புதன், மார்ச் 04, 2015

சிறார் இதழ் அறிமுகம்: பூவுலகு மின்மினி – மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழ்


சிறார் இதழ் அறிமுகம்:
பூவுலகு மின்மினி – மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழ் 
                                                   -   மு.சிவகுருநாதன்


     சுற்றுச்சூழலுக்கான ‘பூவுலகு’ இதழின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழாக ‘மின்மினி’ மலர்ந்துள்ளது. மருத்துவர் கு.சிவராமன் ஆசிரியப் பொறுப்பில் யூமா.வாசுகி, பேரா.த.முருகவேள் ஆகியோர் ஆலோசனையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இவ்விதழை சிறப்பாக வெளியிடுகிறது. அண்மைக்காலங்களில்தான் சிறுவர் இலக்கியங்களும் இதழ்களும் அரும்பத் தொடங்கியிருக்கும் நிலையை நாம் கண்டிப்பாக வரவேற்றாக வேண்டும். 

     இன்று வண்ணமயமாக அழகுற அச்சிட தொழில்நுட்பம் முன்னேறியிருக்கின்ற அதே வேளையில் இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்றால் பரந்துபட்ட ஆதரவுத்தளம் தேவை. இம்மாதிரியான இதழ்களை அரசுகள் கண்டிப்பாக ஆதரிக்கப் போவதில்லை. இன்று சுற்றுச்சூழல் பேசுபவர்கள் தேசத்துரோகிகளாகப் பார்க்கப்படும் சூழலில் இதற்கு வாய்ப்பில்லை. பள்ளிகளும் ஆசிரியர்களும் இம்மாதிரியான இதழ்களையும் நூற்களையும் வாங்கி ஆதரிப்பது நமது சந்ததிக்கு செய்யும் அருந்தொண்டாகும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA) போன்ற திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாய்களுக்கு மாணவர்களுக்குப் பயன்படாத நூல்கள் வாங்கப்படுகின்றன. எனவே ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இத்தகைய இதழ்களுக்கும் நூற்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

  ‘அணில் தோப்பு’ என்ற கொ.மா.கோ.இளங்கோவின்  கதையும் ‘சிங்கம் ஏன் கர்ஜிக்கிறது?’ என்ற படோங்கா இனத்தின் கதையும் (தமிழில்: பாவண்ணன்) பிப்ரவரி 2015, இதழ்-9 இல் வெளியாகியுள்ளது. பசுமை வகுப்பறைக்கு மாறலாமா? என்ற யாழினியின் கட்டுரையும் சரியான காலை உணவு குறித்த கு.சிவராமனின் கட்டுரையும் இதழுக்கு அணிசெய்கின்றன. 

   சங்கு வளை நாரை, நீர்க்காகம், அரிவாள் மூக்கன், சிலந்திகள் குறித்த தகவல்கள் வண்ணப்படங்களுடன் உள்ளன. பிப்ரவரி 12 சார்லஸ் டார்வினின் பிறந்த நாள் கட்டுரையாக ‘தேடலின் நாயகன்…’ உள்ளது. மேலும் டார்வினின் பீகிள் கடற்பயணம், சார்லஸ் டார்வினின் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம் போன்றவையும் இருக்கிறது. பூக்கள் ஏன் கருப்பாக இருப்பதில்லை? என்ற மின்மினி பதில்கள் பகுதி இடம்பெறுகிறது. செய்திகள் & பார்வைகள், விடுகதைகள், வண்ணம் தீட்ட வண்ணச்சோலைப் பகுதியும் இருக்கிறது. உள் அட்டையில் பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகள் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. விலை சற்று அதிகந்தான் எனினும் முழுதும் வண்ணமயமான குழந்தைகளுக்கு மகிழ்வளிக்கும் இவ்விதழை நாம் வாங்கியேயாக வேண்டும், குழந்தைகளுக்காக மட்டுமல்ல; நமக்காகவுந்தான்.

பூவுலகு மின்மினி – மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழ் 
பிப்ரவரி 2015

ஆசிரியர்: மருத்துவர் கு.சிவராமன்
பொறுப்பாசிரியர்: தேவிகாபுரம் சிவா
ஆலோசகர்கள்:
யூமா. வாசுகி
பேரா. த.முருகவேள்

தனி இதழ்: ரூ 20
ஆண்டு சந்தா: ரூ 200

வெளியீடு:

பூவுலகின் நண்பர்கள்,
106/1, முதல் தளம்,
கனக துர்கா வணிக வளாகம்,
கங்கையம்மன் கோயில் தெரு,
வடபழனி,
சென்னை – 600026.
பேசி: 044 43809132
மின்னஞ்சல்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக