செவ்வாய், நவம்பர் 17, 2015

கல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 46 முதல் 50முடிய.

கல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 46 முதல் 50முடிய. 46. முதலாம் குலோத்துங்கனின் இரண்டாம் கலிங்கப்போர் 
                       
     ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலைப் (இரண்டாம் பருவம்)  புரட்டிக் கொண்டிருந்தேன். ஜயங்கொண்டாரின் இரு கலிங்கத்துப்பரணி செய்யுள்கள் அதில் உள்ளன.
  நூற்குறிப்பில் முதலாம் குலோத்துங்கன் வென்ற கலிங்க மன்னன் அனந்தபன்மன் என்று வருகிறது. இரண்டாம் கலிங்கப் போரின்போது கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பதே சரியானது. அனந்தவர்மன் சோழகங்கன் என்று அழைக்கப் பட்டவன். இதை அனந்தவர்மன் சோடகங்கன் என்றும் சொல்வாரும் உண்டு. அக்காலத்தில் அரசர்கள் பல்வேறு பெயர்களில் உலவுவது உண்டல்லவா?  எனவே அனந்தவர்மனின் வேறு பெயர்களில் ஒன்றாக இருக்குமோ என்கிற அய்யம் தோன்றியது.
“கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பவன். அவன் சோழனை மதியாது திறை கட்டாதிருந்தான்.” - டாக்டர் மா.இராசமாணிக்கனார் (சோழர் வரலாறு)
“கி.பி.1112 ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போர், வடக்கே வட கலிங்க வேந்தனாகிய அனந்தவர்மன் என்பவனோடு குலோத்துங்கன் நிகழ்த்தியதாகும்.” - தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (பிற்காலச் சோழர் வரலாறு) (கி.பி.1110 ஆம் ஆண்டு என்கிறார் பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி)
“கலிங்க மன்னன் வருடாந்திரக் கப்பம் கட்டத் தவறியதே இப்படையெடுப்பிற்கு உடனடிக் காரணமாக விளங்கியது. கலிங்க  மன்னன் அனந்தவர்மன் சோழகங்கன் வீரராஜேந்திரனது மகள் இராஜசுந்தரியின் வழித்தோன்றலாவான்.” -  பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (சோழர்கள் தொகுதி 1)
   பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், டாக்டர் மா.இராசமாணிக்கனார் ஆகிய அனைத்து வரலாற்றாசிரியர்களும் அனந்தவர்மன் என்றே குறிக்கின்றனர். வர்மன் ‘பன்மன்’ ஆனதன் மர்மம் விளங்கவில்லை. இத்துடன் மேலும் சிலவற்றையும் ஆராய்வோம்.
   முதலாம் குலோத்துங்களது பெண்மக்கள் ராஜசுந்தரி, சூரியவல்லி, அம்மங்கை ஆகிய மூவர் பெயர்கள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கிறது. இதில் மூத்தமகள் ராஜசுந்தரி கலிங்க அரசன் ராஜராஜனை மணந்தவள். இவர்களுடைய மகன் அனந்தவர்மனே இரண்டாம் கலிங்கப்போரில் (வடகலிங்கம்) குலோத்துங்களால் (தாத்தா) தோற்கடிக்கப்பட்டான். வடகலிங்கம் ஏழு கலிங்கம் என்றும் அழைக்கப்பட்டது.
   கப்பம் கட்டவில்லை என்பதற்காக தன் மகள் வயற்றுப் பேரன் மீதே படையெடுத்தான் என்பது நம்பும்படியாக இல்லை. போருக்கு வேறு காரணங்களும் பகையும் காரணமாக இருந்திருக்கக்கூடும். வெற்றிக்குப் பின்னால் கலிங்கம் இவர்களது ஆட்சிப்பரப்பில் இருந்ததாகவும் தெரியவில்லை. வழக்கம் போல கொள்ளையிடுதலுக்கான படையெடுப்பாகவே இதைக் கருதவேண்டியுள்ளது. மேலும் இதைச் சோழனது தனித்த வெற்றியாகக் கருதுவதும் தவறு.      
    கும்பகோணம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரி (வண்டாழஞ்சேரி) என்ற ஊரில் பிறந்த பல்லவத் தலைவன் கருணாகரத்தொண்டைமான் மற்றும் சிற்றரசர்கள் கூட்டுப்படையால் இது நடத்தப்பட்டது. போரில் தோற்ற அனந்தவர்மன் பிடிபட்டதாகத் தெரியவில்லை. கலிங்க நாட்டைக் கொள்ளையிட்ட பெருஞ்செல்வத்துடன் சோழப்படைகள் நாடு திரும்பின. எனவே இப்போர் கொள்ளையிடலுக்காக நடத்தப்பட்டது என்பதில் அய்யமில்லை. இதற்கு உறவுப்பகையும் காரணமாக இருந்திருக்கலாம்.
  போரின் 1000 யானைகளைக் கொன்ற வீரனது வெற்றியை சிறப்பித்துப் பாடுவது பரணி இலக்கிய வகையாகும். கலிங்கத்துப்பரணி போன்ற ரத்தம் சொட்டும், திகிலூட்டும் போர்க்கள வருணனைகளைப் படிக்க இரும்பு அல்லது கல்மனம் வேண்டும். “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே.” என அண்ணா சொல்லியிருக்கும் கருத்தும் அதிர்ச்சியளிக்கக் கூடியது.
  இப்பரணி பாடிய ஜயங்கொண்டார் திருவாரூர் மாவட்டம் தீபங்குடி எனும் சிற்றூரில் பிறந்தவர். இவரைச் சமணர் என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. சமணராய் இருந்து சைவராக மாறியிருக்க வாய்ப்புண்டு.  இவர் எழுதிய நூல்களுள் ‘தீபங்குடி பத்து’ம் ஒன்று. (சமணமும் தமிழும்) இங்கு இன்றும் தீபநாயக சுவாமி என்னும் திகம்பரச் சமணப்பள்ளி ஒன்று உள்ளது. இது முதலாவது தீர்த்தங்கரர் விருஷ­ தேவர் எனப்படும் ஆதிபகவனுடையதாகும்.

   47. ஈசலின் வாழ்காலம்   
                     
    ஈசலின் உண்மையான வாழ்காலம் குறித்த தெளிவை நமது பாடநூற்கள் அளிக்கத் தவறிவிட்டன என்றே சொல்லவேண்டும். புராதன நம்பிக்கைகள் போன்று வழிவழியாக ஓரே கருத்து பரப்பப்பட்டு வருகிறது. அறிவியல் நடைமுறை வாழ்வில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை ஒத்துகொள்ளவேண்டும். அறிவியல் தகவல்கள் என்றளவில் மட்டும் இல்லாமல் மனப்பான்மை வளர்க்க, மாற்ற பயன்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கல்வியில் ஓரங்கட்டப் பட்டிருக்கின்றன.
    வெள்ளை எறும்புகள் என்றழைக்கப்படும் கரையான்கள் (Termites) தேனீக்கள் போல் சமூக வாழ்க்கை நடத்தும் பூச்சியினத்தைச் சார்ந்தவை. தோற்றத்தில் எறும்புகளைப் போல் இருந்தாலும் வகைப்பாட்டில் வேறிடத்தில் வரிசைப் படுத்தப்படுகின்றன. இவற்றில் 7 குடும்பங்களும் 275 பேரினங்கள் மற்றும் 2750  சிற்றினங்களும் உள்ளன.
  மரத்திலுள்ள செல்லுலோசை (cellulose) உண்டு வாழும் இவை அவற்றைச் செரிப்பதற்கான செல்லுலேஸ் என்னும் நொதி இல்லாததால் ஒரு வகையான காளான்கள் உதவியால் உணவூட்டம் பெறுகின்றன. தனது வாயிலிருந்து சுரக்கும் நொதியால் அந்தக் காளான்களுக்குப் போட்டி ஏற்படாமல் உதவி புரிகின்றன.
   கரையான்கள் தனித்த வாழிடத்தை உருவாக்கி அதில் வாழும் தன்மை கொண்டவை. நிலத்தில் புற்றுக்கள் என்றும் மரங்களில் கூடுகள் என்றும் வாழிடங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்படும் புற்றுக்கள் பக்கவாட்டிலும் மேற்பகுதியிலும் உள்ளீடற்ற குழாய்களாக உள்ளன. வெளிக்காற்று உள்ளே சென்று வாயு பரிமாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைக்கப்படுவதால் புற்றின் உட்புறம் குளிர்ச்சியான சூழல் உள்ளது. இதனால் பாம்பு போன்ற எதிர்களிடம் தங்களது வாழிடங்களை இழக்கவேண்டியுள்ளது.
   குழுவாக சமுதாய வாழ்க்கை வாழும் கரையான்களின் கூட்டத்தில் 500 முதல் 5 லட்சம் வரையிலான உறுப்பினர்கள் உண்டு. ராணி, ஆண், பாதுகாப்பு, வேலைக்கார கரையான்கள் என்ற வேலைப்பங்கீட்டின்படி இவை இயங்குகின்றன.
  ராணிக்கரையான் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்தி, முட்டையிட்டு தனது இனத்தை விருத்தி செய்யும். ஓர் நாளைக்கு 2000 முட்டைகள் வரை இடும். இதன் வாழ்காலம் 15 முதல் 20 ஆண்டுகள். சில கூட்டத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட ராணிக்கள் இருப்பதுண்டு. 
   ஆண் கரையான்கள், ஆண் தேனீக்களைப் போலவே கலவியைத் தவிர வேறுபணிகளைச் செய்வதில்லை என்று சொல்கிறோம். ஆனால் பிற பணிகள் செய்வதற்கான வாய்ப்பு மற்றும் உடற்திறனை இவை பெற்றிருப்பதில்லை. இவை முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும் தொடக்கநிலையில் அவற்றைப் பாதுகாக்கின்றன. பிறகு இப்பணியை வேலைக்காரர்கள் எடுத்துக்கொள்கின்றன. ஆண் கரையான்கள் மீது சூரியஒளி படுவதேயில்லை. அப்படி பட்டாலும் அவை மடிந்துவிடுகின்றன.
    பாதுகாப்புக் (சிப்பாய்) கடையான்கள் எதிரிகளிடமிருந்து கூட்டத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இவற்றில் இரு வகைகள் உள்ளன. பருத்த தலையுடன் இருக்கும் ஓரு வகை எதிரிகளைத் தாக்கி விரட்டும். மற்றொரு வகை தனது வாயிலிருந்து சுரக்கும் ஒருவித திரவத்தைத் துப்பி விரட்டும் . இது துப்பிக் கரையான்கள் எனப்படும்.
    வேலைக்காரக் கரையான்கள் தந்து உமிழ்நீர் மற்றும் மண்ணை இணைத்து புற்றமைக்கும்; அனைவருக்கும் உணவளிக்கும். பாதுகாப்பு மற்றும் வேலைக்காரக் கரையான்கள் சுமார் 2 ஆண்டுகள் வாழ்காலம் கொண்டவை. இவை மலட்டுத்தன்மை உடையவை. இவை பிறக்கும்போதே மலடாக இருப்பதில்லை. ராணிக் கரையான் சுரக்கும் ஒருவித திரவத்தை உண்பதால் இவை மலடாக்கப் படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறையும்போது ராணி இவைகளைப் பெருக்குகிறது.
  பொதுவாக உயிரினங்கள் பல்வேறு செயல்களுக்கேற்ப உரிய தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. இனப்பெருக்கச் செயல்பாட்டிற்கும் இது பொருந்தும். ஒரு செல் உயிரியான அமீபா சாதகமான சூழல்களில் இருபிளவாதல் முறையில் துண்டாகி பாலிலா இனப்பெருக்கம் செய்யும். பாதகமான சூழல்களில் வெளிப்புற பிளாஸ்மா சவ்வைச் சுற்றி காப்புக்கூட்டை உருவாக்கி நிறைய சேய் அமீபாக்களை (பலபிளவாதல்) உண்டாக்கும்.
   தாவரங்களில் விதை பரவுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உண்டல்லவா? இலவம் பஞ்சு, எருக்கு, நாயுருவி போன்று பல உதாரணங்கள் இருக்கின்றன. அதைப்போல இடநெருக்கடி, உணவுப்பற்றாக்குறை போன்றவற்றைத் தவிர்க்கும் பொருட்டு கரையான்கள் பிற இடங்களில் பரவி இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக சிறப்பான முட்டைகளை ராணிக்கள் இடுகின்றன. அவற்றிலிருந்து வருபவையே ஈசல்கள் ஆகும்.
    ஈசல்களுக்கு நான்கு இறகுகள் இருப்பினும் காற்றில் இவைகள் பறக்க முடிவதில்லை. மழைக்கால காற்றோட்டம் அதிகமில்லாத இளம்காலை நேரத்தை இவை தேர்ந்தெடுத்து புற்றிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கின்றன. இவை ஓர் நாள் வாழும் உயிரிகள் என்பது தவறான நம்பிக்கை.
    வெளியேறிய ஈசல்கள் பெரும்பாலும் ஊர்வன மற்றும் பிற உயிரிகளுக்கு உணவாகின்றன. எஞ்சிய சில இறகிழந்த புழுக்கள் இணை சேர்ந்து பூமிக்குள் சென்று முட்டையிடுகின்றன. இவற்றில் ராணி, ஆண் புழுக்கள் உண்டு. செல்கள் உருவான பிறகு புற்றுக்கள் கட்டப்பட்டு புதிய கரையான் குடியிருப்பு உருவாகிறது.
    ஈசல் புழுக்கள் நாள் ஒன்றுக்கு 40,000 வரை முட்டையிடுகின்றன. இவைகள் 15 முதல் 20 ஆண்டுகள் வாழக்கூடியது. ஒரு நாள் வாழ்வு என்பது இறகுடன் பறக்கும் சில மணிநேர வாழ்வைக் குறிக்கும். அதற்குப் பின்னான ஈசல் புழுக்களின் வாழ்வு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. எனவே ஓர் நாளில் இறந்துபோகும் உயிரி என முடிவு கட்டி விடுகிறோம்.    
    இந்த ஈசல்களை மனிதர்கள் உணவாக உண்பதும் உண்டு. மாட்டிறைச்சி அரசியலில் இது வேறா? என்று கேட்கவேண்டாம். ஈசல் உடலில் முழுதும் கொழுப்பும் புரதமும் உள்ளது. ஈசலின் முட்டையிலிருந்து செல்கள் உருவாகி இரைதேடும் வரை இதுவே அவற்றிற்கு உணவாகிறது. எனவே இவற்றை பச்சையாகவோ,  வேகவைத்தோ அல்லது பொறித்தோ உண்ணுகின்றனர்.
  உரிக்கொடியின் வேருடன் ஒருவகையான கொட்டைகளை வறுத்துப் பொடி செய்து ஈசல் வெளியேறும் காலங்களில் புற்றுக்களின் மீது விளக்கு வைத்து வெளிவரும் ஈசலை கோணிப்பை கொண்டு பிடிக்கிறார்கள். அவற்றைத் தேய்த்துப் புடைத்து இறகுகள் நீக்கப்படுகின்றன. பின்பு வறுத்து, உலர்த்தி, தேய்த்துப் புடைத்து தலை மற்றும் கால்களை நீக்கி உண்ணும் பழக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளது.
    இது சிறந்த புரத உணவு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதை எழுதுபோதே சாப்பிட நாவூறுகிறது. உத்திரப் பிரதேசத்தில் நடந்ததுபோல் வெறியர்கள் யாரேனும் வீடு புகுந்து கொலை செய்யாமலிருந்தால் சரி!

48. மாமல்லபுரத்துச்  சமணச்சிற்பங்கள் மற்றும் கோயில்கள்

           பல்லவர் ஆட்சிக் காலத்திற்கு முன்பு மல்லை அல்லது கடல் மல்லை என வழங்கப்பட்ட மாமல்லபுரம் பல்லவர்களின் துறைமுக நகராக விளங்கியது. நரசிம்ம வர்ம பல்லவன் தனது சிறப்புப் பெயர்களில் ஒன்றான மாமல்லன் எனும் பெயரை இந்நகருக்குச் சூட்டினான். மாமல்லபுரம் பிற்காலத்தில் மகாபலிபுரம் எனத் திரிந்தது. மகாபலிச் சக்கரவர்த்திக்கும் இந்நகருக்கும் யாதொரு தொடர்புமில்லை.
   இன்றும் சிற்ப நகராக விளங்கும் மாமல்லபுரத்தில் ‘அர்ச்சுனன் தபசு’ அல்லது ‘பகீரதன் தபசு’   என்கிற சிற்பம் புகழ்பெற்றது. இவ்வாறே அழைக்கப்படும் இவற்றின் படம்கூட பாடநூலின் அட்டைப்படத்தில் இடம்பெற்றதுண்டு. இச்சிற்பங்கள் விளக்கும் உண்மைக்கதையை மயிலை சீனி.வேங்கடசாமி தனது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
   கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச்சிற்பம் சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உள்ள செங்குத்தான பாறையில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் வன பர்வத்தில் அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் கதை என ஒரு சாரார் நம்புகின்றனர். இதையே நமது பாடநூற்களும் வழி மொழிகின்றன.
   ஒற்றைக்காலில் நின்று கைகளை உயர்த்தித் தவம் செய்வது அர்ச்சுனன் ஆகவும் நான்கு கைகளுடன் காணப்படும் தெய்வ உருவம் சிவன் ஆகவும் கற்பனை செய்யப்படுகிறது. தபசு செய்யும் அர்ச்சுனனிடம் சிவன் வேடன் உருவம் பூண்டும் பார்வதி வேட்டுவச்சி  உருவம் பூண்டும் சென்றதாக புராணம். ஆனால் இத்தகைய உருவங்கள் ஏன் காணப்படவில்லை? மாறாக இக்கதைக்குத் தொடர்பில்லாத நாககுமாரர்கள், தெய்வகணங்கள், யானைகள்,  கங்கை, கோயில், தலையில்லாத மூன்று உருவங்கள் ஏன் உள்ளன? என மயிலையார் வினா எழுப்புகிறார். இந்திய சிற்ப முறைகளுக்கு முரணாக சிவன், அர்ச்சுனன் போன்ற உருவங்களைவிட யானை போன்ற உருவங்கள் பெரிதாக இருப்பது இது அர்ச்சுனன் தபசை குறிப்பதல்ல என்பதற்கு காரணமாகக் கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்துகிறார்.
    மற்றொரு நம்பிக்கையான பகீரதன் தபசு கதையில் விண்ணிலிருந்து கங்கை மிக விரைவாக பூமியில் இறங்கியபோது அதைத் தன் சடையில் தாங்கிக்கொண்டதாக இருக்கிறது. இங்கு சிவன் சடைமுடியுடன் காணப்படவில்லை. ஜடாமகுடத்திற்குப் பதிலாக கிரீடமகுடம் இருப்பதும் சூலம், மழு முதலிய ஆயுதங்கள் அன்றி கதாயுதம் சிவனுடையது அல்ல.   கங்காதர மூர்த்தியின் உருவங்கள் பல்லவர் காலத்தில் அழகாக செதுக்கப்பட்டதுண்டு. (எ.கா.) திருச்சி மலைக்கோயில்)  ஆனால் பகீரதன் தபசில் கங்காதரமூர்த்தி இல்லை. இக்கதையில் இல்லாத யானைகள், நாகர்கள், தேவர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி அமர்ந்திருக்கும் முனிவர், கோயில் ஆகியன  இருப்பது பகீரதன் தபசு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக மயிலையார் குறிப்பிடுகிறார்.
    இரண்டாவது சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதசுவாமி புராணத்தில் சொல்லப்படும் சகர சக்கரவர்த்தியின் (சகர சாகரர்) கதை இச்சிற்பத்தில் விவரிக்கப்படுவதை மயிலையார் விளக்குகிறார். இது ராமாயணத்தில் வரும் சகர சக்கரவர்த்தியின் கதையல்ல. அது வேறு, இது வேறு.
   ஜீத சத்துரு எனும் அரசன் பாரத நாட்டை ஆண்டபோது அவருக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். மூத்தவன் அஜிதன்; இளையவன் சகரன். மூத்த குழந்தையே சமண சமய இரண்டாவது தீர்த்தங்கரரான அஜிதநாதர் ஆவார். இளைய மகன் சகரன் தந்தைக்குப் பிறகு அரசுரிமை பெற்றான்.  சகர சக்கரவர்த்தி இந்திரனை நோக்கி தவம் செய்து நவ (ஒன்பது) நிதிகளைப் பெற்றார். இது வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்ததில்லை. சகர சாகரருக்கு 60,000 குழந்தைகள். இவர்களது பொதுப்பெயர் சாகர குமாரர் என்பதாகும்.
   நைசர்ப்பம், பாண்டுகம், பிங்கலம், மகாபத்மம், காலம், மகாகாளம், மானவம், சங்கம், சர்வரத்தினம் ஆகியவை ஒன்பது வகையான நியதிகளாகும். சர்வரத்தினம் ஜீவரத்தினம், அஜீவரத்தினம் என்னும் ஏழு ஏழு உட்பிரிவைக் கொண்டது. அஜீவரத்தினத்தில் ஒன்று தண்டரத்தினம் ஆகும்.
   கயிலாய மலை முதலாவது தீர்த்தங்கரரான ரிஷப தீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடம். விலை மதிக்கமுடியாத செல்வங்களைக் கொண்டு பரத சக்கரவர்த்தி கோயில் கட்டியிருந்தார். கயிலாய மலைக்கு யாத்திரை வந்த சாகர குமாரர்கள் பரத சக்கரவர்த்தி கட்டிய கோயிலைப் பாதுகாக்க, சுற்றி அகழி தோண்ட விரும்பினர். நவநிதிகளில் ஒன்றான தண்டரத்தினத்தின் உதவியால் அகழி தோண்டி, அதில் கங்கை நீரை இழுத்துவந்து பாய்ச்சினர். இதனால் பாதலத்தில் இருந்த நாகர்கள் துன்புற்றனர். நாகராசன் சினமுற்று மதயானைபோல் வந்து தனது விஷக் கண்களால் நோக்க சகர குமாரர்கள் எரிந்து சாம்பலாயினர்.
   தன்மக்கள் மாண்டதையும் கங்கையின் வெள்ளப் பெருக்கால் நாடுகள் அழிவதையும் அறிந்த சகர சக்கரவ்ர்த்தி தன் பேரன் பகீர்தனை அழைத்து தண்டரத்தினத்தின் உதவியால் கங்கையை இழுத்துக் கடலில் விடச் சொன்னான். பகீரதன் கங்கை வெள்ளத்தை கடலில் கொண்டுபோய் விட்டான். இதுதான் ஜைன மதத்தில் சொல்லப்படும் அஜிதநாதர்  புராணக்கதையாகும்.
   இச்சிற்பத்தை மேல்பகுதி, கீழ்ப்பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். மேல்பகுதி சகர சக்கரவர்த்தி இந்திரனை நோக்கி தவம் செய்து நவநிதிகளைப் பெற்றதும், கீழ்ப்பகுதி சாகர குமாரர்கள் கயிலாய மலைக்கு வந்து அகழி தோண்டியது, நாகர்கள் துன்பப்பட, நாகராசன் பார்வையில் சகர குமாரர்கள் இறந்துபட்டதையும் விவரிக்கிறது.
   நதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தாவிடில் அழிவு ஏற்படும் என்பதும் கட்டுப்படுத்தினால் நன்மை உண்டாகும் என்பதையும் இச்சிற்பம் மற்றும் கதை வழியே நமக்கு உணர்த்துகிறார்கள். மகேந்திர வர்மன் மாமண்டூரில் ஏரியை வெட்டி அதற்கு சித்ரமேகத் தடாகம் என்று தன்னுடைய பெயரை வைத்தான். மகேந்திரவாடியில் மகேந்திரத் தடாகம் என்ற ஏரியும் தோண்டப்பட்டது.
  மேலும் கொடிக்கால் மண்டபம் குகையில் இருந்த கொற்றவை சைவ சமயக் கலகத்தால் சேதமடைந்தது. ஐந்து ரதங்கள் என்று சொல்லப்படும் பாறைக்கோயில்களுக்கு சூட்டப்படும் பெயர்களான அர்ச்சுனன், தர்மராஜா, பீமன், சகாதேவன், கணேசன் ஆகியவற்றுக்கும் பெயர்களுக்கும் தொடர்பில்லை.
   திரெளபதி ரதம்  துர்க்கை என்னும் கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இப்பாறைக் கோயில்களை மாடக் கோயிகள், சாதாரண கோயில்கள் என்று இருவகையாகப் பிரிப்பர். இவற்றை மீண்டும் திராவிடக் கோயில்கள், வேசரக் கோயில்கள் என்றும் பிரிக்கலாம்.
  அர்ச்சுனன் ரதம், தர்மராஜா ரதம், சகாதேவ ரதம் ஆகிய பாறைக்கோயில்கள் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தவை. பீம ரதம், கணேச ரதம் ஆகியவை வேசரம் என்ற பிரிவில் வருபவை. எஞ்சியவை அனைத்தும் திராவிடம் என்னும் பிரிவில் அடங்கும். (உம்) திரெளபதி ரதம். திராவிட கட்டிடக்கலைப் பிரிவைச் சார்ந்த இவற்றை இளங்கோயில் என்றும் கூறுவர். இதற்கு வடமொழியில் ஶ்ரீகரக்கோயில் என்று சொல்லப்படுகிறது.
 (மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், சமயங்கள் வளர்த்த தமிழ், சமணமும் தமிழும் போன்ற மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூற்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.) 


49. உயிரினங்களின் வளர்ச்சியும் இழப்பு மீட்டல் திறனும் 

      வளர்ச்சி, இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம், உணவூட்டம், கழிவு நீக்கம், தூண்டலுக்கேற்ப துலங்கல் ஆகிய சில பண்புகள் உயிரினங்களின் பொதுப்பண்புகளாக இருக்கின்றன. இவற்றில் சிற்சில வேறுபாடுகள் உள்ளன. கிளாமிடோமோனஸ் (நீள் இழை அல்லது கசையிழையால்) என்கிற ஒரு செல் தாவரம் இடப்பெயர்ச்சி செய்கிறது. தொட்டாற்சிணுங்கி, சூரியகாந்தி, தாவரங்களின் ஒளி நாட்டம், பூக்கள் மலர்தல் (அல்லிச்சலனம்) ஆகிய தாவர இயக்கத்திற்கு மேலும் சில உதாரணங்கள்.
  அனைத்து உயிரிகளிலும் செல்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தால் உருவத்தில் பெருக்கமடைவதையே நாம் வளர்ச்சி என வரையறுக்கிறோம். தாவரங்கள் தனது இறுதிக்காலம் வரை வளர்ந்துகொண்டே இருக்கிறது. மனிதன் உள்ளிட்ட சில விலங்குகளில் வளர்ச்சி என்பது ஓர் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும். இது புறத்தோற்ற வளர்ச்சியைக் குறிக்கும். உடலுக்குள் நடக்கும் புதிய செல்கள் உற்பத்தியாதல் சாகும்வரையில் தொடரும்.
   இந்த செல்கள் நாள்தொறும் இறக்கின்றன; புதிய செல்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. சிதைவும் வளர்ச்சியும் உயிரினங்களின் தொடர்கதையாய் உள்ளது. பாம்புகள் தோலை உரிக்கின்றன. நமக்குகூட கைகால்களில் தோல் உரிகிறது. இது சிதைவிற்கு எடுத்துக்காட்டாகும்.
  விலங்குகளின்  உடலில் காயமோ கட்டியோ ஏற்படும்போது அங்குள்ள செல்கள் சிதைவடைகின்றன. புண்கள் வழியாகச் சிதைந்த செல்கள் சீழாக வெளியேறுகின்றது. அந்த இடத்தில் புதிய செல்கள், திசுக்கள் தோன்றுவதையும் வளர்ச்சியாகவே பார்க்கவேண்டும்.
   நகம், தலை மயிர் போன்றவை இறந்த திசுக்களால் (செல்களின் தொகுப்பே திசு) ஆனவை என நம்பப்படுகிறது. இவற்றின் நுனிப்பகுதியை வெட்டும்போது வலி உண்டாவதில்லை. எனவே உயிரற்ற செல்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இது உண்மையல்ல.
    நகங்கள் கெரட்டின் என்ற புரதப்பொருளால் ஆனவை. விரல் நுனிகளைப் பாதுக்காப்பது இதன் பணி. சிதையும் இவற்றின் பகுதிகளை நாம் வெட்டி நீக்குகிறோம். நகத்தின் நுனியுடன் நரம்புப் பிணைப்பு இல்லாததால் நம்மால் வலி உணரப்படுவதில்லை. தலைமயிரின் நிலையும் இதுதான். வெட்டுவதற்கு மாறாக பிடுங்கினால் நம்மால் வலியை உணரமுடியும்.
   மேல்மட்ட உயிரினங்கள் உடல் உறுப்புகளை இழக்கும்போது அவ்விடத்தின் காயம் ஆறிவிடுதல் என்ற அளவில் வளர்ச்சியின் நிலை இருக்கிறது. ஆனால் கீழ்மட்ட, சிறிய உயிரிகளில் இழந்த உறுப்பை மீண்டும் பெறுதல்/புதுப்பித்தல் என்பதாக வளர்ச்சியின் பரிமாணம் உள்ளது. இதையே இழப்பு மீட்டல் திறன் (Regeneration) என்று சொல்கிறோம்.
  சில விலங்குகள் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இழப்பு மீட்டல் திறன் உதவியாக உள்ளது. பல்லி வாலையும் நண்டு, நட்சத்திர மீன் போன்றவை தங்களது கரங்களையும்  துண்டித்து உயிர்தப்பிக்கொள்ளும். அவ்விடத்தில் வால், கரங்கள் மீண்டும் வளர்ந்துவிடும்.
  ‘ராட்சத பல்லி’ என்று சொல்லப்படும் இருவாழ்வியான சாலமாண்டருக்கு வால் மட்டுமல்லாது, நான்கு கால்களுக்கும் இழப்புமீட்டல் திறன் உண்டு. தட்டைபுழுக்கள் (பிளனேரியா) பாலிலா இனப்பெருக்கம் செய்கிறது. இவை துண்டுகளாக வெட்டப்படின் அவைகள்  ஒவ்வொன்றும் தனித்த உயிரியாக மாறும்.
  கரப்பான் பூச்சி தலையை வெட்டிவிட்டால் சில நாட்கள் உயிருடன் இருக்கும். தலை மீண்டும் உண்டாவதில்லை. சில நாட்களுக்குப் பிறகு பூச்சி இறந்துவிடும். இதை இழப்புமீட்டல் எனச் சொல்லமுடியாது. கரப்பான்பூச்சியின் உடல் பல கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றைக் கட்டுப்படுத்தும் நரம்புமண்டலம் மிக எளிமையாக அந்தந்த பகுதிகளில் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். 

  50. சித்தர்கள், பித்தர்கள், எத்தர்கள் மற்றும் சித்த மருத்துவம்

    பள்ளிப் பாடநூற்களில் சித்தர்கள், சித்த மருத்துவம் குறித்து கூடுதல் கவனம் பெற்றுள்ளது. முந்தைய பாடநூற்களில் இல்லாத அம்சம் இது. உதாரணத்திற்கு சில மட்டும் இங்கே.
     “தமிழ் சித்தர்கள் சித்த வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தங்கள் ஆய்வுகளையும், சிகிச்சைகளையும், மருந்து தயாரித்தலை பற்றியும் மருந்து தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகள் பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.” – 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல். (இதில் சொற்றொடர்  அமைப்பு முறை, பிழைகள் தனிக்கதை, இங்கு பேச இடமில்லை.)
  ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் ‘உணவே மருந்து’ என்ற பாடத்தில் கீழ்க்கண்ட திருமூலர் பாடல் இடம்பெறுகிறது. (நோய்களுக்குக் காரணப்பட்டியலில் இனக்கலப்பையும் சேர்க்கும் இனவெறிப் பாசிசமும் இப்பாடத்தில் உள்ளது.)
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேர்வும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.  – திருமூலர்.
     “சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழந்தவர்கள்.” என்ற குறிப்போடு கடுவெளிச் சித்தரின் பாடலொன்று ஆறாம் வகுப்புத் தமிழில் இருக்கிறது.  
      சித்த மருத்துவம் என்பது நம் தமிழ்நாட்டில் தோன்றிய மிகத் தொன்மையான தமிழர் மருத்துவ முறை ஆகும். பழங்கால இலக்கியங்களான திருமந்திரம், திருக்குறள், தொல்காப்பியம் முதலான நூல்களில் பல சித்த மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.” என்று கூறும் ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், “பதினெட்டுச் சித்தர்கள் தான் இந்த மருத்துவ முறையை உருவாக்கினார்கள்.” என்றும் சொல்கிறது.
  “திருவள்ளுவர் ‘மருந்து’ என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலையே காரணமாகும். அவற்றின் சமநிலை தவறும்போது நோய் மிகும்.
    அவற்றைச் சமப்படுத்த இயற்கை தரும் காய்கனிகளிலிருந்தே மருந்து கண்டு உண்டனர். ‘மருந்தாகி தப்பா மரத்தற்றால்’ என்னும் திருக்குறள் வரி, தமிழ் மருத்துவத்தின் தொன்மையை எடுத்தியம்பும். பதினெண்சித்தர்கள் வகுத்த மருத்துவம் சித்த மருத்துவமாயிற்று.
   அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் தமிழர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன.” (10 ஆம் வகுப்பு தமிழ் – தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்.)
     சித்த மருத்துவம் பற்றிய கவனக்குவிப்பு நேர்மறையானது என்றாலும் இவற்றை அணுகுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டு திருமந்திரத்தையும் கி.பி. முதல் நூற்றாண்டு திருக்குறளோடு இணைப்பதும் தவறு. வள்ளுவரை சித்தர் என்று சொல்லாததுதான் பாக்கி!
·        திருமூலர்
·        கும்பமுனி
·        வால்மீகி
·        கமலமுனி
·        போகர்
·        மச்சமுனி
·        கொங்கணர்
·        பதஞ்சலி
·        போதகுரு
·        சட்டைமுனி
·        கோரக்கர்
    என்று இவர்கள் அளிக்கும் சித்தர்கள் பட்டியலில் எத்தனை பேர் உண்மையில் சித்தர்கள், எத்தர்கள், பித்தர்கள் என்பது கேள்விக்குரியது. அகத்தியர், அருணகிரி, கடுவெளிச் சித்தர், பட்டினத்தார், வள்ளலார் போன்றோருக்கு முதன்மைப் பட்டியலில் இடமில்லை. துணைப்பட்டியலில்தான் இடம் கிடைக்கிறது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரை சித்தராகக் கருதுவது எவ்வளவு சரியானது? இவர்களில் பலர்   சித்தர்களின் மெய்யியலுக்கு முற்றிலும் எதிரான தளங்களில்  இயங்கியவர்கள். சிவப்பிரகாசர், சேக்கிழார், ரமணர், ராகவேந்திரர், விசுவாமித்திரர், ஷீரடி சாயிபாபா, யோகி ராம்சுரத் குமார் என்று எல்லா காவிக்கும்பலையும் சித்தராக்கும் ‘ரசவாதம்’ நடந்தேறியுள்ளது. இன்னும் பிரேமானந்தா, நித்தியானந்தா, சங்கராச்சாரிகள், பாபா ராம்தேவ், அஸ்ராம் பாபு, மதுரை ஆதீனம் ஆகிய சிலரை இணைக்கவேண்டியதுதான் மிச்சம். கூடிய விரைவில் அதுவும் நடக்கும்.
   தமிழில் பிசாசு எழுதுதல் (ghost writings)  நிறையவே உண்டு. சித்தர்களின் கருத்துகள் போல காட்சியளிக்கும் குப்பைகள் நிரம்ப உள்ளது. இவற்றை ஆய்வு நோக்கில் அணுகியே பிரித்தெடுக்க முடியும்.
 
   தமிழ்ச் சித்தர்கள் என்று சொல்வதும் இதில் இனவாதத்தைப் புகுத்துவது மிக மோசமானது. தமிழ்ச் சித்தர்கள் என்ற சொற்பயன்பாடு அபத்தத்தின் உச்சம். மேற்கண்ட பட்டியலில் எத்தனை பேர் தமிழர்கள்? சித்தர் பாரம்பரியம் என்பது மதம், மொழி, இனம், சாதி (வருணம்) போன்ற எல்லைகளைக் கடந்தது.
   சன்மார்க்கச் சித்தர்கள், ஞானச் சித்தர்கள், காயச்சித்தர்கள் என இவர்களை வகைப்படுத்துவதுண்டு. ஞானச் சித்தர்கள் பிரிவில் இடம் பெறும் பட்டினத்தார், சிவவாக்கியார், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர் போன்றோர் உண்மையான சித்தர் மரபில் வாழ்ந்தவர்கள். இதிலுள்ள போலிச் சித்தர்களுக்கு அளவில்லை.
    சித்தர் மரபில் சமண, பவுத்தப் பாரம்பரியம் நிரம்ப உண்டு. சித்தர்களின் எண்பெருஞ்சித்திகள் (அட்டாங்க யோகம்)  பின்வருமாறு: இமயம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. இவைகளனைத்தும் பவுத்த, சமண மதங்கள் வலியுறுத்தியவை. வேத, வருண (சாதி), மத எதிர்ப்பு இதன் இந்த மரபின் சிறப்பு.
  எனவே சித்தர்களை வெறுமனே பெயர்களைக் கொண்டோ, தமிழ்ப் பெருமைகளைக் கொண்டோ அளவிடுவதும் விதந்தோதுவதும் சரியாக இருக்காது. சித்தர் மெய்யியல் வழி நின்று ஆய்வுக் கண்ணோட்டத்தில் இவர்களைத் தரம் பிரித்து அணுகவேண்டும்.(‘கல்விக் குழப்பங்கள்’ என்னும் இத்தொடர் முற்றுப் பெறுகிறது. இதைப் படித்த, கருத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக