வியாழன், பிப்ரவரி 05, 2015

தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் நிரம்பி வழியும் இந்துத்துவச் சொல்லாடல்கள்தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் நிரம்பி வழியும் இந்துத்துவச் சொல்லாடல்கள்                                      
                                                        - மு.சிவகுருநாதன்

    ஆங்கிலச் செய்திச் சேனல்களைப் பின்பற்றி தமிழிலிலும்  செய்திச் சேனல்கள் பல்கிப் பெருகியுள்ளன. உலகமயப் பொருளியல் சூழலில் பெரு முதலாளிகள் அரசு, அரசியல் சட்டத்தை உருவாக்கும் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிடுகின்றனர். இல்லாவிட்டாலும் ஆளும் வர்க்கத்தை இவர்களால் எளிதில் வளைக்க முடிகிறது. 2 ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்றவை இதற்கு உதாரணங்கள். 

   அரசை வளைப்பதைவிட அரசையே உருவாக்குவது என்ற நிலை வந்துவிட்ட பிறகு இத்துடன் ஊடகங்களை வளைப்பதைவிட தாங்களே புதிய ஊடகங்களை உருவாக்கி விடுகின்றனர். உலக அளவிலும் இந்திய மற்றும் தமிழக அளவிலும் இதுதான் நடக்கிறது. இத்தகைய ஊடக பயங்கரவாதங்களை பலர் கண்டுகொள்ளாத நிலையில் நோம் சாம்ஸ்கி போன்ற சில அறிவுஜீவிகள் கடுமையாக விமர்சிப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

   சன் செய்திகள் தொலைக்காட்சியில் ‘நேருக்கு நேர்’ என்ற விவாத மேடைப்பகுதி திரு. வீரபாண்டியனால் நடத்தப்பட்டு வந்தது. இதுதான் தமிழில் நடைபெற்ற முதல் அரசியல் உரையாடல் என்றுகூட சொல்லலாம். இந்துத்துவவாதிகளின் மிரட்டலுக்குப் பணிந்து இன்று இவ்விவாதத்தில் திரு. வீரபாண்டியனின் பங்கேற்புத் தடை செய்யப்பட்டுள்ளது. பெருமாள் முருகனுக்காக கருத்துரிமைக் குரல் கொடுத்தவர்கள் கண்டுகொள்ளாத சேதி இது. இத்தடை தி.மு.க.வின் பெருமுதலாளிகளால் அளிக்கப்படுகிறது.   தந்தி டி.வி. ரங்கராஜ் பாண்டேவின் ஆர்.எஸ்.எஸ். சார்பை கேள்வி கேட்க யாருமில்லை.

   தமிழ்ச் செய்திச் சேனல்கள் புதிய தலைமுறை, தந்தி டி.வி. போன்றவை நேரலை விவாதங்களை ஒழுங்கு செய்கின்றன. எந்த ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் பலவகையான பார்வைகள் இருக்குமல்லவா? இவற்றையெல்லாம் மறுதலித்து இந்துத்துவ வலதுசாரிப் பார்வை, அப்பார்வைக்கு எதிரான ஓர் பார்வை என இரு எதிர்வுகளை மட்டும் உருவாக்கி அதன் மூலம் தங்களது இந்துத்துவப் பார்வையை நிறுவிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற சங் பரிவார் கும்பலுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு தமிழகத்தில் எவ்வித மக்கள் செல்வாக்கும் இல்லாத நிலையில் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக பா.ஜ.க. விற்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் இவர்கள் மதவாதத்தை முன்மொழிகிறார்கள். 

   தமிழகத்து இரு பெரும் கட்சிகளான அ.இ.அதி.மு.க., தி.மு.க. ஆகியவற்றிற்கு அளிக்கும் வாய்ப்பை ஜனநாயக முறைப்படி சட்டமன்ற எதிர்க்கட்சியாக உள்ள தே.மு.தி.க. விற்கும் அளிக்கவேண்டுமல்லவா? ஆனால் இங்கு நடப்பது என்ன? இவர்கள் நடுநிலை என்கிற பெயரில் தங்களது பக்கச்சார்பை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

  இந்துத்துவ வலதுசாரிகளுக்குக் கொடுக்க்கும் வாய்ப்பில் சிறிதளவைக் கூட இவர்கள் வழங்குவதில்லை. இந்துத்துவ வெறியர்களின் காட்டுக் கூச்சல்களை சிரிப்புடன் எதிர்கொள்ளும் அருணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனுஷ்ய புத்திரன் கிண்டலுக்குள்ளானாலும் இவர்களை எதிர்கொள்ள வேறு வழியில்லை.

   தங்களது இந்துத்துவ செயல்திட்டங்களை அசட்டுத்தனமாக எடுத்துரைக்கும் கே.டி. ராகவன், சேகர் போன்றவர்களையாவது ஜனநாயக முறைப்படி பொறுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் சமூக ஆர்வலர்கள் என்கிற போர்வையில் ஒளிந்திருக்கும் காவிக் கும்பலின் அட்டகாசத்திற்கு அளவில்லை. இதுவும் இந்துத்துவ மறைமுக செயல்திட்டங்களுள் ஒன்று. 

   இந்த இந்துத்துவ மதவெறிக் கும்பலுக்கு காவடி தூக்கும் பணியில் முதலிடம் பெறுவது பானு கோம்ஸ். இவர்கள் கிரன் பேடி போல நேரடியாக பா.ஜ.க. விலோ அல்லது ஏதேனும் ஒரு சங் பரிவாரில் தங்களை இணைத்துக் கொண்டு திருப்பணி செய்வதைத் தவிர்த்து இப்படி தரகுவேலை பார்ப்பது ஏன்?

  இந்துத்துவ புரட்டு அறிவியல் குறித்த விவாதத்தில் பங்குபெற்ற ராமசுப்பிரமணியன் ஆதாரங்களை காரில் வைத்துவிட்டு வந்துவிட்டதாகச் சொன்னபோது ரங்கராஜ் பாண்டே ஆளனுப்பி எடுத்துவரச் செய்திருக்கலாம்! இவ்விவாதத்தின் போது  அ.மார்க்ஸ் பாண்டேவை நேரடியாக குற்றம்சாட்டியபோது பாண்டே தடுமாறியதை நீங்களும் கண்டிருக்கலாம்.

   மெட்ரிக் பள்ளிகளுக்காக கல்வியாளர் என முதலில் களம் இறங்கிய இந்த மனிதர் சமூக ஆர்வலர், பொருளாதார ஆலோசர் என பல முகமுடிகளை மாட்டிக்கொண்டு பரிவார் சேவையில் ஈடுபட்டுள்ளார். மற்றுமொரு உதாரணம் வெங்கட்ராமன். கூடங்குளம் போரட்டத்தின்போது அணு விஞ்ஞானி என்று விவாதக் களம் கண்ட இவர் சமூக ஆர்வலர், பொருளாதார ஆலோசர் என்று பல அவதாரங்கள் எடுத்து தனது இந்துத்துவச் சேவையைத் தொடருகிறார். இவர்களிடம் பெருமாள் தோற்றார் போங்கள்!

  இந்தத் துதிபாடிகளின் பட்டியல் மிக நீண்டது. மேலே சொன்ன உதாரங்கள் போதுமென்று நினைக்கிறேன். இவர்களைத் தேடிப் பிடித்து விவாதங்கள் என்ற பெயரில் பல மணி நேரங்கள் இந்துத்துவப் பரப்புரை செய்யப்படுவது கண்டிக்கப்படவேண்டும். நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் அருளுரைக்கும் இதற்கும் வேறுபாடுகள் இல்லை.

  இந்த காட்சி ஊடகங்கள் நடுநிலை என்கிற பெயரில் இந்துத்துவ சக்திகளுக்கும் அவர்களது அடிப்படைவாத நோக்கங்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் வேலை இங்கு நடக்கிறது. இத்தகைய ஊடக அயோக்கியத்தனங்களையும் ஊடக பயங்கரவாதங்களையும் தீவிரமாக எதிர்க்ககூடிய தன்மை மிகக் குறைவாகவே உள்ளது. இது நாட்டை பெரும் இன்னலில் தள்ளிவிடும்.

   பெருமுதலாளிகளின் கையில் இந்த ஊடகங்கள் இருக்கின்றன. இவர்கள் ஆளும் வர்க்கத்துடன் இணைந்து தங்களுக்கான வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக அவர்களுக்கு விளம்பரம் தேடும் தரகு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். 

    இவைகளுக்கு மாற்றாக இடதுசாரி ஜனநாயக சக்திகள் உண்மையான மாற்று ஊடகத்தை நிறுவ முயற்சி செய்யவேண்டும். இதுவே மக்கள் ஊடகமாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக