புதன், நவம்பர் 18, 2015

வரலாறு முக்கியம் அமைச்சரே!

வரலாறு முக்கியம் அமைச்சரே!
              
              - மு.சிவகுருநாதன்

    குல்ஜாரிலால் நந்தா என்றொரு பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? காந்தியவாதி, பொருளாதார அறிஞர் என்ற சிறப்புகள் பெற்ற இவர் இருமுறை இந்தியாவின் தற்காலிகப் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகிய இரு இந்தியப் பிரதமர்கள் மறைந்த வேளையில் தலா 13 நாள்கள் தற்காலிகப் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். 

   நேருவின் மரணத்திற்குப் பிறகு 1964 மே 27 லிருந்து ஜூன் 09 முடிய 13 நாள்களும், லால்பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவிற்குப் பின் 1966 ஜனவரி 11 முதல் ஜனவரி 24 முடிய அதே 13 நாள்கள் இந்தியாவி தற்காலிகப் பிரதமராக பதவி வகித்துள்ளார். 

   நேருவிற்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியிடமும் அடுத்த கட்டமாக இந்திராகாந்தியிடமும் அதிகாரம் கையளிக்கப்படுவதற்கு முன்பாக இந்தியாவில் தலைமைப் பொறுப்பை ஏற்ற பெருமை இவருக்கு உண்டு. 

    மீண்டும் ஓர்முறை இந்தியாவில் தற்காலிகப் பிரதமர் நியமனம் செய்யும் சூழல் மிகக் கவனமாக தவிர்க்கப்பட்டது. 1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, எங்கோ இருந்த ராஜூவ் காந்தியை அப்போதையக் குடியரசுத்தலைவர் கியானி ஜெயில்சிங் தேடிப் பிடித்துவந்து இந்தியாவின் பிரதமராக்கினார். 

   1996 ல் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் பதவி இழந்த அடல்பிகாரி வாஜ்பாய், மிகக் குறைவான நாள்கள் பிரதமர் பதவியில் இருந்த சரண்சிங் (1979), சந்திரசேகர் (1990) ஆகியோரும் இங்கு முன்னாள் பிரதமராக அனைவராலும் அழைக்கப்பட்டனர். அடல்பிகாரி வாஜ்பாய் 1998 ல் மீண்டும் பிரதமராகி முழுப்பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்தார். 

  தமிழ்நாட்டிலும் இருமுறை ஒருவரே தற்காலிக முதல்வராகப் பதவி வகித்த வரலாறு உண்டு. நாவலர் இரா.நெடுஞ்செழியன் அறிஞர் அண்ணா இறந்தபோதும் (1969), எம்.ஜி.ராமச்சந்திரன் மரணமடைந்தபோதும் (1984) தற்காலிக முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மு.கருணாநிதி மற்றும் ஜானகி ராமச்சந்திரன் ஆகியோர் பதிவியேற்கும் வரையில் இவரது பொறுப்பு நீடித்தது. 

   ஆனால் தற்காலிகமாக அல்லாமல் இந்திய அரசியல் சாசனப்படி ஒரு மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை யாரும் முன்னாள் முதல்வர் என்று யாரும் சொல்வதில்லை. 

     டான்சி வழக்கில் ஜெ.ஜெயலலிதா தண்டனை பெற்றபோதும் (2001), சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோதும் இரண்டு முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தை  ஊடகங்கள் முன்னாள் முதல்வர் என்று பெயருக்குகூட சொல்வதில்லை. 

   இம்மாதிரி அழைப்பதை ஜெ.ஜெயலலிதா விரும்பாமல் இருக்கக்கூடும். ஏன் ஓ.பன்னீர்செல்வமும் விரும்பவில்லை என்பது இங்கு முக்கியமல்ல. விருப்பமில்லை என்றால் இந்தப் பதவியை ஏற்காமல் இருந்திருக்கலாம். பதவியை வகித்துவிட்டு அனைவரும் இருட்டடிப்பு செய்வது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல். அரசியல் சாசன பதவி என்பது பாரத ரத்னா பட்டமல்ல; பெயருடன் இணைக்காமல் இருப்பதற்கு. 

  நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத கட்சி ஆட்சியில் நீடிக்க வழியில்லை. அரசுக்கு உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ பிற கட்சிகள் ஆதரவு தருவதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. சுமார் 100 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மு.கருணாநிதியின் தி.மு.க. அரசு (2006 – 2011) கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 5 ஆண்டுகாலத்தைப் பூர்த்தி செய்தது. 

  அப்போது எதிர்க்கட்சியா இருந்த அ.இ.அதி.மு.க. வினரும், ஜெ.ஜெயலலிதாவும் ‘மைனாரிட்டி தி.மு.க. அரசு’ எப்போதும் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றும் இவர்கள் அக்காலத்தைப் பேச இதே சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இது நமது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை யாரும் உணர்வதோ, உணர்த்துவதோ இல்லை. 

   ஜெ.ஜெயலலிதாவிற்கு விருப்பமானதைச் செய்வதுதான் இங்கு ஊடகங்களின் பணியா? பத்தரிக்கை தர்மம், நாலவது தூண் அது, இது என்கிறார்களே. அதன் லட்சணம் இதுதானா?
  நமது எம்.ஜி.ஆரும், ஜெயா டிவியும் இவ்வாறு செய்வதில் பொருளுண்டு. ஆனால் பிற ஊடகங்கள் ஏன் இவ்வாறு செய்கின்றன. விளம்பரங்கள் பெறுவதற்காக இம்மாதிரியான அணுகுமுறையைக் கடைபிடிப்பது நாலவது தூணுக்கு அழகல்ல. 

    இவற்றையும் விட்டுவிடுவோம். முரசொலி, தினகரன், கலைஞர் டிவி, சன் டிவி போன்றவையும் இதைத்தானே செய்கின்றன. முன்னாள் முதல்வரும் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் என்று சொல்வதை எது தடுக்கிறது?

  தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் கொள்முதலில் ‘மிடாஸ்’ க்கு எவ்விதச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. அதைப்போல அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. வின் குடும்ப தயாரிப்புகளை கொள்முதல் செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதே இங்கு வரலாறு. நமக்கு வரலாறு முக்கியம் அமைச்சரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக