திங்கள், நவம்பர் 30, 2015

09. சொல்லப்படாத வரலாறுகளும் திரிக்கப்பட்ட வரலாறுகளும்

09. சொல்லப்படாத வரலாறுகளும் திரிக்கப்பட்ட வரலாறுகளும்
 
                    (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

                                           மு.சிவகுருநாதன்



(காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஆக. 2010 –ல் வெளியான, ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘வரலாறும் வழக்காறும்’ என்ற நூல் குறித்த பதிவு இது.)


 
      இங்கு வரலாறு என்பது மன்னர்களின், போர்களின் வரலாறாகச் சுருங்கிப் போய்விட்டது. இதனை விரிவாக்க, மறைக்கப்பட்ட, சொல்லப்படாத, திரிக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ள நாட்டார் வழக்காறுகள் பயன்படுகின்றன. இவையனைத்தையும் வரலாற்றுண்மைகளாகக் கருதும் போக்கு ஒன்றுள்ளது. 
 
  அவ்வாறில்லாமல் ஆ.சிவசுப்பிரமணியன் வரலாற்றிற்கும் வழக்காற்றிற்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்ந்தவர். அவர் தமது பல்வேறு நூற்களின் மூலம் வரலாற்றையும் வழக்காறையும் பொருத்திப் பார்த்து ஆய்வு செய்வதன் வாயிலாக வரலாற்றில் திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர். 
 
   “மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளும் சடங்குகளும் அமைகின்றன. இவற்றை நாம் அப்படியே வரலாற்றில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போன்று இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.” என்று ஆ.சிவசு வெறொரு நூலுக்கான முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். (அடித்தள மக்கள் வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, டிச. 2011.)
 
   காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வரலாறும் வழக்காறும்’ என்ற நூலில் இவரது 10 கட்டுரைகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் வரலாற்றுப் பாடங்கள் எவ்வாறு உள்ளன என்பதற்கு தனது அனுபவங்கள் வழியாக ஓரு சித்திரம் வரைகிறார். இங்கு வரலாற்று நாவல்கள் என்ற போர்வையில் அரசர்களின் அந்தப்புரங்களை சுற்றிவந்த நிலையை மாதவையா, பிரபஞ்சன் ஆகியோர் மாற்றியமைத்ததைச் சுட்டுகிறார்.
 
   பள்ளிகளில் பிராமண ஆசிரியர்கள் ‘பிரம்மஹத்தி’ என்ற சொல்லை திட்டுவதற்கு பயன்படுத்தக் கேட்டிருக்கலாம். ‘பிரம்மஹத்தி’ என்ற பார்ப்பனப் பேய் புராணக்கதையைக் கொண்டு பார்ப்பனர்கள் தங்களது சமூக மேலாண்மையை (Social Hegemony) நிலைநாட்டுவதை ஓர் கட்டுரை விவரிக்கிறது. மநு தர்மத்தை ஒட்டி உற்பத்தி செய்யப்பட்ட இப்புராணக்கதைகள் மூலம், பண்பாட்டு மேலாண்மையை அடித்தள மக்களின் மீது நிலைநிறுத்தி, அவர்களின் சமூக ஒப்புதலைப் பெறும் முயற்சியின் வெளிப்பாடே இத்தகைய கதைகள், என்று சிவசு எழுதுகிறார். 
 
   பிராமண சமூகம் மநு தர்மத்தின் வழியாக தனக்கான ஓர் ஆதிக்க வழக்காறைக் கட்டமைத்துள்ளது. திருவாரூர் மநு நீதிச்சோழன் கதையும் இவ்வாறாக கட்டமைக்கபட்டதே. பிராமணர்களையும் பசுக்களையும் பிற வருணத்தவர் கொல்வது மாபாவம் என்றும் பார்ப்பனர்கள் செய்யும் கொலைகளுக்குக் கூட கடினமான தண்டனை கூடாது எனவும் மநு தர்மம் வகுத்தளித்திருக்கிறது. 
 
    முதலாம் ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் (கிபி.965) பஞ்சவன் பிரமாதி ராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்ற பார்ப்பனர்களால் கொலை செய்யபட்டான். 20ஆண்டுகள் கழித்து இக்கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முதலாம் ராஜராஜன் அவர்களிருவரும் பார்ப்பனர் என்பதால் அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த பணத்தில் காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலில் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்க உத்தரவிடப்பட்டான். சத்திரிய அரசாட்சி என்கிற பெயரில் மநு தர்ம ஆட்சியே என்று நடந்தது எனபதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. 
 
   ‘பிரம்மஹத்தி’ பற்றிய ஐந்து கதை வடிவங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன. அவற்றில் மூன்று கதைகள், மூன்றாம் குலோத்துங்க சோழன், வீரசேனன், வரகுணன் (பாண்டிய மன்னர்கள்) கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மருதீஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு வாசலில் ‘பிரம்மஹத்தி’ காத்திருப்பதைப் பற்றிக் கூறுகிறது. 
 
    வைதீக இந்து மதம் தீட்டைக் கழிக்க, தீ, பசுமாட்டின் மூத்திரம், பட்டு, பூணுல், சுத்தி சடங்குகள், யாகங்கள் என்று பல்வேறு விதமான வழிமுறைகளை வைத்திருக்கிறது. ‘பிரம்மஹத்தி’யைப் போக்க உப்பை பயன்படுத்துகிறார்களோ என்னமோ தெரியவில்லை. திருவிடைமருதூர் கிழக்குக் கோபுரத்தின் தென்பகுதியில் அரசனது வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘பிரம்மஹத்தி’க்கு உப்பைக் கொட்டி வழிபாடு செய்கிறார்கள். 
 
   1930 சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடர்ந்து தீண்டாமைக்கு எதிரான ‘சம்பந்தி போஜனம்’ போன்றவற்றை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஏற்கவில்லை என்பதை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை (1937) சம்பவம் பற்றிய கட்டுரையும் இதில் உள்ளது. 
  
   நீடாமங்கலத்தில் 1937 டிசம்பர் 28 இல் நடைபெற்ற தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் ‘சமபந்தி போஜனம்’ உண்ட சுமார் 20 தலித்கள் காங்கிரஸ் பண்ணையார் சபாபதி உடையார் தலை மயிரைப் பிடித்து இழுத்து அடித்து, உதைத்து வெளியேற்றினர். பிறகு இவர்களுக்கு மொட்டையடித்து சாணிப்பால் ஊற்றி யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது என எச்சரித்து பணம் (ஓர் அணா) கொடுத்து சேரிக்கு அனுப்பினர். 
  
   காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக விளங்கிய ‘தினமணி’ இம்மாதிரியான நிகழ்வு நடைபெறவில்லை என்று எழுதியது. பின்னாட்களில் வெண்மணிப் படுகொலையை ஆதரித்து தலையங்கம் எழுதும் அளவிற்கு சென்ற தினமணி தனது சாதீய மனோபாவத்தை வெளிப்படுத்தியது. இச்சம்பவம் பற்றிய செய்திகள் ஆதாரங்கள் குடியரசு, விடுதலை போன்ற இதழ்களில் வெளியிட்ட தந்தை பெரியார் தலித் தோழர்கள் வழக்கு தொடர் ஆலோசனை வழங்கியும் அதற்கான உதவிகளையும் செய்தார். 
 
   பண்ணையாரின் சமூகத்தைச் (உடையார்) சேர்ந்தவரும் நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான சர்.ஏ.ட்டி.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட தலித்கள் சார்பில் வழக்கும் தொடுத்தார். ஆதிக்க சக்திகள் வழக்கு போட்டவர்களை அச்சுறுத்தி இவ்வழக்கை நீர்த்துப்போகச் செய்தனர் என்கிற விவரங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. 
 
   சாணிப்பால், சவுக்கடி தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக இருந்த பண்ணையார் ஒடுக்குமுறை, சாதிய இழிவுகள் மற்றும் கூலிச்சுரண்டல் என்பதாக நீட்சி பெற்றதை கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ந்து இந்நிலை மாறப் போரடியதை மற்றொரு கட்டுரை விவரிக்கிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பாலில் 1944 இல் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் ‘களப்பால் ஒப்பந்தம்’ செய்துகொள்ளப்பட்டது. இதன்படி சவுக்கடி, சாணிப்பால் கொடுத்தல் நிறுத்தப்படும் என்றும் முத்திரை மரக்காலில்தான் குத்தகை நெல்லும், ஊதிய நெல்லும் அளக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் இத்தகைய போராட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கையும் மறுக்கமுடியாது. 
 
   தோழர் நல்லக்கண்ணு சிறைவாழ்க்கை, போராட்டங்கள் பற்றி ஒருகட்டுரை பேசுகிறது. ஹாப்ஸ்பாமின் கண்ணியமிகு கொள்ளையர்களுக்கான (Noble Robbers) வரையறைகளில் பெரிதும் பொருந்திப் போகக்கூடிய கொள்ளைக்காரன் செம்புலிங்கம் பற்றிய கட்டுரை ஒன்று, தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் நாட்டார் பாடல்கள் பற்றிய கட்டுரை, வரலாறும் வழக்காறும் என்ற தலைப்புக் கட்டுரை, ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும் – கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள் என்ற பேரா.எஸ்.நீலகண்டன் நூல் அறிமுக விழா உரைச் சுருக்கக் கட்டுரை என நூல் விரிகிறது.

வரலாறும் வழக்காறும் (கட்டுரைகள்)
ஆ.சிவசுப்பிரமணியன்
பக்கம்: 120
விலை: ரூ. 90
மூன்றாம் பதிப்பு: ஆகஸ்ட் 2010
 
வெளியீடு: 
 
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.
பேச: 04652 – 278525,
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
இணையதளம்: www.kalachuvadu.com

வியாழன், நவம்பர் 26, 2015

08. போர்ச்சுகீசிய குதிரை வியாபாரி எழுதிய விஜயநகரப் பேரரசு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்



08.  போர்ச்சுகீசிய குதிரை வியாபாரி எழுதிய விஜயநகரப் பேரரசு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்

            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                     மு.சிவகுருநாதன்



(சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் புது எழுத்து வெளியீடாக ஜூலை 2006 –ல் வெளியான, ‘விஜயநகரப் பேரரசு – ஃபெர்னாவோ நூனிஸின் வரலாற்றுப் பதிவுகள்’ நூல் குறித்த பதிவு இது. போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ராபர்ட் சீவெல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அவரின் ‘A Forgotten Empire: Vijayanaga’ நூலில் வெளியிட்டுள்ளதன் தமிழாக்கம்.)

    தென்னிந்தியாவின் தக்காணப் பீடபூமி பகுதியில் கி.பி. 1336 முதல் கி.பி. 1646 வரை நீடித்திருந்த விஜயநகரப் பேரரசு
சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு என வெவ்வேறு மரபுகளால் ஆளப்பட்டது. கி.பி. 1336 இல் ஹரிஹர தேவராயர், புக்க தேவராயர் ஆகிய சகோதரர்கள் இந்த அரசை நிர்மாணித்தனர்.

   தேவராயர் என்பது இவர்களது வம்சப் பெயராகும். இவர்களுள் கிருஷ்ணதேவராயர் என்பவரைப் பற்றி வரலாற்றுப் பாடநூற்களில் நீங்கள் படித்திருக்கலாம்.

     இப்பகுதியில் நேரடி பார்ப்பன முடியரசாக விஜய நகர அரசை அவதானிக்கலாம். இதுவரையில் தென்னிந்தியாவில் அரசர்களுக்கு பட்டம் சூட்டி  அரசுகளை பின்னாலிருந்து இயக்கியவர்கள் இப்போது தாங்களே மன்னராயினர்.

   போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ராபர்ட் சீவெல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அவரின் ‘A Forgotten Empire: Vijayanaga’ நூலில் வெளியிட்டுள்ளதன் தமிழாக்கம் சா.தேவதாஸ் மிக அழகாக தமிழில் பெயர்த்துள்ளார். போர்ச்சுகீசிய குதிரை வணிகராக மூன்றாண்டுகள் விஜயநகர பேரரசில் தான் கண்டு, கேட்ட விவரங்களை வரலாற்றுக் குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளார். ஃபெரிஸ்டா, இபின் பதூதாவோ, அப்துர் ரஸாக்கோ ஆகியோர்கள் எழுத்துக்களை விட ஃபெர்னாவோ நூனிஸின் குறிப்புகள் முக்கியத்துவம் பொருந்தியதாக ராபர்ட் சீவெல் கணிக்கிறார். (சா.தேவதாசின் முன்னுரை)

  விஜய நகரத்தின் அரசர் ஒரு பிராமணர், அது மட்டுமல்லாது 200 க்கு மேற்பட்ட தளபதிகளும் இஸ்லாமியர் அல்லாதவர்களாக அதாவது இந்துக்களாக இருந்ததை நூனிஸ் பதிவு செய்கிறார். திருட்டு போன்ற சிறிய குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்கு இத்தகைய தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது. இவர்களது ஆட்சியில் பிராமணச் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்.

   நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் பிராமணர்கள், கடுமையான உழைப்புக்கு உதவமாட்டார்கள். மூன்று பேர் அல்லது ஒரே கடவுள் உள்ளதாக நம்பும் இவர்கள் அக்கடவுளை மும்மூர்த்தி என்றழைக்கின்றனர் என்றும் குறிக்கிறார். 

    கன்னடரில் ஓர் பிரிவு உண்டு. அவர்களது கோயில்களில் குரங்குகள், பசுக்கள், எருமைகள் மற்றும் பேய்ச்சிலைகளை வழிபடுகின்றனர். குரங்குகளைப் பற்றிப் பேசும்போது இந்நிலங்கள் முன்காலங்களில் குரங்குகளுக்குரியதாக இருந்ததாக அம்மக்கள் சொல்வதாக நூனிஸ் பதிவு செய்கிறார்.
  
  பிராமணரான தெலுங்கு மன்னர் ஒவ்வொரு நாளும் திருமணம் செய்துகொள்ளாமலும்  எந்தவொரு பெண்ணையும் தொடாமலிருக்கும் கற்றறிந்த பிராமணரது போதனைகளைக் கேட்கின்றார். நாள்தோறும் பசுக்களை முத்தமிடுகின்றனர். (பசுவின் பிட்டங்களில் முத்தமிடுவதாகச் சொல்வதை என்னால் உறுதி செய்ய இயலவில்லை என்கிறார்.) பசுவின் சாணத்தை புனிதநீர் போல, பாவங்களிலிருந்து தமக்கு கழுவாய் தேடிக்கொள்வதாகவும் குறிப்பு சொல்கிறது.
 
  இந்த விஜயநகரப் பேரரசில் இஸ்லாமியர் அல்லாத இந்துக்களே உள்ளனர். கணவர் இறக்கும்போது மனைவியர் உடன்கட்டை ஏறும் சடங்கை நேரில் பார்த்து ஓர் தேர்ந்த வருணனையாளரைப்போல விவரிக்கிறார். தெலுங்கர்கள் என்ற ஓர் பிரிவினர் மனைவியரை கணவனுடன் உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்ததையும் இங்கு பதிவு செய்கிறார்.
 
  பிராமணர்கள் இறப்பு, 11 ஆம் நாள் சடங்கு மற்றும் திதி போன்றவற்றை விலாவாரியாகப் பதிவு செய்கிறார். இந்த விநோதப் பழக்கங்களால் உந்தப்பட்டு கூடுதலாக சடங்குளைப் பதிவு செய்திருப்பார் போலும். எதிரிகளிடம் சரணடைவதற்கு முன்னதாக மனைவியர்கள், மகள்கள், சிறிய பிள்ளைகளை மன்னர், தளபதிகள் உள்ளிட்ட  அனைவரும் செய்ததை, ‘அருவெறுக்கத்தக்கது’ எனப்பதிவு செய்யும் நூனிஸ் உடன்கட்டை ஏறும் சடங்குகள் போன்றவற்றில் எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை என்பது ஆராயத்தக்கது.

    தந்திரங்கள், சூழ்ச்சிகள், வஞ்சகங்கள், கொலைகள், போர்கள், படையெடுப்புகள், கொள்ளையிடல் என ரத்த ஆறு ஓடும் பக்கங்கள் இங்கே குறிப்புகளாக விரிகின்றன. மன்னர், தளபதிகள் ஆகியோரின் அகவாழ்க்கை, பலதார மணம், எதிரி நாட்டு அரசிகள், இளவரசிகளை சிறைப்பிடித்தல், உடன்கட்டை ஏறுதல், ஒட்டுமொத்த தீக்குளிப்பு, வாரிசுரிமைக்கான தந்தை, சகோதரக் கொலைகள் என அனைத்துவித முடியாட்சி அக்கிரமங்களும் நிறைந்த ஓர் அரசாக விஜயநகர அரசு இருப்பதை இக்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

    இஸ்லாமிய மன்னர்களை மட்டும் இம்மாதிரியான செயல்களுக்குச் சூத்திரதாரிகளாகக் கட்டமைக்கும் போக்கு இந்திய வரலாற்றாசிரியர்களிடம் மிகுந்து காணப்படுகிறது. இந்து அரசர்களிடம் காணப்படும் அநீதிகளை மறைக்கு மதவாதக் கண்ணோட்டம் மேலோங்கியுள்ளதைக் காணமுடிகிறது.   

  சில எடுத்துக்காட்டுகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.

  விருபாட்ச ராயர் எனும் அரசர் மது, மாது என்று உல்லாசபோதையில் திளைக்க, அவர்களது மகன்களான இளவரசர்கள் இருவரும்  மன்னரைக் கொல்லத் திட்டமிடுகின்றனர். முத்தவன் தந்தையைக் கொலை செய்தபின், “கறைபட்ட கரங்களுக்கு அரசாட்சி பெரும்பாவம், எனவே தம்பிக்கு முடிசூடுங்கள்”, என்கிறான். தந்தையைக் கொன்றவன் தன்னையும் கொல்லலாம் என்று பிறர் சொன்னவற்றைக் கேட்டு தம்பி கையாலே அண்ணன் கொல்லப்படுகிறான். மேலும் தந்தையைப் போலவே இவனும் உல்லாச விரும்பியாகிறான். (பக். 22)

  கொண்டவீட்டைக் கைப்பற்றியதும் ஒரிய மன்னன் தலைமறைவாகவே, அரசி, இளவரசன், ஏழு தளபதிகள் விஜயநகரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். ஒரிய அரசி, “விஜயநகரப் பேரரசில் குதிரைகளுக்கு லாடம் கட்டும் கொல்லர்களுக்கு தரப்படுவாள்” என்று கல்வெட்டு பதித்த அரசன், ஒரிய அரசனும் மகளும் வந்து சேர்ந்தபிறகு மகளைத் திருமணம் செய்துகொண்டான். (பக்.31,32)
  
  சாளுவ திம்மர் சுல்தானை வென்று, அவரது மனைவி, மகன், குதிரைகள், யானைகள், ஏராளமான பணம், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றைக் கையகப்படுத்தி மன்னருக்கு அனுப்பி வைத்தார். (பக். 34)

  பெரும் எண்ணிக்கையிலான குதிரை, யானைப் படைகளுடன், லடசக்கணக்கில் காலட்படை வீரர்களும் இடம் பெற்றனர். இவர்களுக்கு சேவை புரிய வண்ணார் உள்ளிட்ட பலர் இருந்தனர். இப்படையினருடன் 20,000 தேவதாசிகளும் சென்றதாக நூனிஸ் குறிப்பில் தெரிவிக்கிறார். (பக். 38)

   மன்னர் தன் விரலிலிருந்து ஒரு மோதிரத்தைக் கழற்றி, சேவகன் ஒருவனிடன் தந்து அரசியாரிடம் தரச் சொன்னார். அப்போது அவரகள் சம்பிரதாயப்படி தம்மை எரியூட்டிக்கொள்ளவேண்டும். (பக்.47)

  அரசர் கிருஷ்ணாராவ் அரியணை ஏறியபின் மரபுப்படி நிறைய மனைவிகளைத் தேடிக்கொண்டார். தந்து முன்னாள் காதலி ஒருத்திக்கு மாளிகை ஒன்று கட்டி, மாடத்தில் தங்க வைத்து அழகு பார்த்தார். அவளை மிகவும் அதிகம் நேசித்தார். அவளைக் கவுரவிக்க ‘நாகலாபுரம்’ என்னும் நகரை நிர்மாணித்தார். (நாகலாபுரம் தற்போது ஹோஸ்பேட் என வழங்கப்படுகிறது. (பக். 70)

   இவருக்கு பள்ளத்தாக்கில் அணைகட்டும் முயற்சியில் தோல்வி வர, ரத்தப்பலி வேண்டும் என்ற மந்திரவாதிகள், முனிவர்கள் வேண்டுகோளை ஏற்று, தூக்குத்தண்டனை கைதிகளை வரவழைத்து சிரத்சேதம் (நரபலி) செய்து அணையைக் கட்டி முடித்தார். (பக். 71)

   இந்த அணையை காவல்புரிய 1,000 காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் வழியாகவே மனிதர்கள், சரக்குகள், எருதுகள் அனைத்தும் நுழைய வேண்டியிருந்தது. இவ்வாயில் ஆண்டுக்கு 12,000 பொற்காசுகளுக்கு ஏலம் விடப்பட்டது. (அந்தக்கால BOT மற்றும் சுங்கச்சாவடி) வரியில்லாமல் உள்ளூர், வெளியூர் ஆட்களோ, சுமைகளோ, எருதுகளோ உள்ளே நுழைய முடியாது. ஒவ்வொரு நாளும் அவ்வழியே வரும் 2,000 எருதுகளுக்கும் வரி உண்டு. கொம்பில்லாத எருதுகளுக்கு மட்டும் விலக்கு. (ப. 71, 72)

     அச்சுதராயருக்கு 500 மனைவிகள்; விரும்பிய பெண்ணுடம் அவர் சுகித்திருந்தார். (இவர்கள் தளபதிகள், கனவான்களின் மகள்கள்) அவர் இறந்தபோது இவர்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினர். இவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் தனக்கு மிகவும் பிடித்த 20 அல்லது 25 மனைவியரை பொன், வெள்ளி வேலைப்பாடுகள், முத்துமணிக் குஞ்சம் கட்டப்பட்ட பல்லக்கில் அழைத்துச் செல்வார். முக்கிய அரசிகளுக்கு மட்டும் தங்கம், பிறருக்கு வெள்ளிப் பல்லக்கு. இவர்களுக்கு சேவை புரிய ஆயிரக்கணக்கில் பணிப்பெண்களும் சில திருநங்கைகளும் உண்டு. அந்தப்புரத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. அரசிகளுக்ககாக 200 க்கும் மேற்பட்ட பசுக்கள்  வளர்த்து அதிலிருந்து இவர்களுக்கான  நெய் தயாரிக்கப்பட்டது. (பக். 76, 77)

  விஜயநகர் மன்னர்கள் பசு/மாடு தவிர்த்து ஆடு, பன்றி, மான், காடை, முயல், புறா, முள்ளம்பன்றி என அனைத்தையும் உண்டனர். எலிகள், பூனைகள், பல்லிகள் (இது உடும்பாக இருக்கலாம்!) என அனைத்தும் சந்தைகளில் விற்கப்பட்டது. இவை உயிருடன் விற்கவேண்டும் என்பது நிபந்தனை.

  விஜயநகர அரண்மனைகளில் 4,000 க்கு அதிகமான பெண்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் தேவதாசிகளும் உண்டு. பல்லக்கு தூக்குவோர், மல்யுத்தம் செய்வோர், சோதிடம் பார்ப்போர், நிமித்தம் (குறி) சொல்வோர், செலவுக்கணக்கு எழுதுவோர்,  சரி (தணிக்கை) பார்ப்போர், வாத்தியக் கருவிகள் இசைப்போர், சமையற்காரர்கள், உணவில் நஞ்சு கலக்காதிருக்க காவல் புரிவோர், பணிப்பெண்கள், இரவில் அந்தப்புரத்தில் காவல் புரிவோர், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பல்லாயிரம் பெண் அரண்மனையில் பணியாற்றினர். (பக். 84, 85)

  இறுதியாக ஓர் வேண்டுகோள். சில போர்ர்சுகீசிய பெயர்ச்சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடைப்புக்குறிக்ககுள் அளித்து இவற்றை எந்த உச்சரிப்பிலாவது தமிழில் கொடுத்திருக்கலாம். 


விஜயநகரப் பேரரசு – ஃபெர்னாவோ நூனிஸின்  (Fernao Nuniz)  வரலாற்றுப் பதிவுகள்

(போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ராபர்ட் சீவெல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அவரின் ‘A Forgotten Empire: Vijayanaga’ நூலில் வெளியிட்டுள்ளதன் தமிழாக்கம்.)

தமிழில்: சா. தேவதாஸ்
முதல் பதிப்பு: ஜூலை 2006
பக்கம்: 94
விலை: ரூ. 50

வெளியீடு: (புதிய முகவரி)

புது எழுத்து,
2/205, அண்ணா நகர்,
காவேரிப்பட்டிணம் – 635112,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

செல்: 9042158667

மின்னஞ்சல்: puduezuthu@gmail.com

செவ்வாய், நவம்பர் 24, 2015

07. காடுகளுக்காக மரணத்தை எதிர்கொண்ட போராளி



07.  காடுகளுக்காக மரணத்தை எதிர்கொண்ட போராளி
            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                - மு.சிவகுருநாதன்

(எதிர் வெளியீடாக டிச. 2014 –ல் வெளியான, பேரா.ச.வின்சென்ட் மொழிபெயர்த்த ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ – சிக்கோ மென்டிஸ் நூல் குறித்த பதிவு இது.)


   “இந்தக் காடு முழுவதையும் பாதுகாப்பது தான் எனது கனவு. ஏனென்றால் அது அதில் வசிக்கின்ற மக்களின் வருங்காலத்திற்கு உத்திரவாதம் தருகிறது. அது மட்டுமில்லை. அமேசான் பொருளாதாரத்தின் வளமான ஒரு பகுதி நமக்கு மட்டும் இல்லை; நாட்டுக்கே மனித இனத்துக்கே ஆகும் என்று நம்புகிறேன்… என்னுடைய இறுதிச் சடங்கிற்குப் பூக்கள் வேண்டாம். ஏனென்றால் அவற்றைக் காட்டிலிருந்து எடுத்து வந்திருப்பார்கள். என்னுடைய படுகொலையினால் எனக்கு எதிராக ஆயுதம் எடுத்தவர்களின் எதிர்ப்புணர்வு ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்…”

(பக். 19, 1988 டிச. 22 இல் சிக்கோ மென்டிஸ் படுகொலை செய்யப்படுவதற்கு முன் எழுதிய கடிதத்தின் ஓர் பகுதி.)

     ‘அமேசான் காந்தி’ என்றழைக்கப்பட்ட சிக்கோ மென்டிஸ் பிரேசில் நாட்டு ஏக்கர் மாநில சாபுரி ரப்பர் தோட்டம் ஒன்றில் 1944 டிசம்பர் 15 அன்று பிறந்தவர். ரப்பர் தோட்டங்கள் மலேயா, இலங்கை ஆகிய நாடுகளில் உருவான பிறகு, இவற்றிலிருந்து எடுக்கப்பட்ட ரப்பர் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. எனவே அமேசான் காட்டு ரப்பருக்கு கிராக்கி குறைந்தது. இரண்டாம் உலகப்போரின்போது மலேயா நட்பு நாடுகளின் கையிலிருந்து அச்சு நாட்டின் கைக்குப் (ஜப்பான்) போனது. அமெரிக்காவின் புத்துயிர்ப்புத் திட்டத்தால் பிரேசின் வடகிழக்கு ஏழை மக்கள் ரப்பர் தோட்டத்தி பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் ரப்பர் வீரர்கள் (Rubber Soldier) என்றழைக்கப்பட்டனர். சிக்கோ மென்டிஸின் தந்தையும் ரப்பர் வீரராக இருந்தவர்.

   ரப்பர் பால் வடிப்போரின் வீடு ‘கொலோக்கோவா’ எனப்பட்டது. குழந்தைகளும் ரப்பர் மரத்திலிருந்து பால் வடிக்கும் முறையைக் கற்றனர். இதற்கு ‘செரிங்குவரோ’ என்று பெயர். ரப்பர் காடுகளில் வாழ்ந்ததால் சிக்கோ மென்டிஸுக்கு இது வாய்த்தது. கல்வி கற்க வழியில்லை. கல்வி கற்றால் இவர்களை சுரண்டமுடியாது என்பதால் அதிகார வர்க்கம் கல்வியை இவர்களிடமிருந்து பறித்துக் கொண்டது.  அதனால் சிக்கோ மென்டிஸ் 20 வயதுக்கு மேல்தான் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள முடிந்தது.
 
   காட்டினுள் இருக்கும் அடுத்தடுத்த வீடுகளைக் கடக்க 15 நிமிடங்கள் ஆகும். இரண்டு, மூன்று பாதைகள் ரப்பர் மரங்களுக்குள் இருக்கும். ஒரு பாதையில் சென்று மரத்தை வெட்டி, பாலைப் பிடிக்கக் கோப்பைகள் வைப்பர். இரண்டாவது பாதையில் சென்று ஏற்கனவே வைத்த கோப்பைகளைச் சேகரிப்பர். மாலயில் ரப்பர் பாலை மரப்புகையின் மேல் ஊற்றி அல்லது அசிட்டிக் அமிலம் சேர்த்துக் கட்டியாக்கப்படும். இந்தப் பாதைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறும். இந்த வேலையை ஆண்கள் செய்வர். வீட்டில் ஆள் இல்லை என்றால் வேலைக்கு இளைஞர் அமர்த்தப்படுவார். ஆண் இல்லாத வீடுகளில் பெண்களும் இத்தொழிலில் ஈடுபடுவதுண்டு.  (பக். 29, 30)

  1970 களில் இவர் சாபுரி ஊரகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார். ரப்பர் பால் இறக்குவோரின் தேசியக் குழு உறுப்பினர், பிரேசில் டிரேட் யூனியன் காங்கிரஸ் (CUT)  உறுப்பினர், உழைப்பாளர் கட்சியின் (PT) உறுப்பினர், உலக வங்கி மற்றும் பன்னாட்டி அமெரிக்க வளர்ச்சி வங்கி ஆகியவற்றுக்கான அமேசான் வளர்ச்சித் திட்ட ஆலோசகர் என்று பல பதவிகளை ரப்பர் தோட்டத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த அமேசான் காட்டைப் பாதுகாக்கும் போராட்டங்களின் வழி அடைந்தவர். 



  கொத்தடிமை முறை, தோட்ட உரிமையாளர்கள், இவர்களது உழைப்பைச் சுரண்டிய உள்ளூர் வியாபாரிகள், வங்கி உரிமையாளர்கள், பன்னாட்டு மூலதனம் என பலவிதமான நெருக்கடிகளை இவர்கள் சந்திக்க நேர்ந்தது. காட்டை அழித்து மேய்ச்சல் நிலமாக்கும் நிலவுடைமையாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
  
  மரங்களை வெட்டிக் காட்டை அழிப்பதால் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்ள இலைகள் இருக்காது. இவைகள் எரிக்கப்படுவதால் கார்பன் டை ஆக்சைடு  இன்னும் அதிகமாகும். காட்டை அழித்து மேய்யச்சல் நிலமாக்கி கால்நடைகளை அதிகம் பெருக்குவதால் மீத்தேன் வளிமண்டத்தில் அதிகரிக்கும். இத்தகைய செயல்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகிறது. 


  நிலவுடைமையாளர்கள் 1980 ஜூனில் வில்சன் பின்னஹரோவையும் சிக்கோ மென்டீசையும் கொன்று தொழிற்சங்க இயக்கத்தை முற்றாக அழிக்க வெளிப்படையாக திட்டமிட்டனர். 1980 ஜூலை 21 அன்று வில்சன் பின்னஹரோ கொல்லப்பட்டார். சிக்கோ மென்டீசுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது குறித்து ஏக்கர் ஆளுநர், காவல்துறை அதிகாரிகள், சாபுரி நீதிபதி ஆகியோருக்கு புகாரளித்தும் பலனில்லை. மாறாக கொலையாளிக் கும்பல்களுக்கு துப்பாக்கி உரிமத்தை காவல்துறை வழங்கியது. 1988 டிசம்பர் 22 அன்று தனது 44 வது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரமே ஆனநிலையில் சிக்கோ மென்டிஸ் படுகொலை செய்யப்பட்டார். 


    அமேசான் காடுகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் நிலை  சிக்கோ மென்டிசின் வாழ்வாக நூலில் விரிகிறது. ரப்பர் தோட்ட வரலாற்றுடன் இவரது வாழ்க்கையையும் பிரித்துவிட முடியாது. கல்வி கற்றல், தொழிற்சங்க கட்டமைப்பு, போராட்டம், உயிருக்கு அச்சுறுத்தல் ஆகியன மிக இயல்பாகச்  சொல்லப்படுகிறது. தான் கொல்லப்படுவோம் என்று தெரிந்திருந்தும் போராட்டத்தின் விளைவாய் சாவையும் எதிர்கொண்டார். இதுவரை போராட்டக் களத்தில் பெற்ற படிப்பினைகள், செய்த தவறுகள், வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த சுய மதிப்பீடு மற்றும்  தொலைநோக்குப் பார்வை இவரிடமிருந்தது.
 
   ரப்பர் பாலிறக்குவோர், சிவப்பு இந்தியர்கள், பிற சங்கங்கள், தொழிலாளர்கள் என ஒடுக்கப்படும் அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து புதிய கூட்டணி உருவாக்கி போராடிய முறை இங்கு குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது. ரப்பர் தொழிலாளர்களும் சிவப்பு இந்தியர்களும் பல நூற்றாண்டுகளாக அதிகார வர்க்கம் எதிரிகளாகக் கட்டமைத்து வந்துள்ளதை உடைத்து, இந்த வர்க்கங்களிடையே இணக்கத்தையும் நேசத்தையும் சாத்தியப்படுத்தியவர். இவற்றிலிருந்து  அனைத்து வகையான விடுதலைப் போராட்டங்களும் பாடம் கற்றுகொள்ள வேண்டும்.

   நூலில் நிறைய படங்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சம்.   நூலில் ஒன்றிரண்டு பிழைகள் உள்ளன. வரும் பதிப்புகளில் அது களையப்பட வேண்டும். “பால் வடிக்கும் வேலையைப் பெரும்பாலும் பெண்கள்தான் செய்வார்கள்”, என்றிருக்கிறது. (பக். 30) இது ஆண்கள் என்றிருக்கவேண்டும். 1988 ஜனவரியில் நினைவஞ்சலி நடந்ததாக (பக். 19) முன்னுரையில் உள்ளது. சிக்கோ மென்டிஸ் படுகொலை செய்யப்பட்டது 1988 டிசமபர் 22. எனவே அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது 1989 ஜனவரியாக இருக்கக்கூடும்.  
 

காடுகளுக்காக ஒரு போராட்டம்
- சிக்கோ மென்டிஸ்
தமிழில்: பேரா.ச.வின்சென்ட்
முதல் பதிப்பு: டிச. 2014
பக்கம்: 128
விலை: ரூ. 120

வெளியீடு:
எதிர் வெளியீடு,
96, நீயூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642002.

பேச: 04259 226012  9865005084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com
இணையம்:  ethirveliyedu.in