கெளதம் மேனனின் திரைப்படங்கள் குறித்த இரு
கட்டுரைகள்:- ஓர் ஒப்பீடு
- மு.சிவகுருநாதன்
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் (பிப்.10,2015) வெளியான
‘எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கெளதம்’, என்ற சமஸ் கட்டுரையும் ‘இந்தியா டுடே’
தமிழ் வார இதழில் (பிப்.18,2015) கவிதா முரளிதரனின் ‘பெண்ணை அறிந்தவர்’, கட்டுரையும்
இங்கு பேசு பொருளாகிறது.
எதிலும் பன்முகப் பார்வை இருப்பது நியாயமானது. அந்தவகையில்
இரு பார்வைகளையும் அனுமதிப்போம். அதேசமயம் சமஸ் பார்வையின் அவசியத்தையும் கவிதா முரளிதரன் பார்வையிலுள்ள போதாமைகளையும் உணர்வது
அவசியம்.
கெளதம் மேனன் பெண்களைக் கண்ணியமாக சித்தரிப்பவர்
என்ற பெருமை பேசப்படுகிறது. பெண்ணுடலை முழுமையாக மூடுவதன் மூலமே இங்கு கலாச்சாரம் பாதுகாக்கப்படுமென
கூப்பாடு போடும் கலாச்சாரக் காவலர்களின் பேச்சுக்களுக்கு நிகரானது இது. நேர்த்தியான
புடவை, சுடிதார் போன்றவற்றையும் எளிமையான நகைகளையும்
அணியும் பெண்கள் மட்டுமே கண்ணியமானவர்கள் என்கிற கலாச்சாரக் காவலர்களின் நிலைப்பாட்டை
ஓர் பெண்ணியவாதியும் வழிமொழிகிறபோது நமக்கு மிகுந்த அச்சம் உண்டாகிறது. திரு.வி.க.
கட்டமைத்த பெண்ணும் பெண்ணின் திரு உரு கூட இதுதான்.
“நான் எப்படிபட்ட
பெண்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேனோ அப்படிப்பட்ட பெண்களை எனது படங்களில் உருவாக்குகிறேன்”,
என்று கெளதம் மேனன் சொல்வதை போலிஸ் சித்தரிப்பிற்கு பொருத்திப் பார்க்கலாம். போட்டுத்
தள்ளும் போலிஸ்தான் இவரின் கனவுப் போலிஸ்.
கெளதமின் கதாபாத்திரங்களுக்கு முன்மாதிரியாக இருப்பது
அவரது அம்மாவும் மனைவியுந்தானாம். ஆசிரியையாகப் பணிபுரிந்த அவரது அம்மா எளிமையாகவும்
அதேசமயம் நேர்த்தியாகவும் ஆடை-நகைகளை அணிவாராம்! இதை ஒவ்வொரு கதாநாயகிக்கும் கொண்டுவர
விரும்புகிறேன் என்கிறார். என்கவுண்டர் போலிஸ்க்கு வெள்ளத்துரைகூட ரோல்மாடலாக இருக்கலாம்.
ஆனால் வெள்ளத்துரையின் கதையைச் சொல்வதற்கு
மூன்று சினமாக்களும் சில நூறு கோடிகளும் அவசியமா?
கெளதம் மேனன், ஷங்கர், மனிரத்னம், பாலா, சசிகுமார்,
டி.ராஜேந்தர் போன்ற பல இயக்குநர்களிடம் உள்ளது ஒரே கதைதான். இதைத்தான் அவர்கள் பல சினிமாக்களாக
எடுத்துத் தள்ளுகிறார்கள். தமிழ் சினிமா உலகை குப்பைக் களமாக்கியதுதான் இவர்களது சாதனை.
இதனால்தான் இம்மாதிரியான விமர்சனங்கள் மிகவும் அவசியமாகிறது.
ஆட்டோ சங்கர்களுக்கு மரணதண்டனை அளித்துவிட்டால்
குற்றங்கள் ஒழிந்துவிடுவதாக இங்கு அரசும் நீதித்துறையும் கனவு காண்கின்றன. சந்தன வீரப்பனையும்
மாவோஸ்ட்களையும் போட்டுத் தள்ளிவிட்டால் நாடு சுத்தமாகிவிடும் என்று அரசு மக்களை நினைக்கப்
பழக்கியிருக்கிறது. விக்டர் போன்ற அடித்தட்டு எடுபிடிகள் ஒழிந்தால் மனித உறுப்புகள்
வியாபாரம் நடக்காது என மக்களை நம்பவைக்க இத்தகைய மனநிலை போதுமானதாக உள்ளது.
கெளதம் தனது மூன்று படங்களிலும் காவல் அதிகாரிகளின்
மனைவிகள் கொலை செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் அம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவேயில்லை.
ஆனால் 19 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன என்று சமஸ் எழுதும்போது இச்சமூகம் அதிர்ச்சிக்குள்ளாக
வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உருவாகும். நடக்குமா? இத்துடன் லாக்கப் மரணங்கள்ச்
சேர்த்தால் எண்ணிக்கை நூறைத் தாண்டும்.
என்கவுண்டரை ஆராதிக்கும் நடுத்தர வர்க்க மனநிலையைக்
கொண்டு சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக சில ஏடுகள் பாராட்டு மழை பொழிகின்றன.
நேர்மையான போலிஸ் அதிகாரி, என்கவுண்டர் என்று கதைக்கும் இப்படங்கள் சமூகத்தில் பெரும்
தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. இதற்குக் காரணம் நடுத்தர வர்க்க மனோபாவந்தான். அந்த வகையில்
இம்மாதிரி போலி சினிமாக்களைக் கேள்விக்குட்படுத்தும் சமஸ்-ன் கட்டுரை பாரட்டிற்குரியது;
வரவேற்கத்தக்கது.
இதற்கு மாறாக பெண்கள் சித்தரிப்பு என்கிற தட்டையான
பார்வையுடன் எழுதப்பட்ட கவிதா முரளிதரனின் கட்டுரை போலி பூச்சுகளுக்குள் அமிழ்ந்துபோகிறது.
பெண்களைக் கண்ணியமாக காட்டுவது என்ற சொல்லாடல்கள் கலாச்சாரக் காவலர்களால் உருவாக்கப்பட்டதுதான்.
இவற்றைப் பிடித்துத் தொங்குவது நமது பணியல்ல. பொதுவாக தமிழ் சினிமாவிலுள்ள குரூரங்களை
வெளிப்படுத்துவதுதான் சமூகத்தை நேசிப்பவர்களின் வேலையாக இருக்கமுடியும். அதைத்தான்
சமஸ் சரிவரச் செய்துள்ளார். இது தொடரட்டும். வாழ்த்துக்கள் சமஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக