இதழ்
அறிமுகம்: முற்றிலும் வண்ணமயமான பயண இலக்கிய இதழ் (புதிய பயணி – திசைகள் கடந்து…) - மு.சிவகுருநாதன்
பயண இலக்கியத்திற்காக 96 பக்கங்கள் முழுதும் அழகான
தாள் மற்றும் வடிவமைப்பில் ஓர் இதழ் வெளிவருவது வியப்பாக இருக்கிறது.
வெறும் பயண இலக்கியமாக நில்லாது வரலாறு, தொல்லியல்,
இலக்கியம், சூழலியல், இயற்கையியல், கலை (ஓவியக்கலை, கட்டிடக்கலை, புகைப்படக்கலை) போன்ற
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து புதிய முயற்சியாக மலர்ந்திருக்கும் புதிய பயணியை பாராட்டாமல் இருக்கமுடியாது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்
இரண்டாம் சரபோஜி பிரஞ்சு மன்னர் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த வெற்றியைக் கொண்டாட
அமைத்த மனோரா பற்றிய ‘அலையற்ற நீலக்கடல்… ஒன்பது மாடங்கள் கொண்ட கோட்டை…’ என்ற ப.கூத்தலிங்கத்தின்
கட்டுரை மனோராவின் அமைப்பை விளக்குவதோடு பல வரலாற்றுத் தகவல்களையும் தருகிறது. தஞ்சை
மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் சாளுவ நாயக்கன் பட்டினம் (சரபேந்திர ராஜ பட்டினம்) என்ற கடற்கரையோர கிராமத்தில் மனோரா அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம்
சரபோஜியின் மிகுந்த கலையார்வம், நூல்கள் மீதான காதல், இருட்டு மகால், கிருஷ்ண விலாசம்
ஆகியவை சொல்லப்படுகிறது. திருவையாறு மங்கள விலாசத்தை விட்டுவிட்டீர்களே! வரலாற்றோடு சமூகவியல் பார்வையை இணைத்தால்தானே வரலாறு முழுமையடையும்.
மேலும் இரண்டாம் சரபோஜி ஆங்கிலேயர் மேலாதிக்கத்தை
ஏற்கவேண்டிய சூழலில் இருந்ததாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? திப்பு சுல்தான, கட்டபொம்மன்,
பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஊமைத்துரை, சிவத்தய்யா, தூந்தாஜி வாக், கோபால் நாயக்கர்
போன்ற பலரும் இவருடைய பாணியைப் பின்பற்றியிருந்தால் நிறைய கோயில்களும் மாடங்களும் கிடைத்திருக்கலாம்.
ஆனால் காலனிய எதிர்ப்பு இங்கு இல்லாமல்லவா போயிருக்க்கும்?
1950 களில் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்குக்
கொண்டுவரப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் (வேலிக்காத்தான்) வேளாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும்
மனிதர்களுக்கும் ஏற்படும் பேராபத்துகளை கவிஞர் ஜெயபாஸ்கரனின் தாவரத்தரகன் கட்டுரை விளக்குகிறது.
பார்த்தீனியத்திற்கு நிகரான இந்தக் கொடிய தாவர வகையை அழித்தொழிப்பது எளிதான காரியமல்ல.
ஆனாலும் நடந்தாகவேண்டிய வேலை.
‘ஆதிமனிதன் எச்சம் சுமக்கும் பொட்டல்காடு’ என்ற
சசிதரன் கட்டுரை கணியம்பூண்டி, கொடுமணல் தொல்லியல் எச்சங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
பழங்காலத்தில் ஆண்களுக்குப் பாலியலை அறிமுகம் செய்ய
குறவன் – குறத்தி ஆட்டமும் பெண்களுக்குச் செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடும் இருந்த நிலை
‘கரகாட்டம் ஒரு காட்சிப்பிழை’ கட்டுரையில் விளக்கப்படுகிறது. இத்தகைய கிராமியக் கலை
சீரழிந்து போனதன் அவலத்தை நம் கண் முன் கொண்டுவருகிறது ராமின் இக்கட்டுரை.
தமிழகமெங்கும்
தனி மனிதராக ஒரு கோடி மரங்களை நட்டு மரம் தங்கசாமி,
மரம் வளர்க்காதீர்கள்… காடு வளருங்கள்… என்று சொல்வது காட்டின் இன்றியமையாமையை உணர்த்துகிறது.
மைனஸ் 50 டிகிரி கடுங்குளிரிலும் வாழக்கூடிய தகுதி
படைத்த அண்டார்டிகா பென்குயின்களை ‘வெள்ளை வனாந்திரத்தின் பேரரசர்கள்’ கட்டுரை விவரிக்கிறது.
குவாலியர் குகை ஓவியங்கள், கும்பமேளா, சுத்தமல்லி
சிங்காநல்லூர் நரிக்குறவர்கள் காலனி (இவர்களை மொழியடிப்படையில் ‘வாக்ரிகள்’ என்று அழைப்பதே
தற்போது வழக்கில் உள்ளது.) புகைப்படங்கள் மற்றும் கட்டுரை, தாமிரபரணி நதி, மலைகளின்
அரசி மிஜோரம், ஒட்டகப் பால் டீயும்… உடன் வந்த ஜீலம் நதியும்…, மேற்கத்திய ஓவியர் அப்பொட்
ஹான்டர்சன் போன்ற பல கட்டுரைகள் இதழில் உள்ளன. படங்களுடன் கூடவே கட்டுரைகளிலும் அதிக
கவனம் செலுத்துவது அவசியம்.
இதழ் முழுதும் அழகான வண்ணப்படங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசு நூலகங்கள் இம்மாதிரியான இதழ்களை வாங்கி ஆதரிக்கும் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும்
இதழ் தொடர்ந்து வெளியாகவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.
தொடர்புக்கு:
புதிய பயணி,
இரண்டாவது
தளம்,
5 – போயஸ்
சாலை முதல் தெரு,
தேனாம்பேட்டை,
சென்னை –
600018.
பேச:
044 2435 2050
மின்னஞ்சல்:
payanammonthly@gmail.com
வலை: www.payani.info
முகநூல்:
payani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக