வெள்ளி, மார்ச் 06, 2015

இடைநிலை இதழ் அறிமுகம்: பேசும் புதிய சக்தி - மாத இதழ்



இடைநிலை இதழ் அறிமுகம்:   பேசும் புதிய சக்தி - மாத இதழ்
                                   - மு.சிவகுருநாதன்


(எவ்வளவு காலந்தான் சிற்றிதழையும் சிறார் மற்றும் சுற்றுச்சூழல் இதழ்களை மட்டும் அறிமுகம் செய்வது. ஒரு மாற்றத்திற்காக இன்று இடைநிலை இதழ் ஒன்றை அறிமுகம் செய்வோம்.)
     
  புத்தாயிரமாவது ஆண்டு (2000) பலதுறைகளில் புதிய வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது. அதில் இதழ் – பதிப்புத்துறையும் ஒன்று. தொழில்நுட்பங்கள் அனைத்தையும் சாத்தியமாக்கி இதழ்களை, நூற்களை வடிவமைத்து வெளியிட முடிகிறது. கடந்த 15 ஆண்டு கால கட்டத்தில் பல்வேறு புதிய இடைநிலை இதழ்கள் தோன்றி வளர்ந்தன. சில சிறு பத்தரிக்கைகள் இடைநிலை இதழ்களாக உருமாற்றம் பெற்றன. சிறு பத்தரிக்கைகளைப் போல சில இடைநிலை இதழ்கள் நின்று போனாலும் சில தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளன. 

   குமுதம் தீராநதி, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, அம்ருதா, புதிய புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், காட்சிப்பிழை, காக்கைச் சிறகினிலே…, புதிய பார்வை, கணையாழி, வார்த்தை என்று பட்டியல் நீளும். இதில் புதிய பார்வை, வார்த்தை, காட்சிப்பிழை ஆகியன தற்போது நின்று போயுள்ளது.

   அந்த வகையில் திருவாரூரிலிருந்து ‘பேசும் புதிய சக்தி’ என்றொரு மாத இதழ் வெளிவருகிறது. இது வரையில் 9 இதழ்கள் வெளியாகியுள்ளன. கவிதா ஜெயகாந்தன் ஆசிரியப் பொறுப்பில் கே.வி.ராகவன், சிவகுமார் முத்தையா ஆகியோரின் ஆசிரியர் குழு கைவண்ணத்தில் மார்ச் 2015 இதழ் கல்விச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. 

  இச்சிறப்பிதழில் எம்.எஸ்.ஆரின் பெற்றோர், மாணவர்கள், சமூகம் என தனித்தனியே மூன்று கட்டுரைகளும் அரசுப்பள்ளிகள் தரம் உயரட்டும் என்கிற பா.சரவணகுமரன் கட்டுரையும் உள்ளது. மேலும் கற்றலில் குறைபாடு இருந்தால் தேர்வு எழதும் நேரம் அதிகப்படுத்தும் வசதி இருப்பதை ஹரிபிரசாத் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றிய பி.எஸ்.கே.யின் கட்டுரையும் இருக்கிறது. மு.சிவகுருநாதனின் ‘ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்’ கட்டுரை மனப்பாடத் தேர்வு முறை ஒழிக்கப்படவேண்டியதை வலியுறுத்துகிறது.

  அ.சி.மணியன், ஆரூர் தமிழ்நாடன், கவிக்கோ.ஞானச்செல்வன் ஆகியோரின் தொடர்கள் இடம்பெறுகின்றன. இளங்கோவனின் இரு கவிதைகளும் ஜெயபாஸ்கரன், கா.விஜயராகவன், வெற்றிப்பெரொளி ஆகியோரது கவிதைகளும் இவ்விதழில் இருக்கின்றன.

   மார்ச் 08 மகளிர் நாள் கட்டுரையாக சிவகுமார் முத்தய்யாவின் ‘நிறைவேறாத கனவுகளில் அலைபாயும் காற்று…’, ம.காமுத்துரையின் ‘போதும் பொண்ணு’, கே. நாதனின் ‘மகளிர் தின நாட்குறிப்பு’ ஆகிய மூன்று கட்டுரைகள் உள்ளன. ‘எண்ணம் ஒரு ஏடு…’ என்ற கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றும் நா.விச்வநாதன், சுப்ரபாரதிமணியன், அண்டனூர் சுரா ஆகியோரது சிறுகதைகளும் உள்ளன. புத்தகக்களம் பகுதியில் ப.சதீஷ் பிரபுவின் ‘சாக்கி’ கவிதைத் தொகுப்பு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை சாகித்ய அகதெமி, ஞானபீடம், அசோக் சக்ரா விருது பெற்றவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

  ரூ. 30 விலையில் 64 பக்கங்களில் விரிந்துள்ள இவ்விதழ் படைப்புக்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழுலகம் முழுதும் அறியப்படும் இடைநிலை இதழாக மிளிர்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. சமூகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, பொருளியல் என்று பல்வேறு களங்களை முதன்மைப் படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் தமிழ்ச்சூழலில் உள்ளது.

பேசும் புதிய சக்தி – மாத இதழ்

தனி இதழ்: ரூ. 30
ஆண்டு சந்தா: ரூ. 300

முகவரி:

A.N.R. காம்ப்ளெக்ஸ்,
52/13, தெற்கு வீதி,
திருவாரூர் – 610001.
செல்: 9489773671, 9688227772, 9600519442
போன்: 04366 - 244345

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக