திங்கள், பிப்ரவரி 02, 2015

சிறார் இதழ் அறிமுகம்: சின்ன நதி – அறிவதே ஆனந்தம்…



சிறார் இதழ் அறிமுகம்: சின்ன நதி – அறிவதே ஆனந்தம்…
                                      - மு.சிவகுருநாதன்

   புதிய பயணியின் மற்றொரு வெளியீடாக யூ.மா.வாசுகியின் ஆசிரியப் பொறுப்பில் ‘சின்னநதி’ என்னும் சிறார் மாத இதழ் ஜனவரி 2015 முதல் மலர்ந்துள்ளது. துளிர், மின்மினி போல ஒன்றிரண்டு சிறுவர் இதழ்களுக்கு மத்தியில் இம்முயற்சி வரவேற்கப் படவேண்டிய ஒன்று. மஞ்சள் இதழ்கள் வெளியிடும் சிறுவர் மற்றும் பெண்கள் இதழ்கள் பொருட்படுத்தகூடியவை அல்ல.

   நானோ தொழில்நுட்பத்தை சிறுவர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்கிறது ப. கூத்தலிங்கத்தின் கட்டுரை. குழந்தை இலக்கிய எழுத்தாளர் ம.ப. பெரியசாமித் தூரன் பற்றிய கட்டுரை பெ. முருகனால் எழுதப்பட்டுள்ளது. மற்றொரு கட்டுரை சார்லி சாப்ளினை அறிமுகம் செய்கிறது. ரஷ்யா மொழி சிறுவர் கதை ‘மந்திரம்’ தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது.

   சிறுவர் நூலறிமுகம் செய்யப்படுகிறது (ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம் – யூ.மா. வாசுகி). இளம் படைப்பாளி வரிசையில் 8 ஆம் வகுப்பு மாணவி சிந்துஜாவின் கதை வெளியாகியுள்ளது. ‘செல்வியின் ஆகாயம்’ என்ற மற்றொரு கதையும் இருக்கிறது. 

   உயிரினங்களின் ரத்தம், அவற்றின் நிறங்கள் குறித்த முனைவர் வி. அமலன் ஸ்டேன்லி கட்டுரை ஹீமோகுளோபின் இருந்தால் சிவப்பு நிறமாகவும் ஹீமோசயனின் இருக்கும்போது நீல நிறமாகவும் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

   சிட்டுக்குருவி, டாலியா, ஏசுநாதர் பல்லி, வண்ணத்துப்பூச்சி, கங்காரு, சுறா, வவ்வால் போன்ற உயிரினங்கள் பற்றிய குறிப்புக்களும் படக்கதை, குறுக்கெழுத்துப் போட்டி, தந்திர விளையாட்டு, நகைச்சுவைப் பகுதி, சிறுவர் பாடல்கள், சிறுவர் ஓவியங்கள் எனப் பல உண்டு. குழந்தைகள் வரைவதற்கு தனிப்பக்கம் உள்ளது. அசத்துங்க. வாழ்த்துக்கள்.

   அனைத்துப் பக்கங்களும் முழுமையான வண்ணத்திலும் பார்ப்பதற்கும் குழந்தைகளைப் படிக்கத் தூண்டும் வகையிலும் இதழ் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இவ்விதழ் அனைவராலும் ஆதரிக்கப்பட்டு தொடர்ந்து வெளியாக வேண்டும். இது நடக்குமா?

ஆசிரியர்: யூ.மா. வாசுகி
சிறப்பாசிரியர்: ப. கூத்தலிங்கம்
தனி இதழ்: ரூ 15  ஆண்டுக்கு: ரூ 150

தொடர்புக்கு:

சின்ன நதி,
5 முதல் தெரு – போயஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
பேச: 044-42105364, 9940544917
மின்னஞ்சல்: chinnanathimonthly@gmail.com
  
 
  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக