இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின்
சுவை...
(அலையாத்திக்காடுகளும் அனல் மின்நிலையங்களும்
– நக்கீரன் - குறு நூல் அறிமுகம்)
- மு.சிவகுருநாதன்
இந்நூலுக்குள் செல்வதற்கு முன்பு பாடநூற்கள்
மாணவர்களை எவ்வாறு மழுங்கடிக்கின்றன என்பதற்கு தொடர்புடைய சில எடுத்துக்காட்டுகள்.
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் புவியியல் பகுதியில் “பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டைப்
பகுதியிலுள்ள அடர்ந்த சதுப்புநிலக்காடுகள் மனிதனின் பொறுப்பற்ற செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.”
(இவ்விடங்களைப் பாதித்த மனித செயல்களை ஆராய்ந்து அறிக.) என்று ‘சுற்றுச்சூழலும் அதன்
தொடர்புடைய நிகழ்வுகளும்’ பாடத்தில் சொல்லப்படுகிறது. இதற்கு மாணவர்கள் மனிதச் செயல்பாட்டினால் ஏற்படும்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தப் பட்டியல் ஒன்றை தயார் செய்யக்கூடும். இதில் கண்டிப்பாக
பிளாஸ்டிக் பயன்பாடு, திறந்த வெளிக் கழிப்பிடங்கள், மரங்களை வெட்டுதல் என்ற மனிதச்செயல்பாடுகள்
கண்டுபிடிக்கப்படக்கூடும். மோடியின் தூய்மை இந்தியாவிற்கு பின்னால் வேறு எப்படி யோசிக்க
முடியும்?
இவையெல்லாம் வெறும் மனிதச் செயல்பாடுகள் மட்டுந்தானா,
அப்படி மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை. பூச்சிக் கொல்லிகள்,
வேதி உரங்கள், சுற்றுலா, இறால் – மீன் பண்ணைகள், அனல்மின் நிலையங்கள், துறைமுகங்கள்
போன்றவற்றைத் தனிமனிதச் செயல்பாட்டில் மட்டுமே அடக்க முடியுமா? இவற்றிற்குப் பின்னாலுள்ள
அரசியல் தொழிற்பாடுகள், கொள்கைகள், மூலதனம் போன்றவற்றையும் இணைத்து அணுகவேண்டிய அவசியமிருக்கிறது.
மாணவர்களை மூளைச்சலவை செய்யு நோக்கத்துடனே இத்தகைய பாடநூற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டியது இன்றியமையாதது.
சதுப்பு
நிலங்கள் குறித்த வரையறை ஒன்றைச் சொல்லி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றனர். இதே
ஒன்பதாம் வகுப்புப் பாடநூலில் (3 வது பருவம்) ‘வளங்களைப் பாதுகாத்தலும் நிலைப்படுத்தப்பட்ட
வளர்ச்சியும்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் “ஆறு அடி ஆழத்திற்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ
நீர் தேங்கியுள்ள பகுதி சதுப்பு நிலப்பகுதியாகும்”, என்று வரையறை சொல்லப்படுகிறது. இது என்ன அபத்தம். நீர் தேங்கிய இடமெல்லாம் சதுப்பு
நிலங்கள் என்றால் நாட்டில் சதுப்பு நிலங்களுக்கே பஞ்சமிருக்காதே! இதுதான் நமது கல்வியின்
நிலை.
மேலும்
சதுப்புநிலத் தாவரங்களில் காணப்படும் வேர்களை தாங்கும் வேர்கள் என்று மட்டும் சொல்லி
அதன் முதன்மைப்பணியான சுவாசம் மறக்கடிக்கப்படுகிறது. இத்தகைய கல்விச்சூழல் மற்றும்
பாடநூற்கள் உள்ள நிலையில் அலையாத்திக்காடுகள் பற்றிய நக்கீரனின் குறு நூல் மிகவும்
வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.
அலையாத்திக் காடுகளின் பல்லுயிர்ச் சூழல்,அனல் மின்
நிலையங்கள், இறால் பண்ணைகள், நவீன விவசாயம், துறைமுகம் ஆகியவற்றால் பாதிப்புள்ளாகும்
தற்காலச் சூழல் போன்றவற்றை இக்குறுநூல் விளக்குகிறது.
இப்பகுதி அளம் என்றும் அழைக்கப்படும். இதிலிருந்துதான்
உப்பளம் என்ற சொல் கூட உருவாகி இருக்கக்கூடும். சு. தமிழ்ச்செல்வியின் இப்பகுதி வாழ்வியலைப்
பேசும் ஓர் நாவலின் பெயர் ‘அளம்’. இந்நூலில் அலம் எனப்படுகிறது. எழுத்துப்பிழையாக இருக்கக்
கூடுமோ!
இன்னொரு செய்தி. சதுப்பு நிலப்பகுதிகளில் காணப்படும்
அரிய, சுவையான மீனினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மடவா கெண்டையுடன் கூடவே மன்னா கெண்டை,
பால கெண்டை என்று சொல்லப்படும் மீன்கள் உண்டு. சீர்காழிக்கு அருகில் மடவாமேடு என்றொரு
கிராமம் கூட உண்டு. கோடியக்கரைக் காட்டில் அதிக சுவைமிக்க பாலாப்பழம் ஒன்றுண்டு. அதனால்தான்
என்னவோ சுவை மிகுந்த இம்மீனுக்கு அப்பெயரை வைத்திருக்கவேண்டும். எழுதும்போதே நாவில்
எச்சில் ஊறுகிறதே! இனியும் சாப்பிடமுடியுமா?
அலையாத்திக்காடுகளும் அனல் மின்நிலையங்களும்
– நக்கீரன் - குறு நூல்
கொம்பு வெளியீடு:
11 பப்ளிக்
ஆபிஸ் ரோடு,
தேவி
தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம்
– 611001.
செல்:
9952356742
பூவுலகின்
நண்பர்கள்,
106/1, முதல் தளம்,
கனக துர்கா வணிக வளாகம்,
கங்கையம்மன் கோயில் தெரு,
வடபழனி,
சென்னை – 600026.
பேசி: 044 43809132
செல்: 9841624006
மின்னஞ்சல்:
முகநூல்:
Poovulagin Nanbargal
விலை: ரூ. 40
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக