதை எங்கள் குழு கண்டது.

   மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின் பேரில் இன்று விபத்துக்குள்ளான சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்திய 80 தோல் பதனிடும் தொழிலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சுமார் 15,000 தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர்.   

  விபத்து ஏற்பாட்டவுடன் சுத்திகரிப்பு நிலைய இயக்குனர்களில் முக்கியமானவர்கள் தலைமறைவாயினர். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி துறைக்கு மாற்றப்படும்வரை உள்ளூர் காவல் துறை அவர்கள் யாரையும் தேடிக் கைது செய்ய முயற்சிக்கவில்லை. தற்போது விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மார்றப்பட்ட பின், பிப்ரவரி 9 அன்று நிர்வாக இயக்குநர் ஆர்.அமிர்தகடேசன், தொழில்நுட்ப இயக்குநர் வி.ஜயசந்திரன், நிதி இயக்குநர் கே.சுப்பிரமணியன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இ.த.ச 337, 285, 304 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைது செய்யப்படுவார்களா என சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி உதயகுமாரைக் கேட்டபோது அவர்களை வரச் சொல்லியுள்ளோம். விசாரித்த பின்பே முடிவெடுக்கப்படும் என்றார்.

   இறந்து போன சம்பத்தின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் கண்ணமங்கலத்தில் சென்று சந்தித்தபோது இதுவரை ஒரு அதிகாரி கூட தங்களை வந்து பார்க்கவில்லை எனக் கூறினர். அவர்கள் இன்று சாப்பாட்டுக்கே வழி இன்றி உள்ளனர். ஒரு பெண் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

   மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்தபோது மே.வங்கத்தைச் சேர்ந்த 9 பேர்களின் சரியான முகவரி  கிடைத்தபின்புதான் 10 பேர்களுக்கும் அரசு அறிவித்துள்ள இழப்பீடு அளிக்கப்படும் என்றார். இழப்பீடுகளுக்கு அப்பால் இது போன்ற விபத்துக்களைத் தடுக்கவும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் பாதுகாப்பு நோக்கிலும் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது எனக் கேட்டபோது இது தொடர்பான குழுக்களின் ஆய்வறிக்கைகள் வந்தபின்புதான் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

    தொழிலாளர்களுக்கான எந்தப் பாதுகாப்பும் இல்லாது கடும் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்துள்ள  தொழிலாளர்களின் நிலை குறித்து விசாரிப்பதற்காக வேலூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் வேலூர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அங்கிருந்த அதிகாரி ஜெயபால் தாங்கள் அமைப்பு சாரா புலம் பெயர் தொழிலாளிகள் குறித்துத்தான் பேச இயலும், தோல்பதனீட்டுத் தொழிலகங்கள் என்பன தொழிற்துறையின் கீழ்தான் வருகிறது எனச் சொன்னார்.

    இது தொடர்பான அதிகாரியான வேலூரில் உள்ள தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் துணை இயக்குநர் சுந்தர பிரபுவைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் தாங்கள் உள்ளூர்த் தொழிலாளிகள் மற்றும் மாநிலம் விட்டு இடம் பெயர்ந்தோர் என வேறுபடுத்தி அணுகுவதில்லை என்றார், எல்லோரையும் நாங்கள் படிவம் 25ல் பதிவு செய்கிறோம் என்றார். அவர்கள் எப்போது வேலைக்கு சேர்கிறார்களோ அப்போது அந்தப் பதிவு செய்யப்படும் என்றார். தற்போது இறந்தவர்களில் ஒரு சிலர் ஜனவரியில் பணியில் சேர்ந்ததாகவும் இன்னும் சிலர் விபத்துக்கு முதல்நாள்தான் வேலக்குச் சேர்ந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த த.மு.மு.க பொறுப்பாளர்  ஹசன் அங்கு இந்தப் பத்து பேர்கள் தவிர இன்னும் பல புலம் பெயர் தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர் எனவும் இறந்த இவர்களும் பல நாட்களாகவே வேலை செய்து வருகின்றனர் எனவும் கூறினார்.

     தொழிலாளர் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரிகளும் உரிய முறையில் இந்தத் தொழிலகங்களில் வேலை செய்கிறவர்கள் பதிவு செய்யப்படுகின்றனவா, இங்கு வேலை செய்பவர்கள் கட்டாயமாகவோ, வேறு வழியின்றியோ வாழத் தகுதியற்ற இந்தத் தொழிற்சாலைகளிலேயே விதிகளை மீறித் தங்க வைக்கப்படுகின்றனரா என்றெல்லாம் எந்த ஆய்வுகளையும் செய்வதில்லை. எந்தப் பதிவும் இல்லாமல், பாதுகாப்பும் இல்லாமல் இப்படி ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளிகள் ராணிப்பேட்டைப் பகுதியில் உள்ளனர். மௌலிவாக்கம்  விபத்திற்குப் பின் இவர்கள் குறித்த ஒரு சர்வே செய்யப்படும் எனத் தொழிர்துறை அமைச்சர் பி.மோகன் தெரிவித்தார்.  1000 ம் பேர்களுக்கு மேல் பணி செய்யும் இடங்களில் தற்காலிக ஆரம்ப மருத்துவமனை, 'க்ரெச்' முதலான வசதிகள் செய்யப்படும் எனவும் தமிழக அரசின் தொழிற் துறை அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

      தற்போது இந்த விபத்திற்குப் பின் இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் குறித்த ஒரு 'சர்வே' செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பதிவு செய்வது என்பதை விட்டுவிட்டு ஏன் சர்வே செய்வது என்கிற நிலையை மேற்கொள்கிறது என்பதைத் தமிழக அரசு விளக்கவில்லை. ‘யுனிசெஃப்’ உடன் இணைந்து இத்தகையப் புலம் பெயர் தொழிலாளிகளைப் பதிவு செய்வது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்றெல்லாம் 2010 ல் திட்டமிடப்பட்டது அதுவும் நிரைவேற்றப்படவில்லை.

    1979ம் ஆண்டின் “மாநிலங்களுக்கிடையே புலம் பெயரும் தொழிலாளிகள் சட்டத்தின் (Inter-state Migrant Worker’s Act, 1979)”படி இவர்களைப் பதிவு செய்ய வேண்டும்.  இதை அரசின் தொழிலாளர்  துறைதான் செய்யவேண்டுமே ஒழிய காவல்துறை செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் பணியாற்றுகிற சுமார் 10 இலட்சம் புலம் பெயர் தொழிலாளிகளில் பெரும்பாலோர் மேற்படி சட்டம் இவர்களுக்கு உறுதியளித்துள்ள பாதுகாப்புகள் எதுவுமின்றியே பணிசெய்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்சக் கூலி அளிக்கப்பட வேண்டும் என ஒரு சட்ட விதி இருந்தும் இப் புலம் பெயர் தொழிலாளிகள் சற்றும் மனிதாபிமானமற்ற சூழலில் அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். புலம்பெயர் குழந்தைத் தொழிலாளிகளுக்கும் இதே கதிதான்.

    தங்களின் சொந்தக் கிராமங்களிலிருந்து இடைத்தரகர்களால் கொண்டு வரப்படும் இவர்கள் கொத்தடிமைகளாகவே (bonded labours) நடத்தப்படுகின்றனர். சற்றும் சுகாதாரமில்லாத சிறு தகரக் கொட்டகைகளில் குடியமர்த்தப் படுகின்றனர். அல்லது விதிகளை மீறி தொழிலிடத்திலேயே தங்க வைக்கப்படுகின்ரனர்.  தொழில் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாலோ,  உறுப்புக்களை இழந்தாலோ, இவர்களுக்கு எவ்விதமான சட்டப் பாதுகாப்புகளும் கிடையாது. இவை காவல்துறையால் முறையாகப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படுவதுமில்லை..தற்போது சென்னை மெட்ரோ ரயில்பாதை உருவாக்கத்தில் பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளிகளும் எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லாமல்தான் வேலை செய்கின்றனர். மௌலிவாக்கத்தில் கட்டிக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்து இறந்த 61 புலம் பெயர் தொழிலாளிகளும் அப்படித்தான் மாண்டனர். அரசு நிறுவனங்களும் ஒப்பந்தக்காரர்களும் புலம் பெயர் தொழிலளிகளுக்கான சட்ட விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை.

எமது பரிந்துரைகள்

1. நடந்து முடிந்தது வெறும் தற்செயலான விபத்தல்ல. முதலாளிகளின் லாப வேட்டையும், அதிகாரிகளின் ஊழல் வேட்கையும் இணைந்து செய்த படுகொலை. வெறும் இழப்பீடு மட்டும் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர இயலாது. நிரந்தரத் தீர்வு வேண்டும், இந்த நோக்கில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும், மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளிகளை உரிய முறையில் பதிவு செய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுக்காக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யவும் தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் அமைந்த ஒரு நீதித்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

2. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர்களின் கூற்றுப்படி சென்ற ஜனவரி 9ம் தேதியே இத்தகைய இரண்டாவது SLF  தொட்டி இங்கு இயங்குவது குறித்தும், அதில் திரவக் கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ளதும் தெரிந்துள்ளது. அப்போதே உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும். எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு நிறுவனத் தலைவர் ஸ்கந்தனும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றி தற்போது தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ள மூன்று சுற்றுச் சூழல் பொறியாளர்களும் இந்தக் குற்றச் செயலில் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும்.

3. விபத்துக்குள்ளான பொது சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்து நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள ‘செம்காட்’ நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்தக்காரரான மும்பையைச் சேர்ந்த Hydroair Tectonics PCD Ltd உரிமையாளர்கள் ஆகியோரும் சி.பி.சிஐ.டி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கஐது செய்யப்பட வேண்டும். விபத்துக்குள்ளான பொது சுத்திகரிப்பு நிலையத்தின் மேம்பாட்டிற்காக 29 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. இதில் 65 சதம் மக்கள் வரிப்பணம் என்பது குறிப்பிடத் தக்கது.

4. விதிகளை மீறி இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் இந்தத் தொட்டிக்கு அருகில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாலேயே அவர்கள் இன்று சாக நேர்ந்துள்ளது. உரிய முறையில் இவற்றைக் கண்காணிக்காத வேலூர் பகுதி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நலத் துறை துணை இயக்குனரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குறித்த படிவம் 25 இறந்த பின்பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அது குறித்தும் புலனாய்வு செய்ய வேண்டும்.

5. சம்பத்தின் வீட்டாரை உடனடியாக அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று பார்ப்பார்கள் என அரசுத்  தரப்பில் சொல்லப்பட்டும் நேற்று வரை யாரும் பார்க்கவில்லை. மாவட்ட அட்சியரிடம் இது குறித்து நாங்கள் பேசிய பின்னும் எதுவும் நடக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு அறிவிக்கப்பட்ட இழப்பீடுகளை அந்தக் குடும்பத்திற்கு உடனடியாக அரசு வழங்க வேண்டும். சம்பத்தின் மனைவிக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். மூன்று குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.

6. விபத்து நடந்தவுடன் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் இறந்த ஒவ்வொருவருக்கும் 7..5 லட்ச ரூ இழப்பீடு அளிப்பதாக வாக்களித்தது. இப்போது தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் பகுதிக் கிளை இறந்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் 2.5 லட்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இது தற்காலிக நிவாரணமாகக் கருதப்பட்டு இத்துடன் நிர்வாகம் முன்பு வாக்களித்த தொகையையும் இறந்தவர்களுக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. பொதுக் கழிவு நீர்த் தொட்டி சுத்திகரிப்பு நிலையம், இவற்றை வடிவமைக்கும் நிறுவனம் ஆகியவற்றை தோல் பதனீட்டுத் தொழில் முதலாளிகளின் கையில் அளிக்காமல் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.

8. தமிழகமெங்கும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநிலம் விட்டு இடம் பெய்ர்ந்து தொழில் செய்யும் தொழிலாளிகளை தொழிலாளர் நலத் துறை உடனடியாகப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களுக்குக் குறைந்த பட்சக் கூலி,  தொழிலிடப் பாதுகாப்பு முதலியன் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். இடைத் தரகர், ஒப்பந்தக்காரர்களின் சுரண்டல்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. தற்போது விபத்துக்குள்ளான சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்திய 80 தோல் பதனீட்டுத் தொழிலகங்களும் மூடப்பட்டுள்ளதால் 15,000 பேர் வேலை இழந்துள்ளனர். மீண்டும் இந்தத் தொழிலகங்கள் திறக்கப்பட்டு விதி மீறல்கள் ஏதும் இன்றி செயல்படுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் . அதுவரை வேலை இழந்த தொழிலாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தொடர்பு: 

அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 600020.
செல்: 9444120582.

நன்றி: அ.மார்க்ஸ்

சனி, பிப்ரவரி 14, 2015

கெளதம் மேனனின் திரைப்படங்கள் குறித்த இரு கட்டுரைகள்:- ஓர் ஒப்பீடு



கெளதம் மேனனின் திரைப்படங்கள் குறித்த இரு கட்டுரைகள்:- ஓர் ஒப்பீடு
                                               - மு.சிவகுருநாதன்

     ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் (பிப்.10,2015) வெளியான ‘எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கெளதம்’, என்ற சமஸ் கட்டுரையும் ‘இந்தியா டுடே’ தமிழ் வார இதழில் (பிப்.18,2015) கவிதா முரளிதரனின் ‘பெண்ணை அறிந்தவர்’, கட்டுரையும் இங்கு பேசு பொருளாகிறது.

  எதிலும் பன்முகப் பார்வை இருப்பது நியாயமானது. அந்தவகையில் இரு பார்வைகளையும் அனுமதிப்போம். அதேசமயம் சமஸ் பார்வையின் அவசியத்தையும்   கவிதா முரளிதரன் பார்வையிலுள்ள போதாமைகளையும் உணர்வது அவசியம். 

   கெளதம் மேனன் பெண்களைக் கண்ணியமாக சித்தரிப்பவர் என்ற பெருமை பேசப்படுகிறது. பெண்ணுடலை முழுமையாக மூடுவதன் மூலமே இங்கு கலாச்சாரம் பாதுகாக்கப்படுமென கூப்பாடு போடும் கலாச்சாரக் காவலர்களின் பேச்சுக்களுக்கு நிகரானது இது. நேர்த்தியான புடவை, சுடிதார் போன்றவற்றையும்  எளிமையான நகைகளையும் அணியும் பெண்கள் மட்டுமே கண்ணியமானவர்கள் என்கிற கலாச்சாரக் காவலர்களின் நிலைப்பாட்டை ஓர் பெண்ணியவாதியும் வழிமொழிகிறபோது நமக்கு மிகுந்த அச்சம் உண்டாகிறது. திரு.வி.க. கட்டமைத்த பெண்ணும் பெண்ணின் திரு உரு கூட இதுதான்.

   “நான் எப்படிபட்ட பெண்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேனோ அப்படிப்பட்ட பெண்களை எனது படங்களில் உருவாக்குகிறேன்”, என்று கெளதம் மேனன் சொல்வதை போலிஸ் சித்தரிப்பிற்கு பொருத்திப் பார்க்கலாம். போட்டுத் தள்ளும் போலிஸ்தான் இவரின் கனவுப் போலிஸ். 

  கெளதமின் கதாபாத்திரங்களுக்கு முன்மாதிரியாக இருப்பது அவரது அம்மாவும் மனைவியுந்தானாம். ஆசிரியையாகப் பணிபுரிந்த அவரது அம்மா எளிமையாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் ஆடை-நகைகளை அணிவாராம்! இதை ஒவ்வொரு கதாநாயகிக்கும் கொண்டுவர விரும்புகிறேன் என்கிறார். என்கவுண்டர் போலிஸ்க்கு வெள்ளத்துரைகூட ரோல்மாடலாக இருக்கலாம். ஆனால் வெள்ளத்துரையின் கதையைச்  சொல்வதற்கு மூன்று சினமாக்களும் சில நூறு கோடிகளும் அவசியமா?

   கெளதம் மேனன், ஷங்கர், மனிரத்னம், பாலா, சசிகுமார், டி.ராஜேந்தர் போன்ற பல இயக்குநர்களிடம் உள்ளது ஒரே கதைதான். இதைத்தான் அவர்கள் பல சினிமாக்களாக எடுத்துத் தள்ளுகிறார்கள். தமிழ் சினிமா உலகை குப்பைக் களமாக்கியதுதான் இவர்களது சாதனை. இதனால்தான் இம்மாதிரியான விமர்சனங்கள் மிகவும் அவசியமாகிறது.

   ஆட்டோ சங்கர்களுக்கு மரணதண்டனை அளித்துவிட்டால் குற்றங்கள் ஒழிந்துவிடுவதாக இங்கு அரசும் நீதித்துறையும் கனவு காண்கின்றன. சந்தன வீரப்பனையும் மாவோஸ்ட்களையும் போட்டுத் தள்ளிவிட்டால் நாடு சுத்தமாகிவிடும் என்று அரசு மக்களை நினைக்கப் பழக்கியிருக்கிறது. விக்டர் போன்ற அடித்தட்டு எடுபிடிகள் ஒழிந்தால் மனித உறுப்புகள் வியாபாரம் நடக்காது என மக்களை நம்பவைக்க இத்தகைய மனநிலை போதுமானதாக உள்ளது.

   கெளதம் தனது மூன்று படங்களிலும் காவல் அதிகாரிகளின் மனைவிகள் கொலை செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் அம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவேயில்லை. ஆனால் 19 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன என்று சமஸ் எழுதும்போது இச்சமூகம் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உருவாகும். நடக்குமா? இத்துடன் லாக்கப் மரணங்கள்ச் சேர்த்தால் எண்ணிக்கை நூறைத் தாண்டும்.

   என்கவுண்டரை ஆராதிக்கும் நடுத்தர வர்க்க மனநிலையைக் கொண்டு சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக சில ஏடுகள் பாராட்டு மழை பொழிகின்றன. நேர்மையான போலிஸ் அதிகாரி, என்கவுண்டர் என்று கதைக்கும் இப்படங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. இதற்குக் காரணம் நடுத்தர வர்க்க மனோபாவந்தான். அந்த வகையில் இம்மாதிரி போலி சினிமாக்களைக் கேள்விக்குட்படுத்தும் சமஸ்-ன் கட்டுரை பாரட்டிற்குரியது; வரவேற்கத்தக்கது.

  இதற்கு மாறாக பெண்கள் சித்தரிப்பு என்கிற தட்டையான பார்வையுடன் எழுதப்பட்ட கவிதா முரளிதரனின் கட்டுரை போலி பூச்சுகளுக்குள் அமிழ்ந்துபோகிறது. பெண்களைக் கண்ணியமாக காட்டுவது என்ற சொல்லாடல்கள் கலாச்சாரக் காவலர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவற்றைப் பிடித்துத் தொங்குவது நமது பணியல்ல. பொதுவாக தமிழ் சினிமாவிலுள்ள குரூரங்களை வெளிப்படுத்துவதுதான் சமூகத்தை நேசிப்பவர்களின் வேலையாக இருக்கமுடியும். அதைத்தான் சமஸ் சரிவரச் செய்துள்ளார். இது தொடரட்டும். வாழ்த்துக்கள் சமஸ்.

புதன், பிப்ரவரி 11, 2015

பள்ளிகளில் இந்துமத அடிப்படைவாத பரப்புரை



பள்ளிகளில் இந்துமத அடிப்படைவாத பரப்புரை  - மு.சிவகுருநாதன்








    தேர்வுக் காலம் தொடங்கிவிட்டால் போதும், மாணவர்கள் பல்வேறு தரப்பு நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள் என்று நீளும் இப்பட்டியலில் செய்தி - காட்சி ஊடகங்கள், அருகிலுள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மதவாதிகள் என்று பலரது பிடியில் சிக்குண்டு பள்ளிக் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள். இது யாருக்கும் பிரச்சினையாகவே படுவதில்லை.

     அபத்தச் சீரியல்களையும் சினிமாக்களை மட்டுமே வழங்கும் தொலைக்காட்சி சேனல்களும் ஆபாசப் பத்தரிக்கைகளும் இப்படி தேர்வுப்பணி செய்ய வேண்டிய அவசியமென்ன? பிற சமயங்களில் இவர்கள் கல்விக்காக ஏதேனும் சிறு துரும்பை அசைத்ததுண்டா?

    இவர்கள் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ தொடங்கி ‘சாதிப்பது எப்படி?’ என்றெல்லாம் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வந்து விடுகிறார்கள். இவர்கள் மாணவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. மாணவர்களை சர்க்கஸ் விலங்குகளை விட கேவலமாக நடத்த அரசும் கல்வித்துறையும் வழிகாட்டுகிறது. “காலை 8 மணிலிருந்து மாலை 6 மணி முடிய பள்ளிகளிலேயே இருக்கவேண்டும்: மதிய உணவுக்காக 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு பிற நேரங்கள் அனைத்தும் படிப்பதிலேயே செலவிடவேண்டும்” என்கிற பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை இதைத்தானே உணர்த்துகிறது. இதில் மதவாதக் கும்பல்களும் தனது பங்கிற்கு வந்துவிடுகிறது.

     இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம், இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கம் என்ற பெயரில் ஓர் துண்டறிக்கையை அச்சிட்டு அனைத்துப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கும் விநியோகம் செய்கின்றனர். தேர்விற்காக அறிவுரைகள், பிரார்த்தனை என்கிற போர்வையில் அப்பட்டமான மதவெறி பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ச. உமாசங்கரின் கிருஸ்தவ மதப் பரப்புரை கண்டிக்கப்படும்போது இந்துத்துவாதிகளை பள்ளிகளில் மதப் பரப்புரை செய்ய அனுமதித்தது ஏன்?

   பொதுவெளியில் இவர்கள் மதத்தைப் பரப்புரை செய்துவிட்டுப் போகட்டும். அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை உள்ளிட்ட மத வழிபாடு நடத்தப்படக்கூடாது என்ற அரசாணை இருந்தும் அதை செயல்படுத்த வேண்டிய அரசு எந்திரம் ஜெ.ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலை பெற தினமும் யாகம் நடத்தும் அவலத்தை கண்டும் காணாதது போல் இருந்து வருகிறோம். தேர்வு நேரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள இந்துக் கோயில்களில் நடக்கும் பிரார்த்தனை, வழிபாடு, யாகம் போன்றவற்றில் கட்டாயமாக பங்கேற்க வைக்கபடுகின்றனர். ஏதேனும் ஒரு சில தனியார் பள்ளிகள் கூட இதை சர்வ சமய பிரார்த்தனையாக நடத்துவது உண்டு. ஆனால் அரசுப்பள்ளிகளில் முழுவதும் இந்து வழிபாடே நடக்கிறது.

   கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் தேர்வுக்காக சில வரிகள் மனப்பாடம் செய்வதற்கு பெரும்பாடுபடுகின்றனர். இந்நிலையில் இந்தத் துண்டுப் பிரசுரத்திலுள்ள  மந்திரங்களையும் பிரார்த்தனை வேண்டுதல்களையும் மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக நான்கு ஐந்து மதிப்பெண் வினாவிற்கான விடைகளைப் படித்து விடலாம். வேறு எந்த மதத்தினரும் பள்ளிகளில் எளிதில் மதப் பரப்புரை செய்துவிட முடியுமா என்று கேட்டால் முடியாதுதான். ஆனால் இந்துமதப் பரப்புரை மட்டும் எவ்விதம் சாத்தியமாகிறது? இதைத் தடுக்கவேண்டிய கல்வித்துறையே மாணவர்களைக் கொண்டு பள்ளிகளிலும் இந்துக் கோயிகளிலும் யாகம் நடத்துவதை வேடிக்கைப் பார்க்குமளவிற்கு இங்கு அரசு காவிமயமாகியுள்ளது. 

    பெரியார் பிறந்த மண்ணில் இந்துத்துவம் வளர வாய்ப்பில்லை என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இதுகுறித்து இனிமேலாவது யோசிக்கவேண்டும். இன்று இந்துத்துவம் பல்வேறு தளங்களில் தனது நச்சுக் கிளைகளை விரிக்கத் தொடங்கியுள்ளது. 

    பல்வேறு குக்கிராமங்களில்கூட அர்த்த சாம நண்பர்கள் சங்கம், ஆன்மிக நண்பர்கள் சங்கம் என்று ஏதேதோ பெயர்களில் சாதி இந்து மக்களைத் திரட்டி அதன் மூலம் மதவாதம் பரப்பப்பட்டு வருகிறது. இவர்களுடைய அணிதிரட்டல் மோசடியில் அடித்தட்டு இளைஞர்கள் சிக்கி வருகின்றனர். மலைவாழ், தலித், மீனவ சமுதாய இளைஞர்கள் இவ்வாறாக அணிதிரட்டப்படுகின்றனர்.

  பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி இங்கு பிழைப்பு நடத்துபவர்கள் இந்து மதவதத்திற்கு சாமரம் வீசுபவர்களாக மாறிவிட்டதுதான் வேதனை. அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவனி’ -ல் தொடங்கிய வீழ்ச்சி இன்று அவ்வியக்கத்தை பாதாளத்தில் தள்ளிவிட்டது. இன்று இவர்கள் பேசும் பகுத்தறிவு மிகவும் போலியானது. மேலும் இவர்கள் சாதி – மதவாதத்திற்கு இரையாகியுள்ளனர்.

  இம்மாதிரியான மதவெறி பரப்புரைகளைத் தடுக்க அரசும் கல்வித்துறையும் எதுவும் செய்யப் போவதில்லை.  இன்றும் கூட அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கென   இந்துக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் யாகங்களும் நடத்தப்படுகின்றன. இதனை ஒரு சில அமைப்புகள் தவிர யாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில்தான் இந்நாடு உண்மையில் மதச்சார்பற்றதுதானா என்கிற வினா எழுகிறது. யாகங்கள் நடத்த விழைபவர்கள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மட்டும் விரும்புவதில்லை. 

    வேத, மனு சாத்திரத்தைக் காரணம் காட்டி யாரையெல்லாம் படிக்கக் கூடாது என விரட்டியடித்தார்களோ இன்று அவர்களை மந்திரம் சொல்லிப் படிக்க வலியுறுத்தி இந்துக்கள் என்கிற குடையின் கீழ் அணி திரட்டப் படுகின்றனர். இது சமத்துவத்திற்கானது அல்ல; வெறும் வாக்கு அரசியலுக்கானது எனபதை அனைவரும் உணரவேண்டும்.

    தமிழக அரசும் கல்வித்துறையும் யாகம் வளர்த்து வேதமந்திரங்கள் ஓதிவரும் நிலையில் இம்மாதிரியான மதவெறிப் பரப்புரைத் துண்டுப் பிரசுரங்களை சுற்றுக்கு விடுவதைத் தடுக்க  முற்போக்கு, இடது சாரி ஜனநாயக சக்திகளும் அவர்களது மாணவர் – இளைஞர் அமைப்புகளும் போராட வேண்டும். இவர்களுடன் இணைந்து மதவாத சக்திகளின் விஷப் பரப்புரையை முறியடிக்கவேண்டும்.   

வெள்ளி, பிப்ரவரி 06, 2015

பிழைகள் நிறைந்த பள்ளிப் பாடநூற்கள் (விரிவான கட்டுரை)



 பிழைகள் நிறைந்த பள்ளிப் பாடநூற்கள்
                        
                         - மு.சிவகுருநாதன்

     (பக்க வரையறை இன்றி எழுதப்பட்ட இக்கட்டுரை மிக நீளமாகப் போய்விட்டது. இதில் திருத்தப்பட்ட ஓர் பகுதி பிப்ரவரி 05, 2015 ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியானது. இதன் மூலம் இப்பிரச்சினையை தமிழகம் முழுமையும் கவனம் பெற வைத்த  ‘தி இந்து’ –க்கு நன்றி. இது முழுமையானதல்ல. இன்னும் விரிவான ஆய்வுகள் அனைத்துப் பாடங்களிலும் நடைபெறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.)

     இந்தக்கல்வியாண்டில் மத்தியக் கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தில் அம்பேத்கர் கேலிச்சித்திரம் தொடர்பான பிரச்சினை, திருவாங்கூர் சமஸ்தான தோல்சீலைப் போராட்டம் – ஓர் வகுப்பாரை இழிவு செய்த பிரச்சினை மற்றும் தனியார் பாடநூலில் அசைவ உணவுக்காரர்களை இழிவு செய்தது எனப் பல நிகழ்வுகள் இந்திய அளவில் பேசப்பட்டன. ஆனால் தமிழகத்தில் 2011 சமச்சீர்கல்வி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்த தருணம் தவிர்த்து பிற நேரங்களில் தமிழகப் பள்ளிப் பாடநூற்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில்லை. சமச்சீர்கல்வி பாடநூற்கள் குறித்து வெளிவந்த கட்டுரைகள் இரண்டு மட்டுமே. ஒன்று ‘தீராநதி’யில் மீனாவின் கட்டுரை; மற்றொன்று ‘காலச்சுவட்டில் சுடரொளியின் கட்டுரை. மேலும் தமிழ்ப் பாடநூற்கள் பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் 'காலச்சுவடு' இதழில் ஓர் கட்டுரை எழுதியிருந்தார்.  பொதுத்தளத்தில் இது தொடர்பான ஆய்வுகள் முற்றிலும் நடப்பதில்லை.

    பொதுவாக தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் எடுபிடிக் கல்வியாளர்களால் பெருமளவு இருட்டடிப்பிற்கு உள்ளாவது மொழி மற்றும் கலைப்பாடங்களே. தமிழ்நாடு அரசு வெளியிடும் ‘தமிழரசு’ இதழைப்போல பாடப்புத்தகங்களை நினைப்பது வேடிக்கை. பள்ளியளவில் மொழிப்பாடங்களும் சமூக அறிவியலும் இம்மாதிரியான பாதிப்பிற்கு பெருமளவில் உள்ளாகின்றன. இங்கு 9,10 ஆகிய வகுப்புகளின் சமூக அறிவியல் பாடநூற்களை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

மொழியாக்கக் குளறுபடிகள்

   நன்கு அறிமுகமான புதிய மொழியாக்கங்களைத் தவிர்த்து வழக்கொழிந்துபோன சொற்களைப் பயன்படுத்துதல். (உ.ம்) சட்டப்பேரவை, சட்டமேலவைக்குப் பதிலாக கீழ் அவை, மேல் அவை என்பது. மக்களவை, மாநிலங்களவை என்றெல்லாம் வழக்கில் வந்துவிட்டபிறகு ஏன் இவ்வாறு எழுதவேண்டும்? சட்டமேலவையே இல்லாதபோது இதைப்பற்றி விரிவாக விளக்கவேண்டிய தேவையென்ன? பாடநூல் எழுதும் திராவிடக்கட்சியினர் இவற்றை நீக்க மறந்துவிட்டனர். மேலும் சில பகுதிகள் நீக்கப்பட்டபோதும் அவற்றிற்குரிய வினாக்கள் நீக்கப்படவில்லை. இதைப்போலவே உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று சொல்லாமல் உயர் சாதி, தாழ்ந்த சாதி என்று பயன்படுத்தும் ஆதிக்க உணர்வு பாடநூல்களில் இருப்பது நல்லதல்ல. 

    தொலை நுண்ணுணர்வு, மின் வர்த்தகம், தொலைதூர நகல், சொந்தக்குரல் செய்தி, வேர்க்கடலை, மற்றைய பயிர்கள், செய்தி அச்சுத் துறை, மின்னணுச்செய்திகள் / மின்னணு அஞ்சல், பல்வேறு ஊடகம் என்று கடுமையான மொழிபெயர்ப்புக்களைத் தவிர்த்து முறையே தொலை உணர்வு, மின் வணிகம், தொலை நகல், குரல் செய்தி, நிலக்கடலை, பிற பயிர்கள், அச்சு ஊடகம், மின்னஞ்சல், பல் ஊடகம் என்று எளிமையான சொற்களைப் பயன்படுத்தலாமே! 

   ஓரிடத்தில் fax ஐ பிரதிகள் என்று கூட மொழிபெயர்க்கும் அதிசயமும் நடக்கிறது. (Fax - தொலை நகல்) கணினியில் input ஐ இடுபொருள் என்று பெயர்க்கப்படுகிறது. இது ஒன்றும் வேளாண் இடுபொருள் இல்லை; output ஐ என்ன செய்வார்கள்?; பயமாக இருக்கிறது. (input – உள்ளீடு, output – வெளியீடு). Fast Breeder Reactor  ஐ அதிவேக ஈனுலைகள் என்றுதானே சொல்லமுடியும். ஆனால் இவர்கள் ஊது உலைகள் என்று வாய் கூசாமல் சொல்கிறார்கள். 

     நிறுவனங்கள் மற்றும் இதழ்ப் பெயர்களை தமிழ்ப்படுத்தி அதிர்ச்சியளிக்கிறார்கள். கோரல் மில் (coral mills)  பவள ஆலையாகிறது.  மகாத்மா காந்தியின் ‘யங் இந்தியா’ (young India) ராஜகோபாலாச்சாரி நடத்தும்போது ‘இளம் பாரதம்’ ஆகிவிடுகிறது. நல்லவேளை திலகர் நடத்திய ‘கேசரி’யை ‘மயிரி’ என பெயர்க்காமல் விட்டுவிட்டார்கள்! அம்பேத்கர் மகத் மார்ச்ப் (March) பேரணி பற்றி குறிப்பிடப்படுகிறது. அப்ப March –ன்னா என்ன? 

  சில இடங்களில் ஒலிபெயர்த்துத் தரப்படுகிறது. அதிலும் பெரும் குழப்பம். ஹிட்லர் பெயிண்டராக வியன்னாவில் சில காலம் பணியற்றுகிறார். பெயிண்டர் (painter) என்று சொன்னால் இங்கு வழக்கில் வண்ணமடிப்பவர்தான். முற்போக்குக் கொள்கையுடையவர் என்று சொல்லிவிட்டு ஓவியர் என்று சொல்வதில் மட்டும் என்ன சிக்கலோ!

  எஸ்டரிபிகேஷன் (esterification), டெலிபிரிண்டர் (tele printer), டிரான்ஸ்ஜென்டர் (transgender) என்பதையெல்லாம் அப்படியே பயன்படுத்துவதாவது பரவாயில்லை. டிரான்ஸ்ஜென்டர் (transgender) என்பதைத் தமிழில் திருநங்கைகள் என்று சொல்லப்படுகிறதாம்! திருநம்பிகளை என்ன சொல்வார்கள்? மாற்றுப்பாலினம் என்ற சொல் பயன்பாட்டில் இருப்பதை அறியாது பாடநூல்கள் எழுதுபவர்களை என்ன செய்வது? Cartographers, map-makers ஆகியவற்றை பேசாமல் ஒலிபெயர்த்திருக்கலாம். மேப்பியலாளர்கள் என்ற இருமொழிச்சொல்லை (bi-lingual) புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்! ‘புகலிடம்’ என்ற நல்ல சொல் இருக்க இவர்கள் சரணாலயத்தில் சரணடைகிறார்கள்.

 எலக்ட்ரிக் – எலக்ட்ரானிக் (electric-electronic) வித்தியாசமின்றி பெயர்த்துத் தொலைக்கிறார்கள். முன்னது மின்னியல்; பின்னது மின்னணுவியல். காற்று மாசடைவதைத் தடுக்க Aerosol பயன்பாட்டைக் குறைக்கவேண்டுமாம்! Aerosol ஐ விளக்குவது யாரோ? தொலை உணர்வு செயற்கைக் கோள்கள் என்பது பல்லாண்டுகளாக அனைவருக்கு தெரிந்த பயன்பாடு. ஆனால் இங்கு Remote sensing என்பதை தொலை நுண்ணுணர்வு என நீட்டி முழக்கி மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவேண்டிய அவசியமென்ன? பிரிட்டன், பிரிட்டீஷ், இங்கிலாந்து, ஐக்கியப் பேரரசு என ஒவ்வோரிடத்திலும் ஒரு மாதிரி எழுதி குழப்பத்தில் ஆழ்த்தாமலும் இருக்கலாம்.

  காலனியம், மார்க்சியம் போன்றவை தமிழ்ச்சொற்களாகவே ஆகிவிட்ட நிலையில் காலனி ஆதிக்கம், மார்க்ஸிஸம் என்று எழுதுவதுதான் இவர்களுக்குப் பிடிக்கிறது. இவர்களுடைய மொழிப்புலமைக்கு கீழே ஓர் எடுத்துக்காட்டு.
    “Imperialism is a state policy and is developed for ideological as well as financial reasons. Imperialism is a concept whereas colonialism is the practice.”
      
பாடநூலில் இதன் மொழியாக்கம்:

    “ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாட்டின் கொள்கையாகும். இது கொள்கை ரீதியாகவும் பொருளாதார காரணங்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. ஏகாதிபத்தியம் என்பது கொள்கை, காலனி ஆதிக்கம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதிக்கம் ஆகும்.” இதில் கருத்து, கருத்தியல், கொள்கை, அரசு, நாடு ஆகியன என்ன பாடுபடுகிறது என்று பாருங்கள்! இது ஓர் உதாரணம் மட்டுமே;  மொழிபெயர்ப்புகள் பலவும் அலங்கோலம்.

இன்னொரு எடுத்துக்காடு: 

During the age of tamil empires, the Bhakthi movement, the Nayanmars and Alwars accommodated the Vedar, Putayar and Parayar as Bhakthas, yet did not argue for their access to education, offices and temples. 

இதன் தமிழாக்கம் (பாடநூலில்),

  “பக்தி இயக்கத்தின் போதும் சாதிப்பகுபாடு இல்லாமல் வேடர், புலையர், பறையர் போன்றவர்களையும் பக்தர்களாக ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏற்றுக்கொண்ட போதிலும் அவர்களுக்கு கல்வி, கோயில், அரசுப்பணிகளில் உரிய பங்கினைத் தருவதற்கான கோரிக்கைகள் எழவில்லை”, 

        என்ற வரிகளில் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள்? புலையர் எப்படி Putayar என்றானது? பாடம் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது என்பது உறுதியாகிறது. அதிலும் அவ்வளவு அபத்தங்கள், குளறுபடிகள்.

     கண்ணப்ப நாயனார் (வேடர்), நந்தனார் என்னும் திருநாளைப்போவார் (பறையர்/புலையர்), திருக்குறிப்புத் தொண்ட நாயனார் (வண்ணார்), அதிபத்த நாயனார் (பரதவர்) போன்ற நாயன்மார்களும் திருப்பாணாழ்வார் (பாணர் – தலித்) என்ற ஆழ்வாரும் அடித்தள சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பற்றிய புனைவுகளை உருவாக்கி பெரும் மக்கள் திரளை இந்துமதம் தக்கவைத்துக் கொண்டதுதான் வரலாறு. இவர்களை எப்படி ‘அவர்களே’ ஏற்றுக்கொள்ள முடியும்? சைவமும் வைணவமும் ஏற்றுக் கொண்டாதாக சொன்னால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தெற்கு வாசல் ஏன் அடைபடவேண்டும்? தலித்கள் போராடவே இல்லையா? இவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை யாரிடம் வைத்திருக்க வேண்டும்?

கருத்தியல் தெளிவின்மை

   ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானது என வரையறுக்கப்படுகிறது. அதில் என்ன முற்போக்கு அம்சம் இருக்கிறது என்று விளக்கவேண்டுமல்லவா? 

    தேவதாசிகளைச் சொல்லும்போது ஆலயசேவகிகள் என்று தேவையில்லாமல் விளக்கமளிக்கிறார்கள். இவர்கள் இறைபணி மற்றும் கலைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள் என்றும் காலமாற்றத்தால் பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் இம்முறை சீரழிக்கப்பட்டதாகவும் வருந்தி ஒப்பாரி வைக்கிறார்கள். இது யாருடைய குரல்? இது மாணவர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

    பிறகேன் இம்முறையை ஒழிக்க சுயமரியாதை இயக்கமும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் பாடுபடவேண்டும்? மூவாலூர் இராமமிர்தம் அம்மையார் பொட்டறுப்புச் சங்கங்களை ஏன் நிறுவவேண்டும்? இந்த அர்ப்பணிப்புப் பணிக்கு ஓர் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் ஏன் தெரிவு செய்யவேண்டும்? என்ன மனநிலையில் இவ்வாறான வரலாறு எழுதப்படுகின்றன?

    இம்முறையை ஒழிப்பதற்கு மதவாதிகளும் பழமைவாதிகளும் எதிராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. (ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆதரவாக  மகாத்மா காந்தி, பெரியார், திரு.வி.க. ஆகியோரிருக்க யார் எதிர்த்தது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஒன்பதாம் வகுப்பில் சொல்லியபடி சனாதனியான மகாத்மா காந்தி கூட ஆதரவளித்துவிட்ட பிறகு யார்தான் எதிர்த்தார்கள்? சி.ராஜகோபாலாச்சாரியும் எஸ்.சத்தியமூர்த்தியும் எதிர்த்தார்கள் என்பதை ஏன் மறைக்கவேண்டும்?  எஸ்.சத்தியமூர்த்தி இதை மட்டுமா எதிர்த்தார்? குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை மீறுவேன்; தன்னை காங்கிரஸை விட்டு வெளியேற்றினாலும் பரவாயில்லை என்றவராயிற்றே.

    1929 இல் தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. சுயமரியாதை இயக்கம் மட்டுமே, திருமணமாகாத தங்கள் இயக்கத் தொண்டர்கள் தேவதாசிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குத்தூசி குருசாமி உள்ளிட்ட பலர் இதைச் செயல்படுத்தினர். சமூகவிலக்கிற்கு உள்ளாகி புகலிடமற்ற அப்பெண்களை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி தனது இல்லத்திலேயே தங்க வைத்தார். இப்படித்தான் அவ்வை இல்லம் தொடங்கப்பட்டது. இம்மாதியான செய்திகளைச் சொல்வதைத் தவிர்த்து பக்கம்பக்கமாய் வெற்றுக்கதைகள் பேசப்படுகின்றன.

  டிசம்பர் 25, 1927 ‘குடியரசு’ இதழிலிருந்து பெரியாரின் சாதிப்பட்டம் நீக்கப் படுகிறது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் வெளிப்படையாக தனது சாதிப்பட்டத்தை நீக்கி அதை ஓர் இயக்கமாக முன்னெடுத்த பெரியாரின் பெயர் பாடநூலில் ராமசாமி நாயக்கர் என்றே எழுதப்படுகிறது. ஆனால் தனது வாழ்நாள் இறுதிவரை சாதிப்பெயரை சுமந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன் ஆனதன் அதிசயம்தான் நமக்கு விளங்கவில்லை.

     பொங்கல் இந்துப்பண்டிகை என்கிறார்கள். அப்படியென்றால் இந்துக்கள் வசிக்கும் இந்தியா முழுமையும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை? ஒவ்வொரு மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளைச் சொல்லிவிட்டு இந்துப் பண்டிகைகள் மட்டும் அனைவராலும் கொண்டாடப்படுவதாக பட்டியலிடப்படுகிறது. இது என்னவிதமான மனநிலையைப் பிரதிபளிக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இந்தப் பாடத்திற்கு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பு வேறு.


    1857 இல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரை ‘படைவீரர்கள் கிளர்ச்சி’ என்று ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள் சொன்னதாக வருந்தியழும் இவர்களுக்கு 1806 இல் வேலூரில் நடைபெற்றது மட்டும் வெறும் ‘கலகம்’ ஆகத் தெரியும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற ஒற்றை வரியைக் கொண்டு தமிழர்கள் விதியை நம்பினார்கள் என்று வரலாறு எழுதுவது எவ்வளவு பெரிய அபத்தம். மேலும் இதில் என்ன உலகப்பார்வை இருக்கிறது?

   பழங்கால அரசுகள் காவல் அரசாக (Police State) மட்டுமே இருந்தன, மாறாக தற்கால அரசுகள் பாதுகாப்பு அரசாக (Welfare State)  செயல்படுவதைச் சொல்லி அவற்றின் பணிகள் பட்டியலிடப்படுகின்றன. தலையிடாக் கொள்கை (Laissez-faire) தாராள மயம், தனியார் மயம், உலக மயம் ஆகியவற்றை விளக்கிச் சொன்ன பிறகு இங்கு Welfare State க்கு பொருளுண்டா என்பதையும் விளக்கினால் நன்றாகயிருக்கும். அசோகர் பொன்ற சில மன்னர்களின் செயல்பாட்டில் இருந்த Welfare State –ன் குணங்கள் கூட இன்றைய உலகமய மக்களாட்சி அரசுகளுக்கு இல்லை என்பதுதானே உண்மை?

அறிவியல் பார்வை இன்மை

      சதுப்புநிலத் தாவரங்களான அவிசீனியா, ரைசோபோரா போன்றவற்றின் வேர்கள் நீர்ப்பரப்பிற்குமேல் பரந்து காணப்படும். இவற்றில் இலைத்துளைகள் போல் துளைகள் இருக்கும். இதன்மூலம் சுவாசம் நடைபெறுகிறது. எனவே இவற்றிற்கு  சுவாசிக்கும் வேர்கள்  (Respiratory Roots) என்று பெயர். இந்த வேர்கள் சதுப்புநிலத்தாவரங்களைத் தாங்கப் பயன்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. தாங்குவது மட்டும் இதன் பணியல்ல. ஆலமரத்தின் விழுதுகளைத்தான் தூண்வேர்கள் என்று சொல்வதுண்டு.

 ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் புவியியல் பகுதியில் “பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டைப் பகுதியிலுள்ள அடர்ந்த சதுப்புநிலக்காடுகள் மனிதனின் பொறுப்பற்ற செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” (இவ்விடங்களைப் பாதித்த மனித செயல்களை ஆராய்ந்து அறிக.) என்று ‘சுற்றுச்சூழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும்’ பாடத்தில் சொல்லப்படுகிறது.  இதற்கு மாணவர்கள் மனிதச் செயல்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தப் பட்டியல் ஒன்றை தயார் செய்யக்கூடும். இதில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு, திறந்த வெளிக் கழிப்பிடங்கள், மரங்களை வெட்டுதல் என்ற மனிதச்செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்படக்கூடும். மோடியின் தூய்மை இந்தியாவிற்கு பின்னால் வேறு எப்படி யோசிக்க முடியும்?

     இவையெல்லாம் வெறும் மனிதச் செயல்பாடுகள் மட்டுந்தானா, அப்படி மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை. பூச்சிக் கொல்லிகள், வேதி உரங்கள், சுற்றுலா, இறால் – மீன் பண்ணைகள், அனல்மின் நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றைத் தனிமனிதச் செயல்பாட்டில் மட்டுமே அடக்க முடியுமா? இவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியல் தொழிற்பாடுகள், கொள்கைகள், மூலதனம் போன்றவற்றையும் இணைத்து அணுகவேண்டிய அவசியமிருக்கிறது. மாணவர்களை மூளைச்சலவை செய்யு நோக்கத்துடனே இத்தகைய பாடநூற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டியது இன்றியமையாதது.

   சதுப்பு நிலங்கள் குறித்த வரையறை ஒன்றைச் சொல்லி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றனர். இதே ஒன்பதாம் வகுப்புப் பாடநூலில் (3 -வது பருவம்) ‘வளங்களைப் பாதுகாத்தலும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியும்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் “ஆறு அடி ஆழத்திற்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நீர் தேங்கியுள்ள பகுதி சதுப்பு நிலப்பகுதியாகும்”, என்று வரையறை சொல்லப்படுகிறது.  இது என்ன அபத்தம். நீர் தேங்கிய இடமெல்லாம் சதுப்பு நிலங்கள் என்றால் நாட்டில் சதுப்பு நிலங்களுக்கே பஞ்சமிருக்காதே! இதுதான் நமது இன்றைய கல்வியின் நிலை.
 

       9 – ம் வகுப்பு புவியியலில் (மூன்றாம் பருவம்) ‘மண்வளத்தைத் தக்க வைத்தல்’ என்கிற தலைப்பில் “விவசாயக்கழிவு மற்றும் குப்பை + நன்மை செய்யும் பூஞ்சைகளும் காளான்களும் = உயிர் உரம்” என்று படம் போட்டு விளக்கப்பட்டுள்ளது. இதை உயிர் உரம் என்று சொல்வது மடத்தனம்; இயற்கை உரம் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் பூஞ்சைகளும் காளான்களும் ஒன்றே. பூஞ்சைகளும்  பாக்டீரியங்களும் என்று வேண்டுமானால் சொல்லலாம். 




  உயிர் உரங்களைப் பற்றி கொஞ்சம். வளிமண்டலத்தில் மிக அதிகமாக உள்ள (78%) நைட்ரஜன் (N) வாயுவை நிலைப்படுத்தி அதாவது நைட்ரேட்டாக (NO3) மாற்றித் தாவரங்களுக்கு அளிக்கும் வேலையைச் செய்பவையே உயிர் உரங்கள் என்று அழைக்கப்படும். உம். பாசி மற்றும் பூஞ்சை வகைகளைச் சேர்ந்த அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ், பாஸ்போ பாக்டீரியா, அசட்டோ பாக்டர், அனபினா, நாஸ்டாக்  மற்றும் வேர்முடிச்சு (வேர்முண்டுகள்) பாக்டீரியமான ரைசோபியம். அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ் ஆகியவை நெல் போன்ற பயிர்களுக்கு உயிர் உரமாகத் தரப்படுகிறது. ரைசோபியம் அவரை, உளுந்து  குடும்பத் தாவரங்களின் வேர்முடிச்சுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது. 




  அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ், ரைசோபியம் ஆகியன உயிருள்ளவை. இவைகள் வாழிடத்திற்காகவோ வேறு காரணங்களுக்காகவோ நெல், அவரை. உளுந்து போன்ற வேளாண்பயிர்களைச் சார்ந்து வாழ்ந்து பலனடைகின்றன. எனவே இவற்றை உயிர் உரங்கள் என்கிறோம். இறந்துபோன தாவர விலங்கு உடலங்களை சாப்பிட்டு மட்கச்செய்யும் பாக்டீரியங்கள் (சாறுண்ணிகள்) மூலம் தாவரங்களுக்குக் கிடைப்பவை இயற்கை உரங்கள். இதுகூடத் தெரியாமல்தான் நமது பாடநூற்கள் எழுதப்படுகின்றன.


     கனிமங்களை உலோகங்கள், உலோகமல்லாத கனிமங்கள் என்று குறிப்பிடுவதைத் தவித்து மாணவர்கள் ஏற்கனவே அறிந்த அலோகம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே. உயிர்த்தொழில்நுட்பத்தின் நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுவிட்டு அதன் விளைவுகள் குறித்து வாய் திறக்காதது அறிவியல் மனப்பான்மையாகாது.

    சந்திராயன் I நிலவிற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டு நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது என்று கூறுகிறார்கள். நிலவில் நீர் இருந்ததற்காக வாய்ப்பு மற்றும் இனி நீர் உருவாக வாய்ப்பு போன்றவற்றிற்கான ஆய்வுகளை போகிறபோக்கில் நிலவில் நீர் இருக்கிறது எனச் சொல்வது அபத்தம். இந்தக் கண்டுபிடிப்பு ஒன்றும் இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இவ்வாய்வை இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் சேர்ந்தே செய்தன. மேலும் பல நாடுகள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன. நேரடியாகக் குடிப்பதற்கான நீராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நிலவில் எளிதாக நீர் கிடைக்க இது உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தவறான தகவல்கள்

      அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 27 என பட்டியலிடப் பட்டுள்ளன. ஆனால் உறுப்பு நாடுகள் மொத்தம் 28. இப்பட்டியலிலுள்ள லைபீரியா ஓர் ஆப்பிரிக்க நாடு; லாட்வியா, குரேஷியா என்ற இரு அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் பட்டியலில் இல்லை.
      அய்.நா.அவையின் சிறப்பு நிறுவனங்களில் உலக வங்கி (IBRD)  எனச் சொல்லிவிட்டு விளக்கப்படத்தில் பன்னாட்டு கிராமப்புற வளர்ச்சி வங்கி என்று விளக்குகிறார்கள். பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (International Bank for Reconstruction and Development) என்பதை  இப்படியும் மொழிபெயர்க்கலாம் என்கிற உண்மையை மாணவர்கள் இதன்மூலம் தெரிந்துகொள்கிறார்கள்!

     முதல் உலகப்போரின் போது ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பலால்  மூழ்கடிக்கப்பட்ட லூசிட்டானியா கப்பல் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்று கூறி பொதுத்தேர்வுகளில் வினாவும் கேட்கப்படுகிறது. ஆனால் இது பிரிட்டனுக்குச் சொந்தமானது. அமெரிக்கக் கொடி, பயணிகளுடன் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இக்கப்பல் அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்காவின் இயல்பை உலகிற்கு பறைசாற்றுகிறது. இதில் 114 அமெரிக்கர்கள் இறந்தனர். அதுவரையில் முதல் உலகப்போரில் மறைமுகமாகப் பங்கு பெற்ற அமெரிக்கா இந்நிகழ்விற்குபிறகு வெளிப்படையாக பங்கேற்றது என்று வேண்டுமானால் கூறலாமே தவிர அமெரிக்காவின் மறைமுகப் பங்கை மறுக்கமுடியாது.  அமெரிக்காவை அப்பாவியாக சித்தரிக்க முயலும் தொனியும் இங்குள்ளது கவனிக்கத்தக்கது. இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு வீச்சுக்கு பாதிக்கப்பட்ட ஜப்பான் உலக அரங்கில் மன்னிப்பு கேட்டபோதும் இதற்குக் காரணமான அமெரிக்கா இன்னும்கூட வாய்திறக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

   சமணத்தில் தர்மச்சக்கரம் பேசப்பட்டாலும் இது அதன் சின்னமல்ல. ஸ்வதிகா, மேலே மூன்று புள்ளிகள் மற்றும் பிறை வடிவம் அதன் மீது ஓர் புள்ளி ஆகியவையே சமணச் சின்னமாக அறியப்படுகிறது. இது பிறவிச்சக்கரம் என்னும்  ஸ்வதிகா உயிர்கள் தேவகதி, விலங்குகதி, நரககதி, மனிதகதி என்னும் நான்குகதிகளில் பிறந்து உழல்வதையும் மூன்று புள்ளிகள் நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளையும் பிறை போன்ற கோடும் ஒற்றைப்புள்ளியும் வினைகள் நீங்கி வீடுபேறு அடைதலையும் குறிப்பதாகும். எட்டுக் கம்பிகள் கொண்ட தர்மச்சக்கரம் பவுத்தத்தின் எண்வழிகளைக் குறிப்பிடுகின்றது. சாரநாத் மான் பூங்காவில் புத்தர் செய்த சொற்பொழிவு முதல் தர்மசக்கரச் சுழற்சியாகக் கருதப்படுகிறது. இந்த சக்கரமே நமது தேசியக் கொடியின் நடுவிலுள்ளது.

    வடுவூர் பறவைகள் புகலிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லை. மாறாக திருவாரூர் மாவட்டத்தில்தான் உள்ளது. இதைப்போல நரிமணம் (பனங்குடி) எண்ணெய் சுத்திகரிப்பாலை பாடப்புத்தகத்தில் உள்ளதுபோல் திருவாரூர் மாவட்டத்தில் இல்லை; நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே உள்ளது. குழாய்ப் போக்குவரத்திற்கு திருவாரூர், நாகை மாவட்டங்களை உதாரணமாகக் கூட குறிப்பிடத் தவறுவதேன்? இங்கு இதனால் அடிக்கடி ஏற்படும் உயிர் – பொருளிழப்புகள் மறைக்கவா? இப்போக்குவரத்தின் நன்மைகள் மட்டுமே சொல்லி இழப்புகள் மறைக்கப்படுகின்றன. தமிழகப் புவியலிலுமா இவ்வாறு செய்யவேண்டும்? 

    சதுப்புநிலக்காடுகளுக்கு வேதாரண்யத்தை மட்டும் சொல்வதும் தவறு. வேதாரண்யம் காடுகள் முழுதும் சதுப்புநிலக்காடுகள் அல்ல. வேதாரண்யத்திலிருந்து அதிராம்பட்டினம் வரை சதுப்புநிலக்காடுகள் எனப்படும் அலையத்திக்காடுகள் (mangrove forest) நீண்டு இருப்பினும் பிச்சாவரத்திற்கு அடுத்தபடியாக முத்துப்பேட்டைப் பகுதியில்தான் பெருமளவில் உள்ளன.

   ரயில்வேயில் குறுகிய பாதை எங்குள்ளது என்று சொல்லவேண்டாமா? போக்குவரத்து நிலவரைபடத்தில் காரைக்குடி-திருவாரூர் இருப்புப்பாதை வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப்பாதை அகற்றப்பட்டும் போக்குவரத்து நிறுத்தியும் பல ஆண்டுகளாகிறது.

    காவிரியின் துணையாறுகள், கிளையாறுகள் பட்டியலில் மணிக்கொண்டானாறு என்று ஓர் ஆற்றின் பெயர் உள்ளது. இதை முடிகொண்டானாறு என்று புரிந்துகொள்வோம். ஆனால் மண்ணியாறு, நாட்டாறு போன்றவற்றை சரஸ்வதி நதியைக் (?!) கண்டுபிடிக்கப்போகும் தொல்லியல் ஆய்வுக்குழுவினர்தான் கண்டுபிடிக்கவேண்டும். வைப்பாறு என்பதை வைப்பார் என்றும் அடையாறு என்பதை அடையார் எனவும் எழுதுவதை எப்போது நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை?

    ஆங்கிலவழிப் பாடநூலில் mudikondinar, manniyar, nattar என்றுதான் உள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் இப்பாடநூற்களின் முதல்பதிப்பு 2011; 2012, 2013, 2014 என ஒவ்வோராண்டும் திருந்திய பதிப்பு வெளியிடுகிறார்கள். பாலை நில மக்கள் கள்ளர் என்று தமிழ்ப்பதிப்பில் இருந்து, பின்னர் கள்வர் எனத் திருத்தப்பட்டது. ஆனால் ஆங்கிலப்பதிப்பில் Kallar of Paalai என்றுதான் இன்றுவரை உள்ளது. பழவேற்காடு ஏரியை இன்னும் புலிக்காட் ஏரி (Pulicat lake) என்றுதான் தமிழில் சொல்லிக்கொடுக்கிறோம்.

  பிரிட்டன், பிரிட்டிஷ், இங்கிலாந்து, ஐக்கிய பேரரசு, கிரேட் பிரிட்டன் என மாற்றிமாற்றி எழுதாமல் ஓர்மையைக் கடைபிடித்தால் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

தலைவர்களைக் கொச்சைப்படுத்துதல்

  பத்தாம் வகுப்பு  சமச்சீர் கல்வி சமூக அறிவியலில் '19ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்கள்' என்ற பாடத்தில் ராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, அன்னிபெசன்ட், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு இப்பாடத்தில் அம்பேத்கருக்கு இரு பத்தியும் பெரியாருக்கு ஒரு பத்தியும் ஒதுக்கியுள்ளனர். தமிழகத்தில் மாறி மாறி ஆளும் இரு திராவிட கட்சிகளின் தலித் விரோதப் போக்கு புரிந்து கொள்ளக்கூடியது.  பெரியாரையும் முழுவதுமாக இருட்டடிப்பு செய்ய இப்பக்கத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.  அம்பேத்கர் என்ற பெயரை நமது பாடநூற்கள் அம்பேத்கார் என்றே தொடர்ந்து எழுதுகின்றன.  இதுவும் கண்டிக்க வேண்டிய போக்கு ஆகும்.

    டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தலித் மக்களின் மீட்பாளராகக் (messiah) கருதப்படுகிறார் (முதல் பதிப்பில் கடவுள் என்று இருந்தது.)  என்று சொல்லும் இப்பத்தியில் 1990 ஆம் ஆண்டில் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது.  அவருடைய விலக்கப்பட்டோர் நலச்சங்கம் -பாசிகிருகித் காரணி சபா என்றும் குறிப்பிடப்படுகிறது.

     புத்தர், மகாவீரர் போல டாக்டர் அம்பேத்கர் இங்கு எப்போதும் கடவுளாகக் கருதப்பட்டதில்லை.  தலித் மக்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோர் அனைவரின் உரிமைக் குரலாகவும் அவர்கள் கிளர்ந்தெழ ஆதர்சமாகவும் விளங்கியவர் அவர்.  புத்தர், மகாவீரர் போன்றவர்களைப் பிற்காலத்தில் கடவுளாகவும் அவதாரமாகவும் மாற்றியதைப் போல் அம்பேத்கரையும் சிமிழுக்குள் அடைக்க முயல்வது ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட தொண்ணூறுகளில்தான் அவருடைய எழுத்துகள் தமிழகத்தில் அதிகம் வாசிக்கப்பட்டும் இங்கு தலித் இயக்கங்கள் கட்டப்பட்டும் தலித் மக்கள் மத்தியில் போராட்ட உணர்வு வெளிப்பட்டது.  இங்கோ அல்லது இந்தியாவில் எங்கும் அவர் கடவுளாக வழிபடப்படுவதில்லை.  ஒடுக்கப்பட்ட தலித்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவே இது போன்ற கூற்றுகள் பயன்படும்.


    தலித்களுக்காக மட்டுமல்லாது இந்து மத சாதிக்கொடுமைகளை அனுபவித்த அனைத்து  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உழைத்த அண்ணலுக்கு 1990 இல் அதாவது 1988-ல் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 'பாரத ரத்னா' வழங்கப்பட்டதற்கு பிறகு வழங்கப்பட்டது.  இத்தகைய விருதுகளில் அண்ணல் புகழடையவில்லை என்பது முதலில் இவர்கள் உணர வேண்டும்.  அம்பேத்கர் பற்றி கூறுவதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்க அதைச் சொல்லாமல் விட்டு விட்டு இதை மட்டும் கூறுவது ஏன்?

        நான் இந்துவாகப் பிறந்து இங்குள்ள சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன்.  இதிலிருந்து இன்று வரை விடுதலை கிடைக்காதபோது இந்துவாக சாகமாட்டேன் என்று சொல்லி லட்சக்கணக்கானோர்களுடன் பவுத்த மதத்தில் அய்க்கியமானதை இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா! அப்போதுதான்  ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் தீண்டாமையை ஒழிக்க என்ன செய்தார்கள் என்பதை வருங்கால சந்ததி உணர்ந்து கொள்ளும் என்பதால் இந்த மறைப்பு வேலை இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

     அம்பேத்கரின் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கத்தை 'பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா(Bahishkrit Hitaharini Sabha) என்பதைக் கூட ஏதோ பாசி, காரணி என தாவரவியல், கணிதவியல் சொற்களைச் சேர்த்து 'பாசிகிருகித் காரணி சபா'   என்று பாடநூல் எழுதும் மடையர்களை என்ன செய்வது?  தலித்கள், ஒடுக்கப்பட்டோர் பற்றிய எவ்வித புரிதல்கள் அற்ற இந்த செத்த மூளைகள் எதிர்கால சந்ததியினருக்கு அம்பேத்கர், பெரியார் போன்றோரை எப்படி அறிமுகம் செய்வார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம் மட்டுமே.  விவேகானந்தரை எழுத மட்டும் இவர்களது பேனா  நீள்வது ஏன்?  இந்துத்துவா அரசுகள் தயாரித்த பாடநூற்களில் இவ்வாறு இருந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.  ஆனால் திராவிட இயக்க ஆட்சியில் நடப்பதுதான் வேதனை.

      மோசமான இந்தப் பிழையை 2012 மறுபதிப்பில் பகிஷ்கிருத்திகாராணிசபா (மறுபதிப்பு – 2012, பக். 72) என்று திருத்தியுள்ளனர். இது இன்று வரை அப்படியே தொடர்கிறது. பாசி, காரணி என்று எள்ளல் செய்தவர்கள் தற்போது கிருத்திகா, ராணி என சொல்வதை எப்படி பொறுப்பது?  என்ன கொடுமை இது! இவ்வளவு கேவலமாக பாடத்திட்டம் எழுதுபவர்களை என்ன செய்வது?

   1924 ஜூலை 20 இல் மும்பையில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் புகழ் பெற்ற முழக்கமே ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதாகும். 1925 இல் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை ஏற்கப்படாமை, வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை போன்ற காரணங்களுக்காக பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குகிறார். 1925 செப்டம்பர் 27 இல் எச்.பி.ஹெட்கேவர்  மற்றும் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, டாக்டர் எல்.வி.பரஞ்சிபே, டாக்டர் தால்கர், டாக்டர், பாபாராவ் சவார்க்கர் (வி.டி.சவார்க்கரின் அண்ணன்) ஆகியோர் ‘ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்’ என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் அருமை விளங்கும். இவ்வாண்டுதான் (டிசம்பர் 26) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொடங்கப்படுகிறது.

      இந்து மத சாதிவெறி தீண்டாமைக் கொடுமைகளால் பிறப்பு முதல் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்கிடையே தம்முடைய உயர்கல்வியை முடித்தவர் அம்பேத்கர்.   தன் குடும்ப வாழ்வில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள், உரிமைகளுக்கான போராட்டங்கள், படிப்பு, ஆய்வுகள், எழுத்துகள், அரசியல் சட்டம் எழுதும் பணி, சட்ட அமைச்சர் என்ற பல்வேறு பரிமாணங்களில் தம் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க தம் பதவி துணை புரியாது என்ற நிலை ஏற்பட்ட போது அதை தூக்கியெறிந்த இவர்.

    அம்பேத்கர் தலித் விடுதலைக்கு மட்டும் போராடவில்லை.  அப்படியிருந்தால் 'சூத்திரர்கள் யார்?' எனும் ஆய்வு நூலை அவர் வெளியிட்டிருக்க வேண்டியதில்லை.  அவர் பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா, சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அட்டவணை சாதி கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி என ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையைத் தரக்கூடிய அனைத்து வகையான சாத்தியங்களையும் முயன்று பார்த்தவர்.

         இந்திய அளவில் சமகாலத்தில் காந்தி, நேரு, நேதாஜி, அம்பேத்கர், பெரியார் போன்றோர் செயல்பட்ட நிலையில் அம்பேத்கரை தலித் தலைவராகவும் பெரியாரை தமிழர் தலைவராகவும் சுருக்குவது மிகவும் அபத்தம். மேலும்  அம்பேத்கரை விக்ரகமாக்கி பூட்டி வைக்கும் இந்துத்துவா முயற்சிகள்  இங்கு எடுபடாது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஒரு விடுதலைப் போராளியை மீட்பராக (கடவுள்) மாற்றும் செயல் ஒருவகையான  தந்திரமே.
 
       பெரியார்-மணியம்மை திருமணம் திராவிடக்கட்சிக்கு (?) ஒரு பெரும் அதிர்ச்சியளித்ததாம்! அதனால் அண்ணா தி.மு.க. வைத் தொடங்கியதாக கதையளக்கிறார்கள். 1947 ஆகஸ்ட் 15 ஐ பெரியார் துக்க நாளாக அறிவித்தபோது, அண்ணா அதை மறுத்து இன்ப நாள் என்றது, தேர்தலில் பங்கற்க அண்ணாவிற்கு இருந்த விருப்பம், கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்த தயக்கம் போன்ற வரலாற்றுண்மைகளை மறைத்து பெரியாரை மேலும் ஓர் முறை கொச்சைப்படுத்துகிறார்கள். 1949 ஏப்ரல் 09-ல் திருமணம் நடக்கிறது. செப்டம்பர் 17-ல் தி.மு.க. உதயமாகிறது. திருமணந்தான் காரணமென்றால் 5 மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏன்?

   1967 இல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த அண்ணாவால் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித்திட்டத்தைச் செயல்படுத்தமுடியவில்லை என்பது சொல்லப்படுகிறது. அண்ணாவால் முடியாத செயலை நாங்கள் ஒரு கிலோ ஓர் ரூபாய்க்கும் தற்போது விலையில்லாமலும் தருகிறோம் என்றுதானே இவர்கள் இதன்மூலம் சொல்ல வருகிறார்கள். இதனோடு அன்று தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலில் இருந்ததையும் இப்போது தமிழக அரசே மது விற்பனை செய்வதையும் சேர்த்துச் சொல்வதுதானே நேர்மையாக இருக்கமுடியும். 

   நீதிக்கட்சிக்கு திராவிடர் கழகம் என்ற பெயரை அண்ணா மாற்றியதாச் சொல்வது எந்தளவிற்கு உண்மை? சேலம் மாநாட்டிற்கு முன்னதாகவே ஆகஸ்ட் 05, 1944 ‘கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல்’ என்று ‘குடியரசு’ இதழில் துணைத் தலையங்கம் பெரியாரல் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 27, 1944 சேலம் செவ்வாய்ப்பேட்டை நீதிக்கட்சி மாநாடு தொடர்பான ‘குடியரசு’ ஆகஸ்ட் 12,19 – 1944 இதழ் தலையங்களில் திராவிடர் கழகம், திராவிட நாடு குறித்துப் பெரியார் எழுதியுள்ளதை கவனிக்கவேண்டும். 

   இந்த லட்சணத்தில் “பெரியாரின் ஆசைகளை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நிறைவு செய்து வருகின்றன”வாம்! பெரியார் – அண்ணாவை கொச்சைப்படுத்தத் துணிந்தவர்களே அவர்களது வாரிசுகளாக என வலம் வருவதுதான் தமிழ்நாட்டின் அவலம்.

புள்ளிவிவரங்களில் நம்பகமின்மை

    தமிழகத்தில் ஆட்சிக்குவரும் இரு கட்சிகளும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் என்ற வெற்று முழக்கத்தை முன்வைப்பதைப் பார்த்துள்ளோம். தமிழ்நாடு முதன்மையாக இருப்பதைக் கூட இருட்டடிப்பு செய்யும் அவலம் இங்கு நடக்கிறது. இந்தியாவில் தமிழகம் தோல் பதனிடுதலில் முதலிடம், காகிதம்-நெசவு-மென்பொருள் தொழில்களில் இரண்டாமிடம், சிமென்ட்-பட்டு நெசவு ஆகியவற்றில் நான்காமிடம் என வரிசைப்படுத்தப்படுகிறது. இத்தகைய தொழில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல்ப் பேரழிவுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

     போபால் யூனியன் கார்பைடு ஆலைப் பேரழிவில் 8000 பேர் மட்டும் இறந்ததாகப் பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. இங்கு மறைநீர் (virual water) என்ற கருத்தாக்கமும் வளர்ந்த நாடுகள் இந்தியா போன்ற நாடுகளின் நீர்வளத்தை கொள்ளையடிக்கும் நிலை விளக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? இதைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. மரபு சாரா மின்னுற்பத்தியில் 7253 மெ.வா. அளவிற்கு உற்பத்தி செய்து தமிழகம் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பதை சொல்லாமல் மறைக்கவேண்டியதன் அவசியமென்ன? இதில் ஊடகங்களால் உயர்த்திப்பிடிக்கப்படும் குஜராத் கூட இரண்டாமிடத்தில்தான் உள்ளது.

   மேலும் மரபு சாரா மின்சக்தி உற்பத்தியில் மிகுந்த இடர்பாடுகள் இருப்பதாக பட்டியல் தயார் செய்யப்படுகிறது. காற்றாலை இடர்பாடுகள் பட்டியலில் ஒலி மாசு. அதிக பண முதலீடு தேவை, வானொலி-தொலைக்காட்சி அலைகளுக்கு இடையூறு, வனவிலங்குகள் வாழிடம் அழிப்பு என மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். தமிழகத்தின் எப்பகுதிகளில் காடுகளை அழித்துக் காற்றலைகள் அமைக்கப்பட்டன? ஆனால் மருந்திற்குகூட அணுமின் சக்தி, அனல் மின்சக்தி ஆகியவற்றின் இடர்பாடுகள் இவர்கள் கண்ணிற்கு படவில்லையே! 

    சுற்றுச்சூழல் சீர்கேட்டைச் சொல்லும்போதும் மருத்துவத்துறையில் கோபால்ட் 60 இன் கதிரியக்கப் பாதிப்பை மட்டும் சொல்லிவிட்டு அணு உலைகள் குறித்து மவுனம் காக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போதும் அணுக்கழிவு பற்றி கள்ள மவுனம் கடைபிடிக்கப்படுகிறது. அணு உலைகளுக்கெதிரான கூடங்குளம் மக்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத இவ்வரசுகள் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் வேலைகளில் ஈடுபடுகின்றன. மேலும் ஒலி மாசை மட்டும் பேசுபவர்கள் ஒளி மாசு பற்றி பேசுவதில்லை. 

   இந்திய அளவில் அனல்மின்சக்தி உற்பத்தி 70%, நீர்மின்சக்தி 25% என்றும் அணுமின் சக்தி 272 மெ.வா. என்றும் சொல்லப்படுகிறது. இது என்ன புள்ளி விவரம்? எல்லாவற்றையும் சதவீதத்தில் கூறவேண்டுமல்லவா? இங்கு மரபு சாரா மின்னுற்பத்தியே இல்லையா? இந்தியாவில் அணு மின்னுற்பத்தி 2.7% ஐ தாண்டவில்லை என்பதுதானே உண்மை. அதைச்சொல்வதில் என்ன தயக்கம்? 

   31.07.2014 நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி 2,50,257 மெ.வா.; இதில் நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்றவற்றால் கிடைக்கும் அனல் மின்னுற்பத்தி 1,72,986 மெ.வா. (69.1%), நீர் மின்சக்தி 40,799 மெ.வா. (16.3%), அணுமின்சக்தி 4780 மெ.வா. (1.9%) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 31692 மெ.வா. (12.7%) என்பதுதான் அரசின் புள்ளிவிவரம். 

  இந்தியாவில் கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களிலுள்ள 21 அணு உலைகளின் நிறுவுதிறன் 5308 மெ.வா. மட்டுமே. எல்லா அணு உலைகளும் தொடர்ந்து இயங்கினால்கூட அவற்றின் நிறுவுதிறனை அடைய வாய்ப்பில்லை. நிறுவுதிறனில் 75% உற்பத்தியாவதே அரிது; வேண்டுமானால் பொய்க்கணக்கு காட்டலாம். இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி சுமார் 2.5 லட்சம் மெ.வா. எனக்கொண்டால், இதில் 3% என்பது 7500 மெ.வா. அணுமின்சாரம் உற்பத்தியாகியிருக்க வேண்டும். இது சாத்தியமேயில்லை என்பதைத்தான் கடந்தகாலப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. 

   கூடங்களம் அணு உலைக்கெதிரான போராட்டத்தை முறியடிக்க, மக்களைத் திசைதிருப்ப பல்வேறு அவதூறுகள், தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அதைப்போலவே பாடநூல்களிலும் தவறான தகவல்களைத் தந்து மாணவர்களை மழுங்கடிக்கிறார்கள்.

வரலாற்றுத்திரிபுகள்

  வ.வே.சு.அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன் (நமக்கு இவ்வாறு சொல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சாதியைத் துறந்தவர்கள் மீது ஏன் திணிக்கிறீர்கள் என்பதே நம் கேள்வி.) போன்றவர்களுக்கு வழங்கும் கருணையில் இம்மியளவுகூட ஜின்னாவிற்கு இவர்கள் வழங்கத் தயாராக இல்லை. 1906 இல் முஸ்லீம் லீக் தோற்றத்திற்குக் காரணமாக, இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகள் முஸ்லீம்களிடையே ஒருவித பயத்தை உண்டுபண்ணியதாகச் சொல்லிவிட்டு, அதற்கான காரணம் எதையும் விளக்காமல் 1940 இல் முகமது அலி ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார் என்றும் 1946 இல் நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்து தனது தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக நின்றதாகவும் வரலாறு எழுதப்படுகிறது. பிரிவினைக்கான பழி முழுவதும் ஜின்னா மீது சுமத்தப்பட்டு இளம் உள்ளங்களிடையே காழ்ப்புணர்ச்சி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரசும் இந்துத்துவமும் இணைந்து வளர்ந்த வரலாற்றை மறைத்துவிட்டு ஜின்னா மீது மட்டும் பிரிவினை முத்திரைக் குத்துவது நியாயமாகுமா?

  வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர் ஆகியோர் தொடங்கிய ஏசியாட்டிக் சொசைட்டி (1785) மூலமாக புனையப்பட்ட ஆசியப்பண்பாடு, சமஸ்கிருத மேன்மை தொடர்ந்து கல்கத்தா இந்துக் கல்லூரி (1817), பிரம்ம சமாஜம் (1828), ஆரிய சமாஜம் (1875), கோரக்‌ஷினி சபா (1882), இந்து மகாஜன சபா (1884), ராமகிருஷ்ண இயக்கம் (1897) எனப் பல்வேறு வழிகளில் இந்துத்துவம் இங்கே வளர்க்கப்பட்டது. சென்னை மகாஜன சபையின் நிறுவன உறுப்பினர் அனந்தார்ச்சார்லு, பாலகங்காதர திலகர், மதன்மோகன் மாளவியா, அரவிந்தர், லாலா லஜபதி ராய் ஆகியோர் இந்து மகாஜன சபையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றனர். பிரம்ம ஞான சபையின் சென்னைக் கிளை அன்னிபெசன்ட்டால் 1893 இல் தொடங்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரசின் தொடக்கத்தில் (1885) பங்குவகித்த ஜி.சுப்பிரமணிய அய்யர், சாமிநாதய்யர், கேசவப்பிள்ளை போன்றோர் பிரம்ம ஞான சபையின் தீவிர உறுப்பினர்கள். 

  1892 பாலகங்காதர திலகர் – விவேகானந்தர் சந்திப்பு நடைபெற்ற அறையில் 1893 இல் கஜசூரா (அசுரனைப் பழிதீர்த்தல்) என்ற கணபதி வழிபாட்டைத் தொடங்கி அதைத் தேசிய இயக்கத்துடன் இணைக்கிறார். பல மாணவர் உடற்பயிற்சிக் கழகங்கள் , மித்திர மேளா என்கிற நண்பர்கள் சங்கம் (1899),  என இறுதியில் 200 இளைஞர்கள் நாசிக் நகரில் ஒன்றுகூடி 1904 இல் அபிநவ பாரத் சமீதி (இளம் இந்தியர்க் கழகம்) அமைக்கப்படுகிறது.

   1906 இல் சியாம்ஜி கிருஷ்ண வர்மா நடத்திய லண்டன் இந்திய விடுதியில் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் – இந்தியன் கல்வித்திட்டத்தில் திலகர் பரிந்துரையில் 22 வயது  விநாயக தாமோதர சவார்க்கர் - (வி.டி.சவார்க்கர்) படிக்க வருகிறார். (படிப்பு முடிந்ததும் ஆங்கில அரசில் எந்தப் பதவியும் பெறாமல் இந்திய விடுதலைக்கு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இவ்வுதவி வழங்கப்படுகிறது.) வி.டி.சவார்க்கர் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சியாம்ஜி அபிநவ பாரத் சமீதியில் உறுப்பினராகிறார். ஒரு கட்டத்தில் ஆங்கில அரசின் கண்காணிப்புக்கு அஞ்சி சியாம்ஜி இந்திய விடுதியை வி.டி.சவார்க்கரிடம் ஒப்படைத்துவிட்டு பாரிஸ் (1907) பயணமாகிறார். இவ்வாண்டே இந்திய விடுதியில் வசிக்க வ.வே.சு. அய்யர் வருகை தருகிறார். கொஞ்ச காலத்திலேயே சவார்க்கரின் நம்பிக்கையைப் பெற்ற அய்யர் ரகசிய இயக்கமான அபிநவ பாரத் சமீதியின் துணைத்தலைவரானார். இவ்வியக்கத்தில் வ.உ.சி.யும் ஓர் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதியுடன் தொடர்புடைய மதன்லால் திங்ரா கர்சன் வைலி (1907) கொலை தொடர்பாக லண்டனில் வி.டி.சவார்க்கர் கைது (1910) செய்யப்பட்டவுடன் மாறுவேடத்தில் வ.வே.சு. அய்யர் புதுச்சேரியில் தஞ்சமடைந்தார்.

   சமகாலத்தில் எஸ்.ஆர்.ரானாவும் மேடம் பைக்காஜி நிஸ்தம் காமா அம்மையாரும் பாரிஸ் இந்தியர் கழகத்தை நடத்தி வந்தனர்.  22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்காஜி நிஸ்தம் காமா அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், ஒரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். இக்கொடியை பக்காஜி காமா அம்மையார், வீர சவார்க்கர், சியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். பைக்காஜி நிஸ்தம் காமா அம்மையார் அபிநவ பாரத் சமீதி, ஹோம் ரூல் கழகம் ஆகியவற்றிலும் தொடர்புடையவர். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை உடையவர். இவரின் ஆசிரியப் பொறுப்பில் வந்த வந்தேமாதரம் – ஆங்கில வார இதழில் (1911) ஆங்கிலேயர்களை கொல்ல வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார். இவர்கள் 1905 – 1911 காலகட்டத்தில் துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டு வீசுதல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற ஆயுதப்பயிற்சிகள் மேற்கொள்கின்றனர்.

    இந்நிலையில்தான் நீலகண்ட பிரம்மச்சாரியை பார்க்க புதுச்சேரி வரும் வாஞ்சிநாதனுக்கு வ.வே.சு. அய்யரிடம் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு மாதம் துப்பாக்கி சுட பயிற்சியும் துப்பாக்கியும் அளித்து ஆஷ் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது. ஆஷ் 1911 ஜூன் 17 அன்று கொலை செய்யப்படுகிறார். ஆனால் ஆஷ் கொலைவழக்கில் வ.வே.சு. அய்யர் பெயர் சேர்க்கப்படவே இல்லை. இவர் ஆங்கிலேயர்களிடன் பொது மன்னிப்பு பெற்று 1920 இல் தமிழகம் வந்து, 08, டிசம்பர், 1922 இல் குருகுலம் தொடங்குகிறார்.  கலெக்டர்  ஆஷ் 4 பேரை சுட்டுக்கொன்றார். அதற்குப் பழிதீர்க்கவே இக்கொலை நடைபெற்றதாக பாடநூல் சொல்கிறது. ஆனால் நடந்தது என்ன?

    சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி நடத்தியது, கோரல் மில் போராட்டத்தைத் தூண்டியது போன்றவற்றிற்காக வ.உ.சி. 1908 மார்ச் 18 கைது செய்யப்பட்டவுடன் தூத்துக்குடியில் கடையடைப்பும் போராட்டங்களும் நடைபெறுகின்றபோது, நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். உத்தரவிட்ட கலெக்டர்  ஆஷ் நேரடியாக சுட்டதுபோல் இங்கு வரலாறு எழுதப்படுகிறது. தாமிரபரணி (ஜூலை 23, 1999), பரமக்குடி (செப்டம்பர் 11, 2011) துப்பாக்கிசூடுகள் அப்போதைய முதல்வர்களால் நடத்தப்பட்டது என்றால் இவர்கள் ஒத்துக்கொள்வார்களா? மேலும் வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்து கைப்பற்றப்பட்டக் கடிதத்தில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து எதுவும் இல்லை. மாறாக “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனைக் கொல்லும் செயலுக்கு முன்னோட்டம்” என்றே அக்கடிதம் சொல்கிறது.

  வ.வே.சு. அய்யர் பெயரைச் சொல்லவேண்டிய இரு இடங்கள் மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. ஒன்று சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், மற்றொன்று வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிச்சுடும் பயிற்சியளித்தது.

   1913 இல் சிறைபட்ட சவார்க்கர் தயானந்த சரஸ்வதியைப் பின்பற்றி சிறையிலேயே சுத்தி இயக்கம் தொடங்குகிறார்.  1915 இல் இந்து மகாசபை ஆரம்பிக்கப்படுகிறது. 1925 இல் தீவிரவாதி, பஞ்சாப் சிங்கம் என்றெல்லாம் அறியப்பட்ட லாலா லஜபதி ராய்,  ‘தி டிரிப்யூன்’ ஆங்கில ஏட்டில் “இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து வாழவே முடியாது. பஞ்சாப், வங்காளம் இரண்டும் வகுப்பு அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும்”, என்று கோரிக்கை வைக்கிறார். ஐந்து காங்கிரசார் 1925 இல் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் தொடங்கியதை முன்பே பார்த்தோம். இவர்களில் ஒருவரான  டாக்டர் பி.எஸ்.மூஞ்சே இரண்டாம் வட்டமேசை மாநாடு முடிந்தபிறகு இத்தாலி சென்று முசோலினியை  சந்திக்கிறார் (1931). நேரு முசோலினியை சந்திக்க மறுத்ததை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்து மகாசபை பிரமுகர் எம்.ஆர். ஜெயகர் என்பரால் ஸ்வஸ்திகா கழகம் (1934) ஆரம்பிக்கப்படுகிறது. 

   திலகரின் கேசரி இதழ்  1924-1935 காலகட்டங்களில் பாசிசம், முசோலினி குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுகிறது. உச்சபட்சமாக வி.டி.சவார்க்கர், “ஜெர்மானியர்களின் இயக்கம் தேசிய இயக்கம். யூதர்களின் இயக்கம் வகுப்புவாத இயக்கம். தேசியம் புவியியல் எல்லையைக் கொண்டு அமைவதல்ல. மதம், மொழி, பண்பாடு, சிந்தனை ஆகியவற்றால் அமைவது. செமிட்டிக் இன யூதர்களை களைந்தொழித்தல் மூலம் ஜெர்மானிய தேசியப் பெருமை – தூய்மை மீட்கப்பட்டது”, என்று முழங்கத் தொடங்குகிறார். நாம் அல்லது நமது தேசத்தன்மையின் வரையறை (We Or Our Nationhood Difined) என்ற நூலில், “நாம் என்பது இந்துக்கள்; சுயராஜ்யம் என்பது இந்து ராஜ்யம்”,  எம்.எஸ். கோல்வால்கர் விளக்கமளிக்கிறார்.

    நாடாளுமன்றம் கலைப்பு, தேர்தெடுத்தல் இன்றி நியமனம், பாசிச மாமன்றம், தேசத்தை வலுப்படுத்த தனிமனித சர்வாதிகாரம், பாசிச இளைஞர் அமைப்புகள், உடற்கல்விக்கான ராணுவப் பள்ளி, உடற்பயிற்சிக்கான பாசிசக் கல்விக் கழகம், பலில்லா, அவன் கார்ட்டிஸ்ட் போன்ற பாசிசத்தின் இத்தாலிய வடிவங்கள் இவர்களால் ஆராதிக்கப்படுகின்றன. டாக்டர் எச்.பி.ஹெட்கேவர் அவர்களால் கூட்டப்பட்ட (1934) “பாசிசமும் முசோலினியும்’ மாநாட்டில் பேசிய மூஞ்சே, “அன்றைய சிவாஜி அல்லது இன்றைய முசோலினியைப் போல் இந்து ஒற்றுமை கட்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியதோடு தாமே மத்திய இந்து ராணுவக் கழகத்தை (1935) தொடங்குகிறார். இத்தகைய இந்துத்துவ அமைப்புகளில் இருந்த அனைவரும் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களாக இருந்தததுதான் ஆச்சர்யம். 1936 இல் இரு அமைப்புகளில் அங்கம் வகிக்கக் கூடாதென காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டுவரும்வரை இந்நிலையே நீடித்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவரான டாக்டர் எச்.பி.ஹெட்கேவர் மரணமடைந்ததையெடுத்து (1940)  எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். தலைவரானார்.

    இத்தகைய நிகழ்வுகளின் பின்புலத்தில் ஜின்னாவின் தனிநாடு கோரிக்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் முஸ்லீம்களிடம் ஏற்பட்ட பயம் என விளக்கியிருக்க வேண்டுமல்லவா? ஜின்னாவின் நடவடிக்கைகளையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என இவர்கள் ஏன் நினைக்கவில்லை? ஆகாகான் தலைமையில் 35 பேரடங்கிய குழு கர்சன் பிரபுவைச் சந்தித்து முஸ்லீம்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி கோரிக்கை வைக்கப்பட்டபோது ஜின்னா, தேச ஒற்றுமை பாதிக்கப்படுமென கடுமையாக எதிர்த்த்தார். மிதவாதிகளாக அறியப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலே, பெரோஸ் ஷாமேத்தா போன்றவர்களின் சீடராகவும் தாதாபாய் நெளரோஷியின் தனிச்செயலராகவும் இருந்த ஜின்னா 1910 இல் கல்கத்தா மத்திய சட்டசபையின் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். 1913 இல்தான் ஜின்னா முஸ்லீம் லீக்கில் தம்மை இணைத்துக் கொண்டார். 

   எல்லாக் காங்கிரசாரும் இந்துத்துவவாதிகளாக இருந்தார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் இந்திய தேசியக் காங்கிரசிற்குள், இந்துத்துவ செயல்திட்டங்களுடன் ஒரு சாரர் இயங்கியதை மறுக்கமுடியாது. மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்றவர்கள் அனைத்து மக்களையும் உள்ளடக்கும் (inclusive) புவியியல் தேசியத்தை (Territorial Nationalism) முன்மொழிந்தனர். ஆனால் இந்துத்துவவாதிகளோ மக்களின் ஒரு பிரிவினரை வெளியேற்றும் (exclusive) கலாச்சார / மரபினத் தேசியம் (Cultural / Racial Nationalism) வளர்த்தெடுத்தனர். இந்தக் கலாச்சாரத் தேசியவாதிகளின் வல்லாதிக்க வெறியை ‘இந்தியா வல்லரசாகும்’, என்று சொல்லி பிஞ்சு உள்ளங்களில் விதைப்பது நியாயமாகுமா? 

வைதீக-அவைதீக மரபுகள் பற்றிய குழப்பம்

  ஒன்பதாம் வகுப்பில் ‘கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் விழிப்புணர்வு இயக்கங்கள்’, தமிழ்நாட்டுப் பண்பாட்டு மரபுகள் என்ற இரு பாடங்கள் முதல் மற்றும் மூன்றாம் பருவத்தில் உள்ளது. இந்திய மற்றும் தமிழக அளவில் அவைதீக மரபுகளை கவனம் குவிப்பதாக அமைந்த இப்பாடங்களில் குழப்பத்திற்கு அளவில்லை. சமணம். பவுத்தம் ஆகியவற்றுடன் அஜிவிகைசம் (Ajivikaism) என்றொரு சமயத் தத்துவம் கூறப்படுகிறது. இப்படியான தத்துவம் உண்டா எனபதை எழுதியவர்கள்தான் விளக்கவேண்டும். புத்தரின் சமகாலத்தவராக இருந்து அவரிடமிருந்து பிரிந்து சென்ற மற்கலி கோசலர் தோற்றுவித்த ஆசிவகம் (அஜிவகம்) என்ற தத்துவப்பிரிவே இப்படி மாற்றிச் சொல்லப்படுவதாகத் தோன்றுகிறது. இம்மாதிரியான பெயர்ச் சொற்களைக் கூட தெளிவாக உணராதவர்கள் அவற்றின் உள்ளடக்கத்தை எப்படி மாணவர்களுக்கு உணர்த்துவார்கள்?

  பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகிய ஆறு தத்துவ மரபுகளை வைதீக மரபுகள் என்றும் பொருள் முதல் வாதம் (உலகாயதம், சார்வாகம் போன்றவை), சமணப்பிரிவுகள், பவுத்தப்பிரிவுகள் ஆகிய மூன்றையும் அவைதீக மரபுகளாக தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எளிமையாக வகைப்படுத்தியுள்ளார். இதெல்லாம் பாடநூல்கள் எழுதிய கல்வியாளர்களுக்கு (!?) தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  புத்தர் அரசாட்சியைத் துறந்து வெளியேறியதற்கான பல ஆய்வுமுடிவுகள் இருக்கும்போது இன்னும் எவ்வளவு காலம், புத்தர் தமது 29 வது வயதில் பசி, பிணி, மூப்பு, இறப்பு ஆகியவற்றை முதன்முதலாய் உணர்ந்தார் என்ற கதையைக் கூறப்போகிறோம்? பசி, பிணியை விட்டுவிடுவோம். 29 ஆண்டுகளில் அவரைச் சுற்றியுள்ளவர்கள் இறக்கவில்லையா, மரணமடையவில்லையா? பீர்பாலை உயர்த்திப் பிடிப்பதற்காக அக்பரை முட்டாள் ஆக்குவது போன்ற அறிவீனம் இது.

  உள்ளூர்ப் பிராமணர்களால் நிர்வகிக்கப்பட்ட மகாசபையை எப்படி பொற்காலம் என்கிறார்கள்? வருணாசிரம தர்மத்தை உயர்த்திப் பிடித்த சோழ அரசர்களின் புகழ் பாடுதலையும் இந்த அரசுகளைப் பேரரசு எனச்சொல்வதையும் நாம் எப்போது நிறுத்தப்போகிறோம்? முற்றிலும் சாதி-வருண முறையான குடவோலை முறையை மக்களாட்சி முறையாக வரையறுக்கும் அபத்தம் என்று மறையுமோ! 

   பல்லவர் காலத்தில் சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருந்ததைச் சொல்பவர்கள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் நாடெங்கும் சமஸ்கிருத வேதபாடசாலைகள் துவக்கப்பட்டதையும் தொடர்ந்து வந்த 100 ஆண்டுகளில் கம்பராமாயணம் தவிர்த்து தமிழ் இலக்கியங்கள் ஏதும் உருவாகாமல் தமிழ் முடங்கிப் போனதையும் தஞ்சைப் பெரிய கோயிலில் பல்லாயிரக்கணக்கில் தேவதாசிகள் குவிக்கப்பட்டிருந்ததையும் எழுதுவதற்கு இவர்களது எழுதுகோல் இடம் தருவதில்லை. 

     இவ்வளவு பிழைகள் மலிந்த பள்ளிப் பாடநூல்களை தமிழ் அறிவுலகம் கண்டு கொள்ளாமலிருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது பொருட்படுத்தத்தக்கதல்ல என்று கருதினால் அது மாபெரும் தவறு. வருங்கால சந்ததியை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.