வியாழன், பிப்ரவரி 05, 2015

பிழைகள் நிறைந்த பள்ளிப் பாடநூற்கள்பிழைகள் நிறைந்த பள்ளிப் பாடநூற்கள்
  
                                        - மு.சிவகுருநாதன்

       (இன்றைய  - 05.02.2015, தி இந்து - தமிழ் நாளிதழ் - கருத்துப்பேழை பகுதியில் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம். பக்க வரையறைக்காக சில பகுதிகள் நீக்கப்பட்டது. இதுவே நான் எழுதிய ஓர் பெருங்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவமே. முதலில் எழுதிய கட்டுரை மிக நீண்டது. அதை நாளை பதிவு செய்கிறேன். இக்கட்டுரையை வெளியிட்ட தி இந்து - தமிழ் நாளிதழுக்கும்  வடிவமைத்த திரு. ஆசைத்தம்பிக்கும் எனது நன்றிகள். )
  
     தமிழ்ச் சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு செய்வது ஒரு சுவாரசியமான வேலை. நம் கல்வி முறையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமானது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்களை இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

மொழியாக்கக் குளறுபடிகள்

   தொலை நுண்ணுணர்வு, மின் வர்த்தகம், தொலைதூர நகல், சொந்தக்குரல் செய்தி, வேர்க்கடலை, மற்றைய பயிர்கள், செய்தி அச்சுத் துறை, மின்னணுச்செய்திகள் / மின்னணு அஞ்சல், பல்வேறு ஊடகம் என்று கடுமையான மொழிபெயர்ப்புக்களைத் தவிர்த்து முறையே தொலை உணர்வு, மின் வணிகம், தொலை நகல், குரல் செய்தி, நிலக்கடலை, பிற பயிர்கள், அச்சு ஊடகம், மின்னஞ்சல், பல் ஊடகம் என்று எளிமையான சொற்களைப் பயன்படுத்தலாமே! ஓரிடத்தில் fax ஐ பிரதிகள் என்று கூட மொழிபெயர்க்கும் அதிசயமும் நடக்கிறது. (Fax - தொலை நகல்) கணினியில் input ஐ இடுபொருள் என்று பெயர்க்கப்படுகிறது. (input – உள்ளீடு, output – வெளியீடு). Fast Breeder Reactor  ஐ அதிவேக ஈனுலைகள் என்றுதானே சொல்லமுடியும். ஆனால் இவர்கள் ஊது உலைகள் என்று வாய் கூசாமல் சொல்கிறார்கள். Mobile towers மின்னஞ்சல் கோபுரமாக ஆகிறது. 

     நிறுவனங்கள் மற்றும் இதழ்ப் பெயர்களை தமிழ்ப்படுத்தி அதிர்ச்சியளிக்கிறார்கள். கோரல் மில் (coral mills)  பவள ஆலையாகிறது.  மகாத்மா காந்தியின் ‘யங் இந்தியா’ (young India) ‘இளம் பாரதம்’ ஆகிவிடுகிறது. ‘மகத் மார்ச்ப் பேரணி’ என்றும் சொல்லப்படுகிறது.

  ஹிட்லர் பெயிண்டராக வியன்னாவில் சில காலம் பணியற்றுகிறார். பெயிண்டர் (painter) என்று சொன்னால் இங்கு வழக்கில் வண்ணமடிப்பவர்தான்.  எஸ்டரிபிகேஷன் (esterification), டெலிபிரிண்டர் (tele printer), டிரான்ஸ்ஜென்டர் (transgender) என்பதையெல்லாம் அப்படியே பயன்படுத்துவதாவது பரவாயில்லை. டிரான்ஸ்ஜென்டர் (transgender) என்பதைத் தமிழில் திருநங்கைகள் என்று சொல்லப்படுகிறதாம்! மாற்றுப்பாலினம் என்ற சொல் பயன்பாட்டில் இருப்பதை அறியாது பாடநூல்கள் எழுதுகிறார்கள். Cartographers, map-makers ஆகியவற்றை பேசாமல் ஒலிபெயர்த்திருக்கலாம். மேப்பியலாளர்கள் என்ற இருமொழிச்சொல்லை (bi-lingual) புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்! 

   எலக்ட்ரிக் – எலக்ட்ரானிக் (electric-electronic) வித்தியாசமின்றி பெயர்த்துத் தொலைக்கிறார்கள். முன்னது மின்னியல்; பின்னது மின்னணுவியல். தொலை உணர்வு என்பது பல்லாண்டுகளாக அனைவருக்கு தெரிந்த பயன்பாடு. ஆனால் இங்கு Remote sensing என்பதை தொலை நுண்ணுணர்வு என நீட்டவேண்டிய அவசியமென்ன?  காலனியம், மார்க்சியம் போன்றவை தமிழ்ச்சொற்களாகவே ஆகிவிட்ட நிலையில் காலனி ஆதிக்கம், மார்க்ஸிஸம் என்று எழுதுவதுதான் இங்கு நடக்கிறது.

கருத்தியல் தெளிவின்மை

   ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானது என்றும் தேவதாசிகளைச் சொல்லும்போது ஆலயசேவகிகள் என்று விளக்கமளிக்கப்படுகிறது. இவர்கள் இறைபணி மற்றும் கலைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள் என்றும் காலமாற்றத்தால் பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் இம்முறை சீரழிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

     பொங்கல் இந்துப்பண்டிகை என்கிறார்கள். அப்படியென்றால் இந்தியா முழுமையும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை? ஒவ்வொரு மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளைச் சொல்லிவிட்டு இந்துப் பண்டிகைகள் மட்டும் அனைவராலும் கொண்டாடப்படுவதாக பட்டியலிடப்படுகிறது.

    1857-ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போரை ‘படைவீரர்கள் கிளர்ச்சி’ என்று ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள் சொன்னதாக வருந்திவிட்டு 1806-ல் ‘வேலூர் கலகம்’ என்று சொல்வதேன்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற வரியைக் கொண்டு தமிழர்கள் விதியை நம்பினார்கள் என்று வரலாறு எழுதுவது எவ்வளவு பெரிய அபத்தம்?
    
அறிவியல் பார்வை இன்மை

      சதுப்புநிலத் தாவரங்களான அவிசீனியா, ரைசோபோரா போன்றவற்றின் வேர்கள் நீர்ப்பரப்பிற்குமேல் பரந்து காணப்படும். இவற்றில் உள்ள இலைத்துளைகள் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. எனவே இவற்றிற்கு  சுவாசிக்கும் வேர்கள்  (Respiratory Roots) என்று பெயர். தாங்குவது மட்டும் இதன் பணியல்ல. ஆலமரத்தின் விழுதுகளைத்தான் தூண்வேர்கள் என்று சொல்வதுண்டு. 

தவறான தகவல்கள்

      அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 27 என பட்டியலிடப் பட்டுள்ளன. ஆனால் உறுப்பு நாடுகள் மொத்தம் 28. இப்பட்டியலிலுள்ள லைபீரியா ஓர் ஆப்பிரிக்க நாடு; லாட்வியா, குரேஷியா என்ற இரு அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் பட்டியலில் இல்லை.

      அய்.நா.அவையின் சிறப்பு நிறுவனங்களில் உலக வங்கி (IBRD)  எனச் சொல்லிவிட்டு விளக்கப்படத்தில் பன்னாட்டு கிராமப்புற வளர்ச்சி வங்கி என்று விளக்குகிறார்கள். பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியில் (International Bank for Reconstruction and Development)  கிராமம் எங்கே வந்தது? 
 
   சமணத்தில் தர்மச்சக்கரம் பேசப்பட்டாலும் இது அதன் சின்னல்ல. ஸ்வதிகா, மேலே மூன்று புள்ளிகள் மற்றும் பிறை வடிவம் அதன் மீது ஓர் புள்ளி ஆகியவையே சமணச் சின்னமாக அறியப்படுகிறது. எட்டுக் கம்பிகள் கொண்ட தர்மச்சக்கரம் பவுத்தத்தின் எண்வழிகளைக் குறிப்பிடுகின்றது.

    வடுவூர் பறவைகள் புகலிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லை. மாறாக திருவாரூர் மாவட்டத்திலும் நரிமணம் (பனங்குடி) எண்ணெய் சுத்திகரிப்பாலை நாகப்பட்டினம் மாவட்டத்திலும் உள்ளது. 

    சதுப்புநிலக்காடுகளுக்கு வேதாரண்யத்தை மட்டும் சொல்வதும் தவறு. வேதாரண்யம் காடுகள் முழுதும் சதுப்புநிலக்காடுகள் அல்ல. வேதாரண்யத்திலிருந்து அதிராம்பட்டினம் வரை சதுப்புநிலக்காடுகள் எனப்படும் அலையத்திக்காடுகள் (mangrove forest) நீண்டு இருப்பினும் பிச்சாவரத்திற்கு அடுத்தபடியாக முத்துப்பேட்டைப் பகுதியில்தான் பெருமளவில் உள்ளன.

       காவிரியின் துணையாறுகள், கிளையாறுகள் பட்டியலில் மணிக்கொண்டானாறு என்று ஓர் ஆற்றின்பெயர் உள்ளது. இதை முடிகொண்டானாறு என்று புரிந்துகொள்வோம். ஆனால் மண்ணியாறு, நாட்டாறு போன்றவற்றை சரஸ்வதி நதியைக் (?!) கண்டுபிடிக்கப்போகும் தொல்லியல் ஆய்வுக்குழுவினர்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

   பாலை நில மக்கள் கள்ளர் என்று தமிழ்ப்பதிப்பில் இருந்து, பின்னர் கள்வர் எனத் திருத்தப்பட்டது. ஆனால் ஆங்கிலப்பதிப்பில் Kallar of Paalai என்றுதான் இன்றுவரை உள்ளது.

தலைவர்களைக் கொச்சைப்படுத்துதல்

       அம்பேத்கரின் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கத்தை 'பஹிஷ்கிரித் ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini Sabha) என்பதைக் கூட 'பாசிகிருகித் காரணி சபா'  என்று எழுதுகிறார்கள். இந்தப் பிழையை 2012 மறுபதிப்பில் பகிஷ்கிருத்திகாராணிசபா என்று திருத்தியுள்ளனர்.

         டிசம்பர் 25, 1927 ‘குடியரசு’ இதழிலிருந்து பெரியாரின் சாதிப்பட்டம் நீக்கப் படுகிறது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் வெளிப்படையாக தனது சாதிப்பட்டத்தை நீக்கி அதனை ஓர் இயக்கமாக முன்னெடுத்த பெரியார் ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிடப்படுகிறார். ஆனால் தனது வாழ்நாள் இறுதிவரை சாதிப்பெயரை சுமந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன் ஆக மாறிவிடுகிறார்கள்.

புள்ளிவிவரங்களில் நம்பகமின்மை

    இந்தியாவில் தமிழகம் தோல் பதனிடுதலில் முதலிடம், காகிதம்-நெசவு-மென்பொருள் தொழில்களில் இரண்டாமிடம், சிமென்ட்-பட்டு நெசவு ஆகியவற்றில் நான்காமிடம் என வரிசைப்படுத்தப்படுகிறது. மரபு சாரா மின்னுற்பத்தியில் 7253 மெ.வா. அளவிற்கு உற்பத்தி செய்து தமிழகம் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பதை சொல்லாமல் மறைக்கவேண்டியதன் அவசியமென்ன? இதில் குஜராத் கூட இரண்டாமிடத்தில்தான் உள்ளது.

   மேலும் மரபு சாரா மின்சக்தி உற்பத்தியில் மிகுந்த இடர்பாடுகள் இருப்பதாக பட்டியல் தயார் செய்யப்படுகிறது. காற்றாலை இடர்பாடுகள் பட்டியலில் ஒலி மாசு. அதிக பண முதலீடு தேவை, வானொலி-தொலைக்காட்சி அலைகளுக்கு இடையூறு, வனவிலங்குகள் வாழிடம் அழிப்பு என எழுதுகிறார்கள் ஆனால் மருந்திற்குகூட அணுமின் சக்தி, அனல் மின்சக்தி ஆகியவற்றின் இடர்பாடுகள் சொல்லப்படவில்லை.

   இந்திய அளவில் அனல்மின்சக்தி உற்பத்தி 70%, நீர்மின்சக்தி 25% என்றும் அணுமின் சக்தி 272 மெ.வா. என்றும் சொல்லப்படுகிறது. இது என்ன புள்ளி விவரம்? எல்லாவற்றையும் சதவீதத்தில் கூறவேண்டுமல்லவா? இந்தியாவில் கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களிலுள்ள 21 அணு உலைகளின் நிறுவுதிறன் 5308 மெ.வா. மட்டுமே. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி சுமார் 2.5 லட்சம் மெ.வா. எனக்கொண்டால், இதில் 3% என்பது 7500 மெ.வா. அணுமின்சாரம் உற்பத்தியாகியிருக்க வேண்டும்

   31.07.2014 நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி 2,50,257 மெ.வா.; இதில் நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்றவற்றால் கிடைக்கும் அனல் மின்னுற்பத்தி 1,72,986 மெ.வா. (69.1%), நீர் மின்சக்தி 40,799 மெ.வா. (16.3%), அணுமின்சக்தி 4780 மெ.வா. (1.9%) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 31692 மெ.வா. (12.7%) என்பதுதான் அரசின் புள்ளிவிவரம்.

வரலாற்றுத்திரிபுகள்

      1940-ல் முகமது அலி ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார் என்றும் 1946-ல் நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்து தனது தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக நின்றதாக பிரிவினைக்கான பழி முழுவதும் ஜின்னா மீது சுமத்தப்பட்டு இளம் உள்ளங்களிடையே காழ்ப்புணர்ச்சி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரசும் இந்துத்துவமும் இணைந்து வளர்ந்த வரலாற்றை மறைத்துவிட்டு ஜின்னா மீது மட்டும் பிரிவினை முத்திரைக் குத்துவது நியாயமாகுமா?

     1925 செப்டம்பர் 27-ல் எச்.பி.ஹெட்கேவர்  மற்றும் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, டாக்டர் எல்.வி.பரஞ்சிபே, டாக்டர் தால்கர், டாக்டர், பாபாராவ் சவார்க்கர் (வி.டி.சவார்க்கரின் அண்ணன்) ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இந்துத்துவ அமைப்புகளில் இருந்த அனைவரும் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களாக இருந்தததுதான் ஆச்சர்யம். 1936-ல் இரு அமைப்புகளில் அங்கம் வகிக்கக் கூடாதென காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டுவரும்வரை இந்நிலையே நீடித்தது.
   
   எல்லாக் காங்கிரசாரும் இந்துத்துவவாதிகளாக இருந்தார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் இந்திய தேசியக் காங்கிரசிற்குள், இந்துத்துவ செயல்திட்டங்களுடன் ஒரு சாரர் இயங்கியதை மறுக்கமுடியாது. மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்றவர்கள் அனைத்து மக்களையும் உள்ளடக்கும் (inclusive) புவியியல் தேசியத்தை (Territorial Nationalism) முன்மொழிந்தனர். ஆனால் இந்துத்துவவாதிகளோ மக்களின் ஒரு பிரிவினரை வெளியேற்றும் (exclusive) கலாச்சார / மரபினத் தேசியம் (Cultural / Racial Nationalism) வளர்த்தெடுத்தனர். இந்தக் கலாச்சாரத் தேசியவாதிகளின் வல்லாதிக்க வெறியை ‘இந்தியா வல்லரசாகும்’, என்று சொல்லி பிஞ்சு உள்ளங்களில் விதைப்பது நியாயமாகுமா?

    கலெக்டர்  ஆஷ் 4 பேரை சுட்டுக்கொன்றார். அதற்குப் பழிதீர்க்கவே இக்கொலை நடைபெற்றதாக பாடநூல் சொல்கிறது. வ.உ.சி. 1908 மார்ச் 18 கைது செய்யப்பட்டவுடன் தூத்துக்குடியில் கடையடைப்பும் போராட்டங்களும் நடைபெறுகின்றபோது, நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். உத்தரவிட்ட கலெக்டர்  ஆஷ் நேரடியாக சுட்டதுபோல் இங்கு வரலாறு எழுதப்படுகிறது. மேலும் வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்து கைப்பற்றப்பட்டக் கடிதத்தில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து எதுவும் இல்லை. மாறாக “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனைக் கொல்லும் செயலுக்கு” முன்னோட்டம் என்றே அக்கடிதம் சொல்கிறது.

     பெரியார்-மணியம்மை திருமணம் திராவிடக்கட்சிக்கு (?) ஒரு பெரும் அதிர்ச்சியளித்ததாம்! 1947 ஆகஸ்ட் 15 ஐ பெரியார் துக்க நாளாக அறிவித்தபோது, அண்ணா அதை மறுத்து இன்ப நாள் என்றது, தேர்தலில் பங்கற்க அண்ணாவிற்கு இருந்த விருப்பம், கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்த தயக்கம் போன்ற வரலாற்றுண்மைகளை மறைக்கப்படுகிறது.

   நீதிக்கட்சிக்கு திராவிடர் கழகம் என்ற பெயரை அண்ணா மாற்றியதாச் சொல்வது எந்தளவிற்கு உண்மை? சேலம் மாநாட்டிற்கு முன்னதாகவே ஆகஸ்ட் 05, 1944 ‘கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல்’ என்று ‘குடியரசு’ இதழில் துணைத் தலையங்கம் பெரியாரல் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 27, 1944 சேலம் செவ்வாய்ப்பேட்டை நீதிக்கட்சி மாநாடு தொடர்பான ‘குடியரசு’ ஆகஸ்ட் 12,19 – 1944 இதழ் தலையங்களில் திராவிடர் கழகம், திராவிட நாடு குறித்துப் பெரியார் எழுதியுள்ளதை கவனிக்கவேண்டும்.

வைதீக-அவைதீக மரபுகள் பற்றிய குழப்பம்

   சமணம். பவுத்தம் ஆகியவற்றுடன் அஜிவிகைசம் (Ajivikaism) என்றொரு சமயத் தத்துவம் கூறப்படுகிறது. புத்தரின் சமகாலத்தவராக இருந்து அவரிடமிருந்து பிரிந்து சென்ற மற்கலி கோசலர் தோற்றுவித்த ஆசிவகம் என்ற தத்துவப்பிரிவே இப்படி சொல்லப்படுகிறது.

   பல்லவர் காலத்தில் சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருந்ததைச் சொல்பவர்கள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் நாடெங்கும் சமஸ்கிருத வேதபாடசாலைகள் துவக்கப்பட்டதையும் தொடர்ந்து வந்த 100 ஆண்டுகளில் கம்பராமாயணம் தவிர்த்து தமிழ் இலக்கியங்கள் ஏதும் உருவாகாமல் தமிழ் முடங்கிப் போனதையும் தஞ்சைப் பெரிய கோயிலில் பல்லாயிரக்கணக்கில் தேவதாசிகள் குவிக்கப்பட்டிருந்ததையும் ஏன் மறைக்கவேண்டும்?

      இவ்வளவு பிழைகள் மலிந்த பள்ளிப் பாடநூல்களைத் தமிழ் அறிவுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. இது பொருட்படுத்தத் தக்கதல்ல என்று கருதினால் அது மாபெரும் தவறு. வருங்கால சந்ததியைக் காக்கும் பொறுப்பு  நம் அனைவருக்கும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக